வாசகிகள் பக்கம், ஓவியங்கள்: சேகர்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200
கோயில் நிர்வாகிகளே... கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்!

கோயில்களும், அபார்ட்மென்ட்டுகளும் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், கோயில்களுக்கு அருகில் உள்ள அபார்ட்மென்ட்டில் குடியிருப்பவர்கள் பாடு திண்டாட்டமாக இருக்கிறது. கோயில்களில், குறிப்பாக சில அம்மன் கோயில்களில், லவுட் ஸ்பீக்கரை பெரிதாக வைத்து மந்திரங்களையும், பாடல்களையும் விடியற்காலை 4 மணியில் இருந்தே அலறவிடுகிறார்கள். சிறு குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், இரவு நைட் டியூட்டி பார்த்துத் திரும்புபவர்கள், பரீட்சைக்கு இரவு நீண்டநேரம் படித்துவிட்டு தூங்கும் மாணவர்கள் என பலரும் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். சில குழந்தைகள் பயந்து போய் அலறுகின்றன. அவர்களைச் சமாதானப்படுத்தி, மீண்டும் தூங்க வைப்பது பெரும்பாடாக உள்ளது.
சிறு குழந்தைகளையும், இரவு தூக்கம் வராமல் விடியற்காலை சிறிதளவே தூங்கும் நோயாளிகளையும் துன்பப்படுத்திதான் வழிபட வேண்டும் என்று எந்த அம்மனும் சொல்லவில்லை. லவுட் ஸ்பீக்கரில் ஒலிபரப்புவதற்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை என்று டைம் லிமிட்டாவது ஏற்படுத்தினால் நல்லது. கோயில் நிர்வாகத்தினர் இதைக் கவனத்தில்கொள்ள வேண்டுகிறேன்.
- மாலதி நாராயணன், சென்னை

அளவற்ற உபசாரம்... ஆபத்து!
என் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, வெகுவிமரிசையாக நடந்தது. நானும் தோழியும் சாப்பிடும்போது, உறவினரின் மனைவி, வந்தவர்களை விருந்து உபசாரம் செய்வதாக நினைத்துக்கொண்டு, பால் பாயசத்தை அதிகளவில் குடிக்க வைத்தார். அதனால், என் தோழிக்கு சர்க்கரையின் அளவு கூடிப்போய், படபடப்பு அதிகமாகி... மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்த்த பின்புதான் சாதாரண நிலைக்கு திரும்பினாள்.
'விருந்தோம்பல்' என்பது உயர்ந்த பண்புதான். அதேசமயம், அடுத்தவர்களின் உடல் நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும். விசேஷங்களுக்கு அழைப்பவர்கள், அளவற்ற உபசாரமே சில சமயங்களில் ஆபத்தாக முடிந்துவிடும் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.
- சியாமளா பாலு, திருச்சி
ஆ'சிறியன்’கள் உஷார்!
ஆசிரியையான நான் சமீபத்தில் அரசுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு சென்றிருந்தேன். அதே பணிக்கு வந்திருந்த வெளியூர் ஆசிரியர் ஒருவர், உணவு இடைவேளையின்போது, தன் மனைவியைப் பற்றி கேவலமாக பேசிக்கொண்டிருந்தார். தான் எவ்வளவோ விட்டுக்கொடுத்துப் போயும் இல்லறம் இனிக்கவில்லை என்றும் குறைபட்டுக்கொண்டார். சிலர், அவருக்கு ஆறுதல் கூறினர். ஒருநாள் நான் சற்று தாமதமாக உணவு அருந்தி முடித்துவிட்டு, டிபன் பாக்ஸை கழுவி எடுத்து வருகையில்... மேற்படி நபரும்,

அவர் நண்பரும் ஒரு மரத்தடியில் சிகரெட் புகைத்தபடியே பேசிக்கொண்டிருப்பதைக் கேட்க நேர்ந்தது.
''ஏம்பா, உன் வொய்ஃப் எவ்வளவு தங்கமானவங்க... அவங்கள குறைசொல்லி பேசிட்டிருக்கியே...?'' என நண்பர் கேட்க, அதற்கு அந்த நபர், சொன்ன பதில் அதிர்ச்சி ரகம். ''மாப்ள... இதெல்லாம் சும்மா ஒரு டைம்பாஸ். 'காய் நறுக்குவேன்... பாத்திரம் துலக்குவேன்’னு கதைவிட்டா... யாருக்குத் தெரியப் போகுது? ஆனா, நம்ம மேல ஒரு பரிதாபம் வரும் பாரு.... அது நமக்கு பல விஷயத்துல உதவும். இப்படித்தான் ரெண்டு வருஷத்துக்கு முன்ன வேற ஒரு ஸ்கூல்ல இப்படி கதைவிட்டேன். வந்திருந்த ஒரு டீச்சர் பயங்கரமா இம்ப்ரஸ் ஆகி, அடுத்த நாள் முதலா... அவங்க வீட்டிலிருந்து டிபன் - காபினு கொண்டு வந்து அமர்க்களப்படுத்திட்டா. ஆளு வேற டக்கரா இருப்பா!'' என்று அட்டகாசமாக சிரித்தபடி கூற... நொந்தேவிட்டேன்.
பெண்களின் இரக்க குணத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும், இந்த ஆ'சிறியன்’ போன்றவர்கள், உங்களிடையேயும் தங்கள் வித்தையைக் காட்டக்கூடும்... பெண்களே, உஷார்!
- எஸ்.கௌரிலஷ்மி, ஸ்ரீரங்கம்

ஐஸ்கட்டி தந்த பாடம்!
என் ஒரு வயது மகள், பார்ப்பவர் மனதைத் தன் சிரிப்பால் கொள்ளையடிப்பாள். அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் ஒரு பெரிய குடும்பத்தினரிடம் நாங்கள் நெருக்கமாகப் பழகி வந்தோம். ''பாப்பாவை எங்கள் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய், விளையாடிட்டு, அப்புறம் கொண்டுவிடுகிறோம்'' என்று ஆசையோடு வாங்கிப் போவார்கள். ஒரு நாள் பாப்பா வீடு திரும்பியவுடன் ஒரே தும்மல், சளி. இதைப் பற்றி விசாரித்தபோது... அவர்கள் வீட்டுப் பேரக்குழந்தைகள் ஐஸ்கட்டியை பாப்பாவின் கன்னம், கைகளில் வைக்க, பாப்பா குளிர்ச்சியில் சிரித்திருக்கிறது... இந்த விளையாட்டு ரொம்ப நேரம் தொடர்ந்திருக்கிறது எனத் தெரியவந்தது. ''சும்மா விளையாட்டுக்கு பசங்க ஐஸ்கட்டியை மேல வெச்சிருக்காங்க. வெயில் காலம்தானே... ஒண்ணும் பண்ணாது'' என்ற பதில் வேறு! அதன் பின் காய்ச்சல், சளி தீர 15 நாள் ஆனது. குழந்தை பட்டபாடு சொல்லி மாளாது.
'நம் குழந்தையை நம்மைத் தவிர வேறு யாரும் அவ்வளவு அக்கறையாக பார்த்துக்கொள்ள மாட்டார்கள்’ என்கிற பாடத்தைக் கற்றுக்கொண்டேன்.
- விமலா பத்மநாபன், வேளச்சேரி