க்வில்லிங் ஜூவல்லரி செய்யலாம் வாங்க!வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்
''மக்களின் ரசனையோட இணைந்து பயணிக்கிற தொழிலைக் கையில் எடுத்தோம்னா, லாபம் பையில் விழும்!''
- சுவாரஸ்யமாக ஆரம்பித்தார், சென்னை அருகே உள்ள மீஞ்சூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி.
''கல்லூரியில் படிக்கும்போதே கிராஃப்ட் மீது ஆர்வம். திருமணத்துக்குப் பிறகு என் கணவர் ஷியாம்சுந்தர் என் முயற்சிக்கு தோள் கொடுத்தார். சென்னையில் நடந்த மகளிர் சுயஉதவிக்குழு பயிற்சிக்குப் போனேன். அங்க பேப்பர்ல பொம்மைகள் செய்து காண்பிச்சாங்க. பொம்மைகளைக் குழந்தைகள் மட்டும்தான் விரும்புவாங்க. இதையே பெண்கள் அணியக்கூடிய காதணிகளா செய்து கொடுத்தா நல்ல வரவேற்பு இருக்கும்னு யோசிச்சேன். இந்த க்வில்லிங் ஜுவல்லரி பிசினஸைக் கையில் எடுத்தேன். கடையில் பல பீஸ்கள் க்வில்லிங் ஜுவல்லரி வாங்கி, அதோட விலை, டிசைன் எல்லாம் பார்த்துக்கிட்டேன்.

ஆரம்பத்துல விற்பனை சுமாராதான் இருந்துச்சு. ஏன்னா, நாலு வருஷத்துக்கு முன்ன இதுக்கான வரவேற்பு அவ்வளவா இல்ல. தொடர்ந்த வருஷங்கள்ல இந்த பேப்பர் ஜுவல்ஸ் ஃபேஷனாக... தொழிலும் பிக்-அப் ஆச்சு. என்னோட தங்கை விஜி, ஐ.டி கம் பெனியில வேலை பார்க்கிறாங்க. அவங்க இதை ஆபீஸுக்குப் போட்டுட்டுப் போனப்போ, அதைப் பார்த்து நிறைய பேர் ஆர்டர் பண்ணி னாங்க. இப்படித்தான் என் குடும்ப உறுப்பினர்களுக்கு நான் சில பீஸ்களை கிஃப்ட் பண்ண, அதைப் பார்த்தே பலரும் ஆர்டர் கொடுத்தாங்க. தவிர, ஃபேன்ஸி ஸ்டோர், காலேஜ் ஹாஸ்டல்னு வரவேற்புள்ள இடங்களைக் குறிவெச்சோம்னா, சுலபமா வித்துடலாம்.
'பேப்பர்ல எப்படி ஜுவல்லரி செஞ்சுப் போட்டுக்கிறது? தண்ணி பட்டா வேஸ்டா போயிடுமே? எத்தனை நாளைக்கு இது பாதுகாப்பா இருக்கும்?’ - இப்படி பலதரப்பட்ட கேள்விகளும் இன்னிக்கு காணாமப் போற அளவுக்கு, நகைகளை தரமானதாவும், கவனத்தோடும் செய்து விற்பனை செய்றதுதான் என் தொழிலோட வெற்றிக்குக் கார ணம்'' என்ற ராஜேஸ்வரி, க்வில்லிங் ஜிமிக்கி செய்துகாட்டத் தயாரானார்.
தேவையான பொருட்கள்:
க்வில்லிங் பேப்பர் - தேவையான நிறங்களில், கட்டர், பிளேயர், பிரஷ், கத்தரிக்கோல், ஃபெவிக்கால், நீடில், வெள்ளை நிற பாசிகள், கப் - 1, ஜுவல்லரி ஸ்ட்ரெயிட் ஜம்ப் ரிங் - 2, ஸ்டெட் ஹூக் - 2 மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட் கோட்டிங் (ஃபேஷன் ஜுவல்லரி ஸ்டோர்களில் கிடைக்கும்).
செய்முறை:
படம் 1, 1a: மஞ்சள், ஊதா மற்றும் பிங்க் என மூன்று க்வில்லிங் பேப்பர்களை எடுத்து, ஒன்றன் பின் ஒன்றாக மூன்றையும் இணைத்து, சிறிது நேரம் காயவைக்கவும். இதை நீடிலை வைத்து இறுக்கமாகச் சுருட்டவும். இறுதியில் க்ளூ கொண்டு ஒட்டி முடிக்கவும். விரலைக் கொண்டு மேல் பக்கமாக, நிதானமாகத் தூக்கினால், மெஹந்தி கோன் போன்ற வடிவம் கிடைக்கும். அகலம், நீளம் எவ்வளவு தேவையோ விரல்கொண்டு சரிசெய்துகொள்ளலாம்.
படம் 2: ஒரு கப்பில் கொஞ்சம் ஃபெவிக்கால் விட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி எடுக்கவும். இந்த ஃபெவிக்கால் கலவையை பிரஷ் கொண்டு தயாராக உள்ள க்வில்லிங் சுருள் மீது தடவவும் (இதனால் க்வில்லிங் பேப்பர் இடைவெளி இல்லாமல் நன்றாக ஒட்டிக்கொள்ளும்). இதை நன்றாகக் காய வைக்கவும்.

படம் 3: காய்ந்த பிறகு, ஜுவல்லரி ஸ்ட்ரெயிட் ஜம்ப் ரிங்கை க்வில்லிங் சுருளுக்குள் செருகவும்.
படம் 4, 4a: செருகப்பட்ட ஜுவல்லரி ஸ்ட்ரெயிட் ஜம்ப் ரிங்கினுள் மணியைக் கோக்கவும். ஹூக் மாட்டுவதற்கு ஏதுவாக கம்பியை கொஞ்சம் போல விட்டு, மீதியை வெட்டவும். மணிக்கு மேலிருக்கும் கம்பியை வளைத்துக் கொள்ளவும்.
படம் 5: வளைத்த பாகத்தில் ஹூக்கை மாட்டி பிளேயர் கொண்டு அழுத்திக் கொள்ளவும்.
படம் 6, 6a: காதணியின் கீழ்ப்பகுதியைச் சுற்றி ஃபெவிக்கால் தடவவும். பின்பு அதன் மீது மணிகளை நம் விருப்பத்துக்கு ஏற்ற வரிசையில் ஒட்டி முடிக்கவும்.
படம் 7: இதேபோல காதணியின் நடுப்பகுதியிலும் ஆங்காங்கே மணிகளை ஒட்டவும்.
செய்து முடித்து நிமிர்ந்த ராஜேஸ்வரி, ''இந்த ஜுவல்லரியை செய்த பின், வாட்டர் ரெசிஸ்டென்ட் கோட்டிங் அடிச்சுட்டா, மழையில் நனைஞ்சாலும் நிறம் போகாது. இப்போ இருக்கிற பெண்கள் ஹெவி வெயிட் காதணிகளைப் போடுறதால, காதுல துளை பெருசாகிடுது. அவங்க எல்லாம் விசேஷங்கள் தவிர, கல்லூரி, அலுவலகம்னு சாதாரண நாட்கள்ல இந்த வெயிட்லெஸ் க்வில்லிங் காதணிகளை அணியலாம்!'' என்று டிப்ஸ் கொடுத்தார்!
கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...