மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 3

வட்டியும் முதலும்
News
வட்டியும் முதலும்

''நான் பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை. இந்தப் பூமிக்குச் சில காலம் வந்து தங்கிப் போகிறேன்னாரு...இதுலேர்ந்து என்னா தெரியுது?''

'அதிர்ச்சி’ என்ற சொல்லுக்கு இப்போது அர்த்தமே இல்லை!

ஒரு சாமான்யன், ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் அதிர்ச்சியாவது? நேற்று கோயம்பேட்டைக் கடக்கும்போது, 'வெள்ளை காமராஜர் சரத்குமார் அழைக்கிறார்...’ என சுவரில் எழுதி இருந்தார்கள். பக்கத்திலேயே 'கறுப்பு சே குவேரா’ திருமாவளவன். உச்சமாக, சுபாஷ் சந்திரபோஸ் கழுத்தில் கருணாஸ்.

மட்ட மத்தியானம், பேலன்ஸ் இல்லாத மொபைலுக்கு, 'உங்களோடு பேச அழகிய இளம் பெண்கள் காத்துஇருக் கிறார்கள். செக்ஸி மற்றும் ஹோம்லி’ என எந்த நாய் மெசேஜ் அனுப்புவது? பிரபு தேவா - நயன்தாரா காதல்பற்றி தங்கர்பச்சானி டம் எதற்கு கருத்துக் கேட்கிறார்கள்? பாரதிராஜா படத்தில் மாட்டு டாக்டர், வாத்தியார் கேரக்டர் களில் வரும் ராஜா மாதிரி, உத்தரப்பிரதேசக் கிராமங்களில் திரியும் ராகுல் காந்திதான் நம் அடுத்த பிரதமரா? எங்கெங்கும் பிதுக்கப்பட்டுக் கிடக்கும் வாட்டர் பாக்கெட்டுகளால் இந்த மண் அடையும் அதிர்ச்சியை நம்மில் எத்தனை பேர் அடைவோம் நண்பர்களே?

வட்டியும் முதலும் - 3

ஊழல் என்ற சொல்லையே கனம் இழக்கவைத்தவர்களை, கொடூரங்கள் அறையும் ஊடகச் செய்திகளை, இவ்வளவு நீளமான ஐ.பி.எல். நடத்தி கல்லா கட்டுபவர்களை (சியர்ஸ் கேர்ள்ஸும், ஷில்பா, பிரீத்தி, தீபிகாக்களும் இல்லையென்றால், இந்நேரம் கிரிக்கெட் அழிந்தே போயிருக்கும்!), பெட்ரோல், கேஸ் விலையை ஏற்றிவிட்டு பி.எம்.டபிள்யூ. சிக்ஸ் சீரியஸுக்கு வரி குறைப்பவர்களை, கறுப்பு-சிவப்பு ராசா, சரத் ரெட்டியை இட ஒதுக்கீடே இல்லாமல், ஒரே கொட்டடியில் அடைப்பவர் களை, தேங்கா பத்தைகளோடு இலவச மிக்ஸிக்குக் காத்திருப்பவர்களை, இன்னமும் ஐ.சி.யூ. ஸீன் வைக்கிற சீரியல்காரர்களை, தமிழ் நாட்டில் வறுமைக் கோடே இல்லையென்று அறிவிக்கும் அதிகாரத்தை, அத்தனை நாயர்களும் டீக்கடை போட்டுக்கொண்டு திரியும்போது, 1 லட்சம் கோடி நகைகளைக் கோயிலுக்குள்பதுக்கி வைத்த மன்னர்களை, ஈழத்து இசைப்ரியாக்கள் சிதைந்து கருகும் சேனல்-4 காட்சிகளை ரிமோட் டில் தாண்டும் தமிழர்களை, பேரறிவாளனின் வாழ்வுரிமைபற்றிப் பேசவே பயப்படும் அரசியல் வாதிகளை... கடந்துதான் இந்த வாழ்க்கை என்றால், ஒரு சாமான்யன் ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் அதிர்ச்சி ஆவது?

போன வாரம் வள்ளுவர் கோட்டத்தில் ஒரு ஆட்டோ பிடித்தேன். சென்னையின் முதல் அதிர்ச்சி ஆட்டோக்காரர்கள். வடபழனியிலோ, நுங்கம்பாக்கத்திலோ உங்களை டிராப் பண்ணும் ஆட்டோ டிரைவர்கள், தாவூத் இப்ராஹிமோ, ஜக்கி வாசுதேவோ, தமிழருவி மணியனாகவோகூட இருக்கலாம். வள்ளுவர் கோட்டத்து ஆட்டோவின் இலக்கு... வளசரவாக்கம். வழியில், ஆற்காட்டு சாலை எல்லாம் பூக்கள் சிதறிக்கிடந்தன. தூரத்தில் தாரை, தப்பட்டை, சங்கு. ஆட்டோ டிரைவர் சைடு கண்ணாடியில் அலட்சியமாகச் சிரித்தார்.

''சார்... எவனுக்கோ ஃபேர்வெல்.''

''அட... சாவை ஃபேர்வெல்னு சொல்லிட்டியே தலைவா...'' என உற்சாகம் ஆனேன்.

''ஹலோ... இந்தாளு ஓஷோ... இதையெல்லாம் ஒரே அடியா அடிச்சுட்டாரு சார். என்ன சொன்னாரு தெரியும்ல..?''

''என்ன..?''

''நான் பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை. இந்தப் பூமிக்குச் சில காலம் வந்து தங்கிப் போகிறேன்னாரு...இதுலேர்ந்து என்னா தெரியுது?''

''நாமெல்லாம் கெஸ்ட்டு சார். நீயும் நானும் சீஃப் கெஸ்ட்டு!''

இந்த தேசத்தில் ஆட்டோக்காரர்களுக்கு இருக்கிற ஞானம், அரசியல்வாதிகளுக்கு இல்லையே!

வட்டியும் முதலும் - 3

கண்ணன் மாமா கல்யா ணத்துக்கு வந்துவிட்டு, தாம்பூ லப் பையோடு வெட்டாத்தைக் கடந்து ஊருக்குப்போன சுந்தரி அத்தை, சாயங்காலமே அரளி விதை தின்று செத்துப் போனதுதான் என் வாழ்க்கை யின் முதல் அதிர்ச்சி. அத்தை செத்துப்போன அடுத்த வாரமே, அது புருஷன் மிட் நைட் மசாலாவில் அனுராதா பாட்டு பார்த்தது அடுத்த அதிர்ச்சி. அவர் கடைசியில் குடித்துக் குடித்தே குடலில் கேன்சர் வந்து, அந்த ரூமுக்குள் யாருமே போக முடியாத அளவுக்கு, நாற்றம் எடுத்து செத்துப்போனது எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஆனால், கருமாதி முடிந்த சாயங்காலம், அந்த வீட்டின் கொல்லையில் அநாதையாகக் கிடந்த அம்மிக்கல்லில்... அத்தை அரளி அரைத்த அதே அம்மிக் கல்லில், தாயும் தகப்பனும் இல்லாத என் சின்ன மாப் பிள்ளை உட்கார்ந்து இருந்த காட்சி தந்த அதிர்வு, இந்தக் கணமும் இருக்கிறது.

ஒட்டக்குடியில் இருந்து குதிரை வண்டியில் வரும் சுப்ரமணியன் மச்சான், எப்போதும் அதிசயம். 25 வயசிலும் பொம்பளைப் பிள்ளைகள் மாதிரி, கையில் மருதாணி வைத்து, மயில் வரைந்து இருக்கும்.

கட்டை விரல் நகத்தை மட்டும் நீட்டமாக வளர்த்து நக பாலீஷ் போட்டு இருக்கும். அந்த நகத்தால் யார் கன்னத்தை யாவது கிள்ளிக்கொண்டே இருக்கும். எதிலும் ஒரு கணக்கு... மிடுக்கு. சுப்ரமணியன் மச்சான் ஒருநாள் மோட்டார் செட்டில் கால் கிலோ அல்வாவும் மிக்சரும் வாங்கித் தின்றுவிட்டு, ஆஃபில் டெமக்ரான் கலந்து குடித்து செத்துப்போகும் என்று யாருக்குத் தெரியும்?

சில்க் ஸ்மிதா செத்துப்போனபோது நான் மணி மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். ''செம கட்ட போயிருச்சே மாப்ள...'' என எதிர் டேபிளில் கமென்ட் அடித்தார்கள். எனக்கு அப்போது மனதில் தோன்றியது, 'அலைகள் ஓய்வதில்லை’ படத்தில், தியாகராஜன் இன்னொரு குடிசையில் படுத்துத் திரும்பும்போது, ஏராளமான உணர்ச்சிகளுடன் அந்தம்மா எதிரே நிற்கிற ஒரு விஷ§வல்தான். கல்லாவில் உட்கார்ந்திருந்த மணி அண்ணன் சொன்னார், ''நீங்கள் கேட்டவை’ படத்தை சிலுக்கு பாட்டுக்காகவே எத்தனை தடவை பார்த்தேங்குற... 36 தடவை முருகா...''

அந்த வருடம் செமஸ்டர் விடு முறை முடிந்து கல்லூரி திரும்பியபோது, கல்லாவில் மணி அண்ண னுக்குப் பதில் சற்குணம் அக்கா உட்கார்ந்து இருந்தார். நான் தூர்தர்ஷனில் 'பதேர் பாஞ்சாலி’ பார்த்துக்கொண்டு இருந்த நாளில், கல்லாவுக்கு மேல் உள்ள ஃபேனில் அக்காவின் புடவையில் தூக்குப் போட்டு 'குட் பை’ சொல்லி இருக் கிறார் மணி அண்ணன்.

ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்துகொண்ட செய்தியை அன்று இரவு மிகத் தாமதமாக நான் பெற்றுக்கொண்டது லிபர்ட்டி பார்க் பாரில். இரவு திடீர் என்று பயங்கரமானது. மனம் அவர் முடிவு எடுத்த அந்த நொடியை நோக்கிக் கட்டுக்கடங்காமல் பயணிக்கிறது. மரணத்தின் பாசி படர்ந்துகிடக்கும் அன்பின் பேராழத்தில் மனம் மீனாகி அலைய ஆரம்பிக்கிறது. திருவல்லிக்கேணி மேன்ஷன், மெரினா பீச் மேகங்கள், அண்ணா சாலை பஸ் நிறுத்தங்கள், நௌஷத் இசை, சுகந்திகள்... எல்லோரையும் விட்டு விட்டுப் போக இந்த மனுஷனுக்கு எப்படி மனசு வந்தது? இப்போதும் நள்ளிரவில் ஜெயா மேக்ஸில் 'அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ பார்க்கும்போது ஷோபா வும், 'பியாஸா’ பார்க்கும்போது குருதத்தும் என்னை எல்லை இல்லாத, அதிர்வற்ற தொடுவானத் துக்கு அப்பால் அழைத்துப் போகிறார்கள்!

15 வருடங்களுக்கு முன்பு, ஒரு பேய் மழைப் பின்னிரவில் எங்கள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. அப்பாதான் திறந்தார். மழையில் நனைந்து இரண்டு பேர் நின்று இருந்தார்கள்.

''சரவணன் உங்க பையந்தானே?''

''ஆமாங்க...''

''நாங்க தஞ்சாவூர் ஸ்டேஷன்ல இருந்து வர்றோம்... போலீஸு...''

அப்பா அதிர்ந்துபோனார். அம்மா வாரிச் சுருட்டி எழுந்து அழ ஆரம்பித்தது.

''உங்க பையன் கரந்தை தமிழ்ச் சங்கத்துலதானே படிக்கிறாப்ல? பெரிய அளவுல பிரச்னையக் கொண்டுவந்துட்டாப்லயே...''

''என்ன சார் பண்ணான்..?''

''நக்சலைட் மூவ்மென்ட்ல இருக்கான்யா உம் மகன். விடுதலைப் புலிகள் வரைக்கும் பொழக்கம் இருக்கும்போல... எங்க அவன்?''

வட்டியும் முதலும் - 3

''நக்சலைட்டா?''

''அதான்யா... குண்டுவைக்கிறவன், கொள்ளை அடிக்கிறவன், தண்டவாளத்தைப் பேக்குறவன்...''

அந்த அகாலத்தில் அப்பா அவர்களோடு கிளம்பிப்போனார். குடும்பமே விடிய விடிய விழித்துக்கிடந்தது.

+2 ஆண்டு விழாவில் நெல்சன் மண்டேலா வேஷம் போட்டு நடித்தவன், நாலாறு மாதங் களில் நக்சலைட்டாகி புரட்சி பண்ணக் கிளம்பியதில் அம்மாவுக்குத்தான் அதீத அதிர்ச்சி. அப்பாவும் சித்தப்பாவும் தஞ்சாவூர் ஸ்டேஷனுக்கும் திருச்சி கோர்ட்டுக்குமாக ஒரு வாரம் அலைந்து அண்ணனை மீட்டு வந்தார்கள்.

விஷயம் இதுதான். கரந்தை கலைக் கல்லூரியில் அண்ணன் ஒரு ஜூனியர் வைகோ. மைக்கைப் பிடித்தால், பிரபாகரன் முதல் ஃபிடல் காஸ்ட்ரோ வரை போட்டுப் பொளப்பான். இதனால், பேராசிரியர்கள் மற்றும் பெண்கள் ஏரியாவில் ரெஸ்பான்ஸ் அள்ள... அம்மாவிடம் பால் காசு வாங்கி சிப்பி டெய்லரிடம் ரெண்டு குர்தா தைத்துக்கொண்டான்.

அன்றும் ஒரு பேச்சுப் போட்டியில் புரட்சிப் பேச்சை அள்ளிவிட்டு இறங்கும்போது, தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அறிமுகமாகி இருக்கிறார். (அப்போது என்ன... இப்போதும் அண்ணனுக்கு உலக அரசியல் தெரிந்த அளவுக்கு, உள்ளூர் அரசியல் அவ்வளவாகத் தெரியாது!) ''தம்பி, உங்க கண்ல இருக்கிற ஒளிதான் முக்கியம். அந்தக் கோபம், அந்த வேகம், அந்தத் தாகம்... நாம அடிக்கடி சந்திச்சு நிறையப் பேசணும்...'' என்றபடி அண்ணனிடம் முகவரி வாங்கிப் போய் இருக்கிறார். சில நாட்களில் அண்ணன் வாழ்க்கையில் புரட்சி வெடித்தது. அந்த நபர், மன்னார்குடி அரசு வங்கியில் கொள்ளையடித் துத் தப்பும்போது போலீஸில் மாட்டி சுட்டுக் கொல்லப்பட, சட்டைப் பையில் அண்ணன் எழுதித் தந்த எங்கள் வீட்டு முகவரி.

ஏதோ குடும்பத்துக்கு நல்ல நேரம்... 'தமிழ் படித்த மாணவன் இந்தச் சமூகத் துக்கு ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்தானே தவிர, ஒரு நாளும் நக்சலைட் அல்ல!’ என போலீஸ் விசாரணையில் தெரிந்து விட்டது. வீடு வந்த அண்ணனை அம்மா அழைத்துப் போய், மகமாயி கோயில் வாசலில், பட்ட மிளகாயும் எண்ணெயும் வைத்து எட்டு முறை சுத்திப்போட்டது.

இன்று வளசரவாக்கத்தில் இருந்து கோடம்பாக்கம் ஹவுஸிங் போர்டில் இருக்கும் வீட்டுக்கு வந்து இறங்கும்போது, அதே அண்ணன் வாசலில் பதற்றமாக நின்று இருந்தார்.

''டேய்... ஹவுஸ் ஓனர் போன் பண்ணி வீட்டைக் காலி பண்ணச் சொல்றாரு. ரெண்டு வாரத்துல வீடு வேணுமாம்!''

''மாசா மாசம் வாடகைக்கு டிலே ஆகுதுன்னு நினைச்சிருப்பாரோ..? சரி... சரி, நீ எதாச்சும் சென்டிமென்ட்டாப் பேசிப் பாரு...''

''எல்லா மாதிரியும் பேசிட்டேன். சென்னைக்கு வந்து இது இருபதா வது வீடு... இங்கதான் அஞ்சாறு வருஷம் கொஞ்சம் நிம்மதியா இருந்தோம். இதுவும் போச்சா? இனிமே இன்னொரு அட்வான்ஸ், ஹவுஸ் ஓனர், வீடுனு நினைச்சாலே... அதிர்ச்சியா இருக்குடா.''

ஒரு கணம் நிதானித்து, சத்த மாகச் சிரிக்க ஆரம்பித்த என்னை அண்ணன் அதிர்ச்சியாகப் பார்த்தார்.

ஆமாம்... ஒரு சாமான்யன், ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் அதிர்ச்சியாவது!

(போட்டு வாங்குவோம்)

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan