வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 06
பட விழா, பாராட்டு விழான்னு வாரம் ஒரு தடவையாச்சும் மைக் பிடிச்சுப் பேசுறது இப்ப பழக்கம் ஆகிடுச்சு.
நான் பாலிடெக்னிக்ல படிச்சுட்டு இருந்தப்ப, லேப் அசிஸ்டென்ட்டா இருந்த ஒருத்தர், லேப் இன்சார்ஜ் ஆகிட்டாரு. அற்பனுக்கு வாழ்வு வந்தா, அர்த்த ராத்திரியில அம்பரல்லாவை ஆட்டி ஆட்டிப் பிடிப்பான்கிறதை மனுஷன் நிரூபிச்சுட்டே இருந்தார். 'கிளாஸ் கட் அடிக்கக் கூடாது, பிட் அடிக்கக் கூடாது, சைட் அடிக்கக் கூடாது, டாவு அடிக்கக் கூடாது’ன்னு ஒரு மாணவனோட அத்தியாவசியத் தேவைகள் அத்தனையிலும் ஆசிட் வீசுறதுலயே குறியா இருப்பாரு. 'மாப்பு, இவருக்கு வெக்கணும்டா ஆப்பு’னு கறுவிட்டுஇருந்த நேரத்துல, அவரே எங்கள்ல அஞ்சு பேரைக் கூப்பிட்டுவிட்டாரு.

'சந்தானம், ஒரு மாசத்துல ஆசிரியர்கள் தினம். கல்ச்சுரல்ல நாம சேர்ந்து டான்ஸ் பண்ணப்போறோம்’னாரு. 'ஆமா... இவுரு பெரிய சிம்ரனு. ஆல் தோட்ட பூபதி கணக்கா இடுப்பை வெட்டி வெட்டி ஆடப் போறாரு. மூஞ்சைப் பாரு! முழுசாக் கழுவாத முள்ளங்கி மாதிரி. ஏற்கெனவே பாடம் எடுத்துக் கொன்னது போதாதா? இதுல டான்ஸ் வேறயா?’ன்னு எனக்குன்னா, உள்ளுக்குள்ள செம டென்ஷன். ஆனா, எதையும் காட்டிக்காம சிரிச்சு சிரிச்சு, 'அப்படியா சார்? சூப்பர்! எந்தப் பாட்டுக்கு ஆடப்போறோம்’னு கேட்டேன். அது 'காதலன்’ படம் ஹிட் ஆகியிருந்த நேரம். 'டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாட்டுக்குத்தான் ஆடப் போறோம். நான்தான் பிரபுதேவா!’ன்னாரு. எனக்குப் பேச்சே வரலை. 'சந்தானம், நீதான் வடிவேலு பண்ண மூவ்மென்ட்ஸ் பண்ற. உன் வாழ்க்கையில இது ஒரு முக்கியமான ரோல்’னாரு. பாவிகளா... அஞ்சாறு ஆஸ்கர் அவார்டு தர்ற மாதிரி என்னா பில்டப்புனு எனக்கு செம கடுப்பு. ஆனாலும் எதையும் காட்டிக்காம அமைதியா இருந்துட்டோம். அந்த ஒரு மாசமும் அவரு எங்களைப் படுத்தினபாடு இருக்கே... ஐயய்யயோஊஊ! கிளாஸ் முடிஞ்சு ரிலாக்ஸா ஒரு டீ அடிக்க விட மாட்டாரு. 'கமான் பாய்ஸ்... ரிகர்சல்... ரிகர்சல்’னு கூட்டிட்டுப் போயி நொங்கெடுத்து சங்கறுப்பாரு. 'மாம்ஸ்... மைக்கேல் ஜாக்சனோட மச்சான் மாதிரியே டார்ச்சர் பண்றாரே’ன்னு நெனைச்சு, தலை யில அடிச்சுக்கிட்டே போவோம்.

ஒருவழியா ஆசிரியர் தின விழாவும் வந்தது. தலைவன் பேகி பேன்ட்டை இறுக்கமா போட்டு, அதுக்கு மேல பெல்ட் மாட்டி, கூலிங்கிளாஸ்லாம் போட்டுக்கிட்டு நிக்கிறாரு. பிரபுதேவா மாதிரியே லுக் வரணும்னு காலர் பட்டனை வேற போட்டு, 'ஓ.கே. பாய்ஸ்?’னு அமர்த்தலாப் பார்க்கிறாரு. நாங்க உள்ளுக்குள்ளயே வுழுந்து வுழுந்து சிரிக்கிறோம்.
'ஊர்வசி ஊர்வசி’ பாட்டுல பிரபுதேவா கண்ணாடி பஸ் மேல டான்ஸ் ஆடிக்கிட்டே, அந்த உயரத்துல இருந்து குதிப்பாரு. அப்போ, கீழே இருக்குற டான்ஸ் க்ரூப் அவரைப் பிடிச்சிக்கிட்டு அப்படியே ஆடிக்கிட்டே இருப்பாங்க. இது ஒரு டான்ஸ் மூவ்மென்ட்! நாங்க டான்ஸ் ஆடுறப்பவும் அந்த முள்ளங்கி மாஸ்டர் விழுவாராம். நாங்க பிடிக்கணுமாம். இது மாஸ்டர் பிளான். ஆனா, நாங்க போட்டு வெச்சிருந்தது வேற ஒரு 'மாஸ்டர் பிளான்’. விழா ஆரம்பிச்சது. நாங்க டான்ஸ் பண்ண ஆரம்பிச்சோம். தலைவரு ரொம்ப உற்சாகமா வெறி பிடிச்ச மாதிரி பாட்டுப் பாடிக்கிட்டே உயரமான செட்ல இருந்து கீழே விழுறாரு. 'ஒன்... டூ... த்ரீ’ன்னு சொல்லி, அவரைத் தாங்கிப் பிடிக்கிறதுக்குப் பதிலா நாங்க சடசடன்னு கை தட்ட ஆரம்பிச்சோம். மனுஷன் தொபுக்கடீர்னு கீழே விழுந்துட்டாரு. இருந்தாலும், அப்போதைக்கு எதுவும்
செய்ய முடியாம சமாளிச்சு எழுந்து நின்னு ஆடிட்டாரு. டான்ஸ் முடிஞ்ச உடனே ஆரம்பிச்சது பாருங்க பரேடு.
'ஏன்டா, கீழே குதிச்சப்போ பிடிக்கலை?’ன்னு இடுப்பைத் தேச்சுக்கிட்டே கேக்குறாரு. 'எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான் சார். நீங்க சூப்பரா ஆடினீங்க. கலையார்வம் தாங்க முடியாம கை தட்டிட்டோம்’னு சொன்னோம். ஒரு மாதிரி 'பெக்க பெக்க’ன்னு முழிச்சுட்டே போயிட்டாரு.
இப்ப டி.வி-யில 'டேக் இட் ஈஸி’ பாட்டைப் பார்த்தாலும், அவர்தான் ஞாபகத்துக்கு வருவாரு. இதைப் படிக்கிறப்போ, கண்டிப்பா அவருக்குக் கோபம் வரும். என்ன செய்றது சார்... டேக் இட் ஈஸி பாலிஸிதான்!
இதே மாதிரி இன்னொரு காமெடி, மகாபாரதம் நாடகம் போடறப்போ நடந்தது. எங்க பாட்டி வீடு காஞ்சிபுரத்துல இருக்கு. லீவுக்கு அங்கே போயிருந்தேன். அங்கே உள்ளூரு கோயில் திருவிழா. பசங்கள்லாம் சேர்ந்து 'மகாபாரதம்’ நடத்தினாங்க. எனக்கும் அதுல கௌரவ வேடம். அதாவது, கௌரவர்கள்ல ஒருத்தரா வேடம். 'ஏன்டா, எனக்கு அர்ச்சுனன், கண்ணன் வேஷம் ஏதாவது தாங்கடா’ன்னேன். 'அதெல்லாம் உள்ளூர் பசங்களுக்குத்தான். வெளியூர் பசங்களுக்கு இதுவே பெருசு. நீ நடிக்கலைன்னா சொல்லு... நிறையப் பேரு க்யூவுல நிக்குறாங்க’ன்னு மிரட்டுனாங்க. 'பயபுள்ளைக சிரிக்காம ஸீன் போடுறாங்களே’ன்னு கௌரவர்கள்ல ஒருத்தரா கூட்டத்தோடு கூட்டமா கும்மி அடிக்க ஓ.கே. சொல்லிட்டேன்.
நாடகம் நடக்குற அன்னிக்கு கண்ணன் வேஷத்துல நடிக்கிற சுரேஷ், ஒலிம்பிக் மைதானத்தை ஒன்பது ரவுண்ட் அடிச்ச மாதிரி டயர்டா இருந்தான். திருவிழா சமயத்துல அம்மனுக்குக் கூழ் காய்ச்சி ஊத்துவாங்கள்ல. இவன் முதல் நாளு கம்பங்கூழையும்
கருவாட்டுக் குழம்பையும் கரைச்சுக் கரைச் சுக் குடிச்சிருக்கான். ஓசியில கொடுத்தா பாய்சனைக்கூட பல்லு படாமக் குடிக்கிற பயலுவளாச்சே! கூழுன்னா கேக்கவா வேணும்? மறுநாள் வயிறு பிச்சுக்கிச்சு. சாயங்காலம் நாடகம் போடணும். ஆக்ஷன் பண்ண வேண்டியவன் லூஸ்மோஷன்ல இருக்கான்.
'டேய்... நம்ம சுரேஷ§க்கு உடம்பு சரிஇல்லை. நான் வேணும்னா கண்ணனா நடிக்கிறேன்’னு நேரம் பார்த்து நூல் விட்டேன். ஊஹூம். 'நான்தான்

கண்ணன். நீ வெளியூரு’ன்னு அப்பவும் விடாப்பிடியா இருக்கான் சுரேஷ். 'ஏன்டா, நான் என்ன விசா எடுத்து ஃபாரின்ல இருந்தா வந்தேன். 40 கிலோ மீட்டர் தாண்டிப்போனா பல்லாவரம். ஏதோ, பாண்டி நாட்டுல இருந்து படையெடுத்து வந்த மாதிரியும், இவனுங்க சோழ வம்சத்தோட கடைசி வாரிசு மாதிரியும் கலாய்க்கிறாய்ங்களே’ன்னு கோபம்.
திரௌபதியா நடிக்கிற சாமிக்கண்ணு ஏற்கெனவே ரெண்டு சேலையை மேலே போர்த்தியிருந்தான். துச்சாதனன் துகில் உரியணும். அப்பால கண்ணனா நடிக்கிற சுரேஷ், மேல இருந்து திரௌபதி மேலே சேலையைத் தூக்கிப் போடணும். இதான் ஸீனு. துச்சாதனன் முதல் சேலையை உரிஞ்சுட்டான். திரும் பிப் பார்த்தா ஸ்பாட்ல 'கண்ணன்’ சுரேஷைக் காணோம். வயித்தைக் கலக்கி திரும்ப பாத்ரூமுக்குப் போயிட்டான். துச்சாதனன் ரெண்டாவது சேலையை இழுக்க ஆரம்பிச்சிட்டான். 'வா... வா... வா... கண்ணா வா’ன்னு இங்க இவனுங்க சைலன்ட்டா பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கானுங்கோ.
திரௌபதியா நடிச்ச சாமிக்கண்ணுவும், 'கண்ணன் வருவான்... காட்டன் சாரி தருவான்’னு நம்பிக்கையில, 'இழுத்துக்கோ, இழுத்துக்கோ... அண்ணாச்சி சேலையை இழுத்துக்கோ’ன்னு விளம்பரத்துல வர்ற சினேகா மாதிரி நின்னுட்டு இருக்கான். ஆனா, கடைசி வரை நம்ம 'கண்ணன்’ வரவே இல்லை!

சடார்னு அந்த துச்சாதனன் சேலையை உருவினான், சாமிக்கண்ணுக்கு கடைசி நம்பிக்கை யும் போச்சு. கடைசித் துணியும் போச்சு! அப்படியே ப்ளேட் திரும்பி சுடர்மணி பனியன், ஜட்டி விளம்பர மாடல் மாதிரி முண்டா பனியன், மூணு மீட்டர் ஜட்டியோடு நிக்கிறான். கூட்டத்துல விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனாலும், நம்ம சாமிக்கண்ணு திரௌபதி அசரலையே. அடிச்சான் பாருங்க ஒரு 'பஞ்ச்’!
'கண்ணா... உன் கருணையே கருணை. எப்படியும் நான் பெண்ணாக இருக்கும் வரை இந்த கௌரவர்கள் என்னைக் கௌரவமாக வாழ விட மாட்டார்கள். துரத்தித் துரத்தி தொல்லை கொடுப்பார்கள் என்பதால், என்னை ஆணாகவே மாற்றிவிட்டாயே!’ அப்படின்னு கண்ணை மூடி கையெடுத்துக் கும்பிட்டான். அசந்துபோயிட்டோம் நாங்க. கூட்டத்துலயும் எல்லோரும் சாமிக்கண்ணுவோட சமாளிஃபிகேஷனைப் பாராட்டித் தள்ளிட்டாங்க.
ரொம்ப நாள் கழிச்சு, சாமிக்கண்ணுவை ஒரு ஹோட்டல்ல பார்த்தேன். பழைய மகாபாரதத்தை நினைச்சு விழுந்து விழுந்து சிரிச்சுட்டு இருந்தோம். அப்போ நான் கேட்டேன், 'ஆமாடா சாமிக்கண்ணு... திரௌபதி ஆம்பளையா மாறிட்டா... இந்த பாண்டவர்கள் எல்லாம் தோஸ்தானா தானா?’
(இன்னும் கலாய்ப்பேன்)