மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

வாசகிகள் பக்கம், ஓவியங்கள் : சேகர்  

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

 200

அனுபவங்கள் பேசுகின்றன!

படிப்பு... பிள்ளைகள் சாய்ஸ்!

பத்தாவது தேறிய தன் மகளை ப்ளஸ் ஒன் வகுப்பில் சேர்ப்பதற்காக பக்கத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றாள் என் தோழி. கூடவே நானும் சென்றிருந்தேன். மதிப்பெண் அதிகம் இருந்ததால், ''என்ன குரூப் எடுக்க விரும்புகிறாய்?'' என்று தலைமையாசிரியர் கேட்டார். அதற்கு தோழியின் மகள், ''நான் கணக்குப் பதிவியல் சம்பந்தமான வணிகவியல் படிக்க ஆசைப்படுகிறேன்'' என்றாள். என் தோழியோ, ''கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் உள்ள குரூப் எடுத்து படி. மேல்படிப்புக்கு நல்ல ஸ்கோப் இருக்கும்'' என்று மகளைக் கட்டாயப்படுத்தினாள். இரண்டையும் கேட்ட தலைமையாசிரியர் ''படிக்கப்போகும் மாணவர்கள் எதில் ஆர்வமாக உள்ளனரோ அதில் சேருங்கள். கட்டாயப்படுத்தினால், ஆர்வம் குறைந்து படிப்பே கேள்விக்குறியாகிவிடும்'' என்றார். மகளை, அவள் விரும்பிய குரூப்பில் சேர்த்தாள் என் தோழி.

'விருப்பம் இல்லாத படிப்பை பிள்ளைகள்மீது திணித்தால், முதலுக்கே மோசமாகிவிடக்கூடும்’ எனும் அந்த தலைமையாசியரின் எச்சரிக்கை... பெற்றோர்கள் அனைவரும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று!

- க.கலா, காகிதப்பட்டறை

அனுபவங்கள் பேசுகின்றன!

'அடேங்கப்பா’ ஆன்மிகம்!

மிகவும் சீரியஸான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தோழியின் தங்கையை, 'வேறு எங்காவது சேருங்கள்’ என்று கைவிரித்துவிட்டனர். தனியார் மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு கையில் பணம் இல்லாததால் தவித்துப் போனார்கள். ஒரு வழியாக தோழி மற்றும் உறவுக்காரர்கள் எல்லாம் பணத்தைப் புரட்டி, தனியார் மருத்துவமனையில் சேர்க்க, தேற ஆரம்பித்துவிட்டார். மருத்துவமனைக்குச் சென்ற தோழியுடன் நானும் சென்றபோது, ''ஜோசியம் பாக்கிறேன், குறி கேக்கிறேன்னே அலைஞ்சுட்டிருக்கா. கையில காசு இல்லைனாலும் கடன் வாங்கியாவது குறி கேக்க போயிடுவா. இப்ப பாருங்க ஹாஸ்பிடல் ஃபீஸுக்குகூட பணம் இல்லை. நீங்களாவது எடுத்துச் சொல்லுங்க'' என்று என்னிடம் தோழி சொன்னார். உடனே தங்கை, ''எனக்கு 40 வயசுல கண்டம்னு சொன்னார் ஜோசியர். இப்ப பாரு அது சரியா பலிச்சுடுச்சு. ஜோசியம் பார்க்காம இருந்தா இது தெரிஞ்சிருக்குமா?'' என்றார். உடனே, ''இப்படி ஜோசியம், நேரம், காலம் பார்க்காம நல்லா வாழற எத்தனையோ பேரை எனக்குத் தெரியும்'’ என்றேன்.  உடனே, ''கிறிஸ்தவர்கள் ஞாயித்துக்கிழமையானா சர்ச் போயிடுவாங்க. முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையானா மசூதி போயிடுவாங்க. இவங்கள்லாம் கூட்டுப்பிரார்த்தனை பண்றதால, எல்லா நேரமும் அவங்களுக்கு நல்ல நேரமா இருக்கு. ஆனா, நம்ம மதத்துல ஆளாளுக்கு ஒரு உருவத்தைக் கும்பிடறோம். அதனால நேரம், காலம், பரிகாரம், குறி கேக்கறது எல்லாம் தேவைப்படுது'' என்று 'அடேங்கப்பா' ஆன்மிக விளக்கத்தைக் கொடுத்தாரே பார்க்கலாம்!

இவர்களையெல்லாம் சிவனோ அல்லது ஒரு திருமாலோதான் வந்து திருத்த வேண்டும்!

- சகுந்தலா, திருச்சி

அனுபவங்கள் பேசுகின்றன!

இன்டர்நெட் விபரீதம்!

செல்போனில் இன்டர்நெட் உபயோகிக்கக் கற்றுக்கொடுக்கும்படி கணவரிடம் கேட்டுக்கொண்டேன். கூகுளில் நமக்கு என்ன தேவையோ அதை டைப் செய்து 'சர்ச்’ செய்யக் கற்றுக்கொடுத்தார். நான் தமிழில் டைப் செய்யலாம் என்று முதலில் 'அ’ என்று மட்டும் டைப் செய்து தகவல்களைத் தேடினேன். கிடைத்த ரிசல்ட் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலில் வந்து விழுந்தவற்றில் பெரும்பாலானவை ஆபாசக் குப்பைகள்! இதுபற்றி கணவரிடம் கேட்டபோது, 'என்னதான் கவனமாக டைப் செய்து 'சர்ச்’ செய்தாலும். இந்த ஆபாச சங்கதிகள் வரத்தான் செய்யும். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும். அதனால, சிறுவர்களை இன்டர்நெட் பக்கம் அதிகம் புழங்கவிடக் கூடாது'' என்றார்.

அப்பப்பா... இன்டர்நெட்டில் எத்தனை விபரீதங்கள்!  கவனமாகக் கையாளுங்கள் தோழிகளே!

- கவிதா, கோவிலாம்பூண்டி