பாரிமுனை பரிதாபம்
##~## |
''நானும் இதே பிளாட்ஃபாரத்தில் பிறந்து வளர்ந்தவன்தான். இந்தப் புள்ளைங்க மாதிரி அரை டிரவுசர்ல பாதி கிழிஞ்சு அலைஞ்சுட்டு இருந்தேன். இங்குள்ள பிள்ளைகளுக்குப் படிக்கும் ஆர்வமும் புரிந்துகொள்ளும் ஆற்றலும் நிறையவே உள்ளது. ஆனால், கல்வியை விதைப்பதற்குத்தான் இங்கு ஆள் இல்லை. 'எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படி ரோட்டோரமாப் படுத்து, புரண்டு, குடிக்கும் கஞ்சிக்கு அவஸ்தைப்பட்டுக் கிடப்பது? நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை?’ - இவர்களைப் பார்த்தால் நான் எப்போதும் கேட்பது இதைத்தான். 'முழுமையான கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் பொறி’ என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ளும் வரை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பேன்' - வலி தந்த வேதனையோடு பேசுகிறார் ராஜ்குமார். திருப்பதி சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு சட்டம் படிக்கும் மாணவர். தினமும் மாலை சென்னை உயர் நீதிமன்றத்தின் வெளிக் கதவு இழுத்து பூட்டப்பட்டதும் பாரிமுனை தெருவோரக் குழந்தை களுக்கான இவரின் வகுப்பு தொடங்குகிறது.

''இந்த விஷயத்தில் எனக்கு நண்பர்கள் பலரும் உறுதுணையாக இருக்கிறார்கள். இந்தப் பிள்ளை கள் தங்களுக்கு நோட்டுப் புத்தகம் தேவை என்றால் என்னிடம் வந்து நிற்பார்கள். நான் என் நண்பர்களிடத்தில் போய் நிற்பேன். என்றோ பார்த்த ஒரு நண்பனைத் திடீரெனப் பார்த் தால், அவன் என்னைப்பற்றிவிசாரிப் பதைவிட இந்த பிள்ளைகளைப்பற்றித்தான் அதிகம் விசாரிப்பான்.
இவர்களைப் பெத்துப்போடுவதோடு தங்களின் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள் இவர்களின் பெற்றோர்கள். அதன்பிறகு, என்ன, ஏது எனக் கேட்பதற்குக்கூட இவர்களுக்கு யாரும் இல்லை. பல சிறுவர்களுக்குப் பிறப்பு, சாதி என அடிப்படையான எந்தச் சான்றிதழும் கிடையாது. நிறைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு 'எய்ட்ஸ்’ இருக்கிறது. 'எய்ட்ஸ்’ இருப்பதே தெரியா மல் பலர் இறந்துவிட்டார்கள். இந்தச் சூழலில் குழந்தைகள் எப்படிச் சரியாக வளர முடியும்? சிறிய திருட்டில் இருந்து, வழிப்பறி வரை இவர்கள் பழக்கப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் பருவ வயதை எட்டுவதற்குள் எல்லா தவறுகளையும் கற்றுக்கொள்கிறார்கள்.

அப்பாக்களே தங்கள் பிள்ளைகளை சாராயம், பான்பராக் வாங்கி வரச்சொல்லி அனுப்புகின்றனர். நாளடைவில் அந்தப் பிள்ளைகள் கெட்ட பழக்கங்களைத் தானாகவே கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். 'யார் தவறு செய்யச் சொன்னாலும் செய்யாதீர்கள்.
அது பெத்தவங்களே ஆனாலும் சரி’ என்று சொல்லிக் கொடுக்கிறேன். இன்று என்னை நேசிக்கும் பிள்ளைகளும் அப்படியே நடக்கின்றனர். இங்குள்ள பல பெற்றோர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போனதற்கு இதுவே காரணம்'' என்பவரைச் சுற்றி 'சார்... சார்...’ என மொய்க்கிறது பிள்ளைகள் கூட்டம்.
செய்தித்தாள் படிக்கவைப்பது, விளையாட்டுகள் கற்றுத்தருவது, மரியாதையாகப் பேசுவது எப்படி? என கற்றுத்தருவது என ராஜ்குமாரின் வகுப்புகள் அடுத்தடுத்துக் கடக்கின்றன. ''முறை யாகக் கேரம் விளையாடத் தெரியாத சிலரை கேரம் போட்டி ஒன்றுக்கு யதார்த்தமாகத்தான் அனுப்பிவைத்தேன். சந்துரு, தினகரன் என்ற இரு சிறுவர்கள் கோப்பையோடு திரும்பி வந்து என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டார்கள். உடனடி யாக அவர்களுக்கு ஒரு கேரம்போர்டு வாங்கிக் கொடுத்தேன்.

இந்தச் சமூகம் எங்களைப் பலவாறு ஏய்த்து வருகிறது. திடீரென இரவு நேரத்தில் படுத்து தூங்கிக்கொண்டு இருக்கும் எங்களில் சிலரை போலீஸ் பிடித்துக்கொண்டு செல்லும். அவர்களுக்கு 'கேஸ்’ போட ஆள் கிடைக்கவில்லை என்றால் நாங்கள்தான் பலிகடா. அதேபோல் ஒன்றிரண்டு பேருக்கு நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுத்துவிட்டு, இந்தப் பகுதி மாணவர்களுக்கு படிப்பு உதவி செய்ததாக விளம்பரம் செய்து கொள்கிறார்கள் சில அரசியல்வாதிகள். அவர்களே கட்சிக் கொடி கட்டுவது, பேனர் வைப்பது, கொடி பிடிப்பது போன்ற வேலைகளுக்கு அழைத் துச் சென்று பிஞ்சிலேயே திசைமாறிப்போகக் காரணமாக இருக்கிறார்கள். எங்களுக்கு எவ்வித ஆவணங்களையும் வாங்கித் தர முன்வராத இவர் கள், வாக்காளர் அடையாள அட்டையை மட்டும் வாங்கித் தர மறப்பது இல்லை. என்னால் இங்குள்ள ஒரு குழந்தை படித்து நல்ல நிலைமைக்கு வந்தால் போதும். அதுவே மற்ற குழந்தைகளின் மனமாற்றத்துக்குக் காரணமாக இருக்கும்'' - நம்பிக்கையோடு பேசுகிறார் ராஜ்குமார்.
நல்லது நடக்கும் நண்பரே!
- பா.பற்குணன், படங்கள்: ப.சரவணகுமார்