என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

ஒப்பனைகளுக்குப் பின்னால்...

ஒப்பனைகளுக்குப் பின்னால்...

##~##

3D, 4D என்று இப்போது சினிமா வெவ்வேறு பரிமாணங்களில் பாய்ச்சல் காண்பித்தாலும், தமிழகத் தைப் பொறுத்தவரை சினிமாவின் தாய்... தெருக் கூத்துதான்!

 இயல், இசை, நாடகம் என்று மூன்று தமிழையும் ஒன்றாக இணைத்து உணர்வால் கட்டி எழுப்பப்படும் இந்தக் கூத்துக் கலை, தமிழகம் முழுவதும் பரவலாக நடந்தாலும், வட மாவட்டங்களில்தான் அதிகம்.

திருவண்ணாமலை மாவட்டம் பண்டிதப்பட்டு   குக்கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் நாடக சபையின் தலைவரான ஏழுமலை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தெருக் கூத்து தொழில் மட்டுமே மேற் கொண்டு இருப்பவர். ''திருவண்ணாமலை மாவட்டத் துல பழையனூர் சின்னப் பிள்ளை ஜமா, தாங்கல் சேகர் ஆசிரியர் ஜமா, ஏழுமலை ஜமான்னு ஏராள மான ஜமாக்கள் இருக்கு. ஒவ்வொரு ஜமாவும் ஒரு நாடகக் குழு. ஒவ்வொரு குழுவிலும் 17, 18  பேர் வரை இருப்போம். எங்கள்ல பெரும்பாலானவங்க பரம்பரை பரம்பரையா இந்தத் தொழிலை கத்துக்கிட்டு வர்றவங்கதான். இப்ப இளவயசுப் பசங்க அதிகம் கூத்து கட்ட வர்றது இல்லை.

ஒப்பனைகளுக்குப் பின்னால்...

தெருக் கூத்துல அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி பெண்கள் நடிக்க வர்றது இல்லை. அதனால், பெண் வேஷத்தையும் நாங்களேதான் போடுவோம். பெண் வேஷம், பாட்டு, நடனம்னு ஒரு கூத்துல எல்லாருக்கும் எல்லா வேஷமும் இருக்குற மாதிரி பெரிய நாடகமாக போடுவோம். எப்பவும் முச்சந்தி, இல் லைனா நாற்சந்திலதான்  கூத்து நடக்கும். மகாபாரதம், கந்தபுராணம், ராமாயணம்னு புராணங்களில் இருந்து வீர அபிமன்யு, அரவான் பலின்னு  சுத்திச் சுத்தி சில கதைகளைத்தான் கூத்துக் கட்டுவோம். கூத்து கட்டும்போது சின்னதா ஒரு தப்பு நடந் தாலும், அது பெரிய குழப்பத்தை உண்டாக்கும். இதுக்காகவே அல்லும் பகலுமா பெருங்குரல் எடுத்து  குழுவாப்  பாடி பயிற்சி செய்வோம்.  

எங்களுக்கு தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடின்னு  ஏழு மாசம் மட்டும் தான் வயித்துக்கு வஞ்சனை இல்லாம சாப்பாடு கிடைக்கும். மத்த ஆறு மாசமும், வீட்ல சும்மா இருக்காம ஏதாவது கூலி வேலைக்குப் போவோம். ஒருநாள் நிகழ்ச்சிக்கு அதிகபட்சமா 6 ஆயிரம் ரூபா பேசி முடிப்பாங்க. எல்லா செலவும் போக, ஒரு நடிகருக்கு 300 ரூபா மிஞ்சும். இதுவும் இந்த ஆறு மாசத்துல பல நாட்களில் கிடையாது.

ஒப்பனைகளுக்குப் பின்னால்...

சில சமயத்தில் தொடர்ந்து ஒரு மாசம் புக் பண்ணியிருப்பாங்க. 9 மணியில் இருந்து விடியும் வரை தொடர்ச்சியா மாசக் கணக்குல  பாடுறதால் தொண்டை பிரச்னை வரும். நாட்டு மருந்து போட்டுதான் சரிபண்ணுவோம். எங்களுக்குன்னு அரசாங்கமும் பெரிசா ஒரு உதவி யும் செஞ்சது இல்லை. 'வேற ஏதாவது பொழைப்புக்குப் போக வேண்டியதுதானே’னு யோசனையும் சொல்வாங்க. ஆனா, இதில் கிடைக்கிற நிம்மதி வேற எதிலயும் கிடைக்கிறது இல்லை. எவ்வளவோ கவலை இருந்தாலும் முச்சந்தி மேடையில் ஏறி, கூத்து கட்ட ஆரம் பிச்சா அப்புறம் கிருஷ்ணனா, துரியோதனனா, அர்ச்சுனனா மாறிடுவோம். அரசனுக்கும் ஆண்டவனுக்கும் ஏதுங்க கவலை?'' என்று சிரிக்கிறார் ஏழுமலை.

இவர்களுக்கு என்று தனியாக ஒப்பனையாளர்கள் கிடையாது. தண்ணீர் கலந்த முகப் பவுடர், மஞ்சள், விபூதி, குங்குமம், கலர் கலரான சாந்து பொட்டுகள், சமயங்களில் சாக்பீஸ் தூள் என்று தனக்கான ஒப்பனையைத் தாங்களே தயாரித்து பூசிக்கொள்கிறார்கள்.

''பரகுஜ... கஜமுக...
நவநீத மலரடி,
பங்கைய முகம்தானே
நமோ நமோ...''

காற்றில் கலந்து கூத்துக் களை ஏற்றிக்கொண்டு இருந்தது ஏழுமலையின் கணீர்க் குரல்!

- யா.நபீசா