என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!

எம்.சி.சி.யில் முஸ்தஃபா சந்திப்பு

##~##

தாம்பரத்தில் இருக்கும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி 175 வருடப் பழைமை வாய்ந்தது. அங்கு கடந்த வாரம் 1986-வது பேட்ச் மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது. கல்லூரியையே கால் நூற்றாண்டு பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது அந்த நிகழ்ச்சி. அந்த நெகிழ்ச்சியான தருணம் இங்கே...

அப்போதைய கல்லூரியின் முதல்வர் மந்திரமூர்த்தி வந்ததும் களைகட்டத் தொடங்கியது நிகழ்ச்சி. அவரிடம் கைகொடுத்த பழைய மாணவர் ஒருவர், 'உங்களின் அந்த  இறுக்கமான கைபிடிப்பு இன்னும் அப்படியே உள்ளது’ என்று கமென்ட் அடிக்க, வாய்விட்டுச் சிரித்தார் மந்திரமூர்த்தி. கரை வேட்டி, வெள்ளை சட்டை சகிதம் வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினத்தைப் பார்த்ததும் 'வாக்காளப் பெருமக்களே’ என்று ஒருவர் பெரிய கும்பிடு போட, சுப்புவின் முகத்தில் அரசியல் சிரிப்பு. மைக் பிடித்துத் தன் பழைய தோழியைப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தார் ஒருவர். ''நீ இன்னிக்கும் அன்னிக்குப் பாத்த மாதிரியே இருக்க'' என்று அவர் நினைவலையில் நீந்த, ''ஹோய்...'' என்று சத்தம் கொடுத்து அவரை நிகழ் காலத் துக்குக் கொண்டுவந்தது கூட்டம். அந்தத் தோழியின் முகத்திலோ அநியாயத்துக்கு வெட்கம்.

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!

விடுதி வார்டன் மீது தண்ணீர் ஊற்றியது, இரவில் சினிமாவுக்குச் சென்றது, நூலகத்தில் புத்தகம் திருடியது, சுற்றுலாவில் வாத்தியாரை படகில் உட்காரவைத்து மிரட்டியதுஎன தன் கல்லூரிக் காலக் குறும்புகளைப் பட்டியலிட்டார் உசேன் அலி. 'எனக்கு அரசியல் பிடிக்காது. ஆனால், என் மாணவன் சுப்பு அரசியலில் இருப்பது எனக்குப் பெருமை’ என்று பேராசிரியர் ஸ்டான்லி சந்தோஷமாகச் சொன்னார்.

'நான் படிக்கும்போது மாடி மேல் இருந்து என்னை குதிக்கச் சொல்லி ராகிங் செய்தார் சீனியர் ஒருவர். அவரோட பையன் எனக்கு ஸ்டூடன்டா வந்தான். பல வருஷத்துக்குப் பின்னாடி என்னைத் தேடி வந்த சீனியர் அப்பா, 'என் பையன் இங்கேதான் படிக்கிறான். அவனை மத்த ஸ்டூடன்ட்ஸ் ராகிங் பண்றாங்களாம்’னு புகார் சொன்னார். 'என்னை நீங்க ராகிங் செஞ்சது ஞாபகம் இருக்கா?’னு கேட்டேன். அவர் பதிலே சொல்லலை. ராகிங் செய்யக் கூடாதுன்னு உங்க பிள்ளைங்களுக்கு கத்துக் கொடுங்க’ என்று பேசி அரங்கை அதிரவைத்தார் முன்னாள் பேராசிரியர் ஒருவர்.

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!

சீனியர் மாணவர்கள் விடுதிக்குள் ராக்கெட் விட்டது, விடுதிக்கு வரும் மணி என்ற சிறுவனிடம் லவ் லெட்டர்ஸ் கொடுத்துவிட்டது எனத் தன் பழைய நினைவுகளைப் பகிர்ந்தார் ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வா.

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!

குரூப் போட்டோ எடுக்கும்போது அடித்துப் பிடித்து அன்றைய தங்கள் நண்பர்களுக்கு அருகில் இடம் பிடித்து அமர்ந்தனர். போட்டோசெஷனுக்குப் பிறகு ஆசை தீரத் தங்கள் கல்லூரி வளாகத்தை வலம் வந்தவர்களை மைக்கில் சாப்பிட அழைத்தார்கள். 'பழைய ஹாஸ்டல் சாப்பாடு மாதிரி இருக்காதுல்ல?’ எனக் கூட்டத்தில் ஒருவர் கமென்ட் பண்ண, கோரஸாகச் சிரித்தது கூட்டம். கடைசியில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றார்கள்!  

- அ.ஸ்டாலின் ஆன்ட்ரூஸ், படங்கள்: பா.காயத்ரி அகல்யா