மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! -14

நீங்களே தயாரிக்கலாம்... ஹேண்ட் மேட் க்ரீட்டிங் கார்டு!வே.கிருஷ்ணவேணி, படங்கள் : ப. சரவணகுமார்

''சின்ன வயசுல இருந்தே நான் கிராஃப்ட் கில்லாடி. காலேஜ் போன பிறகும் அதை கைவிடல. சென்னை, எம்.ஒ.பி. வைஷ்ணவ் காலேஜ்ல படிச்சப்போ, பேராசிரியர் ஒருத்தருக்கு வாழ்த்துச் சொல்றதுக்காக... 'ஹேண்ட் மேட் கிரீட்டிங் கார்டு' செய்து கொடுத்தேன். அதைப் பார்த்தவர் பரவசமாகி, 'ரொம்ப அழகாயிருக்கு... இது நல்ல ஐடியாவும் கூட!’னு பாராட்டி உற்சாகப்படுத்தினார். அதிலிருந்து கிரீட்டிங் கார்டு பக்கம் என் பார்வை அதிகமா பதிய ஆரம்பிச்சது. கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ரொம்பவே விளையாட ஆரம்பிச்சிட்டேன்!'' என்று பூரிக்கும் சென்னையைச் சேர்ந்த ஷஹானா, குழந்தைகளுக்கு கோடையிலும், தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கு அவ்வப்போதும் கிராஃப்ட் வகுப்பு எடுத்து வருகிறார்.

''இந்த சம்மர், குட் சம்மரா ஆகறதுக்கு, இந்த கிரீட்டிங் கார்டு தயாரிக்கறதை முயற்சி பண்ணிப் பாருங்களேன்'' என்றபடியே இங்கே உங்களுக்காக ஒரு மின்னல் வேக வகுப்பு எடுக்கிறார் ஷஹானா.

தேவையான பொருட்கள்: ஜுவல்லரி செய்வதற்கு பயன்படும் ஏ4 ஷீட் க்வில்லிங் பேப்பர்கள் - பல வண்ணங்களில், ஃபேப்ரிக் க்ளூ, கலர் காப்பியர் பேப்பர் - 4, டிசைனபிள் பன்ச் கிராஃப்ட் மெஷின் (டிசைன்களைப் பொறுத்து அதிகப்படுத்திக்கொள்ளலாம்) - 4, பென்சில், ஸ்கேல், பேர்ள் ஸ்டிக்கர்ஸ், ஸ்நோவொயிட் போர்டு, போட்டோ (உங்களுக்குப் பிடித்தமானது), கத்தரிக்கோல்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! -14

செய்முறை:

படம் 1: டிசைனபிள் பன்ச் கிராஃப்ட் மெஷினை, க்வில்லிங் பேப்பரில் வைத்து பிடித்தமான வடிவங்களில் பூக்கள், இலைகள், கொடிகள் போன்றவற்றை பன்ச் செய்து எடுத்துக்கொள்ளவும். விருப்பமான டிசைன்களை பென்சில் மூலமாக வரைந்தும், வெட்டிக்கொள்ளலாம்.

படம் 2, 2A: ஸ்நோவொயிட் போர்டு ஷீட்டை, ஏ4 பேப்பர் அளவுக்கு கட் செய்துகொள்ளவும். அதை இரண்டாக மடித்து, அதன் மீது ஸ்கேல் மற்றும் பென்சில் பயன்படுத்தி சரியான இடைவெளிகளில் கோடுகள் போடவும்.

படம் 3, 3A: க்வில்லிங் பேப்பரை ஒவ்வொரு கோட்டின் மீதும், ஒவ்வொரு நிறம் என்றவாறு ஒட்டவும். பேப்பரின் முனைகளை உள்பக்கமாக மடித்து, ஃபேப்ரிக் க்ளூ கொண்டு ஒட்டவும்.

படம் 4: வெட்டி வைத்துள்ள பூ டிசைன் ஒன்றின் மீது, மற்றொரு பூவை ஒட்டவும். அதன்மீது ஒரு சுருள் பேப்பர், அதன் மீது ஒரு ஃபேர்ள் ஸ்டிக்கர் என்று ஃபேப்ரிக் க்ளூ கொண்டு ஒட்டவும்.

படம் 5, 5A: இதை கத்தரியின் முனை கொண்டு படத்தில் காட்டியுள்ளபடி மேல்நோக்கி மெதுவாக மடித்தவண்ணம் இழுத்தால், பூ இதழானது அழகாக விரிந்ததுபோல் இருக்கும். இதை அட்டையின் வலது ஓரத்தில் ஒட்டவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! -14

படம் 6, 6A: சுருள்சுருளான இலை வடிவங்களை உருவாக்க, பச்சை நிற க்வில்லிங் பேப்பரை எடுத்து, படத்தில் காட்டியுள்ளதுபோல் கத்தரிக்கோலின் மேல் பகுதியை பிடித்தபடி, கீழ்நோக்கி கொஞ்சம் அழுத்தமாக இழுத்தால், சுருள் தயாராகிவிடும். இதனை பூவின் அருகில் ஒட்டவும். இதே போல இரண்டு இலைகளை பூக் களின் இருபுறமும் ஒட்டவும்.  

படம் 7: டிசைனபிள் பன்ச் கிராஃப்ட் மெஷின் கொண்டு, பட் டாம்பூச்சி டிசைன் கட் செய்துகொள் ளவும். அதே மெஷின் மூலம் பாதி சுருள்கள் தயாரித்து, அதில் இரண்டை, படத்தில் காட்டியுள்ளது போல் க்ளூ கொண்டு ஒட்டினால், பட்டாம்பூச்சி ரெடி.

படம் 8, 8A: அட்டையில் ஏற்கெனவே ஒட்டப்பட்டுள்ள சுருள் மீது, இந்த பட்டாம்பூச்சியை ஒட்ட வும். இப்போது ஒரு பக்க ஃப்ள வர் டிசைன் ரெடி.

படம் 9: மேற்கூறிய இதே வழி முறைகளில் மற்றொரு முனையிலும் பூக்கள், இலைகள் தயார் செய்து ஒட்டவும். நடுப்பகுதியில், யாருக்கு பரிசளிக்க விரும்புகிறீர் களோ அவர்களுடைய புகைப்படம் அல்லது இயற்கைக் காட்சி புகைப் படம் ஒட்டவும்.

படம் 9A: அட்டையை விரித்து, உள்பக்க ஓரங்களில் ஃபேப்ரிக் க்ளூ தடவி, முழுவதுமாக மஞ்சள் நிற கலர் காப்பியர் பேப்பரை ஒட்டவும்.

படம் 10: அதன் மீது பேர்ள் ஸ்டிக்கரை ஃபேப்ரிக் க்ளூ கொண்டு வரிசையாக நான்கு புறங்களிலும் ஒட்டவும்.

படம் 11: மஞ்சள் நிற காப்பியர் பேப்பர் மீது, டிசைனபிள் பன்ச் கிராஃப்ட் மெஷின் கொண்டு தயா ரித்து வைக்கப்பட்டுள்ள பூக்கள் மற்றும் சுருள்களை ஆங்காங்கே ஒட்டவும். அடுத்து, விருப்பமான வாசகங்களை எழுதவும்.

இப்போது நூறு ரூபாய் மதிக் கத்தக்க அழகிய ஹேண்ட் மேடு கிரீட்டிங் கார்ட் ரெடி!

''இந்தக் கோடை விடுமுறையில் இதை உங்க குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம். இதனால ஒரு புது விஷயத்தை அவங்க கற்றுக்கொண்டது போலவும் இருக்கும், தன்னம்பிக்கை மற்றும் கற்பனைத்திறனும் கூடும்'' என்று சொல்லும் ஷஹானா,

''இப்போவெல்லாம் ஹேண்ட் மேட் பொருட்களுக்குத்தான் மவுசு. அந்த வகையில் இந்த கிரீட்டிங் கார்டை விற்பனை நோக்கிலும் செய்யலாம். பத்து கார்டுகள் செய்தா, 1,000 ரூபாய். உங்க உழைப்பு மற்றும் கற்பனை திறனைப் பொறுத்து லாபத்தை நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக்கோங்க!'' என்றார் சிரித்தபடியே!

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...