மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

வாசகிகள்  பக்கம்ஓவியங்கள்: சேகர்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

 200

அனுபவங்கள் பேசுகின்றன!

'பூச்சாண்டி’ காட்டாதீர்!

உறவினர் வீட்டுக்கு என் அண்ணியுடன் சென்றிருந்தேன். அவர்கள் வீட்டில் 3, 5 வயதில் இரண்டு குழந்தைகள். அவர்களின் தாய் சாப்பாடு ஊட்டும்போது, குழந்தைகள் உண்ணாமல் அடம்பிடித்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளின் பாட்டி, நர்ஸாக வேலை பார்க்கும் என் அண்ணியைக் காட்டி, ''இதோ பாருங்க... இவங்க நர்ஸ். நீங்க சரியா சாப்பிடலேனா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் ஊசி குத்துவாங்க. செமையா வலிக்கும்'' என்று பயமுறுத்தினார். குழந்தைகள் அண்ணியைப் பார்த்து பயந்தபடியே உண்ண ஆரம்பித்தார்கள். அண்ணிக்கு, இது தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.

பிறகு பாட்டியிடம் ''குழந்தைக்கு சோறு ஊட்டும்போது 'பிள்ளை பிடிக்கிறவன் வருவான், நர்ஸ் ஊசி போடுவார்’ என்றெல்லாம் பயம்காட்டி ஊட்டுவதைவிட, நல்ல கதைகளைக் கூறி ஊட்டுங்கள். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள்'' என்று கூறினோம். இதை உணர்ந்து கொண்ட பாட்டியும், 'இனி இதைப் பின்பற்றுகிறேன்’ என்றார்.

சாப்பிட வைப்பதற்காக 'பூச்சாண்டி’ காட்டி... பிஞ்சுகளின் நெஞ்சில், பய நஞ்சை விதைத்துவிடாதீர்கள் !

- இந்திராணி, சென்னை-31

அனுபவங்கள் பேசுகின்றன!

நாள், நட்சத்திரம்... யதார்த்தம்!

என் தோழியின் அண்ணனுக்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலை கிடைத்தது. ''இன்று செவ்வாய்க்கிழமை, நாளை புதன்கிழமை... அதனால நாளைக்கே வேலைக்குக் கிளம்பு'' என்று அவருடைய தாயார் தடுத்துவிட்டார். அடுத்த நாள் காலையில் நாள், நட்சத்திரம், சகுனம் பார்த்து அவர் கிளம்புவதற்குள் ஒன்பது மணியாகிவிட்டது. 'முதல் நாளே தாமதமாக போனால் சரியா இருக்காது’ என்று வேகமாகச் சென்று, சாலையின் குறுக்குக் கட்டை (மீடியன்) மீது மோதி, காலில் நல்ல அடி. மூன்று, நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாயிற்று. அந்த தனியார் கம்பெனியும் வேறு ஒருவரை வேலையில் சேர்த்துக்கொண்டு விட்டது. என் தோழியின் அண்ணன் மீண்டும் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்.

இது, எங்களுக்கெல்லாம் 'நம்பிக்கையும், சகுனமும் ஓர் அளவுக்கு மேல் பார்க்கக் கூடாது’ என்கிற யதார்த்தத்தை புரிய வைத்த நிகழ்வாகிவிட்டது!

- எம்.ஏ.நிவேதா, திருச்சி

அனுபவங்கள் பேசுகின்றன!

பேப்பர்ஸும் பத்திரம்!

எங்கள் நண்பர் விடுமுறைக்கு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். போகும்போது நகை, வெள்ளிப் பாத்திரங்கள், பணம், மடிக்கணினி போன்றவற்றை வங்கி லாக்கர் மற்றும் உறவினர்களிடம் கொடுத்துச் சென்றார். 'எல்லாவற்றையும்தான் பத்திரப்படுத்திவிட்டோமே’ என்று வீட்டின் பாதுகாப்புக்கு எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை. வீட்டில் ஆள் இல்லை என்பதை எப்படியோ கண்டுபிடித்த திருடர்கள், இரவில் பூட்டை உடைத்து வீட்டினுள் நுழைந்துவிட்டனர். விலையுயர்ந்த பொருள் எதுவும் இல்லாததால், ஆத்திரமடைந்து பீரோவினுள் இருந்த பாஸ்போர்ட், ரேஷன்கார்டு, பேங்க் பாஸ் புத்தகங்கள், எல்.ஐ.சி. சம்பந்தப்பட்ட பேப்பர்கள், வீட்டுவரி, குடிநீர்வரி கட்டிய ரசீதுகள் ஆகியவற்றைச் சுக்குநூறாக கிழித்து வீடு முழுவதும் போட்டுச் சென்றுவிட்டனர். திரும்பி வந்த நண்பர் குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது.

வெளியூர் செல்பவர்களே... நீங்கள் கிளம்பும்போது பணம், நகை மட்டுமல்லாது... முக்கியமான பேப்பர்களையும் மிகவும் பத்திரப்படுத்திவிட்டுச் செல்லுங்கள். இல்லாவிட்டால்... அவற்றைப்  புதுப்பிக்க படாதபாடு படவேண்டியிருக்கும்.

- எஸ்.அன்னபூரணி, போரூர்