போயிட்டு வாரம்பா!
##~## |
போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு கோயில் திருவிழாக்களுக்குப் போனார்கள். ஆனால் இன்றும், செட்டிநாட்டுப் பக்கம் அந்தப் பாரம்பரியம் மாறாமல் அழகரின் ஆடித் திருவிழாவுக்கு வண்டி கட்டி போய் வருகிறது ஒரு கோஷ்டி!
காரைக்குடி அருகில் உள்ளது வேலங்குடி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக அழகர் திருவிழாவுக்குக் கூட்டு வண்டி பூட்டிக்கொண்டு போய் வருவதை வழக்கமாகவைத்து இருக்கிறார்கள்.
''எனக்கு விவரம் தெரிஞ்சு 30 வருஷமா வண்டி கட்டுறோம். வழக்கமா தேருக்கு அஞ்சு நாள் முன்னாடி வண்டியைக் கௌப்பிருவோம். போற வழியில் ஒரு இரவு தங்கி சமையல் செஞ்சு, பூஜைக்கு வேண்டிய சாமான்களை வாங்கிக்கிட்டு ராத்திரி அழகர் கோட்டைக்குப் போயிருவோம். பொழுது விடிஞ்சதும் முடி இறக்கி, மலை ஏறி ராக்காச்சி கோயில்ல போயி தீர்த்தம் ஆடுவோம். அடுத்ததா, அழகரைக் கும்பிட்டு வந்து காலையில் கை நனைப்போம்.

மறுநாள் பதினெட்டாம்படியானுக்குக் கிடா வெட்டி கறிக்கஞ்சி ஆக்குவோம். நாங்க ரெண்டு ராத்திரி தங்கணும்கிறது அழகரு எங்களுக்கு இட்ட கட்டளை. காலையில் 9 மணிக்கு எல்லாம் அழகர் தேர் கௌம்பி கெழக்கால வரும்போதே, 'போயிட்டு வாரம்பா’னு பதினெட்டாம்படியான்கிட்ட சொல்லிட்டு, வண்டிய கௌப்பிருவோம். மிச்சம் சொச்சம் இருக்கிற கறிக் கஞ்சியைக் குடிச்சுக்கிட்டே மறுநாள் சாயந்தரம் 5 மணிக்கு எல்லாம் வீடு வந்து சேர்ந்துருவோம். அழகர் கோயில்ல ஆக்குனதை வீட்டுக்கு எடுத்துட்டு வரக்கூடாதுங்குறது ஐதீகம். அதனால் மிச்சம் சொச்சம் இருந்தா வீட்டுக்கு

வெளியில்வெச்சு அக்கம்பக்கத்து சனங்களை கூப்பிட்டு சாப்பிட வெச்சிருவோம்!'' கூட்டு வண்டிப் பயணத்தை அழகாக விவரித்தார் பெரியவர் சோலையன் அம்பலம்!
''அந்தக் காலத்தில் சரி... இப்பவும் மாட்டு வண்டியில்தான் போகணுமா?'' என்று கேட்டதற்கு, ''அழகருக்கு வண்டி கட்டினதால் எனக்குத் தெரிஞ்சு பல குடும்பங்களில் செல்வம் பெருகி இருக்கு. அந்தக் காலத்தில் அழகர் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் குடும்பம் குடும்பமா வண்டி கட்டி வரவேண்டும் என்பதற்காகத்தான் திறந்தவெளி அமைச்சு கோட்டை மதில் சுவர் கட்டினாங்க. பக்கத்தில் இருக்கிற வெள்ளியங்குளம் ஜமீன்தாருக்குத்தான் அழகர்கோயிலில் எப்பவும் முதல் மரியாதை. இன்னிக்கும் அவர் அழகர் திருவிழாக்களுக்குக் கூட்டு வண்டி கட்டித்தான் வர்றார். அந்தக் காலத்தில் அழகரைத் தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது நிலங்களில் விளைந்த தானியங்களையும் அழகருக்குக் காணிக்கையாக எடுத்து வரவும் வண்டி கட்டி வந்தார்கள். அழகருக்குப் பங்கு கொடுத்தால் வளமான விளைச்சல் இருக்கும் என்பது நம்பிக்கை. பரம்பரையான வழக்கத்தை மாற்றினால் கோளாறு காட்டும்னு மக்கள்கிட்ட பயமும் இருக்கு. அதனால் இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் வண்டி பயணம் தொடரும்!'' என்கிறார் அழகர் கோயிலின் ஸ்தானிக பட்டரான அம்பி என்ற சுந்தர நாராயண பட்டாச்சார்!
- குள.சண்முகசுந்தரம், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்