மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 45

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலி, ஓவியம் : மணி

ஆணவம் வீணவம்!

##~##

முகில்களை
முண்டாசுகளாகவும்;

அருவிகளை
அங்கவஸ்திரங்களாகவும்;

அணிந்துகொண்டு ஆகாயம் அளாவி நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் - கமுகும்; கழையும்; தேக்கும்; தேயிலையும் விளைந்தாலும் -

அதன்

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 45

அடிவாரத்தில்தான் -

அறிவார்ந்த மக்கள் விளைந்திருக்கிறார்கள்; அது, அம் மண் விசேஷமா - மடி சுமந்த பெண் விசேஷமா என்பதெல்லாம் ஒரு பட்டிமன்றத் திற்கான தலைப்பு!

படவுலகிலும்; பத்திரிகை உலகிலும் பாதம் பதித்திருக்கும் - அவர்களில் ஒரு சிலரை அடியேன் அறிவேன்.

சிலர் அஞ்சா நெஞ்சர்; சிலர் கஞ்சா நெஞ்சர்; சிலர் கருமமே கண்ணாகித் துஞ்சா நெஞ்சர்!

இருப்பினும் இவர்களிடையே - காலத்தை விழுங்கி நிற்போர் இருவரே!

ஒருவர் பாரதிராஜா; மற்றொருவர் - இளையராஜா!

இளையராஜாவின் இதயத்திற்கு நெருக்கமான ஒருவரோடு சமீபத்தில் சம்பாஷிக்க நேர்ந்தது.

மலையடிவாரத்து மண்ணைச் சார்ந்தவர்தான்; பத்திரிகை உலகில் பணியாற்றுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே - அவர் மூலமே அறிந்த ஒரு தகவலை, அவரிடமே சொன்னேன்.

மதுரைக் கல்லூரியில் மாணவர் விழா. கண்ணதாசன் நடுவராக இருக்க, கவிதை படிக்கிறார்கள் மாணவர்கள்.

தான் எழுதிய கவிதை ஒன்றினை, ஒரு மாணவரிடம் கொடுத்து - அதை, அந்த மாணவர் எழுதிய கவிதையாக, மேடையில் படிக்கச் சொல்லுகிறார் கண்ணதாசன்.

அன்னணமே, அந்த மாணவரும் தன் சொந்தக் கவிதை எனச் சொல்லி - வாசித்து வாழ்த்துகள் வாங்குகிறார்!

இந்த நிகழ்வை நான் அந்தப் பத்திரிகை யாளரிடம் நினைவு கூர்கையில் -

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 45

அவர் அதிர்ந்தார்; அதற்குக் காரணம் அவர்தான் - கண்ணதாசன் கவிதையைத் தன் கவிதையாய்ப் படிக்க நேர்ந்த மாணவர்!

'வாலி சார்! எத்துணையோ வருஷங்களுக்கு முன்னால், நான் சொன்ன ஒரு சம்பவத்தை - இந்த எண்பது வயசுல, வரிவிடாமெ எப்படி உங்களால சொல்ல முடியுது? இந்த நினைவாற்றல் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?’

- நண்பர் கேட்டதற்கு, 'கடவுள் கடாட்சம்!’ என்று நான் சொன்ன பதிலை அவர் ஏற்கவில்லை.

'சார்! நான் கோயிலுக்குப் போவேன்; கடவுளைக் கும்பிட அல்ல; சிற்பங்களைப் பார்க்க! பார்த்துச் சிந்தை பறி கொடுத்து நிற்பேன். இவற்றைச் செதுக் கிய சிற்பிகளின் அன்றைய வாழ்வா தாரங்கள் என்னவாக இருந்திருக்கும் என்று எண்ணி நான் வருத்தமுறுவேன்; விழியில் ஈரம் கட்டும்! அவ்வளவுதான். எனக்கு என் அப்பன்; பாட்டன் - எவருமே கடவுளைக் கற்பிக்கவில்லை, சார்! நல்லவனா இரூன்னு மட்டும்தான் சொல்லித் தந்தாங்க!’ என்று தன் பக்கத்து நியாயத்தை எடுத்துரைத்த அவர், கூடவே ஒன்று சொன்னார்:

'உங்க வேர்வைதான், உங்க வெற்றிக்குக் காரணம்!’

ல வருடங்களாக என்னுடைய குடும்ப டாக்டராக இருப்பவர் -

திரு. R.V.சிவராமன் எம்.பி.பி.எஸ்.; மந்தைவெளியில் CLINIC ; 'MIDAS TOUCH’ என்பார்களே, அப்படி கைராசி; DIAGNOSIS மன்னன்!

தன் எதிர்காலம் கிரிக்கெட்தான் என்று எண்ணினார், கல்லூரி நாள்களில்; SOUTH ZONE PLAYER!

அவர் எண்ணியபடி அவருடைய SCOPE  அதில் இல்லை; அது STETHOSCOPE-ல் இருந்தது. அது குறித்து அவருக்கோர் ஏக்கம் உண்டு; நல்லவேளை அது அவருக்கு மட்டுமே!

'அவதார புருஷன்’ புத்தகமாக - 1996-ல் வெளிவந்தபோது - அதன் பின் அட்டையில் என்னைப் பற்றி திரு.ரா.கண்ணன் எழுதுகையில் - 'ஓர் ஓவியனாக முடியவில்லையே என்ற வருத்தம் - வாலிக்கு மட்டுமே இருக்கலாம்!’ என்று குறிப்பிட்டு இருந்தார், ஒரு கவிதையைப்போலே!

அதுபோல் திரு.சிவராமன் அவர்கள் ஒரு CRICKETER ஆகாத வருத்தம், அவருக்கு மட்டுமே இருக்கலாம்; IT'S A BLESSING IN DISGUISE FOR US!

எனக்குக் கொஞ்சம் SUGAR  இருந்தது. அதற்கு நிறைய FIBRE  உள்ள காய்கறிகளைச் சாப்பிடச் சொன்னார் சிவராமன்.

நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காயை நிறையத் தின்றேன். வெண்டைக்காய் மூளைக்கு நல்லது என்று வைத்திய சாஸ்திரம் விளம்புகிறதாம்; யாரோ சொல்லக் கேள்வி!

SUGAR என்றவுடன் -

ஒரு JOKE நினைவில் வருகின்றது; அது ஓர் அர்த்தமுள்ள அபாரமான உன்னத நகைச்சுவை!

அப்பல்லோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு என்னுடைய SUITE  ல் படுத்திருந்தபோது -

என் இனிய இளவல் திரு.வைரமுத்து என்னை நலம் விசாரிக்க வந்திருந்தார். அவ் அமயம் திரு.ஆரெம்வீயும் உடன் இருந்தார்.

'உங்களுக்கு சக்கரை உண்டா?’ என்று ஆரெம்வீ கேட்டார்; 'இல்லை’ என்றேன் நான்.

'சக்கரை எப்படி இருக்கும்? இவர்கிட்ட இருந்த எல்லா சக்கரையையுந்தான் - பாட்டுல கொட்டிட்டாரே!’

- இப்படி வைரமுத்து சொன்னதும், அவர் வலக்கரம் பற்றி முத்தமிட்டேன்.

ஒரு தேர்ந்த கவிஞனுக்குத்தான் இத்தகு CLASSIC JOKE-ஐ - அதுவும், INSTANTANEOUS - ஆக உதிர்க்க ஒண்ணும்!

'நினைவாற்றல்’ விஷயத்திற்கு மீண்டும் வருகிறேன்.

அனைத்தையும் தன்னுள் பதிவு செய்து வைத்திருக்கும் மூளையைப்- பொய்களாலும்; பொறாமைகளாலும்; வேற்றார் வாழ்வதைச் சகியாத வயிற்றெரிச்சல்களாலும் -

நான் நாசப்படுத்தியதில்லை. ஆகவேதான் - இன்னமும் என் மூளை இளமையாகவே இருக்கிறது!

1964.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 45

நான் தனி மரம். சாத்தப்பன் என்னும் தவசிப்பிள்ளை உண்டு, சமைத்துப் போட.

காலையில் பாட்டு; மாலையில் பாட்டுக்கான நோட்டு - என வாழ்க்கை நொடிக்கு நொடி ஏறுமுகத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

விஸ்வநாதன் - ராமமூர்த்தியுடனோ; கே.வி.மகாதேவனுடனோ -

பாட்டு எழுதிவிட்டு வீடு திரும்பினால், என் வருகையை எதிர்நோக்கி எவரேனும் உட்கார்ந்திருப்பர்!

'வாலியைப் போய்ப் பாருங்க - பாட்டெழுத!’ என்று எம்.ஜி.ஆர். ஏறத்தாழ தினம் ஒரு தயாரிப்பாளரை என் வீட்டுக்கு அனுப்பிவைத்த காலம் அது.

அன்னணம் எனைப் பார்க்க வந்த பெருமக்கள் -

திரு. ஏ.எஸ்.ஏ.சாமி;
திரு. லேனாச் செட்டியார்;
திரு. பி.ஆர்.பந்துலு;
திரு. யோகானந்த்;
திரு. ராமண்ணா;
திரு. கொட்டாரக்கரா;

- இப்படியிருக்கும் பட்டியல்!

இவர்கள் ஒரு  சீட்டி அடித்திருந்தால்கூட, அவர்கள் வீட்டு வாசலில் போய் நின்றி ருப்பேன்.

இருப்பினும், அவர்களை என் வீட்டிற்கு அனுப்பி எனக்கோர் IMPORTANCE -ஐ ஏற்படுத்திவைத்தார் எம்.ஜி.ஆர். அவர்கள்!

ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும் எட்டு படங்களுக்கு எல்லாப் பாடல்களும் எழுதலானேன்.

நல்லவேளை, தருக்கும் செருக்கும் ஏறித் தாறுமாறாகக் கெட்டிருக்க வேண்டிய என் மூளை -

இறையருளால் அதன் இயல்பு மாறாமல் இருந்தது.

நான், சர்வத்தையும் சினிமாவில் கற்றேனோ இல்லையோ -

கர்வத்தை மட்டும் கல்லாதுவிட்டேன்!

வ்வொரு முறையும் - வெற்றியும் விருதும் வந்து என் வாசற் கதவைத் தட்டும்போதெல்லாம்.

அகந்தை வசம் நான் ஆட்பட்டுவிடக் கூடாதென்று, என் புத்தி என்னை எச்சரிக்கும்!

'இன்றுபோல் நாளையும் இருக்கும் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை; நிரந்தரமின்மைதான், நிரந்தரமானது!

வாராது வந்த வாழ்வென்பது - கையேந்தி நிற்கும் கண்ணாடிப் பாத்திரம் அனையது.

ஆணவத்தில் ஆடினோமாயின், அவ் ஆடி அங்கையில் நிற்காமல் - ஆடி ஆடி...

நிலம் விழுந்து நூறு சுக்காகும்! வார்த்தை மாதிரிதான் வாழ்வும் -

கொட்டிவிட்டால் அள்ள முடியாது!’

- என்னுள் இருந்து எழும் இவ் எச்சரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு மமதையை முற்றும் விடுத்து, மனம் பக்குவப்பட்டுவிட்டது.

என் பிடர் நோக்கி - BRICKS OR BOUQUETS - இவற்றில் எது வீசப்பெறினும் என் மனம் கவல்வதோ களிப்பதோ இல்லை!

ரு பத்திரிகையில் ஒரு பட்டியல் பார்த்தேன்!

திரு. ஷங்கர் - 'ஜென்டில்மேன்’;
திரு. பவித்திரன் - 'வசந்தகாலப் பறவைகள்’;
திரு. விக்கிரமன் - 'புது வசந்தம்’;
திரு. கே.எஸ்.ரவிக்குமார் - 'புரியாத புதிர்’;
திரு. கதிர் - 'இதயம்’;
திரு. கௌதம் மேனன் - 'மின்னலே’;
திரு. ஏ.ஆர்.முருகதாஸ் - 'தீனா’;
திரு. விசு - 'மணல் கயிறு’;
திரு. வெங்கட்பிரபு -'சென்னை 28’;
திரு.கண்ணன் -'ஜெயங்கொண்டான்’;

- இதுபோல் இன்னும் சில இயக்குநர்களையும், அவர்கள் இயக்கிய முதல் படத்தையும் குறிப்பிட்டுவிட்டு -

'இந்த இயக்குநர்கள் இயக்கிய முதல் படங்களுக்கு - கவிஞர் வாலிதான் பாட்டு எழுதியிருக்கிறார்; கை ராசிக் கவிஞர்!’

- என்று எனக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறது அவ் ஏடு!

பணிவோடு என் புத்தி, இந்தப் பாராட்டை நிராகரித்துவிட்டது!

டங்களில் பாட்டெழுதுகின்ற புதிய தலைமுறைகளுக்கு என்னைப் பிடிக்கக் காரணம்-

அசூயை என்னும் நோய்வாய்ப்படாமல் ஆரோக்கியமாய் இருக்கின்ற என் மூளை!

நல்ல நிலையில் இருக்கும் மூளைக்கு நினைவாற்றல் இருப்பது வியப்பல்ல!

வந்த புதிதில் திரு.வைரமுத்து எனக்கு வழங்கிய விருது:

'வாலிக்கும் என் வருகையில்

வருத்தமில்லை!’

துரைக் கல்லூரியில் கண்ணதாசன் கவிதையைத் தன் கவிதையாய்ப் படித்த மாணவர் யாரெனச் சொல்லவில்லையே!

அவர்தான் -

'விகடன்’ குழுமத்தில் பணி யாற்றும் என் நெஞ்சுக்கினிய நேசர் -

திரு. பொன்ஸீ அவர்கள்!

- சுழலும்...