மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 30

தமிழ்மகன், ஓவியம்: பாலா

ன்னும் 10 மணி நேரமே பாக்கி இருந்தது. நிலைமையின் தன்மையை ஒவ்வோர் அங்குலமாக சார்லஸுக்கு விவரித்துக்கொண்டிருந்தார் அலெக்ஸ். முடிந்த அளவுக்கு மீடியாவுக்குத் தெரியாமல் கட்டுப்படுத்திவைத்திருந்ததால், கீழ் மட்டங்களில் இன்னமும் ஸ்கூப் தகவல் பரவாமல் இருந்தது.

''க்ராக் செய்வது சாத்தியம் இல்லை. கேப்ரியலிடம் பேசி வழிக்குக் கொண்டுவருவதுதான் சரியாக இருக்கும்'' என்ற அலெக்ஸுக்கும் நம்பிக்கை குறைந்துகொண்டு வந்தது.

கேப்ரியலுக்கு, தன்னை சிறை வைத்திருக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாது. உலகத் தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடிப் பேசிவிட்டு வருவார்கள் என்ற எண்ணத்தில்தான் இருந்தார். கேப்ரியல் சுதாரித்துக்கொண்டால், ஆத்திரத்தில் ஏதாவது ஏடாகூடமாகச் செய்துவிடலாம். அதிக நேரத்தை இழுத்துவிடாமல் கச்சிதமாக முடிக்கவேண்டியிருந்தது.

அலெக்ஸ் அடிக்கடி அதை நினைவுப்படுத்திக்கொண்டிருந்தார். அவருடைய முழு முதல் முடிவு, கேப்ரியலிடம் சரணாகதி அடைவதுதான். இங்கிருந்து 581 ஜி-க்குத் தொடர்புகொள்வது கடினம். அங்கிருந்து வேண்டுமானால் பூமியோடு தொடர்புகொள்ளலாம். கேப்ரியல் அப்படித்தான் ஏற்பாடு செய்திருப்பதாக அலெக்ஸ் சொன்னார்.

ஆபரேஷன் நோவா - 30

சார்லஸ் பதில் சொல்லவில்லை. க்ராக்கிங் சாஃப்ட்வேர் தொடர்ந்து ஓடட்டும் என்பதுதான் அதற்கு அர்த்தம். இங்கிருந்து போன விஞ்ஞானிகள் யாராலும் அங்கு மத்திய கேந்திரத்துக்குள் செல்ல முடியவில்லை என்பது உறுதியாகிவிட்டது. மனதளவில் தோல்வியை ஏற்றுக்கொண்டுதான் அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பதும் தெரிந்தது.

581 ஜி-யில் இருக்கும் பில்கேட்ஸின் பொறியாளர், பட்டாளத்தை முடுக்கிவிடச் சொன்னார். அலெக்ஸின் உதவியாளர் பிலிப் மட்டும், 'மனிதன் எப்போது முயற்சியைக் கைவிட்டுவிடுகிறானோ, அன்றே இறந்தவன் ஆகிறான்’ என்று பழகிப்போன பழமொழிகள் சில சொல்லிக்கொண்டிருந்தார். தொடர்ந்து அசட்டுத்தனமான தத்துவங்களைச் சொல்பவர் போல இருந்ததால், சிலர் அவரைக் கவனிக்காமல் வேலையைப் பார்த்தனர்.

சார்லஸ், ''இவர் எப்போதும் இப்படித்தானா?'' என்று விசாரித்தார்.

''இப்போது ஏற்பட்ட கிலியின் காரணமாக இப்படித் தத்துவ மழையில் இறங்கிவிட்டார். மற்றபடி திறமைசாலி!'' என்றார் அலெக்ஸ்.

'பயப்படுகிறவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்திவிடுவதுதான் நல்லது’ என்று சார்லஸுக்குத் தோன்றியது. தேவை இல்லாமல் பயத்தை வேகமாகப் பரப்பிவிடுவார்கள். அவரைத் தனியே அழைத்து ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார் சார்லஸ்.

''ஓய்வா... எனக்கா? ஓய்வு என்பது, இப்போது செய்துகொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு வேறு வேலையைச் செய்வது'' என்று அதற்கும் விளக்கம் கொடுத்தார்.

அவருடைய சட்டையில் குத்தியிருந்த பெயரைப் படித்துவிட்டு, ''மிஸ்டர் பிலிப்... உங்கள் கூற்றுப்படி நீங்கள் வேறு வேலையைச் செய்யலாம்'' என்றார்.

பிலிப் அனுமதி பெறும் நோக்கத்தோடு அலெக்ஸைப் பார்த்தார். ''நீங்கள் விரும்புகிற வேறு வேலையைச் செய்யலாம். நானேபாட் துறையில் முயற்சி செய்கிறீர்களா?'' என்றார் அலெக்ஸ்.

''தாராளமாக'' என்றபடி பெருந்தன்மையுடன் தோளைக் குலுக்கிக்கொண்டு நகர்ந்தார். அதில் மரண பயம் தெரிந்தது.

ஒரு நொடியில் ஒரு மணி நேரம் நகர்வது போல் அறிவியல் குழு பதறியது. இன்னும் மூன்று மணி நேர அவகாசம்தான் இருந்தது. எல்லா அலைவரிசைகளிலும் காஸ்மிக் கதிர்களின் அட்டகாசத்தால் இடையூறுகள் இருந்தன. 20 ஒளி ஆண்டுகள் இடைவெளியில் இது தவிர்க்க முடியாததுதான். ஆனாலும், ரொம்பத்தான் ஆட்டம் காட்டியது.

கொஞ்ச நேரத்தில் பிலிப், தன் மணிக்கட்டில் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகப் பரபரப்பு பரவியது. டாக்டரைத் தேடினர். மனிதர், உயிருக்குப் பயந்துவிட்டார். ''பூமிக்கு ஆபத்து என்றதுமே பயந்துபோய்விட்டார். வாழ்வதற்கு 581 ஜி கிடைத்த ஆறுதலில்தான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தார். இப்போது அதற்கும் ஆபத்து வந்துவிடவே நம்பிக்கை இழந்துவிட்டார்'' என்று காரணம் சொன்னார் அலெக்ஸ்.

ஆபரேஷன் நோவா - 30

இந்த இக்கட்டான சூழலில் இப்படி எல்லாமா சிக்கலை வளர்ப்பது? எரிச்சலாகத்தான் இருந்தது சார்லஸுக்கு.

இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. பிலிப்பின் தற்கொலை முயற்சி தெரிந்தால், மற்றவர்களும் சீக்கிரம் சோர்ந்துவிடுவார்கள். ''யாருக்கும் தெரிய வேண்டாம்'' என்றார் சார்லஸ்.

பிலிப்பைக் கவனிக்க இரண்டு மருத்துவர்களை மட்டும் அனுப்பிவிட்டு, எல்.டபிள்யூ. டிரான்ஸ்மிட்டிங் டிகோட் புராசஸர் பிரிவுக்கு வந்தார்.

இளம் விஞ்ஞானிகள் சிலர்தான், ஆரம்ப உற்சாகத்தோடும் கணினிகளோடும் மல்லுக் கட்டிக்கொண்டிருந்தனர். உச்சா போகவும் அசையாமல் இருந்ததில் சார்லஸுக்கு ஒருவித உந்துதல் ஏற்பட்டு, பாத்ரூம் நோக்கிப் போனார்.

பாரத்தை இறக்கிவைக்கும் தருணத்தில் முதுகில் சீண்டியது ஒரு விரல். அந்தத் சீண்டலிலேயே ஒரு ரகசியம் இருந்தது. மெள்ள திரும்பிப் பார்த்தார். சட்டென நினைவுக்கு வந்தது. பிலிப்புக்கு வைத்தியம் பார்க்க வந்த டாக்டர்.

''பிலிப்பிடம், 'ஏன் தற்கொலை முயற்சியில் இறங்கினாய்?’ என்று கேட்டேன்.''

டாக்டர், ரெஸ்ட் ரூமில் இருந்த எல்லா பக்கங்களையும் பயத்தோடு பார்த்தார். அதில் என்ன ரகசியம் இருக்க முடியும்?

''கொலை முயற்சி என்கிறார்'' என்றவர் தொடர்ந்து, ''ஏதோ சதி நடக்கிறது... இங்கேயே கேப்ரியலுக்கு ஆதரவாகச் சிலர் இருக்கிறார்கள். 'நான் தற்கொலை முயற்சியில் இறங்கவில்லை’ என்றார் பிலிப்.''

ஆபரேஷன் நோவா - 30

''என்னப்பா... என்ன சொல்கிறாய்?''

''நடந்தது தற்கொலை முயற்சி அல்ல; கொலை முயற்சி. காரணம் அலெக்ஸ்.'' அதற்குள் இன்னும் சிலர் நீர் வெளியேற்றும் நோக்கத்தோடு உள்ளே வர, டாக்டர் பேச்சை அறுத்துக்கொண்டு வெளியேறினார்.

உலகில் கடைசி இரண்டே பேர் இருந்தாலும் இரண்டு விதமாகத்தான் இருப்பார்களோ? சார்லஸ் மேற்கொண்டு தத்துவ விசாரத்தில் இறங்காமல், எல்.டபிள்யூ. அலைவரிசை ஆராய்ச்சி மையத்துக்கு ஓடினார்.

581 ஜி.

பில்கேட்ஸ் உள்ளிட்ட வெகு சிலருக்கு மட்டும் கேப்ரியலின் மிரட்டல் தெரிவிக்கப்பட்டது. 581 ஜி. கோளில் தங்கம், தோரியம் கொட்டிக்கிடக்கின்றன. மனிதர் கோளையே எடைக்குப் போட்டுவிடத் தீர்மானித்துவிட்டார். அவற்றை விற்றால் கொள்ளை லாபம் கிடைக்கும் என்ற பேராசை. ஒன்றும் இல்லாதபோது எல்லாருக்கும் எல்லாமும் பொது என்ற சித்தாந்தம் பேசுகிற மனசு, எல்லாம் இருக்கும்போது இன்னும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை நினைத்துப் பார்த்தார்.

கேப்ரியலை வழிக்குக் கொண்டுவருவது... இல்லை என்றால், 581ஜி-க்கு ஆபத்து இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து அழிப்பது. இந்த இரண் டில் ஒன்றைச் செய்ய வேண்டும். இந்த விவகாரம் அவரிடம் சொல்லப்பட்டபோது 1லு மணி அவகாசம்தான் இருந்தது. அவருடைய பெரும் சாஃப்ட்வேர் படை க்ராக்கிங் வேலையில் இறங்க...

யாரும் சந்தேகிக்காத வகையில் அலெக்ஸை மட்டும் தந்திரமாகத் தனியாக அழைத்துபோய் விசாரித்ததில் ஒரு விஷயம் உறுதியானது. பிலிப், மத்திய கேந்திரத்தோடு தொடர்புகொள்வதற்கான 99 சதவிகிதப் பணிகளை முடித்துவிட்டார். அது தெரிந்துதான் அவரைக் கொலை செய்ய முயன்றிருக்கிறார்கள். பிலிப்பை ஒரு வழியாகத் தேற்றி, உள்ளே கொண்டுவந்து உட்கார வைத்ததில்... மத்திய கேந்திரத்தின் சர்வர் ரூம் அடையாளம் காணப்பட்டது. அதாவது, ரோஸியின் மிதக்கும் மூளை. என்ன நடந்திருக்கும் என்பதை சார்லஸால் வேகமாகக் கிரகிக்க முடிந்தது. நானோபாட் டெக்னாலஜியைவிட சிம்பிள். எல்லா லாஜிக்கும் தெரிந்த சுறுசுறுப்பான பெண்ணின் மூளை.

''என்ன பிலிப்?''

''நம்மால் மத்திய கேந்திரத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அங்கிருந்துதான் யாராவது தொடர்புகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தோம். அதுபோலவே அங்கிருந்த யாரோ தொடர்புகொள்ள முயற்சிப்பது தெரிந்தது. ஓர் ஆணும் பெண்ணும் இருந்தார்கள். கடும் போராட்டத்துக்குப் பிறகு நம்மைத் தொடர்புகொண்டார்கள். இதை அலெக்ஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனவே, அலைவரிசையை மாற்றி அவர்களின் இணைப்பைத் துண்டித்துவிட்டார். என் மணிக்கட்டையும் துண்டித்து, தற்கொலை நாடகம் ஆடிவிட்டார்...''

''அவர்களோடு தொடர்புகொள்ளுங்கள். சீக்கிரம்... பயப்பட வேண்டாம். இங்கிருந்த கறுப்பு ஆடுகளை அகற்றிவிட்டோம்'' - சார்லஸ் துரிதப்படுத்தினார்.

ஆபரேஷன் நோவா - 30

''நான் அகிலன்... 581ஜி-யில் ஆபத்தில் இருக்கிறோம்'' - அகிலன் குரல் கேட்டது.

''இன்னும் ஒரு மணி நேரத்தில் 581 அழியும் விதமாக டைமர் செய்திருக்கிறான் கேப்ரியல். அந்தக் கோளைக் காப்பாற்றுவது இப்போது உங்கள் கையில்தான் இருக்கிறது.''

''அழிவு சாஃப்ட்வேர் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்ததா?''

பிலிப் தலைமையிலான குழு சற்றே தயங்கியது. பிலிப் யோசனையோடு சார்லஸைப் பார்த்தார்.

சார்லஸ் உறுதியாகச் சொன்னார்.

''டெஸ்ட்ராய் புரோகிராம் ரோஸியின் மூளையில்தான் இருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடித்து ஃபார்மட் செய்வது சாத்தியம் இல்லை. தயங்காதீர்கள்... ரோஸியின் மூளைக்குச் செல்லும் எல்லா இணைப்புகளையும் துண்டியுங்கள். ரோஸியைக் கொல்ல வேண்டும்!''

அதிர்ச்சியோடு வினோதினியைப் பார்த்தான் அகிலன். அவனுக்கு, மகளின் மீது உயிரையே வைத்திருக்கும் டாக்டர் மைக்கேலின் முகம் நினைவில் வெட்டியது.

''ரோஸியைக் கொல்வதற்கு விட மாட்டேன்'' - அகிலனின் கையைப் பிடித்துத் தடுத்தாள் வினோதினி.

''சொன்னால் கேள். ரோஸியை அழிக்கவில்லை என்றால், நீங்கள் எல்லோருமே அழிந்துவிடுவீர்கள்.''

அவள் அமைதியாக இருந்தாள். இன்னும் அரை மணி நேரம்தான் மிச்சம் இருந்தது!

- ஆபரேஷன் ஆன் தி வே...