வாசகிகள் பக்கம், ஓவியங்கள்: சேகர்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200

இதோ ஒரு சூப்பர் ஐடியா!
சமீபத்தில் என் குடும்பத்தினருடன் ஒரு ஹோட்டலுக்குச் சென்றேன். சாப்பிட்ட பிறகு, என் கணவர் சர்வரிடம் பணம் நீட்டியபோது, அவர் பணிவுடன் ''டேபிளில் உள்ள டிப்ஸ் பாக்ஸில் போட்டுவிடுங்கள்'' என்றார். கேஷியரிடம் இதுபற்றி கேட்டபோது, ''டிப்ஸ் அதிகமாகத் தருவோரை விழுந்து விழுந்து கவனிப்பது; குறைவாகத் தருபவர்களை சரியாகக் கவனிக்காதது போன்ற குளறுபடிகள் வந்துவிடக் கூடாதுனுதான் இப்படி! மேலும் ஒரு சர்வருக்கு டிப்ஸ் அதிகமா கிடைக்கும்... ஒருவருக்குக் குறைவாகக் கிடைக்கும். இதனால் மனவருத்தம் ஏற்படும். இப்படி டிப்ஸ் பாக்ஸில் போடப்படும் பணத்தை டேபிள் துடைப்போர் உட்பட அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டுத் தந்துவிட முடிகிறது. இதனால் எல்லோரும் கனிவுடன், உற்சாகமாக பணிபுரிகிறார்கள்'' என்றார்.
இது சூப்பர் ஐடியாதானே!
- அமுதா அசோக்ராஜா, திருச்சி
'ஓல்டு’ உறவை ஓரங்கட்டுவது நியாயமா?!
திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. இரு வீட்டாரும் தங்கள் வசதியைப் பறைசாற்றும் விதமாக தடபுடலான விஷயங்களை அரங்கேற்றினர்.

வந்திருந்த அனைவரையும் மணமக்களுடன் நிற்க வைத்து போட்டோ எடுத்தனர். மணப்பெண்ணின் வயதான பாட்டி, ஒரு ஓரத்தில் ஏதோ ஒப்புக்காக உட்கார வைக்கப்பட்டிருந்தார். அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. 'சாப்பிட்டீர்களா?’ என்று கேட்க அவருடைய மகனுக்கோ, மருமகளுக்கோ தோன்றவில்லை. இருப்பினும், பாட்டி தன் புரையேறிய கண்ணால் அனைத்தையும் ஆனந்தத்துடன் ரசித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். 'பேத்தியுடன் நம்மையும் சேர்த்து அமரச் செய்து ஒரு போட்டோ எடுக்க மாட்டார்களா’ என்று விழியின் ஓரத்தில் தோன்றிய ஏக்கத்தை வெளிப்படுத்த முடியாமல் அமர்ந்திருந்த விதம் என்னை மிகவும் வருந்தச் செய்தது.
பேத்தி பிறந்தது முதல் பாராட்டி, சீராட்டி, அமுதூட்டி வளர்த்து, படிக்கும் காலத்தில் நடை, உடை, பாவனையை ரசித்து மகிழ்ந்த கண் அல்லவா அது! அழையா விருந்தாளிபோல், ஓர் ஓரத்தில் மௌனமே வடிவாய் அமர்ந்து, உள்ளத்தளவில் ஆசீர்வதித்த அந்த ஜீவனும் ஒரு மனிதப் பிறவிதான் என்பதை இருவீட்டாரும் உணரவில்லையே!
'சொத்து இருந்தால் போதும்... சொந்தம்கூட சுமைதான்’ என்று எண்ணும் இந்த மானுட சிந்தனை எப்போது மாறுமோ..?!
- சாய்தாஸன், ஈரோடு

'நோட்’ பண்ணா, ஹேப்பி ஜர்னி!
தருமபுரி செல்வதற்காக எங்கள் ஊர் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தேன். நடுத்தர வயது பெண் ஒருவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். அவர் கையில் ஒரு சிறிய நோட்டு வைத்திருந்தார். பஸ்கள் வருவதும் போவதுமாக இருந்தன. அவ்வப்போது அவரும் அந்த நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டார்.
எனக்கு ஆவல் தாங்க முடியவில்லை. ''நோட்டில் என்ன எழுதுகிறீர்கள்?'' என்று கேட்டேன். அவர் கூறிய பதில்... ''நான் எந்த பஸ் நிலையத்துக்குச் சென்றாலும், நம்முடைய ஊர் வழியாக செல்லும் பஸ்ஸின் பெயர், நேரம், செல்லும் ஊர்களின் விவரங்கள் ஆகியவற்றை குறித்து வைத்துக்கொள்வேன். எந்த ஊருக்கு செல்ல வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டாலும், இந்த நோட்டை வைத்து பஸ் தொடர்பான விவரங்களை பிறர் உதவி இல்லாமல் தெரிந்துகொள்ள முடிகிறது. அதனால், பயணம் சுலபமாகிவிடுகிறது'' என்றார்.
இப்போது நானும் ஒரு சின்ன நோட்டு வாங்கிவிட்டேன். அப்ப நீங்க?
ஜெயலட்சுமி வசந்தராசன், கிருஷ்ணகிரி