மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆபரேஷன் நோவா - 32

தமிழ்மகன், ஓவியம்: பாலா

ஆபரேஷன் நோவா - 32

மார்க்கஸ்?'' என்றார் கார்ட்டர்.

''கேப்ரியல் செய்த ஆராய்ச்சியில் சுயநலம் என்ற ஒன்றை மட்டும் நீக்கினால், வேறு எதையுமே குறை சொல்ல முடியாது. மார்க்கஸை உருவாக்கி, வளர்த்து, அறிஞனாக்கும் முயற்சியில் அவருடைய ஈடுபாட்டைக் குறை சொல்லவே முடியாது. அவன் இந்தக் கோளுக்காகவே தயாரிக்கப்பட்டவன். அவனை எப்படி பூமிக்கு அனுப்ப முடியும்?'' என்றார்.

அகிலனும் வினோதினியும் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தும் அவர் மனம் இரங்கவில்லை. இருவரும் மார்க்கஸைப் பார்த்தனர்.

இரண்டு வயது குழந்தையைப் பார்த்து 'தயாரிக்கப்பட்டவன்’ என்பது என்ன சொல் பிரயோகம்? எல்லா விஞ்ஞானிகளுமே ஒருவிதத்தில் அன்பு, மனசு, சிந்தனை எல்லாவற்றையும் ஒரு பொருளாகத்தான் பார்க்கிறார்கள். கிலோ என்ன விலை என்கிறார்கள்.

''இந்தக் குழந்தையை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். நீங்கள் இன்னொரு குழந்தையைச் செய்துகொள்ளுங்கள்!'' என்றாள்.

''அதற்கு இன்னும் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டுமே? நீங்கள் இன்னொரு குழந்தை செய்துகொள்வதுதான் நல்லது. கிட்டத்தட்ட இனி ரோஸியின் வேலைகளை இவன் செய்ய வேண்டியிருக்கும்'' - கார்ட்டர் பிடிவாதமாகச் சொன்னார்.

கோளை வழி நடத்த, சக்திவாய்ந்த புரோகிராம் இருந்தது. மத்திய கேந்திரத்தின் ரோபோக்கள் இருந்தன. இப்போதைக்கு சார்லஸோடு தொடர்பில் இருந்து கோளைக் கண்காணிக்க, கார்ட்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது.

''கார்ட்டர், குழந்தை என்பது பாப்கார்ன் பொட்டலம் அல்ல; வேறு வாங்கிக்கொள்வதற்கு'' - வினோதினியின் கண்ணில் நீர் கன்னத்தைக் கடந்து அவள் மார்பில் விழுந்தது.

நானோபாட்டில் ஒரு வைரஸுக்குள் செய்திகளை அடுக்குவது பற்றிய விளையாட்டில் இருந்த மார்க்கஸ், வினோதினியைப் பார்த்தான். அவளின் கண்கள் சிவந்திருந்தன. மூக்கு நுனியும் சிவந்திருந்தது. தன் பொருட்டு இன்னொருவர் கலங்குவது அவனுக்குப் புதுமையாக இருந்தது.

எதற்காக?

அவன் யோசிக்கும்போதே, அதற்குப் பெயர் 'பாசம்’ என்று இன்டர்லிங்க் அகராதியில் விளக்கம் வந்தது. அதற்குத் தொடர்பான வார்த்தைகளாக அன்பு, மனசு, கருணை, உள்ளம், இரக்கம் போன்ற வார்த்தைகள் தோன்றி மறைந்தன. விநாடியில் அத்தனை வார்த்தைகளையும் துழாவிப் பார்த்தான். மார்க்கஸுக்கு இதுவரைக்கும் இதற்கான விளக்கம் தேவைப்பட்டு இருக்கவில்லை.

அகிலன், அத்துமீறி மார்க்கஸைத் தூக்கினான். ஒரு ரோபோ, அகிலனைக் கட்டுப்படுத்தித் தடுத்தது.

''நீங்கள் பூமிக்குக் கிளம்பலாம். மார்க்கஸ் விஷயத்தில் என்னால் உதவ முடியாது. குளோபல் சட்டவிதியும் இடம் தராது'' - கார்ட்டர் கண்டிப்புடன் சொன்னார்.

ஆபரேஷன் நோவா - 32

ஒரே மனதில் இரண்டு உலகங்கள் இருக்கும்போது, இரண்டு உலகங்களில் எத்தனை உலகங்கள் இருக்கக்கூடும்?

உலக அரசுகள் அனைத்தும், நாத்திகம், அறிவியல், புதுமை, எதிர்காலம், முன்னேற்றம், சமத்துவம், கண்டுபிடிப்பு, பழசு எல்லாவற்றையும் தூக்கி எறி என்கிற ரகத்தினர் ஒரு ரகம் - அவர்கள் 581 ஜி-க்கு.

கடவுள், பண்பாடு, இதிகாசம், புராணம், மதம், நம்பிக்கை, விதி, அந்தக் காலத்திலேயே எல்லாம் சொல்லிவிட்டார்கள் என்கிறவர்கள் இன்னொரு ரகம் - அவர்கள் பூமிக்கு.

இரண்டு கோள்களிலும் தாவல் அதிகமாக இருந்தது. பூமியில் ஆபத்து இல்லை என்பது உறுதியானதும், அங்கிருந்து ஒரு கோடியே 67 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தோண்டும் இடம் எல்லாம் தங்கம் என்ற ஆர்வத்தில், இங்கிருந்து இரண்டு கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். 'லிங்கா’ படத்துக்குப் பிறகு ரஜினி, 'சர்ஃபரோஷ்-2’ படத்துக்குப் பிறகு அமீர்கான், 'ட்ராகன் பிளேடு’ படத்துக்குப் பிறகு ஜாக்கிசான் என செலிபிரிட்டிகள் பலர் புதிய கோளுக்குப் படை எடுக்கத் தயாராகினர்.

மைக்ரோசாஃப்ட் ஆசாமிகள் 581 ஜி என்ற பெயரை மாற்றி இந்தக் கோளுக்கு 'நோவா’ என்றே பெயரிட்டால் என்ன என்று கோரிக்கை வைத்தனர். பொது ஓட்டெடுப்பில் ஓ.கே. ஆகிவிட்டதை மதுவுடன் கொண்டாடினர்.

'மனிதப் பண்பாடு முற்றிலுமாக ஒழிந்துவிட்டால் திருக்குறள் என்ற ஒரு நூலை வைத்து அதை மீட்டுவிடலாம்’ என்று கால்டுவெல் என்கிற அறிஞர் சொன்னார்.

ழீன் அதைச் சுட்டிக்காட்டினாள்.

திருக்குறளுக்கு வயது 2,000. தமிழின் வயதும் 2,000. எப்படி ஒரு மொழி பிறந்ததும், உடனே ஒருவர் எழுத்தாணி கொண்டு ஓலையில் மக்களுக்கான இலக்கணத்தை எழுத ஆரம்பித்துவிட்டாரா? தமிழின் வயதைக் கணக்கிடுவதில் வெளிப்படையாகத் தெரியும் மோசடி.

''உலகத்திலேயே ஒரே ஒரு மொழிக்குத்தான் செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டுமென்றால், அது தமிழுக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் பத்தோடு பதினொன்றாகத்தான் அந்த அந்தஸ்தைக் கொடுத்தனர். 5,000 ஆண்டு, 8,000 ஆண்டு தமிழ்த் தடயங்கள் கிடைத்தால், அதை உடனடியாக மியூசியத்தில் காட்சிப் பொருளாக்கிப் புதைக்கிறார்கள். ஆராய்வது இல்லை. இது சதியா, சாதித்துக் குவித்த அசதியா?'' - ழீன் சொல்வதை யோசிக்க வேண்டியிருந்தது.

சொல்லப்போனால் இன்னொரு கோளைக் கண்டுபிடித்து அங்கு சென்று வாழ்வதைவிடவும் தமிழின் வேரைத் தேடிக் கண்டுபிடிப்பது முக்கியமானதாக இருந்தது.

''திருக்குறள் ஒன்று சொல்லவா?

'கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்           செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று’

நாடகம் பார்ப்பதற்கு வருபவர்கள் ஒன்று இரண்டாகத்தான் வந்து சேருவார்கள். நாடகம் விட்டுப் போகும்போது கூட்டமாகப் போய்விடுவார்கள்... செல்வமும் அப்படித்தான்!

இந்த உலகில் எந்த மொழியிலும் இப்படி உவமை சொன்னது இல்லை'' என்று தீர்மானமாகச் சொன்னாள்.

2045 வருஷத்துக்கு முன் ஒருவர் தமிழில் இப்படி எழுதிவைத்திருக்கிறார். அதற்கு முன் நிறைய எழுதப்பட்டு இருக்க வேண்டும்.

அந்தத் தமிழின் முதல் நூல்கள் கடல்கொண்ட தென்னாட்டில் இருக்கின்றன. தென்னிந்தியக் கடலைச் சுற்றி உள்ள 100 கிலோமீட்டர் கடலை ஆராய்ந்தால் போதும், உலகத்தின் வரலாறே மாறிவிடும். என்னுடைய முதல் பயணம் தமிழகத்தின் தென்முனை'' - ழீன் தெளிவாக இருந்தாள்.

வினோதினிக்கும் அகிலனுக்கும் ஓர் இலக்கோடு வாழ்வதில் இருக்கும் மகிழ்ச்சி புரிந்தது. ழீனின் ஆராய்ச்சிக்கு உதவுவதேகூட நல்ல நோக்கம்தான்.

ஆபரேஷன் நோவா - 32

முதல் குழுவினர் பூமிக்குப் புறப்பட்டனர். எல்.டபிள்யூ சேம்பரில் ஆயிரம் பேர் வரிசையாகப் படுக்கவைக்கப்பட்டிருந்தனர். வேர்க்கடலைக்குப் போர்த்தப்பட்டிருக்கும் மூடி போன்ற அந்தச் சாதனம் அவர்கள் முதன்முதலாக இங்கே வந்து இறங்கியபோது பார்த்தது. பலருக்கு தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போகிற மகிழ்ச்சி.

இன்னும் சில விநாடிகளில் நோவாவை விட்டுப் பிரியப்போகிறோம் என்ற வருத்தம் ஒரு பக்கம். மனிதனுக்குத்தான் இப்படி எல்லாம் ஒரே நேரத்தில் இரண்டுவிதமான மனப்போராட்டம் சாத்தியம். மனிதம் என்பதே இரண்டு நிலைதான். டைலமா. நிறைவின் முடிவில் ஒரு புள்ளி ஏக்கம்... மூடநம்பிக்கையின் முடிவில் கொஞ்சம் நாத்திகம். பாசத்துக்கு நடுவே ரகசியத் துளியாக துரோகம்.

எல்லாமே பொதுவாக மனிதனிடம் இருந்தது. இந்த முரண்பாடுதான் உலகை இயக்குகிறது.

எல்லோரும் ஒருவழியாக பூமிக்குத் தயாரானபோது, ரோபோ ஒன்று கடைசி நிமிடத்தில் மார்க்கஸைக் கொண்டுவந்து வினோதினியிடம் ஒப்படைத்தது. வினோதினி அவனை வாரி அணைத்துக்கொண்டாள்.

ரோபோவின் அணைப்புக்கும் வினோதினியின் அணைப்புக்கும் வித்தியாசம் இருப்பதை மார்க்கஸ் உணர்ந்தான். இத்தனைக்கும் தன் 23 குரோமசோம்களுக்கு சொந்தக்காரி கேத்ரின். அகிலனுக்கு பாதி உரிமை இருந்தது. அகிலனின் காதலியான வினோதினி உரிமை கொண்டாடுவது ஆச்சர்யமாக இருந்தது. மார்க்கஸ் வசதியாக வினோதினியின் மடியில் சாய்ந்துகொண்டு, ''அம்மா'' என்றான்.

எல்.டபிள்யூ சேம்பர், க்ய்க் என்ற சத்தத்துடன் அந்த இடத்தில் இருந்து மறைந்தது.

ஆதிச்சநல்லூர், குமரிமுனை, பூம்புகார் என்று ழீனுக்கு சுற்றிப் பார்க்கவேண்டிய வேலை நிறைய இருந்தது. ழீன் எக்மோரில் நெல்லை எக்ஸ்பிரஸில் புறப்படக் காத்திருந்தாள். வழி அனுப்புவதற்காக அகிலன் குடும்பத்தினரோடு ரயில் நிலையம் வந்திருந்தான்.

தரவுகள் திரட்டிக்கொண்டு, சர்வதேச அறிவியல் கழகத்தின் துணையோடு கடலுக்குள் களம் இறங்குவதாக ழீன் திட்டமிட்டிருந்தாள். பல ஆயிரம் ஆண்டுகளாகவே ஏதோ ஒரு புள்ளியில் தமிழுக்குத் துரோகம் நடந்திருப்பதை அவள் ஊகித்தாள். இதை ஆராயப்போனால் அவளையும் அந்தத் துரோகம் துரத்துமா என்பது தெரியவில்லை.

கால்டுவெல், எல்லீஸ், ட்ரூமன்... இப்போது இருக்கும் ஜார்ஜ் ஹார்ட் என்று வெளிநாட்டவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டோடு தம் பங்காகக் களத்தில் நின்றாள் ழீன். ரயில் புறப்பட்டது.

அகிலனும் வினோதினியும் வீடு திரும்பினர்.

''திடீர் என்று எங்களுடன் வந்துவிட்டாயே... நான் எதிர்பார்க்கவே இல்லை. கார்ட்டர் எப்படி சம்மதித்தார்?'' - மார்க்கஸைக் கேட்டாள்.

''அவர் சம்மதிக்கவில்லை.''

''ம்?'' என்றாள்.

''ரிப்ளிகா ஸ்டாம்பிங் என்று ஒரு குளோனிங் புரோகிராம் உருவாக்கினேன். அதை வைத்து இன்னொரு மார்க்கஸ் செய்து அங்கே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.''

திகைத்துப்போய் அவனைப் பார்த்தாள்.

''அறிவியலுக்கு அவன்... அன்புக்கு நான்!''

சென்னை எவ்வளவோ மாறிப்போய் இருந்தது. பசுமையாக இருந்தது. 'அரசியல்வாதிகளுக்கு வைக்கும் வினைல் போர்டு தொகையை, தெரு நாய்களைப் பராமரிக்கும் நலச் சங்கங்களுக்குச் செலவிடுமாறு’ அரசியல்வாதிகளே சொல்லியிருப்பதாக அகிலனின் அப்பா சொன்னார். மேலும், ''யாரும் யார் காலிலும் ஆதாயத்துக்காக விழுவது இல்லை'' என்றார். அப்படியானால் அது மகத்தான மாற்றம்தான்.

அகிலன் சொன்ன அனுபவங்கள் எல்லாம், அவனுடைய பெற்றோருக்கு 40 சதவிகிதம்தான் புரிந்தது. அதற்கே அகிலனும் வினோதினியும் பல முறை விளக்க வேண்டியிருந்தது.

உலகமே நோவா பற்றி பரபரத்துக்கிடந்தது.

அகிலனிடம் நோவா அனுபவத்தை எழுதும்படி கேட்டிருந்தது ஆனந்தவிகடன். அகிலன் என்ற பெயரில் தமிழில் வேறு ஒரு எழுத்தாளர் இருந்ததால், வேறு பெயரில் எழுதினால் நன்றாக இருக்கும் என்று பேசியிருந்தனர்.

ழீன் தந்த தமிழ் ஆர்வம் அவனை உற்சாகப்படுத்தியது. 'தமிழ்மகன்’ என்ற பெயரில் எழுதலாமா என்று யோசித்தான்!

- ஆபரேஷன் சக்சஸ்