என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

ஈரோட்டுப் பெண்களிடம் கேளுங்கள்!

##~##

'தமிழக பசுமை இயக்கம்’ துவங்கி நீலகிரி காடுகள் அழிப்புப் போராட்டம், ஈரோடு காளிங்கராயன் வாய்க்கால் மீட்புப் போராட்டம் என சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக, கொங்கு மண்டல மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் டாக்டர் ஜீவானந்தம்.

மருத்துவம் வணிக மயமாக்கலைத் தடுக்கக் கூட்டுறவு தத்துவத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளை நிறுவியுள்ள இவர், சொந்த ஊரான ஈரோட்டைப் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்!

என் ஊர்!

''ஈரோட்டின் பெருமைகளைச் சொல்ல நிறைய இருக்கு. சாதி, மதக்கொடுமை களை வேர் அறுத்த பெரியார் பிறந்த மண் இது.  'கள்ளுக் கடை மறியல் எப்போது நிறுத்தப்படும்?’ என்று மகாத்மா காந்தியிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் - 'இதை இரண்டு ஈரோட்டுப் பெண்மணி களிடம் கேளுங்கள். அதை முடிவு செய்ய வேண்டியது அவர்கள்தான்’ என்றார். அந்த இரண்டு பெண்கள் பெரியாரின் மனைவி நாகம்மாவும் தங்கை கண்ணம்மாவும். இருவரும் போராட்டத்தை எடுத்துச் சென்ற வீச்சைப் பார்த்து பொறி கலங்காதவர்கள் யாரும் இல்லை.

ஒருமுறை மகாகவி பாரதியார், ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருக்கும் நூலகத்துக்கு வந்து பேசினார். அவர் பேசிய தலைப்பு, 'மனித னுக்கு மரணம் இல்லை’ என்பது. அதாவது, 'சமூகத்துக்காக வாழும், போராடும் மனிதன், உடலால் மறைந்தாலும் வரலாற்றில், நினைவுகளில் மறைவது இல்லை’ என்றார் பாரதியார். அந்த மகானின் வாக்கு, அவர் விஷயத்தில் பலித்தது. துரதிருஷ்டவசமாக ஒரு வாரத்தில் பாரதியார் அகால மரணம் அடைந்தார்.

என் தந்தை  வெங்கடாசலம், பெரியார் பற்றாளர். எனது பெற்றோரின் திருமணம் பெரியார் தலைமையில் நடந்தது. பெரியார் வீட்டுக்குப் பக்கத்துத் தெருவில் 'குடியரசு’ பத்திரிகை அலுவலகம் இருந்தது. அதன் அருகில் எங்கள் வீடு. என் அம்மா லூர்து மேரிக்கு, மணியம்மை நெருங்கிய தோழி. இன்றும் பிரபலமாக இருக் கும் ஈரோடு கலைமகள் பள்ளியை நிறுவியது என் தாத்தா மீனாட்சி சுந்தரனார். தமிழகத்தில் பெண்களுக்காக முதல் முறையாக நிறுவப்பட்ட பள்ளி அது. 'குறைந்த கட்டணமே வசூலிக்க வேண்டும்; பின்னாளில் அந்தப் பள்ளி வணிக மயம் ஆகிவிடக் கூடாது’ என்று என் தாத்தா அதைப் பொதுச் சொத்தாக்கிவிட்டார்.

அந்தக் காலத்தில் ஈரோட்டில் லண்டன் மிஷன் பள்ளி இருந்தது. அதில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அப்போது வேதநாயகம் என்பவர் எங்களுக்குத் தலைமை ஆசிரியர். கையெழுத்து ஒழுங்காகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருப்பார். என் கையெழுத்து அழகாக இருக்கக் காரணம் அவரே. அப்போது எல்லாம் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அதீத அக்கறையுடன் இருந்தார்கள். பிள்ளைகள் வீட்டில் ஒழுங்காகப் படிக்கிறார்களா என்று வீடு வரைக்கும் வந்து பார்ப்பார்கள். ஈரோட்டில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு சென்னைக்குச் சென்று மயக்கவியல் மருத்துவம் படித்தேன். அதற்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. ஆனால், என் மருத்துவக் கல்வி என் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று ஈரோட்டை விட்டு வேறு எங்கும் நான் செல்லவில்லை.

என் ஊர்!

நல்ல திரைப்படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'விடியல்’ திரைப்படக்கூடத்தைத் தொடங்கினேன். 1982-ல் பாரதியார் நூற்றாண்டை ஒட்டி 'பொன் வால் நரி’, 'ஈரோட்டில் பாரதி’, 'ஆறில் ஒரு பங்கு’, 'பெண் விடுதலை’ போன்ற புத்தகங்களை வெளியிட்டு, கல்வெட்டுகளும் வைத்தோம். பாரதிதாசன் நூற்றாண்டு விழாவுக்காகக் கூட்டு முயற்சியில் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி தொடங்கினோம். ஆனாலும், எனக்கு இருக்கிற ஒரே வருத்தம்... ஈரோடு மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் பல இருக்கின்றன. ஆனால், கல்வி அறிவு குன்றிய மாவட்ட வரிசையில் தமிழக அளவில் ஈரோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

என் ஊர்!

அன்றைக்கு இருந்த ஈரோடு இன்று இல்லை. காவிரியும் காளிங்கராயனும் இன்று சாயக் கழிவுகளால் பாதிக்கப்பட்டுக் கிடக்கின்றன. இருந்தாலும் என் சொந்த மண் எப்போதும் எனக்கு முதலிடம்தான்!''

- கி.ச.திலீபன்