மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 29

தமிழ்மகன், ஓவியம்: பாலா

'இரண்டு நாட்களில் நான் அங்கு போய்ச் சேரவில்லை என்றால், 581-ஜி அம்பேல்!’ என்று கேப்ரியல் போட்ட அதிர்ச்சி குண்டு, பூமியின் எல்லா நாட்டின் தலைவர்களையும் பேதிக்கு சாப்பிட்டவர்கள் மாதிரி நடுநடுங்கவைத்தது. முக்கியமாக ஃபிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் நடுநடு இன்னும் அதிகமாக இருந்தது.

கேப்ரியல், உண்மையாகத்தான் சொல்கிறாரா... சும்மானாச்சும் பாவ்லா காட்டுகிறாரா என்பதில் அலட்சியம் காட்ட முடியவில்லை. பூமியின் முக்கியமான பலர் அங்கே இருந்தார்கள். தாராளமாகப் பயப்பட வேண்டியிருந்தது. கேப்ரியலை சிறையிலும் அடைக்க முடியாமல், சிறப்பு விருந்தினராகவும் கௌரவிக்க முடியாமல் அமெரிக்க அதிபர் ஒபாமாதான் அதிகம் தவித்தார். ஏனென்றால், இருந்திருந்து அங்குதான் கேப்ரியலைச் சுற்றி வளைத்தார்கள். உலக போலீஸாகவே இருந்து பழக்கப்பட்டுவிட்ட அமெரிக்காவுக்கு இது கூடுதல் தலைவலி.

வாஷிங்டன் கிராண்ட் ஹயட் ஹோட்டலில் முதன்மை ஷூட்டில் செம ராயலாகத் தங்க வைக்கப்பட்டிருந்தார் கேப்ரியல். ஆனால், அறையைவிட்டு அவர் வெளியே தப்ப முடியாதவாறு 400 ராணுவ வீரர்கள் அவருக்கே தெரியாமல் காவல் இருந்தனர். அறைக் கதவை நோக்கிக் குறிவைத்தபடி எல்லா நேரமும் துப்பாக்கிகள் தயாராக இருந்தன. இன்னும் 47 மணி நேரம் இருந்தது.

ஆபரேஷன் நோவா - 29

அடுத்த 10 மணி நேரத்தில் உலக நாடுகளின் அத்தனை தலைவர்களும், லண்டனில் அறிவியல் கழக விஞ்ஞானிகளோடு அவசரச் சந்திப்புக்கு தயார் ஆனார்கள்.

விஞ்ஞானி சார்லஸ் சொல்லப்போகிற ஒவ்வொரு யோசனையையும் உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

விஞ்ஞானிகள் குழு ஒன்று தீவிரமாக இருந்தது. கேப்ரியல் சொன்னது மாதிரி ஏதாவது டைமர் புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை ஊர்ஜிதம் செய்யும் தீவிரத் தேடல். வெடிக்கவைக்கும் டிவைஸ் எங்கே இருக்கிறது? அதை இயக்கும் புரோகிராம் எங்கே... என்னவாக இருக்கிறது... விஞ்ஞானிகள் தவித்தனர். தெள்ளத்தெளிவாக எஃபெல் டவரில் குண்டு வைத்திருப்பதாகச் சொன்னாலே, அதைக் கண்டுபிடித்து அழிப்பதற்குள் மூச்சு முட்டிப்போகிறது. இது அண்டவெளி பிரபஞ்சத்தில் டெலஸ்கோப்பில் தெரிகிற ஒரு புள்ளி.

எல்.டபிள்யூ. டிரான்ஸ்மிட்டிங் டிகோட் புராசஸர் என்பது இப்போதுதான் உருவான புதிய துறை. உலகில், இப்படி ஒரு விஞ்ஞானப் பிரிவு தோன்றி ஐந்து மணி நேரம்தான் ஆனது. அதாவது, கேப்ரியலின் அச்சுறுத்தலுக்குப் பின்னால் அவசரத் தேவைக்குப் பிந்தைய அவசரக் கண்டுபிடிப்பு. ஒளி ஆண்டுகளைக் கடந்து மென்பொருள் ஆணைகளைப் பதிவிறக்கம் செய்து பரிசீலிப்பது.

581-ஜியில் தொடர்புகொள்வ தற்கான ஒரே இடம் அங்கு இருந்த மத்திய கேந்திரம் மட்டும்தான். டெஸ்ட்ராய் புரோகிராம் என்பதற்கான ஓர் இழை தெரிந்தாலும் பிடித்துவிடலாம். ஒவ்வோர் அலைவரிசையாக அலசி முடிப்பதற்கு இன்னும் 2,000 நாள்களாவது ஆகும். கேப்ரியல், சொன்ன கெடுவுக்கு 2,000 நிமிடங்கள்தான் இருந்தன. பெடாபைட் புராசஸரில் ஆயிரம் பேர் ஷிஃப்ட் போட்டு வேலை பார்த்தாலும் இன்னும் 47 மணி நேரத்தில் எல்லாம் கண்டுபிடிக்க முடியாது. எந்தத் தைரியத்திலேயோ சார்லஸ் தீவிரமாக இருந்தார். சாவு நிச்சயம். ஆனால், போராடிவிட்டுச் சாக வேண்டும்.

வந்திருந்த தலைவர்களுடன் பேச, அவரால் ஐந்து நிமிடங்கள்தான் ஒதுக்க முடிந்தது.

''இதோ பாருங்கள்... இந்த விநாடியில் இருந்து இன்னும் 37 மணி நேரம் இருக்கிறது. அதில் 35 மணி நேரம் நாங்கள் போராடிப் பார்ப்போம். இங்கிருந்தே அந்த ஆணையை அழிக்க முடியுமா என்று ஓர் அணி போராடுகிறது. இன்னோர் அணி அங்கே நேரடியாகச் சென்று 'ஏதாவது செய்ய முடியுமா?’ என்று பார்ப்பதற்காக உயிரைப் பணயம் வைத்துப் போயிருக்கிறது. இது இரண்டிலும் நாம் தோற்றுப்போனால், 'கேப்ரியலுக்கு அடிமை’ என்று பட்டயம் எழுதித் தருவதைத் தவிர வேறு வழி இல்லை. அவ்வளவுதான்... இருக்கிற ஒரு நாளை நிம்மதியாக வாழுங்கள். நாடு பிடிக்கிற ஆசை, பேராசையால் இயற்கையைச் சுரண்டி சீரழிக்கிற ஆசை, கடவுளின் பெயரால் நாசவேலை செய்கிற ஆசை... எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு, ஒரே ஒரு நாள் நிம்மதியாக இருங்கள்'' - சார்லஸ், உலகத் தலைவர்களின் பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல் அரங்கத்தைவிட்டுச் சென்றார்.

ஆபரேஷன் நோவா - 29

றிவியல் கழகத்தால் 581ஜி-க்கு அனுப்பிவைக்கப்பட்ட அவசர விஞ்ஞானிகள் யாராலும் மத்திய கேந்திரத்தில் நுழைய முடியவில்லை. மொத்தம் 30 பேர் வந்திருந்தனர். பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, எலெக்ரானிக்ஸ், எலெக்ட்ரோ மேக்னடிக், சாஃட்வேர் இன்ஜினீயர், அஸ்ட்ரோ பிசிக்ஸ்ட்... என தலைக்கு ஒரு துறையினர் இருந்தனர். அவர்களிடம் இருந்த எந்தக் கருவியும் கேந்திரத்தைத் திறக்கவில்லை. எல்லா சங்கேத மொழிகளும் அங்கே அர்த்தம் இழந்தன. வந்திருந்த அத்தனை வல்லுநர்களும் 'என்ன செய்வது?’ என்று கையைப் பிசைந்தனர். இப்போது அவர்களுடைய தேவை கிராக்கர். எளிமையாகச் சொல்வது என்றால், ஒரு டூப்ளிகேட் சாவி. கிராக்கிங் முடிந்த பின்தான் மற்றவர்கள் தங்கள் வேலையைச் செய்ய முடியும். எங்கே அழிவுக்கான புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு, அதை எப்படி நிறுத்துவது என்பதை ஆராய வேண்டும். மூன்றாவது, அதைச் செயல்படாதவாறு அன்ஹிலேட் செய்ய வேண்டும். உடல் உழைப்பும் மூளை உழைப்பும் 100 சதவிகிதம் செயல்பட வேண்டும். முதலில் கிராக். மென்பொருளாளர்கள் சிலர், ஃப்ரீ அக்சஸ் டிவைஸ்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். சிலர், கையைப் பின்னால் கட்டி நிற்பதும் முன்னால் கட்டி நிற்பதுமாக இருந்தனர்.

இன்னும் 40 ப்ளஸ் மணி நேரத்தில் அழியப்போகும் கிரகம். மூளையில் கவுன்ட் டவுண் கடிகாரம் அடித்தது. எல்லா பக்கமும் மொழுக்கென்று இருக்கும் ஒரு கட்டடத்தின் உள்ளே போவதை எந்த இடத்தில் ஆரம்பிப்பது? எல்லாப் பரிகாரங்களும் துடைத்துவிட்ட மாதிரி இருந்தது.

பீரங்கியால் தகர்த்துவிட்டு உள்ளே நுழைகிற ஹைதர் காலத்து முரட்டு ஐடியாவைத் தவிர வேறு ஒன்றுமே கைகொடுக்காது என்றுதான் தோன்றியது. அவர்கள் கையில் கட்டியிருந்த பிராக்ஸி கோட் ரூட்டர்கள் எல்லாமே செயல் இழந்துபோயிருந்தன. இப்படி நடக்கும் என்று கேப்ரியல் முன்னரே ஊகித்து இருந்தார். தன்னைத் தவிர வேறு யார் வந்தாலும் உள்ளே நுழையவிடாமல் எல்லா ஆணைகளையும் மாற்றியிருந்தார்.

''ஆணைகளை மாற்ற முடியாதா?'' - விஞ்ஞானி ஒருவர் கேட்டார்.

முடியாது என்று தெரிந்தும் கேட்கப்படுகிற சம்பிரதாயமான கேள்வி இது. உள்ளே போய் ரோஸியின் மூளையை நெருங்கினால்தான் எதுவுமே சொல்ல முடியும்.

ஆபரேஷன் நோவா - 29

''உடைத்துக்கொண்டு நுழையலாமா?''

''மொத்த கேந்திரமும் ஒரே இணைப்பில் இருக்கிறது. அது வேறு வகையான பாதிப்புகளை உண்டாக்கும்.''

யோசனை சொல்கிறேன் என்ற பேர்வழியில் சிலர் யோசிக்காமல் பேசினர். சிலரால் அதுகூட முடியவில்லை. வந்திருந்த விஞ்ஞானிகளுக்குக் கட்டடத்தைச் சுற்றிச் சுற்றி வருவதால் ஒரு பயனும் இல்லை என்பது வந்த சில நிமிடங்களிலேயே தெரிந்துபோனது. உயிரைப் பிடித்துக்கொண்டு ஊர் போய்ச் சேருவதுதான் உத்தமம் என்று நினைத்தனர்.

ப்போதுதான் அங்கு வந்து சேர்ந்திருந்த பில்கேட்ஸ் அலுவலகப் பணியாளர்கள், இன்னும் ஒரு நாளில் கிரகத்தோடு சேர்ந்து அழியப் போகிறோம் என்ற தகவல் தெரியாமல் இன்டர்நெட் வைஃபி செய்துகொண்டிருந்தனர். சாட்டிலைட் தொடர்புகள் பக்காவாக இருந்ததால் வந்திருந்த டீம் நொடியில் ஜாலங்கள் செய்தனர். சில மணி நேரங்களில் 581 ஜி-யின் சகல கம்ப்யூட்டர்களும் பரமாத்மாவோடு கலந்த ஜீவாத்மாவாக மாறின.

581 ஜி-யில் முதல் இ-மெயில் கணக்கை உருவாக்கிய ஏஞ்சலீனா ஜோலி, ''நான் யாருக்கு என் முதல் மெயிலைப் போடுவது?'' என்று சிரித்தார்.

''உங்கள் கிட்டிக்கு அனுப்புங்கள்!'' பில்கேட்ஸ் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தார்.

''கிட்டிக்கா?'' என்றபடி பக்கத்திலேயே இருக்கும் பிராட் பிட்டைப் பார்த்தாள்.

''பூமியில் இன்று 100 கோடி இ-மெயிலர்கள் இருக்கிறார்கள். ஆனால், முதல் முதல் இரண்டு பேரில் இருந்துதான் ஆரம்பித்தது... எல்லா பெரிய மாற்றங்களும் ஓர் எளிமையான புள்ளியில்தான் தொடங்குகின்றன. நீராவியால் ஒரு சக்கரத்தைச் சுழற்ற முடியும் என்ற கண்டுபிடிப்பு, முதல் உலகப் போரில் அத்தனை லட்சம் பேர் இறப்பதற்குக் காரணமாகும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?'' - பில்கேட்ஸுக்கு அறிவியலையும் வரலாறையும் இணைத்துப் பார்த்த பூரிப்பு.

கிரகத்தில் இருந்த பல கோடிப் பேரும் நாம் என்ன மாதிரியான ஆபத்தில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் கிரகப் பலனுக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.

ஆபரேஷன் நோவா - 29

''ஏதாவது உதவி வேண்டுமா?'' என்றபடி நின்றிருந்த ரோபோவை, என்ன மாதிரி உதவி கேட்கலாம் என்று திரும்பிப் பார்த்தான் அகிலன்.

''பூமியோடு தொடர்புகொள்ள வேண்டும்'' - வினோதினிதான் மிடுக்காக அடித்துவிட்டாள். ரோபோ இருவரையும் கடந்து முன்னே நடந்தது. தலையை மட்டும் 180 டிகிரிக்குப் பின்பக்கமாகத் திருப்பி, ''என் பின்னால் வாருங்கள்'' என்றபோது பின்னால் என்பதில் சிறு குழப்பம் ஏற்பட்டதை இருவரும் காட்டிக்கொள்ளாமல் பின் தொடர்ந்தனர்.

அது மேலே செல்கிறதா... கீழே இறங்கிச் செல்கிறதா... என்பதை மூளையின் மேல் கீழ் அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்க முடியவில்லை. மேலா, கீழா, இடமா, வலமா என்பதைச் சார்புபடுத்திப் பார்க்க முடியாத வழிகள். சில இடங்களில் நடக்க வேண்டியதுகூட இல்லை. வழியே கடந்து சென்றது.

அவர்கள் நின்ற இடம், மைக்கேல் ஏன் அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தார் என்பது புரிந்தது. ரோஸியின் மிதக்கும் மூளை. குடுவையின் திரவத்தைக் காட்டி 'செரிபிரள் ஃபுளூயட்’ என்றாள் வினோதினி.

''உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்றது ஒரு ஆம்ப்ளிஃபைடு குரல். அது ரோஸி!

- ஆபரேஷன் ஆன் தி வே...