மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அறிவிழி - 64

அறிவிழி
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவிழி ( Anton Prakash )

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 64

சாமுவேல் க்ளெமன்ஸ் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப் பட்டிருக்க வாய்ப்புகள் இல்லை. 100+ ஆண்டுகளுக்கு முன்னால், எழுத்து மற்றும் பேச்சு மூலமாக மட்டுமே மில்லியன்களை ஈட்டிய சர்வதேச சூப்பர் ஸ்டார்.

பூமிக்குள் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி படிமங்களை வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழிலாளியாக தன் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தார் க்ளெமன்ஸ். அந்த வேலையில் தான் ஈடுபடும் அளவுக்குத் தனக்கு உடல் வலிமை இல்லாததைத் தெரிந்துகொண்டதால், எழுத ஆரம்பித் தார். கிறங்கவைக்கும் அவரது எழுத்தின் வலிமை, அவருக்கு சர்வதேசப் புகழைச் சேர்த்தது!

எழுத்துத் திறமையுடன் மேடைப் பேச்சும் சரளமாகப் பேசத் தெரிந்ததால், கிடுகிடுவென பிரபலமாகத் தொடங்கினார். உலக நாடுகளின் அரசர்களும் அதிபர்களும், சிவப்புக் கம்பளம் விரித்து இவரை வரவேற்றனர். விமான வசதிகள் அதிக அளவில் இல்லாத அந்த நாள்களிலேயே உலகத்தைச் சுற்றி வந்த வாலிபன் க்ளெமன்ஸ்.

நிற்க...

சாமுவேல் க்ளெமன்ஸின் புனைப்பெயர் மார்க் ட்வைன். இந்தப் புனைப்பெயரை முதன்முதலில் பயன்படுத்திய ஊர், நெவாடா மாநிலத்தில் இருக்கும் வெர்ஜினியா சிட்டி. இந்த நகரில் இருந்து வெளிவந்த தினசரி ஒன்றில் பணியாற்றியபோது 'மார்க் ட்வைன்’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். அதற்கு முன்னர் பல்வேறு புனைப்பெயர்களைப் பயன்படுத்தி இருந்தாலும், இந்தப் பெயரில் எழுத ஆரம்பித்த பின்னரே இவர் பிரபலமானார். ஆகையால், இந்தப் பெயரையே கடைசி வரை பயன்படுத்தினார்.

அவருக்கு, அச்சு ஊடகத்தின் மீது அதீத ஆர்வம் இருந்தது. எழுத்து மற்றும் சொற்பொழிவு

அறிவிழி - 64

ஆகியவற்றில் கிடைத்த பெரும் பணத்தை (கிட்டத்தட்ட மூன்று லட்சம் டாலர்கள், இன்றைய மதிப்பில் பல நூறு மில்லியன்களைத் தாண்டும்) புதுமையான அச்சு இயந்திரக் கண்டுபிடிப்பில் முதலீடு செய்தார். அந்த இயந்திரம் சரிவர இயங்காததால் அவ்வளவு பணத்தையும் இழந்தார். கடன் வாங்கியவர்களிடம் மீண்டும் அதைக் கொடுக்க வேண்டும் என்ற வெறியில், உலகப் பயணம் மேற்கொண்டார். அப்போது, அவர் எழுதிய 'Following the Equator' என்ற நூல், மிகச் சிறந்த பயணக்குறிப்பு இலக்கிய நூல்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. இந்தப் பயணத்தின்போது இந்தியாவின் ஆன்மாவையும் மனிதர்களையும் அவர் பதிவுசெய்திருக்கும் செய்திகள் மிக முக்கியமானவை.    இந்த நூலை இணையத்தில் படிக்க... http://bit.ly/1oI9qMm வெர்ஜினியா சிட்டிக்குத் திரும்பி வந்தபோது, அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கும் மார்க் ட்வைனின் செய்தித்தாள் அலுவலகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அமர்ந்து பணிபுரிந்த மேசை, நாற்காலியில் இருந்து, அவர் எழுதிய முதல் தலையங்கம், அவருக்கு மிகப் பிடித்த டைப்ரைட்டர்... என முக்கியமான பொருள்களைக்கொண்ட அலுவலகத்தை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோலவே பழமை கெடாமல் வைத்திருக்கிறார்கள். 'இந்த அருங்காட்சியகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்’.

மார்க் ட்வைன் அடிக்கடி பயன்படுத்திய மண்ணெண்ணெய் விளக்குக்குக் கீழ் இருந்த அறிவிப்பு, மார்க் ட்வைனின் அச்சு ஊடகத்தில் இருந்து, மார்க் ஸக்கர்பெர்க்கின் சமூக ஊடகத்துக்கு நூற்றாண்டுகளைத் தாண்டிய இணைப்பைக் காட்டியது!

னி சென்ற வாரத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகள்:

மைக்ரோசாஃப்ட்டின் கையில் இருக்கும் ஸ்கைப் பயனீட்டாளர்கள் மொழி தெரியாத மற்றவர்களுடன் பேசும்போது, உடனடியாக மொழிபெயர்ப்பு செய்யும் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது.

ஸ்டீயரிங் வீல், பின்னால் இருப்பதைப் பார்க்கும் கண்ணாடி... போன்றவை இல்லாமல் தானாகவே ஓட்டிச்செல்லும் காரை வெளியிட்டிருக்கிறது கூகுள். பலூன் புரா ஜெக்ட்டை விட, கூகுளுக்கு தானியங்கி கார் மீது இருக்கும் காதல் அதிகம் என்பது தொடர்ந்து வெளிப்பட்டுவருகிறது.

மைக்ரோசாஃப்ட்டின் புதிய தலைமைச் செயல் அதிகாரி நடேலா, 'தனிப்பட்ட கணினியின் காலம் முடிந்துவிட்டது’ என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இரண்டு தடவை தோல்வி அடைந்த மைக்ரோசாஃப்ட்டின் Surface, டேப்லெட் முயற்சியில் இன்னும் தளரவில்லை. Surface 3 வெளியாகியிருக்கிறது.

ஃபேஸ்புக் மொபைல் மென்பொருள் இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில் கேட்கும் சத்தங்களைக் கேட்டறிந்து, 'என்ன டி.வி. ஷோ பார்க்கிறீர்கள் அல்லது இசை கேட்கிறீர்கள்’ என்பதைக் கண்டறிந்து, அதைப் பற்றிய நிலைத்தகவல்களை எழுத ஊக்குவிக்கும். பிரைவசி பாதுகாவலர்களின் ஆட்சேப சத்தத்தை, வரும் வாரங்களில் கேட்க முடியும்.

முக்கியமான அறிவிப்பு: 'அறிவிழி’ தொடரின் இறுதி அத்தியாயம் இது. தொழில்நுட்ப நிகழ்வுகளையும் ஊகிப்புகளையும் இத்தனை வாரங்கள் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்ததில் பெரு மகிழ்ச்சி. சாமுவேல் க்ளெமன்ஸில் இருந்து சாம் பிட்ரோடா வரை விவாதிக்க முடிகிற விதத்தில் இந்தத் தொடர் அமைந்தது தற்செயல் அல்ல. விகடனில் இரண்டு பக்கங்களுக்குள் எழுதுவதற்கு பல மணி நேரங்கள் ஆராய்ச்சியும் படிப்பும் தேவைப்பட்டன.

எனது பார்வைக்கு முக்கியமான நிகழ்வுகளைத் துரிதமாக ட்வீட்டும் சீனிவாசன் சங்கர் (@srinisankar), கட்டுரைகளைப் பற்றிய ஆக்கபூர்வ விமர்சனங்களை அனுப்பும் கிஷோர் (@raKishore) போன்றவர்களுக்கு, எனது மனப்பூர்வ நன்றிகள்.

ட்விட்டரிலும் இமெயிலிலும் வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும்போது, தொழில்நுட்பத்தின் அடிப்படைகள் மட்டுமல்லாமல், அதன் குறிப்பிட்ட உபயோகம், தொழில் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வமும், அதிலிருந்து உருவாகும் தொழில்முனைவு சிந்தனைகளும் பிரமிக்கவைக்கின்றன. இதையே அடிப்படையாகக்கொண்டு மற்றொரு பாணியில் தொடர் ஒன்றைக் கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது. உங்களது பின்னூட்டம் இதற்கு மிகவும் பயன்படும்.

ட்விட்டர் இதற்குச் சரியான ஊடகம் என்பதால், @anandavikatan அல்லது @antonprakash ஆகியவற்றுக்கு # தொழில்நுட்பம் என்ற ஹேஷ்டேக்குடன் உங்களது பின்னூட்டங்களை அனுப்புங்கள்.

விகடன் வாசகர்களிடம் இருந்து தற்காலிகமாக விடை பெறுகிறேன்!