மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

வாசகிகள் பக்கம், ஓவியங்கள்: சேகர்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

 200

மறையவில்லை மதியீனம் !

ஆரம்பத்தில் அந்த இளைஞனுக்குப் பல காரணங்களினால் திருமணம் தாமதமானது. இப்போது முப்பத்தைந்து வயதாகிவிட்டதால், அதுவும் ஒரு தடையாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு சம்பந்தம் முடிவாகும் நிலைக்கு வந்தது. ஜாதகப் பொருத்தம் மிக நன்றாக இருந்தபோதும், பெண்ணின் நட்சத்திரம் ஆயில்யம் என்பதை பையனின் தாயார் பிரச்னையாக்கினார். ''ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்று தெரிந்தும் அவளை எப்படி மருமகளாக்கிக்கொள்ள முடியும்?'' என்று ஜோதிடம் பேசி நிராகரித்துவிட்டார். மகனின் திருமணத்தைக் கண்குளிரக் கண்டுமகிழக் கிடைத்த அரிய வாய்ப்பை, எழுபது வயதான அந்தத் தாயார் உதறித் தள்ளியது... அந்தக் குடும்பத்தினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

ஆதாரமற்ற காரணங்களைச் சாக்கிட்டு, பெண்ணே பெண்ணுக்கு எதிரியாகும் மதியீனம் மறையவில்லையே இன்னும்!

 ரேவதி இளங்கோவன், திருச்சி

அனுபவங்கள் பேசுகின்றன!

ஆட்டோ டிரைவர்கள் கவனத்துக்கு..!

சமீபத்தில் நானும், சகோதரியும் சென்னை செல்வதற்காக, வைகை எக்ஸ்பிரஸில் டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தோம். ரயிலைப் பிடிப்பதற்காக, விடியற்காலையில் ஆட்டோ பிடித்தோம். பாதி வழியில் ஆட்டோ மக்கர் செய்தது. எங்களுக்கோ ரயிலைத் தவறவிட்டு விடுவோமோ என்ற பயம்! வேறு ஆட்டோ பிடித்துச் செல்லலாம் என்றால், அந்த நேரத்தில் வேறு ஒன்றும் வரவில்லை. அதற்குள் ஆட்டோ டிரைவர், 'பெட்ரோல் இல்லை’ என்று உருட்டிக்கொண்டே வந்து பங்க்கில் பெட்ரோல் போட்டுக்கொண்டு, ஜங்ஷனில் கொண்டுவந்து சேர்த்தார். அதற்குள் நாங்கள் பட்ட டென்ஷன்... வார்த்தையில் அடங்காது! டிரெயினில் உட்கார்ந்த பிறகு நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

பெரும்பாலும் ஆட்டோ பிடித்துச் செல்வதே... அவசரத் தேவைக்காகத்தான். அதிலும், ஊருக்குச் செல்ல ரயிலையோ, பேருந்தையோ விரைவில் பிடிக்க வேண்டும் என பரபரப்பவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். எனவே, ஆட்டோ டிரைவர்கள், முந்தின நாள் இரவிலேயே ஆட்டோவில் பெட்ரோல் இருக்கிறதா, ஓடுவதற்கு சரியான கண்டிஷனில் இருக்கிறதா என்றெல்லாம் சரிபார்த்து வைத்துக்கொண்டால்.... பயணிகள் அவதிக்கு உள்ளாக மாட்டார்களே!

- என்.உஷாதேவி, மதுரை

எதிர்காலத்தை எதிரான காலமாக்கலாமா..?

ஒருநாள் மாலை தோழி ஒருத்தியைச் சந்திக்க அவளுடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். டி.வி சீரியலில் மூழ்கியிருந்தவளிடம், ''உன் மகன் எங்கே?'' என்று கேட்டேன். பக்கத்து அறையில் இருப்பதாக சைகை காட்டினாள். அங்கு சென்று பார்த்தபோது, அவளுடைய ஏழு வயது மகன், அவனுக்குப் பிடித்த சிறுவர் சேனலை டி.வி-க்கு மிக அருகில் அமர்ந்து மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். இது பற்றி தோழியிடம் கேட்டபோது, அவள் விளம்பர இடைவேளையில் பதில் சொன்னாள். அவளை சீரியல் பார்க்கவிடாமல், ரிமோட்டைப் பிடுங்கி தனக்கு பிடித்த சேனலுக்கு மாற்றி தொந்தரவு செய்ததால், கணவரிடம் சண்டை போட்டு, மகனுக்கு தனியாக டி.வி வாங்கி வைத்துவிட்டதாக 'பெருமையுடன்’ கூறினாள்.

'ஓடி விளையாட வேண்டிய வயதில், ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்ப்பதால், அவனுடைய கண்பார்வை, படிப்பு, உடல்நலம், எதிர்காலம் எல்லாமும் பாதிக்கப்படுமே’ என்று எண்ணி வருந்தினேன். குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டிய பெற்றோர்களே... 'தொல்லையில்லாமல் பொழுதுபோக்க வேண்டும்’ என்று இப்படிப்பட்ட ஏற்பாட்டை செய்வது தவறு என்பதை அவர்கள் உணர வேண்டும்.

-  ராமலட்சுமி, ராஜபாளையம்