வாசகிகள் பக்கம், ஓவியங்கள்: சேகர்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200
குறுஞ்செய்தி களேபரம்!
ஒருநாள் இரவு சென்னையிலுள்ள என் மகளின் கைப்பேசிக்கு அமெரிக்காவிலிருக்கும் என் மகன் அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி அவளை பெரிதும் பதற்றமடைய வைத்தது. அந்தச் செய்தி... ரீச்டு ஆபீஸ் அட் 8.30. நோ யூரின் ஒன்லி பிளட் (Reached office@8.30. No urine only blood).

இதைப் படித்ததுமே அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, கடகடவென சிரித்திருக்கிறான். ''அக்கா! அது உனக்கான செய்தியில்லை. என் மனைவிக்கு அனுப்ப வேண்டியது, தவறுதலாக உனக்கு வந்துவிட்டது. பரிசோதனைக்காக எனது யூரினும், பிளட்டும் கொடுக்கச் சொல்லியிருந்தா... நான் வெறும் பிளட் மட்டும்தான் கொடுத்தேன் என்ற செய்தியைத்தான் அப்படி அனுப்பியிருந்தேன்'' என்று கூறினான். இதைக் கேட்டு என் மகளுக்கு சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.
குறுஞ்செய்தி அனுப்பும்போது, 'send’ ஆப்ஷனை அழுத்துவதற்கு முன்பாக... அனுப்பப்படும் செய்தி, யாருக்கு அனுப்புகிறோமோ அவர்களுடைய பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை ஒரு முறைக்கு இரு முறை செக் செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை இது நன்கு உணர்த்தியது.
- பி.தேவி, சென்னை-4

அசரவைத்த அட்ஜெஸ்ட்மென்ட்!
ஒருநாள் என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவள் என்னிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அவளின் மகனும், மருமகளும் டிபன் தயாரித்து கொண்டுவந்து கொடுத்தார்கள். 'வேறு என்ன வேண்டும்?’ என்று கேட்டுக் கேட்டு உபசரித்தார்கள். கலகலப்பாக பேசிவிட்டு, கிளம்பும் சமயம், ஆட்டோ ஏற்றிவிட வந்த என் தோழியிடம் ''என்னடி! உங்க வீட்டுல எப்பவும் மகன், மருமகள் சமையல்தானா?'' எனக் கேட்டேன். ''இல்லைப்பா... நான், என் கணவர், மகன், மருமகள் நாலு பேருமே வேலைக்குப் போறதால, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வோம். நான் சமையல் செஞ்சா, என் மருமகள் வேறு வேலை செய்வாள். அதுபோல் அவள் சமையல் செஞ்சா, நான் அவளை டிஸ்டர்டப் பண்ணமாட்டேன். மகனையோ, மருமகளையோ பார்க்க யாராவது வந்தால், அவங்களை பேசிக்கொண்டிருக்க விட்டு, நானும் கணவரும் உபசரிப்போம். 'ஈகோ’ மனப்பான்மைக்கு கொஞ்சம்கூட இடம்கொடுக்காததால, வாழ்க்கையை நல்லா ரசித்து அனுபவிக்கிறோம்'' என்றாள்.
'குடும்பத்தினரிடையே அட்ஜெஸ்ட்மென்ட் இருந்தால், தலைமுறை இடைவெளி தானாகவே காணாமல் போய்விடும்’ என்பதை உணர்த்திய தோழியை மனதார பாராட்டிவிட்டு வந்தேன்.
- எஸ்.நிர்மலா, பெரம்பூர்

நல்ல மனங்கள் வாழ்க!
சமீபத்தில் என் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவிட்டு புதுச்சேரியிலிருந்து எங்கள் காரில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். தஞ்சாவூர் நெருங்கும் சமயம், பேருந்து ஒன்று எங்கள் காரில் மோதிவிட்டு, நிற்காமலேயே போய்விட்டது. எனக்கும், கணவருக்கும் பலமான காயம் ஏற்பட்டு, வலியில் துடித்துக்கொண்டிருந்தபோது... அடுத்து வந்த ஒரு பஸ்ஸில் இருந்த பயணிகள் பஸ்ஸை நிறுத்தி, இறங்கி ஓடோடி வந்தனர். எங்களை காரிலிருந்து மீட்டு, நிழலில் அமரச் செய்து, தங்களால் ஆன உதவிகளைச் செய்ததுடன், பொருட்களைப் பத்திரமாக எடுத்து வைக்க என் மகளுக்கும் உதவினர். மேலும், '108’ ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வரவழைத்து, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
'தன் காரியமே பெரிது’ என்று நினைக்கும் இந்தக் காலத்தில், தங்கள் பயண நேரம் வீணாவதையும் பொருட்படுத்தாது, ஆபத்தில் உதவி செய்த அந்த அன்பு நெஞ்சங்களை நினைத்து நினைத்து பூரித்துப் போகிறேன். அந்த நல்ல உள்ளங்கள் நல்வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பின்குறிப்பு: அந்த நண்பர்கள் இதை வாசிக்க நேர்ந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட நன்றி நவிலலாக இதனை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
- எஸ்.ரத்தினாவதி பூவையா, திருநெல்வேலி