நடுத்தர மக்களின் அழகிய பூங்கா!
##~## |
''எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஸ்கூல், காலேஜ் போய்ட்டு இருந்த பையன் நான். திடீர்னு ஒருநாள் சினிமா என்ட்ரி. 'டேய் பரத்’னு கூப்பிட்டவங்க எல்லாம் இன்னிக்கு, 'பரத் சார் ஒரு ஆட்டோகிராஃப் போடுங்க’னு காகிதத்தை நீட்டுறாங்க. என் கண் முன்னாடியே என் ஏரியா எனக்கு அந்நியமாகிட்டு வருது. வெற்றிக்காகச் சந்தோஷப்பட்டாலும், என் ஏரியா எனக்கு அந்நியமாகிட்டு வர்றதை நினைக்கும்போது வருத்தமா இருக்கு!''-தான் பிறந்து வளர்ந்த சூளைமேடுபற்றி வருத்தமும் சந்தோஷமுமாகப் பேச ஆரம்பிக்கிறார் பரத்.

''நான் பிறந்தது திருச்சி லால்குடியில். ஆனால், கைக்குழந்தையா இருக்கும்போதே என்னை சென்னைக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க. சென்னை வந்து 27 வருடங்கள் ஆச்சு. என் வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் இந்த சூளைமேடு பார்த்து இருக்கிறது. அதேபோல் சூளைமேட்டின் வளர்ச்சியை நான் பார்த்துட்டு வர்றேன். பல வருஷங்களுக்கு முன் இந்த ஏரியா சுடுகாடா இருந்ததா சொல்றாங்க. இதைக் கொஞ்சம் கொஞ்சமா குடியிருப்புப் பகுதியா மாற்றியதில் இங்குள்ள முஸ்லிம்களுக்கு முக்கியப் பங்கு இருக்கு. தொழிற்சாலைகளின் இரைச்சலோ, சிட்டியின் பரபரப்பான வேகத்தையோ இங்க நீங்க பார்க்க முடியாது. அந்த அளவுக்கு சைலன்ட் டான பகுதி.
எங்க வீட்டுக்குப் பக்கத்தில் கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் ஒண்ணு இருக்கு. சின்ன வயசுல சுவர் ஏறிக் குதித்து உள்ளே போய் கிரிக்கெட் விளையாடுவோம். அப்படி விளையாடும்போது, நான் அடிச்ச பந்து ஹாஸ்பிடலுக்குள் ஒரு பேஷன்ட்டோட தலையில போய் விழுந்தது. நல்ல வேளையா அந்த பேஷன்ட்டுக்கு ஒண்ணும் ஆகலை. அப்போ நான் ஜாலிக்குத் திருடுவேன். ஒவ்வொரு மொட்டை மாடியிலும் ஏறி டி.வி. ஆண்டனாவின் ராடுகளைக் கழட்டிக் கொண்டுபோய் காயலான் கடையில் கொடுப்போம். ஒரு ராடுக்கு ஒண்ணேகால் ரூபா கொடுப்பாங்க. அந்தக் காசைவைத்துக் காத்தாடி வாங்கிப் பறக்கவிடுவோம். சிட்டியில இருந்தாலும் சூளைமேட்டில் கிராமத்துக்கே உரிய எல்லா விளையாட்டுகளையும் விளையாடி இருக்கிறோம். நான் வசிக்கும் சர்புதீன் தெருவில் அவ்வளவு ரகளை பண்ணியிருக்கோம்.

ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது நண்பர்கள், கிரிக்கெட், சத்யம் தியேட்டர், நியூ காலேஜ்னு கலர்ஃபுல்லா வாழ்ந்தேன். இதே ஏரியாவில் என் ஃப்ரெண்ட் ஆனந்த்... டூ வீலர் மெக்கானிக் வொர்க்ஷாப் வெச்சிருந்தான். எங்களோட மீட்டிங் பாயின்ட் அந்த வொர்க்ஷாப்தான். 'காதல்’ பட மெக்கானிக் முருகனுக்குக் கூட ஆனந்த் வொர்க்ஷாப்தான் இன்ஸ்பி ரேஷன்.
ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் வீடு வீடாகப் போய் டொனேஷன் கலெக்ட் பண்ணி, எங்க தெருவில் மட்டும் ஸ்க்ரீன் வெச்சுப் படம் காட்டியிருக்கிறோம். வீட்டுக் குப் பின்னால் உள்ள மாரியம்மன் கோயிலுக் கும் அடிக்கடி போய்ட்டு வருவேன். இன்னிக் கும் விநாயகர் சதுர்த்தி தினங்களில் டொனேஷன் வசூல் செய்த நாட்களின் நினைவுகள் வந்து போகும்.

ஹார்ட் ஆஃப் த சிட்டியில் இருப்பதுதான் சூளைமேட்டின் ஸ்பெஷல். தி.நகர், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு என சென்னையின் எந்த முக்கியமான பகுதிக்கும் நினைச்ச நேரத்தில் போயிரலாம். சுருக்கமா சொன்னா... சூளைமேடு நடுத்தர மக்களின் அழகிய பூங்கா. என்னோட வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுபவர்களும், 'இவன் என்ன கார் வாங்குறது’ன்னு புது காரில் கோடு போடும் சில நெருங்கிய நண்பர்களும் இங்கு இருக்காங்க. மொத்தத்தில் இந்த சூளைமேடுதான் கலையையும் வாழ்க்கை யையும் எனக்குக் கற்றுத் தந்துச்சு!''
- ந.வினோத்குமார், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்