மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

வாசகிகள் பக்கம்ஓவியங்கள் : சேகர்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

 200

பயண சுகத்தை பாழாக்கிய சுயநலம்!

மீபத்தில் நானும் என் கணவரும் சேலத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு ரயிலில் மூன்றாம்

அனுபவங்கள் பேசுகின்றன!

வகுப்பு ஏ.சி கோச்சில் பயணம் செய்தோம். நாங்கள் இருந்த 'பே’-யில் (Bay) வேறு மூன்று பயணிகளும் சேலத்தில் ஏறினார்கள். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மேல் பர்த்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கம்பளி - பெட் ஷீட் என எல்லாவற்றையும் எடுத்து தலை, கால் என கசாமுசாவென உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இது எங்களை எரிச்சலடைய வைத் தது. ''இத பாருங்க, இதெல்லாம் ஆளுக்கு ஒரு செட்தான். வரப்போகும் ஸ்டேஷன்களில் ஏறும் பயணிகளின் செட்டையும் நீங்களே நாசப்படுத்தினா, அவங்க என்ன செய்வாங்க?'' என்று கேட்டேவிட்டார் என் கணவர். உடனே, அவர்களில் வயதில் பெரியவர், ''உங்களுக்கு இருக்குல்ல... வேலையைப் பாருங்க'' என முகத்தாலடித்தார். அடுத்த ஸ்டேஷ னில் ஏறிய பயணிகள் 'ப்ரெஷ்’ஷான செட் கேட்க, அட்டெண்டர் ஸ்டாக் இல்லை என்று எடுத்துரைக்க... பாதி பயணம் கூச்சலிலேயே கழிந்தது.

பொது இடங்களில் தரமறிந்து நடந்துகொள்ளாத இதுபோன்ற சிலரால், பயணம் சுகமில்லாமலும், ஒருவித அழுத்தத்துடனும் நடைபெறுவது வருத்தத்துக்குரியது. சுயநலத்தையே லட்சியமாக கொண்டு வாழும் இதுபோன்றவர்கள், 'இத்தகைய செயல்பாடுகள், ஒருநாள் அவர்களுக்கே குழிபறித்துவிடும்’ என்பதை உணரவேண்டியது அவசியம்!  

- கமலா சுந்தர், ஹைதராபாத்

'வாங்கறத்துக்கு முன்ன யோசிங்க!’

அனுபவங்கள் பேசுகின்றன!

நான் வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்தில் ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை கலர் டிரெஸ் அணிந்து வர அனுமதிப்பார்கள். குழந்தைகளும் அவரவர் விரும்பிய உடைகளை அணிந்து வந்து மகிழ்ந்தனர். ஒருநாள் இப்படி உடையணிந்து வந்த யு.கே.ஜி. மாணவன், இன்னொரு பையனைக் காண்பித்து ''இவன் என் நெஞ்சில குத்திட்டான்'' என்று அழுதான். ''ஏன் குத்தினாய்?'' என்று கோபமாக கேட்டதற்கு... ''அவன் நெஞ்சில குத்தினா லைட் எரியும் மிஸ்'' என்றான். குத்து வாங்கிய மாணவன் அணிந்திருந்த டிரெஸ்ஸில் உள்ள ஸ்டிக்கரைத் தட்டினால் லைட் எரியும் என்பதுதான் பிரச்னையே!

இதில் யாரைக் குறை சொல்வது... இந்த  டிரெஸ்ஸை அணிந்து வந்திருந்த குழந்தையையா, அதில் லைட் எரிவதைப் பார்க்க ஆசைப்பட்ட குழந்தையையா?! வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, இதுபோன்ற டிரெஸ்கள் பலவற்றையும் சந்தையில் இறக்கிவிட்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்குத் தீங்காக அமைய வாய்ப்பிருக்கும் உடைகளை, பெற்றோர்கள்தான் தவிர்க்க வேண்டும்!

அனுபவங்கள் பேசுகின்றன!

- ஏ.லில்லி, தஞ்சாவூர்

'டஸ்ட்பின்’ அதிர்ச்சி!

ன் உறவினர் வீட்டுப் பையனுக்கு பெண் பார்க்கப் போயிருந்தார்கள். பேச்சு வார்த்தைக்குப் பின் நல்ல முடிவு எடுத்துவிட்டார்கள். கிளம்புகிறபோது, அவர்களின் பக்கத்து வீட்டுப்பெண், ''மாப்பிள்ளை வீட்ல டஸ்ட்பின் (Dustbin) எத்தனை இருக்கு?'' என்று ரகசியமாகக் கேட்டது காதில் விழுந்துவிட்டது. அதன் அர்த்தம் தெரிந்தபோது, அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் பிள்ளைவீட்டார். 'மாமியார், மாமனார் இருக்கிறார்களா?’ என்பதைத்தான் 'சங்கேத மொழி’யில் அவ்வாறு கேட்டிருக்கிறாள் அந்தப் பெண்.

அறிவுக்கூர்மை, ஆற்றல் என பல்வேறு விஷயங்களிலும் வியக்கும் வைக்கும் அளவுக்கு முன்னேறி வரும் இளையதலைமுறையினரில் பலர்... உறவு, நேசம் போன்றவற்றை கையாளும் விதம் கவலையைக் கிளப்புகிறது. இப்படிப்பட்டவர்கள், தாங்களும் வருங்கால 'டஸ்ட்பின்’கள்தான் என்பதை உணர்ந்து, காலம் கடக்கும்முன் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம்!

- எஸ்.வி.எஸ்.மணியன், கோயம்புத்தூர்