Published:Updated:

அறிவிழி - 62

அண்டன் பிரகாஷ்

ஃபேஸ்புக் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு மென்பொருள்களை உருவாக்கும் வருடாந்திர F8 டெவலப்பர் மாநாடு, இந்த வாரத்தில் நடந்து முடிந்தது. பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்ட மாநாட்டில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை... அருகில் இருக்கும் நண்பர்களைத் தானாகவே கண்டறிந்து உங்களுக்குச் சொல்லும் வசதி.

உங்களது மற்றும் உங்கள் நண்பர்களின் அலைபேசியில் நிறுவப்பட்டிருக்கும் ஃபேஸ்புக் மென்பொருள், நீங்கள் இருக்கும் இடத்தை தொடர்ந்து Check-In  செய்தபடியே இருக்க, இந்தத் தகவலின் அடிப்படையில் உங்களுக்கு அருகில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதைக் காட்ட உதவும் வசதி ரெடி. FAN  என்று சுருக்கமாக அழைக்கப்படும் Facebook Audience  Network. இது கூகுளின் Adsense  போன்றது. உங்களது அலைபேசிகளில் இயங்கும் வலைதளங்களிலும் மென்பொருள்களிலும் ஃபேஸ்புக்கில் இருந்து கொடுக்கப்படும் விளம்பரங்களை வெளியிட்டு, அதில் இருந்து வருமானம் ஈட்டிக்கொள்வதற்கான வசதி இது. ஃபேஸ்புக் விளம்பரப் பிரிவில் தனது எல்லைகளைக் கடந்து கூகுளுக்கு விடுத்திருக்கும் நேரடி சவால். கூகுளின் Adsense பயன்படுத்தி இந்தியாவில் குடிசைத் தொழில் உருவானது போல, FAN-ன் பயன்படலும் இருக்கும் என நம்புகிறேன்.

அறிவிழி - 62

கிடுகிடுவென மாற்றங்களைக் கொண்டுவருகிற ஃபேஸ்புக்கின் காலாண்டு வருமானமும், அதில் இருந்து கிடைத்திருக்கும் லாபமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ட்விட்டர் சற்றே தள்ளாடியபடி இருக்கிறது. பயனீட்டாளர்களின் இயக்கங்கள் குறைந்திருப்பதால், விளம்பர வருமானம் அவர்கள் நினைத்த அளவுக்கு இல்லை. தவிர, அவர்களது பங்குசந்தை மதிப்பும் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

மின்சார விநியோக நிறுவனங்கள், வலைப்பின்னல் (Mesh) நெட்வொர்க் கைப் பயன்படுத்துவதைப் படித்துவிட்டு, WiMax    வசதியுடன் மின்சார நிறுவனத்துடனும்,  Zigbee வசதி மூலம் வீட்டுக்குள் இருக்கும் சாதனங்களுடனும் தொடர்பில் இருக்கும் தொழில்நுட்ப வசதி பற்றி ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஆனந்த் அளித் திருக்கும் பின்னூட்டம் பயனுள்ளது.

WiMax ..Zigbee? - விளக்குகிறேன்.

முதலில் WiMax . Worldwide Interoperability for Microwave Access  என்பதன் சுருக்கம். நமக்கு எல்லாம் இப்போது ரொம்பவும் பரிச்சயமாகிவிட்ட WiFi வசதியின் 'பலராம’ சகோதரன் என்று எளிதாகச் சொல்லலாம். WiFi சிறிய பரப்பளவு உள்ள இடத்தில் 300 அடிகளுக்குள் மட்டுமே டேட்டா தொடர்புகொள்ள பயன்படுத்த முடியும். ஆனால் WiMax-ஐ, அதைவிட பல மடங்கு தூரத்தில் 30 மைல்களுக்கும் மேலான தொடர்புகளுக்குப் பயன்படுத்த முடியும்.

Zigbee-ம் மேற்கண்டவற்றைப் போலவே டேட்டா தொடர்புக்காகப் பயன்படுத்தப் படும் தொழில்நுட்பத் தரம் (Standards). நுகர்வோர் மின்னணு சாதனத் தயாரிப்பாளர்கள் பெரிதாகப் பயன்படுத்த விழையும் தரமாக மாறிவிட்டிருக்கும் Zigbee, நீங்கள் தினமும் பயன்படுத்தும் டி.வி. ரிமோட்டிலோ, மின்சாரத்தை அளக்கும் மீட்டரிலோ, ஏ.சி. சாதனத்திலோ இருக்கக்கூடும்.

Wifi, WiMax, Zigbee  போன்ற சாதனங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, இணையத்தில் இணைக்கப்பட உதவும் வகையில் எழுதப்பட்ட தரங்கள். இவற்றின் வெற்றி/தோல்வி என்பது சாதனத் தயாரிப்பாளர்கள் எந்தத் தரத்தைப் பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பதில் இருக்கிறது.

அலைபேசித் தொழில்நுட்பம் நம் வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்திருப்பதால், நம்மைச் சுற்றி இருக்கும் பல்வேறு தொழில்நுட்பங்கள் அதைச் சார்ந்தே உருவாக்கப் படுகின்றன. அதை அடிப்படையாகக்கொண்டு பார்த்தால், Wifi மற்றும் Bluetooth என்ற இரண்டு தரங்களே இப்போதைக்கு வெற்றிப் பாதையில் இருக்கின்றன.

அறிவிழி - 62

சென்ற கட்டுரையில், வலைப்பின்னல் நெட்வொர்க் பிரிவின் முயற்சிகள் பற்றி சொல்லியிருந்தேன். இணைய வசதி இல்லாத கிராமப்புறங்களிலோ, இணைய வசதியைப் பயன்படுத்த முடியாத பேரழிவுத் தருணங்களிலோ, அலைபேசியுடன் அலைபேசி தொடர்புகொள்ள வைக்கும் பரிசோதனை முயற்சி நியூஸிலாந்தில் சில வருடங்களாகவே நடத்தப்பட்டு வருகிறது. Serval Mesh Extender என்று பெயரிடப்பட்ட இந்தப் பரிசோதனை, சென்ற வருடத்தில் மக்களிடம் நேரடியாகப் பணம் திரட்ட முயன்று தோல்வி அடைந்துவிட்டாலும், இந்த முயற்சி கொடுத்திருக்கும் உற்சாகத்தைப் பார்க்க முடிகிறது.

இதைவிட முக்கியமான முயற்சி 'திறந்த தோட்டம்’ (Open Garden) என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், வலைப்பின்னல் நெட்வொர்க் மூலமாக இணையத்தில் இணைந்துகொள்வது. இவர்களது பல்வேறு அலைமென்பொருள்கள் வலைப்பின்னல் நெட்வொர்க்குகளை உருவாக்கவும் அவற்றில் இணைந்துகொள்ளவும் உதவுகின்றன. Open Garden  முயற்சியில் உருவாகியிருக்கும் அலைமென்பொருள்களை இங்கே பார்க்கலாம் https://opengarden.com/apps

அலைபேசி இல்லாதவர்களே இல்லை என்ற நிலைக்குச் சென்றுகொண்டிருக்கும் இந்தியாவில், வலைப்பின்னல் நெட்வொர்க் சார்ந்த முயற்சிகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எந்தவித செல்போன் நிறுவனத்தின் சந்தாதாரராக இல்லாமலேயே, பொருட்காட்சி நடத்தப்படும் திடல்களிலோ, திரையரங்குகளிலோ, அப்பார்ட்மென்ட் காம்பிளெக்ஸ்களில், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவும், குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொள்ளவும், ஏன், தேவைப்படும் சில முக்கிய இ-மெயில் போன்ற இணையச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடிகிற சாத்தியத்தை இந்தத் தொழில்நுட்பம் அளிக்கிறது. தொழில்முனைவு விருப்பம்கொண்ட இளைஞர்கள் உற்றுநோக்க வேண்டிய துறை இது.

- விழிப்போம்...