பேப்பர் ரோல் பென் ஸ்டாண்ட்! வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஆ.முத்துக்குமார்
''ஒரு பென் ஸ்டாண்ட் இருந்தா, அந்த ரைட்டிங் டேபிளோட அழகு நிச்சயம் கூடும். அப்படி ஒரு பென் ஸ்டாண்டைத்தான் இங்க நாம கத்துக்கப் போறோம். இதை ஆர்வமா செய்து உங்க வீட்டிலும் வைக்கலாம், ஆசையா செய்து மத்தவங்களுக்கும் பரிசளிக்கலாம், நேர்த்தியா செய்து விற்பனைக்கும் கொடுக்கலாம்...'' என்று சொல்லும் சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்த 'புவனாஸ் கிரியேட்டிவ் வேர்ல்ட்’ உரிமையாளர் புவனேஸ்வரி, செய்முறையில் இறங்கினார்.
தேவையான பொருட்கள்:
கார்ட்போர்டு பேப்பர் ரோல், நோட்டு புத்தக அட்டை, ஃபெவிக்கால், பிரஷ், ஹேண்ட்மேடு பேப்பர், கத்தரிக்கோல், கடல் சிப்பி மற்றும் சோழிகள், பென்சில்.

செய்முறை:
படம் 1: முதலில் கார்ட்போர்டு பேப்பர் ரோலை, ஹேண்ட்மேடு பேப்பர் மீது படுக்கை வாக்கில் வைத்து, அதன் இரண்டு வாய்ப்புறங்களிலும் 1/2 இன்ச் விட்டு பென்சிலால் மார்க் செய்யவும்.
படம் 2: கார்ட்போர்டு பேப்பர் ரோலை, ஹேண்ட் மேடு பேப்பரில் வைத்து உருட்டி, ஒரு சுற்றுக்குத் தேவையான அளவை மார்க் செய்துகொள்ள வும்.
படம் 3: பென்சிலில் மார்க் செய்த அளவுகளுக்கு ஏற்ப (நீளம் மற்றும் அகலம்) ஹேண்ட்மேடு பேப்பரை வெட்டிக்கொள்ளவும்.
படம் 4: ஃபெவிக்காலை ஹேண்ட்மேடு பேப்பர் முழுக்க தடவவும்.
படம் 5: இதன் மீது கார்ட்போர்டு பேப்பர் ரோலை வைத்து உருட்டி, மடிப்புகளின்றி ஒட்டவும். இப்போது, இருபுறமும் 1/2 இன்ச் அளவுக்கு ஹேண்ட்மேடு பேப்பர் வெளியில் நீண்டிருக்கும்.
படம் 6: ஒருபுறத்தில் நீண்டுள்ள 1/2 இன்ச் பேப்பரை படத்தில் காட்டியுள்ளதுபோல செதில்களாக வெட்டிக்கொள்ளவும்.
படம் 7: ஒருபுறத்தில் நீண்டிருக்கும் செதில்களை ரோலின் உட்புறமாக மடித்து ஒட்டவும். இதுதான் ஸ்டாண்டின் மேற்புறம்.


படம் 8: நோட்டு புத்தக அட்டையின் மீது, இந்த பாகத்தை வைத்து, அதன் அவுட்லைனை பென்சிலால் வரைந்துகொள்ளவும்.
படம் 9: வரைந்த பாகத்தை வெட்டி எடுக்கவும்.
படம் 10: வெட்டி எடுத்த பாகத்தின் விளிம்பு முழுவதும் ஃபெவிக்கால் தடவி, கார்ட்போர்டு பேப்பர் ரோலின் அடிபாகத்தில், உள் பக்கமாக வைத்து ஒட்டவும்.
படம் 11: வெளியில் நீண்டிருக்கும் 1/2 இன்ச் அளவு ஹேண்ட்மேடு பேப்பரை, செதில்களாக வெட்டி, அதில் ஃபெவிக்கால் தடவவும்.
படம் 12: இதை உட்புறமாக மடித்து ஒட்டவும்.
படம் 13: ஹேண்ட் மேடு பேப்பரை, ஸ்டாண்டின் அடிப்பாக விட்டத்துக்கு ஏற்ப வெட்டி, ஒட்டவும்.
படம் 14: பேப்பர் ரோலின் வாய்ப்புறத்திலும், அடிப்பாகத்திலும் சோழிகளை ஃபெவிக்கால் கொண்டு வரிசையாக ஒட்டவும்.
படம் 15: நடுவில் சிப்பிகளை பூ வடிவத்தில் ஒட்டி முடித்தால்... அழகானதொரு பென் ஸ்டாண்ட் ரெடி!
நிறைவாக, ''சில நூறு ரூபாய்கள்ல ஆரம்பிக்கலாம் இந்த பென் ஸ்டாண்ட் விற்பனை விலையை!'' என்று சிபாரிசு செய்து முடித்தார் புவனேஸ்வரி.
கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...