என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

கண் முழுக்க கருவேல மரங்கள்!

##~##

ழுத்தாளர் வேலராமமூர்த்தி வெயில் ஊறும் தன் ஊர் பெருநாழிப் பற்றி இங்கே மனம் திறக்கிறார்...

 ''வானம் பார்த்த பூமியான பெருநாழியின் அடையாளமாகச் சொல்லப்படும்  வெடித்த பூமியும், அதில் விளைஞ்ச பருத்திக் காடும்தான் நான் பால்ய வயதில் பாதம் பதித்தத் தலங்கள். வான் துளியாகச்  சொட்டும் நீரை, பொட்டுத் தங்கமாகக் கருதிய காலம் அது. 1960-களில் பாசன வசதியே இல்லாத எங்க ஜனங்க, விறகு வெட்டியாவது பொழைச்சுக்கிடட்டும்னு சொல்லி அரசாங்கம் எங்க ஊர்ல சீமைக் கருவையை விதைச்சுது. கண்மாய்க் கரையில் நின்னு பார்த்தா எங்க கண்ணுக்குத் தெரிஞ்சது எல்லாம் கருவேல மரம்தான். பூமிக்கு உள்ளே இருந்த தண்ணீரையும், வானில் வீசிய காற்றையும் இந்தக் கருவேல மரங்கள் உறிஞ்சியதால் ஏற்பட்ட வினை இது. கஞ்சிக்கும் தண்ணிக்கும் பஞ்சமான பூமி இது. அதே நேரத்தில் கவிஞர்களும் கலைஞர்களும் செழித்த பூமி. தமிழில் நட்சத்திர வடிவில் கவிதை எழுதிய கவியோகி கருணையானந்த சுவாமிகள், 'கோ’ 'கொ’ போன்ற கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 1,440 பாசுரங்கள் எழுதிய கோவிந்தசாமி புலவர் பிறந்த மண் இது. ஊரு ஒண்ணுதான். ஆனா, ரோட்டுக்கு மேற்கே இருப்பவர்களுக்கும், கிழக்கே இருப்பவர்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உண்டு. என்ன சண்டை வந்தாலும் மேற்கு மக்கள்  தவறான வார்த்தைகளைச் சொல்ல மாட்டாங்க. அதற்கு நேர்மாறாக கிழக்கே இருப்பவர்கள் வேல் கம்பு, அருவாளுக்கு வேலை கொடுப்பார்கள். மாமா, மச்சான்னு இருந்தவங்களுக்கு மத்தியில் இது சாதி, மத துவேஷங்களை எழுப்பிவிட்டது. நிறைகுளவள்ளி அம்மன் முளைக்கொட்டு திருவிழாவின் முளைப்பாரி ஊர்வலம் பள்ளிவாசல் வழியாகச் செல்ல அடம்பிடிக்கும் காலம் அது. அப்போது எல்லாம் சிறுவர்கள் சந்தோஷத்துக்கு வினையாக ஊர்க்காரர்கள் நடுவே வேல்கம்பும் வீச்சரிவாளும்தான் விளையாடும். இந்தச் சம்பவங்கள்தான் என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. மாற்று மதங்களை நேசிக்கவைத்தது. எனது சமூகத்தில் எனக்கு நெருக்கமானவர்கள் குறைவு. மாறாக முஸ்லிம், தாழ்த்தப்பட்டவர்களிடம்தான் நெருக்கம் அதிகம்.

என் ஊர்!

எருது கட்டு, விளாத்திகுளம் வரைக்கும் கழுதைப் பந்தயம், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தேங்காய்களைச் சிதறடிப்பது, நாடகம் நடத்துறதுனு இருந்த பெருநாழியை இப்ப பாக்க முடியல. பசங்களோடு சேர்ந்துகொண்டு எங்க நிலத்திலேயே பருத்தியைத் திருடியது, அதை வித்த காசுக்குத் தோசை வாங்கி தின்னதை இன்னமும் மறக்க முடியலை. காட்டு கிணத்துல போட்டி போட்டுக் குதிச்சு விளையாடுவது தனி சுகம். முளைக்கொட்டு திண்ணையில் ஊர்ப் பெருசுகள் சொல்லிய கதைகளை கேட்ட அனுபவம்தான் இன்று என்னை பல்லாயிரம் பேருக்குக் 'கதை சொல்லி’யாக மாற்றியது. அந்தத் திண்ணை இன்று சீட்டாடும் இடமாக மாறிப் போயிருச்சு. 72-ல் ஏற்பட்ட பஞ்சத்தின்போது கருவேல மரங்களைக் கடத்தி வசதியாக வாழ்ந்தவர்கள் மத்தியில், வலுவிழந்தவர்கள் பசியைப் போக்கிக்கொள்ள அதன் முட்களை எடுத்தார்கள். அதற்கு பஞ்சாயத்து விதித்தத் தண்டனை, எங்க குலசாமி இருளப்பசாமி போன்றவைதான் எனது கதைகளங்கள். இன்னமும் எடுக்க எடுக்கக் குறையாத அட்சயபாத்திரமா என் ஊர் எனக்குக் கதைகளை கொடுத்துகிட்டே இருக்குது!''

என் ஊர்!

- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி

என் ஊர்!