மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 31

தமிழ்மகன், ஓவியங்கள்: பாலா

பிரமாண்ட ரோஸ் வுட் டேபிள், சார்லஸை மார்புக்குக் கீழே மறைத்திருந்தது. இரண்டு நாள்கள் ஓயாமல் உழைத்ததில் சோர்ந்து போயிருந்தார்.

''டோபா வெடிப்பை உத்தேசித்துதான் டென்வரில் அப்படி ஒரு பாதாள நகரத்தை உருவாக்கினீர்களா?'' - தன் முன் அமர்ந்திருந்த அமெரிக்க ராணுவத் தளபதியிடம் சார்லஸ் கேட்டார்.

53 சதுர மைல்... பரப்பில் 90-களில் பூமிக்குள் உருவாக்கப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை நகரம். அதற்கு ஆன செலவில் இன்னொரு பனாமா கால்வாய் வெட்டியிருக்கலாம் என்று அந்த நேரத்தில் யூக அலசல்கள் வெளியாகியிருந்தன.

''அது சீக்ரெட்'' என்றார் தளபதி.

அமெரிக்காவின் சீக்ரெட்களுக்கு ஓர் அளவே இல்லை. ஒபாமாவுக்குத் தெரிந்த ரகசியம் இவருக்குத் தெரியாது; இவருக்குத் தெரிந்த ரகசியம், காண்டலீஸா ரைஸுக்குத் தெரியாது. அங்கே தலைமைப் பதவியை வகிப்பது எவ்வளவு ரகசியங்களைச் சுமக்கிறார்கள் என்ற அளவைப் பொறுத்தது.

''இப்போதைக்கு டோபா ஆபத்து இல்லை. அதைச் சொல்வதற்காகத்தான் கேட்டேன். டெக்டானிக் பிளேட்டில் ஒரு நானோ அட்ஜஸ்ட்மென்ட் நடந்திருக்கிறது. பசிபிக் பகுதி ரிங்க் ஆஃப் பயரில் வேறு இடத்தில் சிறிய பாதிப்பை ஏற்படுத்தி அடங்கிவிட்டது. ஜப்பான் கடல் பரப்பில் வழக்கமான சுனாமிகளில் ஒன்றாக அது வெளிப்பட்டது. இப்போதைக்கு இன்னும் 3.75 லட்சம் வருடங்களுக்கு டோபா வெடிப்பு இல்லை!'' - சார்லஸ் விளக்கினார்.

ஆபரேஷன் நோவா - 31

''இதற்கு முன்பும் அப்படித்தான் சொல்லியிருந்தீர்கள். ஆனால், திடீர் என்று 10 வருடங்களில் வெடித்துவிடும் என்று பயமுறுத்தினீர்கள்.''

தளபதியின் வாக்கியத்தில் மெல்லியக் குத்தல் இருந்தது. சார்லஸ், அவரை ஆழ்ந்து பார்த்துவிட்டு, ''இயற்கையின் கால்குலேஷன்கள் சிக்கலானவை. மழை, புயலைக்கூட நம்மால் சரியாகக் கணிக்க முடிவது இல்லை. பூமியின் ஆயிரம் கிலோமீட்டர் ஆழங்களில் கொதிக்கும் மேக்மாவைக் கணிப்பது இன்னும் சிரமம். இப்போதைக்கு வெடிக்காது என்பது விஞ்ஞானிகளின் கால்குலேஷன். ஐஸ்லாந்து மலைகளில் பனிக்கட்டிகளுக்கு நடுவே வெந்நீர் ஊற்றுகள் வருகின்றன. உலகம் எங்கும் மக்கள் வந்து சந்தோஷமாக அதில் குளிக்கிறார்கள். பூமிக்குள் கொதிக்கும் மேக்மாவின் விபரீதம்தான் அந்த வெந்நீர் என்று யாராவது அஞ்சுகிறார்களா? எல்லா அச்சத்திலும் ஒரு கேளிக்கை இருக்கிறது; எல்லா ஆபத்திலும் ஒரு சவால் இருக்கிறது. எல்லாமே 'யின் யாங் கான்செப்ட்’ போலத்தான். எல்லாத் தீமையிலும் ஒரு நன்மை இருக்கிறது. ஓ.கே. நீங்கள் கிளம்பலாம்!''

''581 ஜி?'' என்று தயங்கினார் தளபதி.

''அங்கே டிஸாஸ்டர் புரோகிராம் அழிக்கப்பட்டது. அந்த இரண்டு தமிழர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.''

''நன்றியா... அந்தப் பாசக்காரர்களால் கடைசி நேரத்தில் எவ்வளவு சிக்கல்?''

''ஆரம்பத்தில் நாங்களும் அப்படித்தான் பதறிப்போனோம். ரோஸியின் மூளை இணைப்புகளைக் கோழி அறுப்பதுபோல அறுத்திருந்தால் வெடி விபத்தை மட்டும்தான் தவிர்த்திருக்க முடியும். 581 ஜி, மூச்சுத்திணறிப் போயிருக்கும்.''

''அப்படியா?''

''உதாரணத்துக்கு மத்திய கேந்திரம் அந்த விநாடியே ஸ்தம்பித்திருக்கும். மற்ற கேபின்களின் தொடர்பு அறுந் திருக்கும். வினோதினி, பொறுமையாக ஆணைகளை கோட் கன்வெர்ட் செய்து பார்த்தாள். அது, ஹெக்ஸா டெசிமல் நியூமரிக்கல் கோட். அந்த நேரத்தில் அதை கன்வெர்ட் செய்து பார்த்ததுதான் அவளுடைய புத்திசாலித்தனம். மிராக்கிள். கடைசி விநாடி அவகாசத்தில் அந்த டிஸாஸ்டர் ஆணைகளை அழித்தாள். பார்த்துக்கொண்டிருந்த எங்கள் எல்லோர் உயிர்களும் கண்களுக்கு வந்துவிட்டன.''

ராணுவத் தளபதிக்கு அப்போதுதான் புல்லரித்தது.

ஆபரேஷன் நோவா - 31

சார்லஸ் தொடர்ந்தார்... ''உலக வரலாற்றில் அவளுக்கு ஓர் இடம் உண்டு. அப்புறம் அந்தப் பையன்...''

''அகிலன்?''

''ம்ம்ம்.. அவளுடைய முயற்சிகளுக்கு எல்லை வரை ஆதரவாக இருந்தான். அப்படி ஒரு காதல். காதல்தான் காப்பாற்றியிருக்கிறது.''

''லிபர்ட்டி சிலைக்குப் பக்கத்தில் அவர்களுக்கும் சிலை ஏற்பாடு செய்துவிடலாம்'' - தளபதி நிஜமாகவே சொன்னார்.

சார்லஸ் அங்கீகரித்துச் சிரித்தார்.

48 மணி நேர அவகாசத்தில் 47.30-வது நிமிடம் வரை பொறுமையாகத்தான் இருந்தார் கேப்ரியல். எப்படியும் நம் காலடியில் வந்து விழுவார்கள். அதுவரை எல்லா தலைவர்களும் எப்படி வேண்டு மானாலும் குழம்பிச் சாகட்டும் என்றுதான் 'டெக்ஸ்டர் லெபாரட்ரி’, 'பாப்பாயின்ஸ்’ என்று அனிமேஷன் படங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். இன்னும் அரை மணி நேரம் இருக்கும்போதுதான் தன் டைமர் கண்டிஷன் எப்படி இருக்கிறது என்ற யோசனையே வந்தது. ஒரு கெடு விதித்தால் இவ்வளவு அலட்சியமாகவா இருப்பார்கள்? கடைசி நிமிடம் வரை பூமியின் தலைவர்கள் தன் காலில் வந்து விழாத ஆத்திரம் அவருக்கு. 581 ஜி-யை அழிக்கலாமா அல்லது டைமரை இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மாற்றி வைக்கலாமா?

அவர் தன் மேல் கோட்டில் இடதுபுறத்தை விலக்கி, ஒரு பட்டனைத் தொட்டார். அவர் முன் விரிந்தது ஆப்டிக்கல் திரை. சில எண்கள், சில எழுத்துகளை அழுத்திவிட்டுக் காத்திருந்தார்.

'மன்னிக்கவும்... உங்களுக்கு இந்த அனுமதி இல்லை’ என்று பதில் வந்தது. ஒரு நிமிடம் ஆடிப்போனார். தவறான இலக்கத்தை அழுத்திவிட்டோமா என்று நினைத்தார். அடுத்த முயற்சியில் எல்லாம் விளங்கிவிட்டது. யாரோ எல்லா புரோகிராம்களையும் மாற்றியிருந்தனர். அறையின் உள்ளே ஒரே நேரத்தில் பல பேர் வேகமாக நுழைவதை அனுமானிக்க முடிந்தது. மெத்தென்ற காலடிச் சத்தம் கேட்டது. கேப்ரியல் சுதாரித்தார்.

கிராண்ட் ஹயட் ஹோட்டலில் இருந்த கேப்ரியலை இனி கைதுசெய்து உள்ளே தள்ளலாம் என முற்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தபோது, அவர் கொடுத்திருந்த கெடுவுக்கு சில நிமிடங்கள்தான் பாக்கி இருந்தன. ஆபரேஷன் நாகசாகி போன்ற தீவிரத்துடன் ராணுவ வீரர்கள் ஹோட்டலை முற்றுகை இட்டனர். பிரிகேடியர் தலைமையில் ஒரு பட்டாலியன். கேமரா பொருத்தப் பட்ட வீரர்கள் துப்பாக்கிகளுடன் எட்டுத் திக்கும் இறங்கினர். சதாம் உசேன், பின்லேடன் போன்றவர்களை முற்றுகையிட்ட அனுபவம் அதில் இருந்தது. ஒரு பிரிவினர் ஹோட்டல் கதவுகளைச் சரக்கெனத் திறந்து கதவுக்கு இரண்டு புறமாக நகர்ந்து ரவுண்டு கட்டினர்.

ஒரு பெரிய ஹால்... அதற்கடுத்து இன்னொரு பெரிய ஹால். இரண்டு இடங்களிலும் அவர் இல்லை. கார்ட்டூன் நெட்ஒர்க்கில் 'டாம் அண்ட் ஜெர்ரி’ கார்ட்டூன் ஓடிக்கொண்டிருந்தது. காவலர்கள், அத்துமீறும் வெறியோடு படுக்கை அறைக் கதவைத் திறந்து முன்னேறினர். மூச். படுக்கையில் போர்வை மட்டும் யாரோ எழுந்துபோனதை உணர்த்தியது.

பாத்ரூம்? சிறிய நீச்சல்குளம் இணைக்கப்பட்ட அதை, 'குளியல் அறை’ என்ற வார்த்தையால் சுருக்குவது அவமானம். அது நிசப்தமாகவும் திறந்தும் இருந்தது. அங்கேயும் இல்லை. ஏமாற்றமும் சந்தேகமும் பிணைந்து, கட்டிலுக்கு அடியில் கதவு மறைவில் எல்லாம் தேடிப் பார்த்தனர். கேப்ரியல் எங்குமே இல்லை. மூடிய கதவு, மூடிய ஜன்னல் எல்லாவற்றையும் மீறி அவர் காணாமல்போயிருந்தார்.

பொதுவாக நல்லவர்கள் தாங்கள் வாழ்வதற்கு அதிகபட்சமாக ஒரே ஒரு வழியைத்தான் வைத்திருக்கிறார்கள். கெட்டவர்களுக்கு ஆயிரம் வழிகள். கேப்ரியலுக்கு இப்படி எதுவும் நடக்கும் என்றும் தெரிந்திருந்தது. தன் எல்.டபுள்யூ பட்டனை அழுத்தி, கெப்ளர் 78-ல் இறங்கினார். வாழ உகந்த இடம் என்று நாசா கண்டுபிடித்த இன்னொரு கிரகம்.

ஆபரேஷன் நோவா - 31

'கேடுகெட்ட இந்த மனிதர்களை தமக்கு அடிமை ஆக்குவது அல்லது, அழித்துவிடுவது’ என்ற ஆப்ஷன்கள் அவரிடம் இருந்தன. கெப்ளர் 78-ல் இன்னொரு பூமியைப் படைக்க முடியும் என்று நம்பிக்கை பிறந்தது. 96 சதவிகித பூமியின் அம்சங்கள் அதில் இருந்தன. 'சூப்பர்!’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டார். 'நமக்கு என்று ஒரு கோடிப் பேர் இருந்தால் போதும்’ என்று கணக்குப் போட்டார். 581-ஜியை உருவாக்கிய அனுபவத்தில் அவருக்கு அதைவிட சீக்கிரமே இந்தக் கிரகத்தைப் பண்படுத்திவிட முடியும் என்று தோன்றியது. எல்லாம் அவர் எதிர்பார்த்தபடிதான் இருந்தன. அவர் எதிர் பார்க்காதது அங்கு இருந்த நைட்ரஜன் அளவு. அவரைப் போலவே அங்கே டெர்பிகளும் வந்து கணக்குப் போட்டுக்கொண்டிருந்தன. தன்னந்தனியாக வெட்டவெளியில் ஒரு மனிதன் நிற்பதை அவை கவனித்தன.  கேப்ரியலை நோக்கி வேகமாக பறந்து வந்து சூழ்ந்து நின்றன. அவர் அவசரமாக எல்.டபுள்யூ பட்டனைத் தேட, அதற்குள் டெர்பி ஒன்று அவர் மீது விசுக்கென்று தன் உடல் கருவி துப்பாக்கியால் சுட்டது.

கேப்ரியல் இருந்த இடத்தில் கொஞ்சூண்டு சாம்பல் மட்டும் இருந்தது!

கிலனும் வினோதினியும் செய்த அற்புதம். ஆலீஸ், கேத்ரின், அகி, ஹென்ரிச், லூக்சூன், சினுவா எல்லோரும் தனித்தனியாகக் கட்டிப்பிடித்துப் பாராட்டி முடித்தனர். தன் மகளின் நினைவுகளைப் பத்திரமாக மைக்ரோ சிப்பில் மீட்டுத் தந்ததற்காக நன்றிப் பெருக்கில் நீராடிக்கொண்டிருந்தார் டாக்டர் மைக்கேல். உருவம்தான் இல்லையே தவிர, ரோஸி பேசினாள், பாடினாள், பாசம் காட்டினாள்.

பூமி, 581- ஜி இரண்டுக்குமே ஆபத்துகள் நீங்கின. புதிய கோளுக்கு வந்தவர்கள், பூமியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் விஞ்ஞானக் கழகம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. யாருக்கு எங்கு வாழ விருப்பம் என்பதற்கான ஒரு இமெயில் சோதனை. இக்கரைக்கு அக்கரை பச்சை மனோபாவத்தில் இங்கும் அங்கும் சில தடுமாற்றங்கள் இருந்தன. ஆனால், இமெயில் கேள்வி பாரத்தைப் பூர்த்திசெய்யும்போது வெகு சிலர் மட்டுமே கிரக மாற்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

பில்கேட்ஸ், ''எனக்கு ஒன்றும் இல்லை. கொஞ்ச நாள் இங்கே இருந்து நெட்ஒர்க் முன்னேற்றங்களைக் கவனமாக முடித்துவிட்டுப் போகிறேன்'' என்றார். அவருடைய டீமில் இருந்த பலருக்கும் 581-ஜி என்ற அந்தப் பெயரைத் தவிர, அந்தக் கோளில் எல்லாமே பிடித்திருந்தது. ஏஞ்சலீனா ஜோலி, பிராட்பிட் ஆகியோர் இன்னும் சில நடிகர்கள், சினிமா ஆள்கள் வந்த பிறகு புது லொகேஷனில் காளான் மரங்களும் க்ரீனியுமாக அசத்தலான ஒரு சினிமாவை எடுத்துவிட்டுப் போகலாம் என்று முடிவெடுத்தனர்.

அகிலன், வினோதினியுடன் ழீனும் தமிழகம் செல்வதற்கு விரும்பினார்.

''குழந்தை மார்க்கஸ்?'' என்றான் அகிலன்!

- ஆபரேஷன் ஆன் தி வே...