என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

கல கல... இரவு!

கல கல... இரவு!

##~##

மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் தேனி மாவட்ட கிளையின் ஐந்தாவது மாநாடு போடிநாயக்கனூரில் கோலாகலமாக  அரங்கேறியது. எழுத்தாளர் பாஸ்கர்சக்தி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஆகியோர் கலை இரவின் சிறப்பு விருந்தினர்கள்.

மா.சிவாஜி குழுவினரால் போடப்பட்டு இருந்த கிராமத்து குடிசை செட் அத்தனை கச்சிதம். கயிற்றுக்கட்டில், உரல், அரிக்கேன் விளக்கு, கலப்பை, வீட்டின் முன் ஆட்டுக் குட்டி என வழக்கொழிந்து வரும் கிராமத்து குடிசையை அப்படியே கண் முன் கொண்டு வந்து இருந்தார்கள்.

மாநிலக் குழு உறுப்பினர் போடி மாலன், அரிக்கேன் விளக்கை ஏற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்து தலைமை உரை நிகழ்த்தினார். '1978-லேயே த.மு.எ.க.சங்கத்துக்கு கிளை ஆரம்பித்த மாவட்டம் நம் தேனி மாவட்டம். கலை, இலக்கியக் கூடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளர்களை உருவாக்கி மாநிலத்தின் முக்கிய விருதுகளை பெறுகிற தரத்தோடும், பிரபலத்தோடும் அமைந்து உள்ளது. செம்மொழி தமிழுக்குத் தொடர்ந்த போராட்டங்களில் பங்கெடுத்த பெருமைகொண்டது!' என்று கூறினார்.

கல கல... இரவு!

அடுத்ததாக உடும்பஞ்சோலை சட்டமன்ற உறுப்பினர் கே.கே.ஜெயச்சந்திரன் மலையாளம் கலந்த தமிழ் நடையில்,  தமிழ் மொழியின்  சிறப்பு குறித்து  பேசி வாழ்த்துரைத்தார்.

''பிரான்ஸ் தேசத்தில் ஒரு திருமணச் சட்டம் இயற்றப்பட்டது. அங்கே பணிபுரியும் ஓட்டுநர்கள் அனைவரும் தொப்பி அணிய வேண்டும் என்பதுதான் அச் சட்டம். டர்பனுக்கு மேல் தொப்பி அணிய முடியாதே... அதனால் இந்தச் சட்டம் சீக்கியர்களுக்குப் பாதகமாக அமைந்தது. அந்த அவலம் அறிந்து நமது பாரத பிரதமர் மன்மோகன்சிங், உடனடியாகத் தொலைபேசியில் பிரான்ஸ் பிரத மரோடு பேசி, சட்ட திருத்தம் கொண்டு வரச் செய்தார். ஆயிரம்  தலைப்பாகைகளுக்காக ஓடோடி பேசிய பிரதமர், இலங்கையில் ஆயிரக்கணக்கில் அறுபடுகிற தமிழர் தலைகளை கண்டு கொள்ளாத மர்மம் என்னவோ?'' என்று த.மு.எ.க.ச மாநில துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராமலிங்கம் பேசிய போது, அனல் பறந்தது.

மங்கள வாத்தியம், குறவன் குறத்தி ஆட்டம் என்ற நாட்டுப்புற கலை வடிவங்களோடு கலந்து, கடந்த மூன்றாண்டுகளில் சுஜாதா-உயிர்மை விருது, ஆனந்த விகடனின் 2010-க்கான சிறந்த நாவலாசிரியர் விருது பெற்ற காமுத்துரை, கலை இலக்கியப்பெருமன்றம் விருது பெற்ற சீருடையான், முனைவர் பட்டம் வாங்கியமைக் காக இதயகீதன், கந்தர்வன் சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற சின்னபாலு, தெக்கத்திப்பொண்ணு மா.சிவாஜி, அய்.தமிழ்மணி, இதயநிலவன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்கள்!

போடி ஓலப்புரம் கட்டபொம்மன் கலைக் குழுவினரின் தேவராட்டமும், கிளவிகுளத்தான் சிறுவர்களின் கிராமியக் கூத்தும் நிகழ்ச்சியின் ரசனை அத்தியாயங்கள். இறுதியாக கம்பன் நிழல்கள் கலைக் குழுவினரின் 'திருப்பிக் கொடு’ எனும் நாடகம், அரசியல் சூழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நாடகத்தில் 'தெக்கத்திப் பொண்ணு’ தொடர் வசனகர்த்தா சிவாஜியின் 'கிறுக்கன்’ நடிப்பு அனைவரையும் அசரவைத்தது.

மறக்க முடியாத கலை இரவு!  

- தி.முத்துராஜ்