ரீடர்ஸ்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200
இதுதாண்டா சர்வீஸ்!
சமீபத்தில் என் செல்லுக்கு 'டாப் அப்’ செய்வதற்காக ரீ-சார்ஜ் செய்யும் இடத்துக்குச் சென்றேன். கடைக்காரரிடம் ''110 ரூபாய்க்கு 'டாப் அப்’ பண்ணுங்க'' என்று கூறி, செல் நம்பரை சொல்ல ஆரம்பிக்கும்போதே ''வேண்டாம்மா... பேப்பர்ல எழுதிக் கொடுங்க. நான் பண்ணிடுறேன்'' என்றார்.

சொன்னபடியே செய்தேன். ''கடைக்கு வர்றவங்க எல்லாரும் நல்லவங்கனு சொல்ல முடியாது. யாராவது சமூகவிரோதிங்க காதில் உங்கள் நம்பர் விழுந்தால், உங்களுக்கு பிரச்னை வரலாம். சிலசமயம் நீங்கள் சொல்ற நம்பர் என் காதில் தவறா விழுந்து, வேற ஒருத்தருக்கு ரீ-சார்ஜ் ஆகற வாய்ப்பும் உண்டு. அதனாலதான் எழுதிக் கொடுக்க சொன்னேன்'' என்றபடியே ரீ-சார்ஜ் செய்தார்.
வெறுமனே காசுக்காக வேலை செய்யாமல், செய்யும் வேலையில் சிரத்தையும், வாடிக்கையாளரிடம் அக்கறையும் காட்டிய அந்த கடைக்காரருக்கு சபாஷ் ப்ளஸ் நன்றி தெரிவித்து வந்தேன்.
- அமுதா அசோக்ராஜா, திருச்சி
காலணி காவல்!
வெகுநாட்களுக்குப் பிறகு தோழி வீட்டுக்குச் சென்றேன். வீட்டு வாசலில் சாக்ஸுடன் இரண்டு ஷூக்கள் இருக்க, 'கணவர் இன்னும் ஆபீஸ் போகவில்லையோ’ என்கிற தயக்கத்துடன் அழைப்பு மணியை அழுத்தினேன். வரவேற்ற தோழியிடம் ''இன்று உன் கணவருக்கு விடுப்பா?'' என்று வினவ, ''இல்லையே... வேலைக்குப் போயிட்டார்'' என்றாள். ''ஷூ ரெடியா இருக்கே அதனால கேட்டேன்...'' என்று நான் இழுக்க, ''அது பழைய ஷூ... 24 மணி நேரமும் அங்கேதான் இருக்கும். வீட்டில் ஆள் இருக்காங்கங்கிற தோற்றத்தை ஏற்படுத்துறதுக்காக விட்டு வெச்சுருக்கேன். அப்பப்ப சுத்தமும் பண்ணி வைப்பேன். எல்லாம் ஒரு ஒரு எக்ஸ்ட்ரா சேஃப்டி!'' என்றாள் தோழி.
காலணியைக்கூட காவலர்களாக மாற்றியிருக்கும் தோழியின் சமயோஜித புத்தி சூப்பர்தானே?!
- கவிதா, மதுரை
ஸ்பெல்லிங் முக்கியம் தோழியரே..!
உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டது. டாக்டர் பரிசோதித்துவிட்டு சிலபல டெஸ்ட்கள் எடுக்கச் சொன்னார். லேப் மற்றும் ஸ்கேன் என டெஸ்ட் ரிப்போர்ட் வந்தது. அவற்றில் ஒவ்வொன்றிலும் என் பெயரின் ஸ்பெல்லிங்க் ஒவ்வொரு மாதிரி இருந்தது. அப்போது அது பெரிய தவறாக தெரியவில்லை. சிகிச்சை முடிந்து, பில்லை இன்ஷூரன்ஸுக்காக அனுப்பியபோது, எங்கள் இன்ஷூரன்ஸ் அதிகாரி. ''என்னம்மா... ஒவ்வொன்றிலும் பெயர் வெவ்வேறு மாதிரி இருக்கிறதே... ஒரேமாதிரி இருக்க வேண்டுமே!'' என்றார். ''நான் பொறுப்பு எடுத்துக்கொண்டு, இந்தத் தடவை பில் கிளெய்ம் ஆக ஏற்பாடு செய்கிறேன். இனி, அனைத்து பேப்பர்களிலும் ஒரே மாதிரியாக பெயர் மற்றும் முகவரி இருக்குமாறு பார்த்து வாங்குங்கள்'' என்று அறிவுறுத்தினார். ஆகவே தோழிகளே... ஆவணங்களை வாங்கிக்கொள்ளும்போது, எல்லா இடத்திலும் நம் பெயர், இதர விவரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். இல்லாவிட்டால், அநாவசியமாக பண இழப்பு ஏற்பட நேரிடலாம்.
- மகாலக்ஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி