மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 28

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

திருமதி மெலிண்டா பில்கேட்ஸ், தன் டெலஸ்கோப் மூலமாக 581 ஜி-யைப் பார்க்க முயற்சி செய்துகொண்டிருந் தார். நட்சத்திரங்களை அடையாளம் காண்பது, அவருக்கு இன்னமும் எளிதாக இல்லை. அப்போதுதான் வித்யாதர் வந்தான். இந்தியாவில் இருந்து அங்கு பணிக்கு வந்தவன். 30-ன் மத்தியில் இருப்பவன். சிவப்பு, சுறுசுறுப்பு இரண்டும் கலந்த இன்டலெக்சுவல். நிறுவனத்தில் முக்கியமான புரோகிராமர்.

''என்ன வித்யாதர்?''

''ஒரு தவறு நடந்துவிட்டது மேடம்.''

மெலிண்டாவின் புருவங்கள் நெருங்கின.

''பில்கேட்ஸ் ஆபத்தில் இருக்கிறார். 'அங்குள்ள மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று தகவல் அனுப்பியிருக்கிறார்.''

வித்யாதர் சொல்லப்போகும் விளக்கத்தைக் கேட்கும் அவகாசம்கூட இல்லை. தயக்கமாகப் பதறினார் மெலிண்டா.

ஹாலிவுட்டுக்குப் போன கேபிரியலை அங்கேயே தாமதப்படுத்த வேண்டும். அவருடைய அப்பாயின்ட்மென்ட்களை ஒரு மணி நேரம் தள்ளிவைக்க வேண்டும். தடதடவெனக் காரியத்தில் இறங்கினார். மொத்தம் மூன்றே போன்கள்.

'' இப்போது சொல்லுங்கள் வித்யாதர்.''

''நமக்கு மிஸ்டர் பில் அனுப்பியிருந்த பட்டியலைக் கவனித்தீர்களா?''

ஆபரேஷன் நோவா - 28

அவன் கையில் இருந்த பட்டியலை வாங்கி, கவனித்தார். வரிசையாகப் பெயர்கள்... மனிதர்களின் பெயரும் மென்-வன் பொருள்களின் பெயரும். உதட்டுச் சுழிப்பில் 'புரியவில்லை’ என்றார்.

''எழுத்துப் பிழைகள் இருப்பதைப் பார்த்தீர்களா?''

''பார்த்தேன்.'' மீண்டும் பார்த்தார். அவசரத்தில் நடக்கக்கூடிய சாதாரண டைப்போ எரர்கள். உதட்டில் 'புரியவில்லை’ அப்படியே இருந்தது.

பில்கேட்ஸ் அனுப்பியிருந்த பட்டியலில் இருந்த அந்த ரகசியக் குறிப்பை விளக்க ஆரம்பித்தான்.

விண்டோஸ் என்று டைப் செய்யப்பட்ட இடத்தில் இரண்டு W. அடுத்த வரியில் சாஃப்ட்வேர் என்ற இடத்தின் நடுவில் E. நான்காவது வரியில் A என்ற எழுத்துக்குப் பக்கத்தில் தேவை இல்லாமல் ஓர் இடைவெளி.

வித்யாதர் தவறு நடந்திருக்கும் ஒவ்வோர் எழுத்தையும் கோத்தான்.

'வீ ஆர் இன் டேன்ஜர். ப்ளீஸ் ஹெல்ப்.’

மெலிண்டாவின் முகம் மேலும் வெளிறியது ''ஓ மை காட்!''

எதுவுமே நடக்காத மாதிரி வந்துபோன கேப்ரியலின் முகம் நினைவுக்கு வந்துபோனது. '300 கோடி மக்களை, இவனை நம்பி அனுப்பி வைத்திருக்கிறோமே!’ என்ற அச்சம் குபீர் என்று உடல் எங்கும் பரவியது.

ஹாட்லைனில் தகவல் பறந்தது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கேப்ரியலை முடக்க வேண்டும். அமெரிக்க ராணுவத்தின் உதவி வேண்டும். பில்கேட்ஸ் அலுவலகம் பரபரப்பானது. இப்போதுதான் ஹாலிவுட் போய்ச் சேர்ந்திருப்பான். ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் அப்பாயின்மென்ட். அத்தனை பேரையும் அள்ளிக்கொண்டு போய் பிளாக்மெயில் செய்வானா? எதற்காக செலிபிரிட்டியாகச் சேகரித்துக்கொண்டு போகிறான்? மெலிண்டா, தவித்தாள்.

கேப்ரியல் அங்குதான் இருப்பதாக உறுதிசெய்த போலீஸ், அங்கேயே அவன் இருக்கும் அரங்கத்திலேயே சந்தேகம் வராமல் காபந்து பண்ணிவைக்கும்படி உத்தரவிட்டது.

ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீஃவன் ஸ்பீல்பெர்க், டாம் க்ரூஸ், வில் ஸ்மித், ஜேஸன் ஸ்டாதம், க்ரிஸ்டன் ஸ்டீவாக்... என மக்களுக்குத் தெரிந்த முகங்கள் அங்கே ஷாம்பெய்ன் ஏந்திக் குழுமி இருந்தனர்.

ஆபரேஷன் நோவா - 28

இன்னோர் உலகத்தை நிர்மாணித்தவர் என்ற பெருமையோடு நடுநாயகமாக கேப்ரியல் அமர்ந்திருந்தார். உண்மையில் இத்தகைய பெருமைகளை அவர் எப்போதோ கடந்துவிட்டிருந்தார். நோபல் பரிசு பெற்றவரை சிந்தாதிரிப்பேட்டை சினி ஆர்ட்ஸ் கௌரவிப்பது மாதிரி இருந்தது. வேலை நடக்க வேண்டுமே என்பதற்காக உட்கார்ந்திருந்தார். கொஞ்ச நேரம் எல்லோரும் தனித்தனியாகப் புகழ்ந்துவிட்டு, கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.

இதுவரைக்கும் வெளி கிரகத்தை செட் போட்டு எடுத்தவர்களுக்கு, அங்கேயே போய் படம் எடுப்பதில் இனம்புரியாத ஒரு தவிப்பு இருக்கத்தான் செய்தது. படம் எடுப்பதற்குத் தங்களுக்கு என்னென்ன வசதிகள் வேண்டும் என அழகான ஃபைலில் விவரித்திருந்தனர். கேப்ரியலுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை. ''ஹாலிவுட்டை அப்படியே அங்கு பேக் செய்துவிடலாம்'' என்றார்.

''உலகத்திலேயே அதிகமாக சினிமா எடுப்பவர்கள் இந்தியர்கள்தான். ஆண்டுக்கு சராசரியாக 500 சினிமாக்கள் எடுக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள்... ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், கே.எஸ்.ரவிகுமார், ரவி கே.சந்திரன்... என்று ஒரு லோடு அடிக்கலாம். மக்களை ஜாலியாக வைத்திருக்க உதவுவார்கள்'' அமிர்தராஜ் பிரதர்ஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நேரத்தில்...

ராணுவம் உள்ளே நுழைந்தது. ராணுவ ஜெனரல் டேவிட் பெர்கின் மிடுக்காகக் கூட்டத்தின் மையத்தை நோக்கி நடந்து, கேப்ரியல் அருகில் நின்றார்.

''எங்களுடன் கொஞ்சம் வர முடியுமா?'' என்றார்.

''எனக்கு நேரம் இல்லை'' என்றார்.

''நேரத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். நாங்கள் தருகிறோம். வரச் சம்மதம்தானே?'' என்றார் ஜெனரல்.

கேப்ரியலின் வாசனை நரம்பு, வரம்பு மீறப்படுவதை உணர்ந்தது. ''மகிழ்ச்சியாக'' என்றார் மகிழ்ச்சி இல்லாமல்.

அவருடைய நான்கு நட்சத்திர தோள்பட்டையின் அந்தஸ்து தெரிந்த பலரும் முகம் வழியாக மரியாதையை வெளிப்படுத்தினர். அத்தனை திரை நட்சத்திரங்களும் ஒபாமாவை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கச் செல்வதாகத்தான் நினைத்தனர். அதைத் தாண்டி சந்தேகிக்கவில்லை.

கேப்ரியலை மூன்று அடுக்குப் பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றினர். முன்னும் பின்னும் எட்டு ராணுவ வாகனங்கள்.

வரைக் குலுங்காமல் பென்டகனுக்கு அழைத்து வந்தனர். ''எதற்காக, எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்?'' என்ற இயல்பான கேள்விகளைத்தான் கேப்ரியல் கேட்டார். ராணுவ மௌனம் அவரைக் கடுப்பேற்றியது.

கேப்ரியல், ''உங்களுக்கு அரை மணி நேரம் தருகிறேன். அதற்குள் என்னை விட்டுவிட வேண்டும். அதன் பிறகு என் பொறுமையைச் சோதித்தால் என்ன நடக்கும் என்பதை... ஒபாமா வந்தால்தான் சொல்வேன்'' என்றார் கோபமாக.

''அவ்வளவு நேரம் தேவைப்படாது'' என்றார் ஜெனரல் சிரித்தபடி.

அதற்குள் விசாரணை அறை வந்துவிட்டது.

பழக்கமானவர்களே ஒவ்வொரு முறையும் உள்ளே சென்ற வழியை மறந்துவிடக்கூடும். அத்தனை திருப்பங்களையும் தானியங்கிக் கதவுகளையும் கடக்க வேண்டியிருந்தது. சில நெகோஷியேட்டர்கள் அங்கே காத்திருந்தனர். உளவுத் துறை அதிகாரிகள் இருந்தனர். முக்கியமாக விஞ்ஞானி சார்லஸ் இருந்தார்.

''நீங்கள் சர்வாதிகாரம் செய்வதாகத் தகவல் வந்திருக்கிறது. மக்களை அடிமைகளாக வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்'' - இது உளவுத் துறை.

சார்லஸை வெடுக்கெனத் திரும்பிப் பார்த்தார். அந்தப் பார்வை 'நீ எல்லாம் ஒரு பிறவியா?’ என்றது.

பின் உளவுத் துறையினர் பக்கம் திரும்பி, ''ஈராக்கில் சதாம் உசேனிடமும் ஈரானில் கடாஃபியிடமும் பேசிய வசனங்களை என்னிடம் பிரயோகிக்காதீர்கள். நான் வேறு'' என்றார் இறுகிய முகத்தோடு.

''பில்கேட்ஸை என்ன செய்தீர்கள்?'' - மீண்டும் உளவுத் துறை.

இந்த மாதிரி அற்பக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல அவர் விரும்பவே இல்லை. நகம் நேர்த்தியாக வெட்டப்பட்டிருக்கிறதா என அவருடைய கைவிரலை ஆராய்ந்தார்.

ஆபரேஷன் நோவா - 28

''ஓ.கே. உங்களிடம் வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை. இங்கே சிலர் 'நாடுகள்’ என்ற பெயரில் ஆண்டுகொண்டு இருப்பதை நான் தடுக்கவில்லை. நாட்டின் அதிபர் என்பது எல்லாம் என்னைப் பொறுத்தவரை வார்டு கவுன்சிலர் அதிகாரம் போலத்தான். உங்கள் ஒபாமா உள்பட. நான் இன்னும் இரண்டு நாட்களுக்குள் 581-ஜிக்குச் செல்லவில்லை என்றால், அந்தக் கிரகமே க்ளோஸ்... வானத்தில் ஒரு நட்சத்திரம் காணாமல்போய்விடும். டைமர் செட் பண்ணிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். அங்கே உங்கள் பில்கேட்ஸ், ஏஞ்சலினா உள்பட முக்கியமான 300 கோடிப் பேர் இருக்கிறார்கள். முக்கியமான கனிமங்கள் இருக்கின்றன. தங்கம், தோரியம், லித்தியம்... அப்புறம் உங்கள் விருப்பம்'' என்றபடி ஜெனரலின் சட்டையில் பொறித்திருந்த பெயரைப் படித்து ''மிஸ்டர் பெர்கின்'' என்றார்.

முகத்தில் வீராப்பை வைத்தபடி உள்ளுக்குள் உதறலோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது பென்டகன் கமிட்டி. இன்னும் 48 மணி நேர அவகாசத்தில் என்னவும் நடக்கலாம்; என்னவும் மாறலாம்.

''உங்களுக்கு என்னதான் வேண்டும்?'' தன்னையும் அறியாமல் அவசரப்பட்டார் ஒருவர்.

''எனக்கு என்ன வேண்டும் என்ற பட்டியலை ஏற்கெனவே ஹாலிவுட் ஆசாமிகளிடம் சொல்லிவிட்டேன். அவர்களும் தயாராகத்தான் இருக்கிறார்கள்.''

''நாங்கள் முடிவெடுக்கக் கொஞ்சம் நேரம் வேண்டும்'' என்றார் நெகோஷியேட்டர்.

''முடிவைத்தான் நான் எடுத்துவிட்டேனே? ஹாலிவுட்டை அங்கே அனுப்பிவைக்கிற வேலையைப் பாருங்கள்'' என்றார் கேப்ரியல்.

ஒரு நெகோஷியேட்டர் நிலைமையை உத்தேசித்து, ''அதற்கான அவகாசத்தைத்தான் சொல்கிறோம்'' என்றார்.

581-ஜி

மைக்கேல் கையில் கட்டியிருந்த கடிகாரம் போன்ற கருவி சாதாரணமானது அல்ல. இந்தக் கிழவனால் என்ன செய்துவிட முடியும் என்ற அலட்சியத்தால் அதை அப்படியே விட்டுவிட்டான். அகிலன் செல்லும் வழி எல்லாம் கேள்வி கேட்காமல் வழிகள் வழிவிட்டன. ஆனால், என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை. முதலில் மத்திய கேந்திரத்தை முழுசாகச் சுற்றிப் பார்க்கவே ஒரு மாதம் தேவைப்படும்போல இருந்தது. கேப்ரியல் வருவதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும். இடையில் வந்துவிட்டால், மத்திய கேந்திரத்திலேயே ஒரு சிட்டிகை சாம்பலாக்கி ஊதிவிடுவான் என்று தெரியும்.

சுற்றிய இடத்துக்கே திரும்பத் திரும்ப வந்துகொண்டிருப்பது தெரிந்தது. எல்லா இடங்களும் வெளி ஊதா நிறத்தில் குளிர்ச்சியாக, அமைதியாக இருந்தன. ஒன்றுமே புரியவில்லை. ஒரு ரோபோ எங்கிருந்தோ வேகமாக வந்து எதிரில் நின்றது.

சுடுமா? சிறை வைக்குமா?

''உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?'' என்றது ரோபோ.

''அம்மாவைப் பார்க்க வேண்டும்'' என்றான் அகிலன்.

''அவரை அழைத்து வா'' என்றது அம்மாவின் குரல்!

 - ஆபரேஷன் ஆன் தி வே...