மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

வாசகிகள் பக்கம், ஓவியங்கள் : சேகர்  

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

 200

குழப்பம் தவிர்க்கும் 'குட் ஐடியா’!

என் தோழி வீட்டுக்கு சென்றிருந்தபோது, தன் மகளின் உள்ளாடைகளில் கையால் ஏதோ தைத்துக்கொண்டிருந்தாள். ''என்ன செய்கிறாய்?'' என்று கேட்டதற்கு, ''வெளியூர் ஹாஸ்டலில் தங்கப் போகிறாள் என் மகள். அங்கே அவளுடைய வயதே இருக்கும் பெண்கள்தான் அனைவரும்! சிலசமயம் சைஸ், கலர், பிராண்ட் எல்லாம் ஒன்றாக இருக்கும் உள்ளாடைகள் மாறிவிட வாய்ப்பு இருப்பதால், குழப்பத்தைத் தவிர்க்க மகளின் உள்ளாடைகள் மற்றும் வெளி ஆடைகள் எல்லாவற்றிலும் அடையாளத்துக்காக கையால் தையல் போடுகிறேன்'' என்றார்.

''குட் ஐடியா'' என பாராட்டிவிட்டு வந்தேன்.

- அனுராதா ரமேஷ், புதுச்சேரி

ஜயன்ட் வீல் சங்கடம்!

கோடை விடுமுறையின்போது சென்னையில் புகழ்பெற்ற 'ரைடிங் ஸ்பாட்’டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். ஒவ்வொரு ரைடிங்குக்கும்  மிகப் பெரிய க்யூ! ஒரு ரைடிங்கில் ஏறவே சில மணி நேரமாகும் போலிருந்தது. அதைவிடக் கொடுமை என்னவென்றால், ஜயன்ட் வீலில் ஏறும்போது 'ஆறிலும் சாவு... நூறிலும் சாவு’ என்ற வரிகள் உள்ள திரைப்பட பாடல் போடப்பட்டது. ஆகமொத்தம், உல்லாசம் தேடிச்சென்று, சங்கடத்தில் ஆழ்ந்தோம்.

'இனி, கோடை விடுமுறையைக் கொண்டாட பிக்னிக் செல்வது, கோயிலுக்குச் செல்வது, நெருங்கிய உறவினர்களைச் சந்தித்து மகிழ்வது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என்கிற பாடத்துடன் திரும்பி வந்தோம்.

- தாரகை, கும்பகோணம்

அனுபவங்கள் பேசுகின்றன!

உஷார் யூத்!

ஒரு நாள், சேலத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்துக் கொண் டிருந்தேன். சுமார் 25 வயது இளைஞன் அருகில் உட்கார்ந்திருந்தான். ஓரிடத்தில் அழகான, சுமார் பதினாறு வயதுடைய பெண் தனியாக எங்கள் ஆட்டோவில் ஏறி, எதிர் ஸீட்டில் உட்கார்ந்தாள். ஆட்டோ போய்க்கொண்டிருக்கும்போது, அந்தப் பெண்ணை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே வந்தான் பக்கத்திலிருந்த பையன். திடீரென செல்போனை எடுத்தவள், ''அண்ணா, ஆட்டோவில் வந்துட்டிருக்கேன்... (ஓரிடத்தைச் சொல்லி) அங்கே பைக்குடன் நில்லு'' என்றாள். அடுத்த ஸ்டாப்பிங் வந்தபோது சட்டென இறங்கிவிட்டான் அந்தப் பையன். பிறகு, நான் இறங்கிய இடத்திலேயே அவளும் இறங்கினாள். ஆனால், அங்கே யாரும் பைக்குடன் காத்திருக்கவில்லை. ''என்னம்மா, உன் அண்ணனைக் காணோம்...'' என்று கேட்டேன். அவள், ''யாரும் வரமாட்டாங்க. ஆட்டோவுல அந்த ஆள் என்னை ஒருமாதிரி பார்த்துக்கிட்டு வந்ததால, போன்ல பேசறது மாதிரி நடிச்சேன். தேவைப்பட்டிருந்தா நிஜமாவே அண்ணனைக் கூப்பிட்டிருப்பேன். ஆனா, தேவைப்படல'' என்று கூலாகச் சொல்லிவிட்டுப் போனாள்.

'இந்தக் காலத்து இளம்பெண்களில் பலர், சங்கடமான நிலைமையைக்கூட... எவ்ளோ சாமர்த்தியமா சமாளிக்கிறாங்க’ என்று வியந்துகொண்டிருக்கிறேன்.

- பி.பார்வதி பாலகிருஷ்ணன், நாமக்கல்

அவசர தேவை... மனச்சாட்சி!

எங்கள் தெருவில் இருந்த வயதான தம்பதிக்கு, இரண்டும் பெண் பிள்ளைகளே. இருவரையும் பக்கத்து தெருவிலேயே மணமுடித்துக் கொடுத்திருந்தனர். முதுமையின் காரணமாக இருவரும் அவதிப்பட்டபோது, மகள்கள் பெற்றோரைப் பராமரிக்க முன்வந்தனர். அதற்கு, அவர்களின் கணவன்மார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்குத் தெரியாமல், அவ்வப்போது சிறுசிறு உதவிகளைப் பெற்றோருக்கு செய்து வந்தனர். ஆனால், அந்த முதியவர்கள் அண்மையில் காலமாகிவிட, அவர்கள் வசித்து வந்த பூர்விக வீட்டை பங்கு போட மனச்சாட்சியில்லாத அந்த மருமகன்கள் வந்துவிட்டனர். வாழும்போது சாப்பாடு போட மறுத்த அந்த இருவரையும் ஊர்ப் பெரியவர்கள் திட்டினார்கள். அதை அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளாமல், வீட்டை பிரித்துக்கொள்வதைப் பற்றி அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டனர்.

ஆண் வாரிசு இல்லாத சொத்தைப் பங்கு போட ஆர்வம் காட்டும் மருமகன்கள், மனைவியின் பெற்றோரை வயதான காலத்தில் பராமரிக்க வேண்டாமா? மருமகன்களே, மனச்சாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள்... நீங்களும் நாளைய முதியவர்கள்தான்!

- பே.ராமலட்சுமி, ராஜபாளையம்