மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 4

பாரதி தம்பி, படம்: சி.சுரேஷ்பாபு

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 4

னியார் கல்வி என்பது, மிகச் சமீப காலத்தைச் சேர்ந்தது. 1985-ம் ஆண்டுக்கு முன்பு வரை பெரும்பாலும் அரசுப் பள்ளிகள்தான். அரசு உதவிபெறும் சில தனியார் பள்ளிகள் இருந்தன. எனினும், அவற்றின் கட்டணம் கட்டுப்படியாகக் கூடியதாக இருந்தது. நமது முந்தைய தலைமுறையினர் இந்த அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான். பள்ளி மட்டுமல்ல... உயர் கல்வி வரையிலும் அரசுக் கல்லூரிகளில்தான் பயின்றார்கள். பல்வேறு வர்க்கத்தைச் சேர்ந்த, பல்வேறு சாதிகளைச் சேர்ந்த, வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து வந்த எல்லோரும், ஒன்றாக இணைந்து புழங்கிய அந்த ஆரோக்கியமான வகுப்பறை, அவர்களுக்கு படிப்புடன் சேர்த்து, சகிப்புத்தன்மையை, மற்றவர்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை, இந்த உலகின் பன்முகத்தன்மையை, சேர்ந்து இயங்குவதன் மகிழ்ச்சியை... என நிறையக் கற்றுத்தந்தது. அதனால்தான், இப்போதும் நமது மூத்தத் தலைமுறைக்குப் பழைய பள்ளி - கல்லூரி நினைவுகள் இனிமை நிரம்பியதாக, எண்ணிப் பார்க்கும்போது ஏக்கம் தருவதாக இருக்கின்றன.

'40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே வகுப்பில் படித்த கல்லூரி மாணவர்கள் ஒன்றாகச் சந்தித்தோம்’ என்று பலர் ஃபேஸ்புக்கில் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. இது இந்தத் தலைமுறைக்குப் பொருந்துவது சந்தேகமே. தகவல்தொடர்பு முன்பைவிட மேம்பட்டிருக்கலாம். ஆனால், காலம் கடந்தும் நட்பின் சாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை, இன்றைய வகுப்பறையில் இல்லை. இன்று 30 வயதுகளில் உள்ளோர், 10 வருடங்களுக்கு முன்பு, கல்லூரியில் படித்த தங்கள் செட் மாணவர்களை ஒன்றிணைக்க நினைத்தால், அது சவாலானதாக இருக்கும். 'ஒன்றிணைய வேண்டும்’ என்ற எண்ணம் மனதளவில் உருவாவதுதான் முதல் சவால். காரணம், இன்றைய வகுப்பறை, மாணவர்களை உதிரிகளாகப் பிரித்துவைக்கிறது. நண்பர்களாக இருக்க வேண்டியவர்களைப் போட்டியாளர்களாக மாற்றுகிறது. ஒருவரை வீழ்த்துவதில்தான் மற்றவரின் முன்னேற்றம் இருப்பதாக, ஆரம்பம் முதலே போதிக்கிறது. இதற்குக் காரணம் தனிப்பட்ட ஆசிரியர்களோ, பள்ளிக்கூடங்களோ அல்ல. தனியார் கல்வியின் அடிப்படைப் பண்பே இதுதான். போட்டியை உருவாக்கி, ஊதி உருப்பெருக்கி, உருவாகும் சூழ்ச்சியில்தான் அது உயிர் வாழ்கிறதே தவிர, அதன் சாமர்த்தியத்தால் அல்ல.

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 4

1986-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 'புதிய கல்விக் கொள்கை’யைக் கொண்டுவந்தார். அதுவரை நடப்பில் இருந்த பொதுக் கல்வி முறைக்குச் சவக்குழி தோண்டிய அந்தக் கொள்கை, மேல்தட்டு வர்க்கத்தினருக்கான 'நவோதயா’, 'வித்யாலயா’ பள்ளிகளை உருவாக்க வகை செய்ததுடன் தனியார் பள்ளிகளை வெளிப்படையாக ஊக்குவித்தது.

இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர்., தனியார் பள்ளிகளுக்குத் தாராள அனுமதியை வாரி வழங்கினார். அரசியலில் செல்வாக்கு மிகுந்தோர், பண்ணையார்தனம் உருவாக்கிய சமூக சங்கடத்தில் இருந்து விடுபட விரும்பியோர், பாரம்பரிய முதலாளிகள் போன்றோர் தனியார் கல்வி நிறுவனங்களை நிறுவினார்கள். ஒரே நேரத்தில் பணமும் கிடைத்து; 'கல்வி வள்ளல்’ என்ற பெயரும் எடுத்தனர்.

தனது பங்களிப்போ, நிதியளிப்போ இல்லாமல் தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்குவதை எம்.ஜி.ஆர். அரசும், அதன் பின் வந்த அனைத்து அரசுகளும் ஆதரித்தன. அரசியல்வாதிகளுடன் கூட்டுப்பேரம் நடத்திய அரசு அதிகாரிகள், இந்தக் கல்விக் கொள்ளை தடையின்றி தொடர்வதைச் சாத்தியப்படுத்தினார்கள். இதனால் மளமளவென மாநிலத்தின் மூலைமுடுக்குகள் எல்லாம் கான்வென்ட்கள் முளைத்தன. அவை ஆங்கில வழியில் கல்வி கற்பித்ததால், பெற்றோரது மோகம் அதை நோக்கித் திரும்பியது. சின்னச் சின்னக் கிராமங்களில் இருந்தும்கூட, அருகில் நகரங்களில் இருக்கும் தனியார் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்ப ஆரம்பித்தார்கள்.

1991-ல் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் புதிய தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இது கல்வி, சுகாதாரம், உணவு, மருத்துவம் போன்ற மக்களுக்கான அடிப்படைக் கடமைகளில், அரசு தன் பங்கை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.

1990-ல் தாய்லாந்தில் நடைபெற்ற உலக வங்கி மாநாட்டில் இதை ஒரு கொள்கையாக வெளிப்படையாகவே அறிவித்தனர். இதற்கு 'ஜோம்தியன் பிரகடனம்’ என்று பெயர். 'அரசாங்கம் விலகிக்கொள்ள வேண்டும் என்று எப்படிச் சொல்ல இயலும்?’ என்று சிலர் எண்ணக்கூடும். இதற்கு அவர்கள் சொன்ன விளக்கம், 'சந்தைப் போட்டியில் பங்கேற்று, கல்வியை விலைகொடுத்து வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் சக்தியை வளர்த்தெடுக்க வேண்டும்’ என்றார்கள். மக்களின் பொருளாதாரத் திறனை மேம்படுத்தும் நல்ல நோக்கம் கொண்டவர்களைப்போல பேசினாலும் அவர்களின் மெய்யான இலக்கு வேறு.

ஒரு நாட்டு மக்களின் அதிகப்பட்ச நுகர்வு... கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளை ஒட்டியே உள்ளது. அவற்றை அரசே இலவசமாகவோ மானியத்துடனோ வழங்கினால், பிறகு தனியாருக்கு என்ன வேலை? எனவேதான் அரசின் பங்கைக் குறைக்க வேண்டும் என்றார்கள். இதை இந்தியா ஏற்றுக்கொண்ட நிலையில், பல்வேறு வகைகளில் தன் பொறுப்பில் இருந்து பின்வாங்கத் தொடங்கியது.

உதாரணத்துக்கு 1989-90 காலகட்டத்தில் முதன்முறையாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை 1997-98ல் 3.49 சதவிகிதமாகக் குறைந்தது. தொடர்ந்து குறைவாகவேதான் ஒதுக்கப்படுகிறது. கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி குறையும்போது, அரசுப் பள்ளிகளின் தரம் தன்னியல்பாகப் பின்னுக்குப் போகும். அந்த இடத்தைத் தனியார் பள்ளிகள் நிரப்பும். கடந்த 20 ஆண்டுகளாக நாட்டில் அதிகரித்துள்ள தனியார் கல்வி நிலையங்களின் எண்ணிக்கையும், சீரழிந்துள்ள மற்றும் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளுமே இதற்கு சாட்சிகள். அதாவது அரசு, தன் சொந்தப் பிள்ளையை இரக்கம் இன்றி பட்டினியில் சாகவிட்டு, அந்த உணவை எடுத்து ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்க்கிறது.

இதில் இன்னோர் அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 1990-களுக்கு முன்பு அரசின் சேவைகள் அனைத்தும் 'அனைவருக்கும் கல்வி’, 'அனைவருக்கும் உணவு’, 'அனைவருக்கும் மருத்துவம்’ என்று இருந்தன. புதிய தாராளமயக் கொள்கை, அனைவருக்கும் என்பதை ஒழித்துக்கட்டியது. அதற்குப் பதிலாக 'இலக்கு நோக்கிய மக்களுக்கானதாக’ (Targeted people) திட்டங்களைச் சுருக்கியது. இதனால் ரேஷன் கார்டு இருந்த எல்லோரும் அரிசி, சர்க்கரை வாங்கலாம் என்பது மாறி, 'வறுமைக்கோட்டுக்கு மேல்/கீழ்’ என தரம்/நிறம் பிரித்து குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. 'இதில் என்ன தவறு இருக்கிறது? வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத்தானே இத்தகைய மானியங்கள் தேவைப்படுகின்றன?’ என்று தோன்றலாம். ஆனால், அந்த வறுமைக்கோட்டை வரையறுக்க நம் அரசு வைத்திருக்கும் அளவுகோல் என்ன? 'ஒரு நாளைக்கு 28 ரூபாய் வரை சம்பாதிப்பவர் தான் ஏழை’ என்கிறது இந்தியத் திட்டக் கமிஷன். இதன்படி பார்த்தால் இந்தியாவில் தினசரி 29 ரூபாய் சம்பாதிக்கும் யாரும் ஏழை அல்ல. அவர்கள் 'இலக்கு நோக்கிய’ மக்கள் பிரிவில் வர மாட்டார்கள். இப்படி 'நூதன முறையில்’ ஏழைகளைக் குறைத்துக்காட்டி பொய்க் கணக்கு எழுதும் இதே வேலைதான் கல்வியிலும் நடக்கிறது.

'அனைவருக்கும் ஆரம்பக் கல்வி’ என்பது இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஒலித்து வரும் முழக்கம். 1991-களுக்குப் பிறகு இது 'எழுத்தறிவுத் திட்டம்’ என்றானது. 15 முதல் 35 வயதுள்ளோருக்குக் கையெழுத்துப் போடக் கற்றுத்தருவதும், பொருள்களின் மீதுள்ள விலையைப் படிக்க மற்றும் பேருந்து எண்களை வாசிக்கச் சொல்லித் தருவதும்தான் இந்த எழுத்தறிவுத் திட்டம். கல்வி என்பது இத்தனை தட்டையான, சுருங்கிய வரையறையைக் கொண்டதா? மனிதனின் அறிவு உணர்ச்சி, அழகு உணர்ச்சி, அற உணர்ச்சி... என அனைத்தையும் செம்மைப்படுத்துவதுதான் கல்வி. அப்படிப்பட்ட முறையான கல்வியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முறைசாராக் கல்வியை முதன்மைப் படுத்தியதும்கூட புதிய தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதிதான்.

2009-ல் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டம், 6 முதல் 14 வயது வரையில் கல்வி பெறுவதைக் கட்டாயம் ஆக்கியுள்ளது. அதாவது கல்வி பெறும் உரிமையை 'இலக்கு நோக்கியதாக’க் குறுக்கியுள்ளது. இதன்படி 0-6 வயது வரையில் கல்வி தருவது அரசின் கடமை அல்ல. அதேபோல, 14 வயதுக்கு மேல் கல்வி தருவதும் அரசின் கடமை அல்ல. அது மக்களின் சொந்தப் பொறுப்பு என்றாகிவிடுகிறது. மேலும், கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும், தங்களிடம் உள்ள மொத்தக் கல்வி இடங்களில் 25 சதவிகிதத்தை வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை, எளியோருக்கு ஒதுக்க வேண்டும் என்று 'இலக்கு’ நிர்ணயிக்கிறது. இதன் மூலம் மீதம் உள்ள 75 சதவிகித இடங்களை இஷ்டம்போல நிரப்பிக்கொள்ளும் உரிமையை உத்தரவாதப் படுத்துகிறது.

இப்படி... எவை எல்லாம் ஒரு மக்கள் நல அரசின் கடமைகளாக இருந்தனவோ, அவை கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொன்றாகத் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளன. 'அரசுத் துறை என்றால் மோசம். அங்கு எதுவும் தரமாக கிடைக்காது’, 'காசு கொடுத்தாலும் பிரைவேட்காரன் பரவாயில்லை’ ஆகிய இரண்டு கருத்துகளும் சம காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளன. தனியார்மயத்தை ஏற்றுக்கொள்வதற்கு மக்களைக் கொஞ்சம், கொஞ்சமாகப் பயிற்றுவித்துள்ளனர். ஆகவேதான் தனியார் கல்வி என்பதை மிகவும் இயல்பாக, ஏற்கெனவே பழக்கப்பட்ட ஒன்றின் இன்னொரு வடிவம்போல மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும் தனியார்மயத்தின் லாப வெறிக்கு எல்லை இல்லை. அது கால மாற்றத்துக்கு ஏற்ப புதிய வடிவங்களைச் சூடிக்கொள்கிறது. அதன் நவீன வடிவம்தான், 'அரசு-தனியார்-கூட்டு’ (PPP-Public Private Partnership). எஞ்சி இருக்கும் அரசுப் பள்ளிகளையும் கபளீகரம் செய்ய வந்திருக்கும் இந்தப் புதிய திட்டம், அரசுப் பள்ளிகளின் கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது.

2013-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான வருடாந்திரக் கல்வி அறிக்கை (ASER) முடிவுகள், கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டன. அதன்படி, தேசிய அளவில் 2013-ம் ஆண்டில் 6 முதல் 14 வயது வரையில் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களில் 29 சதவிகிதம் பேர் தனியார் பள்ளிகளிலேயே சேர்க்கப்பட்டுள்ளனர். 2006-ல் இந்த எண்ணிக்கை 18.7 சதவிகிதமாக இருந்தது. மாநிலவாரியாகக் கணக்கிட்டால் மணிப்பூரில் 70 சதவிகிதம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கேரளா 68.6%, புதுச்சேரி 54.3%, ஹரியானா 51.4%, உத்தரப்பிரதேசம் 49%, பஞ்சாப் 46.7%, ஜம்மு-காஷ்மீர் 45.5%... என்ற பட்டியலில் தமிழ்நாடு 26.8%.

பள்ளிகள் விற்பனைக்கு!

தனியார் பள்ளிகளின் பெருக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பக்கம் அவர்களால் முதலீட்டுக்கு ஏற்ற வருமானத்தை ஈட்ட முடியவில்லை. இதனால் பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ''கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் 110 சிறு மற்றும் நடுத்தர அளவிலான தனியார் மெட்ரிக் பள்ளிகள் முழு  செட்-அப்புடன் விற்பனை செய்ய முன்வந்துள்ளன. செஞ்சி அருகே 17 ஏக்கரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று, 17 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஈரோடு அருகே 1,000 மாணவர்களுடன் செயல்படும் மேல்நிலைப்பள்ளி, பொறியியல், மருத்துவம் மற்றும் நர்சிங் கல்லூரிகளுடன் இயங்கிவரும் கல்வி நிலையம் மொத்தமாக 650 கோடி ரூபாய்க்கு ஒரே பேக்கேஜாக விற்பனைக்கு வந்துள்ளது. திருவண்ணாமலையில் 5,வேலூரில் 8, திருவள்ளூரில் 10, தருமபுரியில் 4, கிருஷ்ணகிரியில் 5, மதுரையில் 8, ஈரோட்டில் 6, ஊட்டியில் 4, நெல்லையில் 9, கன்னியாகுமரியில் 7, தேனியில் 4, திண்டுக்கல்லில் 3, கரூரில் 2, கள்ளக்குறிச்சியில் 1, சேலத்தில் 2 என மொத்தம் 78 பள்ளிகள் விற்பனைக்குத் தயார் நிலையில் இருக்கின்றன'' என்கிறார் தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் நந்தகுமார்.

- பாடம் படிப்போம்...