என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

ஜீவா என் சொந்த பிள்ளை!

கண் கலங்கும் திருநங்கை

##~##

டைப்பாளி... சமூகப் போராளி... நடிகை... இப்படி பன்முகங்கள்கொண்டவர் திருநங்கை ரேவதி. சந்தோஷ் சிவனின் 'நவரசம்’ முதல் சமீபத்திய 'தெனாவட்டு’ வரை உருக்கமான நடிப்பால் மனம் கவர்ந்தவர். நாமக்கல்லைச் சேர்ந்த ரேவதியைச் சந்தித்தோம்.

 ''10-ம் வகுப்பு படிக்கும்போதுதான் எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்தேன். சுற்றி இருந்தவர்களின் சொற்கள் என்னைப் புண்படுத்த, அன்பான அம்மா, மூன்று அண்ணன்கள், ஒரு அக்காவை விட்டு விலகி டெல்லிக்கு ரயில் ஏறினேன்.

ஜீவா என் சொந்த பிள்ளை!

டெல்லியில் நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். ஆனாலும்கூட, என்னைப் போன்ற திருநங்கைகளுடன் பழகியபோது பெரும் ஆறுதல் கிடைத்தது. தினமும் சக தோழிகளோடு வீடு வீடாகச் சென்று பாட்டுப் பாடி, நடனம் ஆடி பதாய் (பணம் வாங்குவது) வாங்குவோம். அங்கு எங்களை தெய்வப் பிறவியாகப் பாவித்து வணங்கினார்கள். சில வருடங்களில் என் பெற்றோர் என்னைக் கண்டுபிடித்து வீட்டுக்கு இழுத்து வந்துவிட்டார்கள்.

பின்னாளில் அவர்கள் என்னைப் புரிந்துகொண்டார்கள். குடும்பத்தினர் அனுமதியுடன் மும்பை சென்று பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். பிறகு பெங்களூரு சென்று 'தி சங்கமா ஆர்கனைஸ் சென்டர்’ என்ற மனித உரிமை அமைப்பில் பணிபுரிந்தேன். அங்கு கிடைத்த அனுபவங்களைக்கொண்டு திருநங்கைகளின் இன்னல்களை 'உணர்வும் உருவமும்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதினேன். அது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. தொடர்ந்து எனது சுயசரிதை நூலையும் எழுதினேன்.

இப்போது சங்கமா அறக்கட்டளையின் இயக்குநர் பதவியில் இருக்கிறேன். அங்கு கிடைத்த அனுபவங்கள் என் வாழ்க்கைப் பாதையை மேலும் திசை மாற்றியது. பெங்களூரு நகர விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப் பட்டபோது மேதா பட்கருடன் இணைந்து போராட்டங்களில் கலந்துகொண்டேன். சமூக அக்கறையுடன் நல்ல குறும்படங்களில் நடிக்கும்போதுதான் இயக்குநர் சந்தோஷ்சிவன் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னை 'நவரசம்’ படத்தில் நடிக்கவைத்தார். அந்தப் படத்தைப் பார்த்து விட்டுதான் இயக்குநர் கதிர் 'தெனாவெட்டு’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் என்னை நடிக்கவைத்தார்.

ஜீவா என் சொந்த பிள்ளை!

படத்தில் திருநங்கைகளின் தலைவி யாக இருக்கும் என்னிடம் ஜீவாவும் பூனம் பஜ்வாவும் தஞ்சம் அடைவார்கள். அவர்களுக்காக ரவுடிகளிடம் நான் அரி வாளால் வெட்டுப்பட்டு ஜீவாவின் மடியில் உயிரை விடுவேன். அந்தக் காட்சியைப் படம் பிடிக்கும்போது, கூச்சம் காரணமாக ஜீவாவின் மடியில் பட்டும் படாமலும் தலை வெச்சுப்  படுத்தேன். அப்போ ஜீவா, 'உங்க மகன் மாதிரி நினைச்சுக்கோங்க. கூச்சப்படாதீங்க’னு சொன்னார். பிள்ளைப் பேறுக்கு வாய்ப்பு இல்லாத எனக்குக் கண் கலங்கிடுச்சு. அப்போ இருந்து ஜீவாவை என் சொந்தப் பிள்ளை போலத்தான் நினைக் கிறேன்.  

ஜீவா என் சொந்த பிள்ளை!

சமீபத்தில் 'காஞ்சனா’ படம் பார்த்தேன். திருநங்கைகளுக்குப் பெருமை சேர்க்கும் விதத் தில் சரத்குமார் நடித்து இருந்தார். ஒரு கட்சித் தலைவர் இப்படி நடித்து இருப்பது எங்களுக்குப் பெருமை. சரத்துக்கு நன்றி!'' நெகிழ்வுடன் முடிக்கிறார் ரேவதி.

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்