நல்ல பாம்பின் நண்பேன்டா!
##~## |
பாம்பென்றால் படையும் நடுங்கலாம். ஆனால், பூனம்சந்த் மட்டும் அந்தப் 'படை’யில் சேர மாட்டார்! கடலூரில் அரசு அலுவலகங்களாக இருந்தாலும் சரி, வீடுகளானாலும் சரி, எங்கேனும் பாம்பு புகுந்து விட்டால், உடனே தகவல் பறப்பது பூனம்சந்துக்குத்தான்! பைசா வாங்காமல் பாம்புப் பிடிக்கும் சேவையைச் செய்து வருகிறார் இவர்.
பூனம்சந்த் வீட்டுக்குள் பாம்புகள் நெளிந்தபடி வரவேற்கிறது. இன்னொருபுறம் இரண்டு ராஜாளி கழுகுகளையும் வளர்த்து வருகிறார். பாம்புகள், கழுகு களைப் பார்த்து பயம் ஏற, நடுக்கத்தை மறைத்துக் கொண்டு அவருடன் பேசத் தொடங்கினோம்.
''என் அப்பா ஜெயகிருஷ்ண விலாஸ்தான் என் குரு. அவரும் பாம்பு மேல அவ்வளவு பாசமா இருப் பார். நான் ஏழாவது படிக்கும்போது ஒருநாள் தோட்டத்தில் பெரிய சாரைப் பாம்பு புகுந்திடுச்சு. அதை நான் தைரியமா கையில் பிடிச்சதைப் பார்த்து, என் தைரியத்தைப் பாராட்டி, பாம்புகளோடு எப்படி பழகுவதுன்னு கத்துக் கொடுத்தார். அதில் இருந்து நாய்க் குட்டி, பூனைக் குட்டி போலத்தான் எனக்குப் பாம்புகளும். பொதுவாகவே பாம்புகள் சாப்பிடும் உணவு செரிமானம் ஆக 15 நாட்கள் ஆகும். அதுமட்டும் இல்லாமல் செரித்த பின்பும், அதன் கொழுப்பை உணவாகப் பயன்படுத்தி இரண்டு மாதம் வரை உயிர் வாழும்.

என் குடும்பத்தினர் மும்பையில் வசிக்கிறார்கள். இப்போதைக்கு இந்தப் பாம்புகள்தான் என் குடும்ப உறுப்பினர் கள். அதோ அந்த மூலையில் கிடக்கிறானே, அவனைப் பிடிச்சு ஒரு வாரம் தான் ஆகுது. அவனைப் பிடிக்கும் போது என்னை அவனோட எதிரின்னு நினைச்சு கடிக்க வந்தான். ஆனா, இப்போ 'வீட்டைவிட்டு வெளியில் போடா’ன்னு சொன்னாக்கூட போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறான்!'' என்று அவர் கை காட்டிய திசையில் முழங்கை நீளத்துக்கு நெளிகிறது ஒரு நல்ல பாம்பு.
''ஒவ்வொரு முறையும் பாம்புகளைப் பிடித்து துணிப் பையில் போட்டு கட்டிவெச்சிருவேன். இதுல கட்டு விரியன், பச்சைப் பாம்பு, சாரைப் பாம்பு, கொம்பேறி மூக்கன், கண்ணாடி விரியன், ஜமுக்காள விரியன், மலைப் பாம்புனு ஏகப்பட்ட பாம்புகள் இருக்கு. அதிலும் நல்ல பாம்புகள்தான் அதிகம். நூற்றுக்கு மேல பாம்புகள் சேர்ந்துடுச் சுன்னா அரசு காப்புக் காடுகளில் கொண்டுபோய் விட்டுருவேன். அப்படி விடும்போது ஒரு நல்ல நண்பனை மிஸ் பண்ற மாதிரி வருத்தமா இருக்கும். நான் பிடித்துவைக்கும் பாம்புகளைக் கண்ணாடிக் கூண்டில் போட்டு சில்வர் பீச்சில் கண்காட்சியாக வைக்க ஆசை. ஆனால், அதற்கு அரசின் அனுமதி வேண்டும்.

ஒருநாள் பாம்பு பிடிக்கும்போது நடந்ததை நினைச்சா இப்பவும் சிரிப்பு வரும். தேவ னாம்பட்டினத்தில் ஒரு வீட்டில் நல்ல பாம்பு புகுந்துடுச்சு. அதை என் வழிக்குக் கொண்டு வர்றதுக்குப் போராடிக்கிட்டு இருக்கேன். திடீர்னு பின்னாடி பயங்கரமா சுடுது. திரும்பிப் பார்த்தா, பாம்பு படம் எடுக்கிறதைப் பார்த்து பயபக்தியோட ஒரு பாட்டி கற்பூரம் ஏத்திக் கும்பிட்டுக்கிட்டு இருக்கு. அதைப் பார்த்து ஆளாளுக்குச் சூடமும் கையுமா கிளம்பி வர ஆரம்பிச்சிட்டாங்க. கூட்டத்தைப் பார்த்து பாம்பு மிரண்டு ஓட, பாம்பைப் பார்த்து கூட்டம் மிரண்டு ஓடன்னு ஒரே கலாட்டாதான்!'' என்று ஏதோ 'மானாட மயிலாட’ பார்த்த அனுபவம்போல பூனம்சந்த் சொல்ல... அதற்கும் மேல் பயத்தை மறைக்க முடியாமல் நாம் பிடித்தோம் ஓட்டம்!
-க.பூபாலன், படங்கள்: ஜெ.முருகன்