வாசகிகள் பக்கம், ஓவியங்கள்: சேகர்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200
மனநலத்தோடு விளையாடாதீர்கள்!

என் தோழியை மருத்துவமனையில் சேர்த் திருந்தபோது, துணைக்காக நானும் அவளுடன் இருந்தேன். அப்போது அவளைப் பார்ப்பதற்காக வந்து சென்ற உறவுக்கார பெண்கள் ஒவ்வொருவரும் பேசியவிதம், அவளை மேலும் பயமுறுத்துவதாக இருந்தது. அவர்களில் ஒருவர்,”போயும் போயும் இந்த ஹாஸ்பிடல்தானா கிடைச்சுது? இது ராசியில்லாதது...'' என்ற ரீதியில் பேசிக்கொண்டே போக, தோழியின் முகத்தில் அச்ச ரேகைகள்.
நைஸாக அந்தப் பெண்ணை வெளியில் இழுத்துவந்த நான், ''நீங்க ஆறுதல் சொல்ல வந்தீங்களா... இல்ல பயமுறுத்த வந்தீங்களா?’' என்று சற்று கோபமாகவே கேட்க, அவர் 'கப்சிப்’!
உறவினர்களே, உடல்நலம் குன்றியவர்களின் மனநலத்தோடு விளையாடாதீர்கள்... ப்ளீஸ்!
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி
ஓட்டுநர் நடத்திய இனிய பாடம்!

இந்தக் கோடை விடுமுறையில் உறவினர் களோடு சுற்றுலா பஸ்ஸில் பயணம் செய் தோம். டிரைவரிடம் புதுப்படங்களின் டி.வி.டிக்களைப் போடுமாறு குழந்தைகள் கேட்டுக்கொண்டனர். அப்போது, ''நாம் செல்வது ஊட்டி, கொடைக்கானலுக்கு. செல்லும் வழியில் பூத்துக் குலுங்கும் மலர்கள், தேயிலை மணம், மலைகளுக்கு இடையே ஓடிவரும் அருவிகள், உயரமான மரங்கள், யூகலிப்டஸ் மணம்... இவை எல்லாவற்றையும் ரசிக்க வேண்டும். திரைப்படங்களை எல்லாம் வீட்டில்கூட பார்த்துவிட முடியும். இயற்கை அழகை சுற்றுலா சமயத்தில் மட்டுமே நேரடியாக ரசிக்க முடியும்'' என்று, குழந்தைகளின் மொழியில் அழகாகச் சொன்னார் டிரைவர். குழந்தைகளும் ஏற்றுக்கொண்டனர்.
நல்ல விஷயங்களை, சொல்லும்விதத் தில் சொன்னால், நிச்சயம் இளைய தலை முறையினர் ஒப்புக்கொள்வார்கள் என்பதை உணர்த்திய பஸ் டிரைவருக்கு நன்றி!
ஜி.விஜயலட்சுமி, கும்பகோணம்

அபத்த ஆலோசனை... அறவே தவிருங்கள்!
என் உறவுக்காரப் பெண்ணுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் கிட்டாமல் இருந்தது. அவளுடைய பாட்டி இறந்தபோது, அவரை கடைசியாக குளிப்பாட்டிய தண்ணீரைப் பிடித்துக் குடித்தால் சீக்கிரம் குழந்தை பிறக்கும் என்று பலரும் அந்தப் பெண்ணை வற்புறுத்த... ’திகீர்' என்றாகிப் போனது அவளுக்கும்... எனக்கும்.
”மிகவும் பிற்போக்குத்தனமான, சுகாதாரமற்ற இத்தகைய விஷயங்களை எல்லாம் இந்தக் காலத்திலும் நம்பிக் கொண்டிருக்கிறீர்களே'' என்று கடிந்து கொண்டோம். இதையெல்லாம் ஏற்கவே முடியாது என்று மறுத்துவிட்டாள் தோழி. பெரும்பாலானவர்கள்... எங்களை வேண்டா வெறுப்பாகவே பார்த்தார்கள் அந்த சமயத் தில்.
ம்... இதுபோன்ற அபத்தங்களை எல்லாம் என்றுதான் விட்டொழிப்பார்களோ!
பின்குறிப்பு: என் தோழி, குழந்தைகள் பெற்று, குதூகலமாக தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
இந்திராணி தங்கவேல், மும்பை