லாபத்தை அள்ளித்தரும் அலங்கார விளக்கு! வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்
''பெரிய பெரிய ஹோட்டல்களில் எல்லாம் சுவர்கள், டேபிள்களில் அழகழகான டிசைன்கள்ல விளக்குகள் வெச்சுருப்பாங்க. 'லேன்டன்' (Lantern) அப்படினு சொல்லப்படுற இதுமாதிரியான விளக்கெல்லாம், என்னை மாதிரி பலரோட கைவண்ணத்தில் உருவானதுதான்!'' என்று புன்னகைக்கிறார்... சென்னை, தாம்பரத்தில் உள்ள 'லோஹித் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ்’ உரிமையாளர், ஜெயசுபலஷ்மி.
''சொந்த ஊரு திண்டுக்கல். அப்பா ரங்கராஜன், கூடுதல் எஸ்.பி-யா இருந்தவர். ஸ்கூல்ல படிக்கும்போதே கிராஃப்ட்லயும் நிறைய ஆர்வம் வளர்ந்துச்சு. விளையாட்டுல அதிக கவனம் திரும்பினதால, அப்ப விளையாட்டு வீராங்கனையா உருவெடுத்தேன். பி.எஸ்சி., ஃபிஸிக்கல் எஜுகேஷன் முடிச்ச கையோட கல்யாணம் ஆகிடுச்சு. ஸ்போர்ட்ஸ் டீச்சர் வேலைக்குப் போகணும்ங் கிறதுதான் ஆசையா இருந்துச்சு. ஆனா, குடும்பப் பொறுப்புகளால முடியாம போயிடுச்சு. ஆனாலும், வீட்டில் இருந்தே செய்யறதுக்கு வசதியான கிராஃப்ட் தொழில் பக்கம் கவனத்தைத் திருப்பினேன்.

இந்த லேன்டன், என்னோட முக்கியமான பிசினஸ். இதோட சேர்த்து அக்ரலிக் பெயின்ட்டிங், குட்டீஸுக்கு க்வில்லிங் பேப்பர் டிசைன் கத்துக்கொடுக்கிறது, கோடைகால பயிற்சி வகுப்புகள்னு பிஸியோ... பிஸி'' என்ற ஜெயசுபலஷ்மி,
''இப்போவெல்லாம் விழா, விசேஷங்கள்ல அழகுக்காக பேப்பர் லேன்டன் பயன்படுத்தும் டிரெண்ட் அதிகமாயிட்டு வருது. பிரபல ஹோட்டல்களின் இன்டீரியரிலும் இந்த லேன்டனுக்கு இடம் கொடுத்துட்டு வர்றாங்க.
என் கணவர் ராஜேஷ்குமார், குழந்தைகள் லோஹித் குமார், ஷமிர்ஷா இவங்களுக்கு நான் தர வேண்டிய நேரத்திலும் குறை வைக்காம, எனக்கு வருமானத்தையும் நிறைவா கொடுக்கிற இந்த லேன்டனை, இப்போ உங்களுக்கு செய்ய கற்றுத்தர்றேன்!'' என்று தயாரானார் ஜெயசுபலஷ்மி.
தேவையான பொருட்கள்: தெர்மக்கோல் பிளேட் பெரியது - 1, ஹேண்ட்மேட் பேப்பர்- ஐந்து நிறங்களில் (பச்சை, மஞ்சள், மெஜந்தா, வயலட், ஆரஞ்சு - ஃபேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும்), ஏ4 ஷீட் - 1, ஸ்கேல், பென்சில், ஸ்டோன்ஸ், ஃபெவிக்கால், கத்தரிக்கோல், பல்ப் ஹோல்டர், பல்ப், ஐஸ்கிரீம் குச்சி.
செய்முறை:
படம் 1, 1a: ஏதாவது ஒரு நிறத்திலிருக்கும் ஹேண்ட்மேடு ஷீட்டை நான்கரை இன்ச் அகலத்துக்கு நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
படம் 2, 2a: இதை இரண்டாக மடித்து, அடுத்து நான்காக மடித்து, பின்பு எட்டாக மடித்து, எட்டு துண்டுகளாக கட் செய்யவும்.
படம் 3, 3a: இதில் ஒரு துண்டை எடுத்து, இரண்டாக மடிக்கவும். இதற்கு முன்பாக வெள்ளைக் காகிதத்தில் துண்டு ஒன்றை எடுத்து, இரண்டாக மடித்து, கட் செய்த ஹேண்ட்மேடு பேப்பரை இதன் மீது வைத்து, பென்சிலால் அவுட்லைன் வரைந்து, கட் செய்துகொள்ளவும்.

படம் 4, 4a: கட் செய்த வெள்ளைக் காகிதத்தில் இதழ் போல வரைந்து, கட் செய்து எடுத்துக் கொள்ளவும். இதை ஏற்கெனவே மடித்து வைத்துள்ள ஹேண்ட்மேட் பேப்பர் மீது வைத்து இதழ் போல கட் செய்ய வேண்டும். இதேபோல தேவையான எண்ணிக்கையில் தேவையான வண்ணங்களில் இதழ்களை தயார் செய்துகொள்ளவும்.
படம் 5, 5a: மெஜந்தா கலர் ஹேண்ட்மேடு பேப்பரை இரண்டாக மடித்து, ஓரத்தில் இருந்து நான்கரை இன்ச் குறித்துக்கொண்டு, மீதம் உள்ள பகுதியை மடித்துக்கொள்ளவும். பிறகு, படத்தில் காட்டியுள்ளபடி குறிப்பிட்ட இடைவெளி விட்டு சீப்பு போல வெட்டவும்.
படம் 6, 6a: தெர்மக்கோல் பிளேட்டைக் கவிழ்த்து, சீரான இடைவெளிகளில் எட்டு பச்சை நிற இதழ்களை ஒட்டும் வகையில் ஸ்கேல் கொண்டு மார்க் செய்யவும். மார்க் செய்த இடத்தில் ஐஸ்க்ரீம் குச்சியால் பெவிகாலை எடுத்துத் தடவி, பச்சை நிற இதழ்களை ஒட்டவும்.

படம் 7, 7a: தெர்மக்கோல் பிளேட்டை உள்பக்கமாகத் திருப்பி, வயலட், மஞ்சள், ஆரஞ்சு வண்ண இதழ்களை அடுத்தடுத்த வரிசையாக ஒட்டவும். மஞ்சள் நிற ஹேண்ட்மேடு பேப்பரை சின்னச் சின்ன முக்கோணங்களாக கட் செய்து, தெர்மக்கோலின் நடுப்பகுதியில் சிறிது இடம் விட்டு, சுற்றி ஒட்டவும். பிறகு, நீலநிற ஸ்டோன்களை குறிப்பிட்ட இடைவெளியில் ஒட்டவும்.
படம் 8, 8a: இடைவெளி விடப்பட்டுள்ள இடத்தில் பல்பை பொருத்துவதற்கு ஓட்டை போடவும். பிளேட்டின் அடிப்பாகம் வழியாக பல்ப் ஹோல்டரைப் பொருத்தி, பல்பை மாட்டினால், பேப்பர் லேன்டன் ரெடி!
லேன்டன் செய்து முடித்து நிமிர்ந்த ஜெயசுபலஷ்மி, ''டிசைனைப் பொறுத்து 350 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை இந்த லேன்டனை விற்கலாம். ரெண்டு மடங்கு லாபம் தரும் பிசினஸ் இது. ஒரு லேன்டன் செய்யறதுக்கு 20 - 30 நிமிடங்கள் ஆகும். ஒரு நாளைக்கு மூணு லேன்டன் செய்தாலே நல்ல வருமானம்தான். ஹேண்ட்மேடு பேப்பர்ல செய்றதால எத்தனை வருஷங்களானாலும் நிறம் மங்காது'' என்றதோடு,
''இதையே ஒரு தொழிலா நீங்க கையில எடுத்துட்டா... தாமதிக்காம உங்க பெயர், விவரம் அடங்கின விசிட்டிங் கார்டு தயார் செய்துடுங்க. பெரிய இடங்கள்ல ஆர்டர் கேட்கறதுக்கு இது உதவியா இருக்கும்!'' என்று டிப்ஸும் தந்தார்.
கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...