என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

வீழ்வே னென்று நினைத் தாயோ?

சி.மகேந்திரன்ஓவியங்கள் : ராஜ்குமார் ஸ்தபதி

##~##

சிறைபட்ட எவரும் விடுதலை பெறுவ தில் தீவிரமாக இருப்பார்கள். இதில் தப்பித்துச் செல்லுதலும் ஒன்று. தப்பித்துச் செல்லுதல் பற்றிய திட்டங்கள், மெனிக் ஃபார்ம் முகாமிலும் பிறந்துகொண்டே இருந்தன. இதில் வேடிக்கை என்னவெனில், பெண்கள்தான் கூடுதலாகத் தப்பிக்க முயற்சி செய்துகொண்டு இருந்தார்கள். பெண்களின் இந்த மன நிலைக்குக் காரணம், எப்படியாவது தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.

வீழ்வே னென்று நினைத் தாயோ?

நாளடைவில் குழந்தைகளின் பாதுகாப்புபற்றிய அச்சம், முகாம்வாசிகளிடம் இன்னும் கூடுதலானது. குழந்தைகளைக் கொல்லும் சதி நடப்பதாக முன்னர் எழுந்த சந்தேகங்கள் முகாம் முழுவதும் பரவின. குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற, தப்பிச் செல்லும் முடிவுக்குப் பலர் வந்தனர். இது குறித்த திட்டங்கள் சிலவும் இவர்களிடம் இருந்தன. திட்டங்கள் அனைத்தும், மரணத்தோடு விளையாடுதலைப்போன்று இருந்தது. குழந்தைகளைச் சுமந்துகொண்டு  தப்பித்தல் அத்தனை எளிதானது இல்லை. சுருள் கம்பிகள், அடுக்கு அடுக்காக நீண்டு செல்லும் முள் கம்பிகள் கூட்டத்தை முதலில் கடக்க வேண்டும். இதன் பின்னர், ராணுவத்தினரின் கழுகுக் கண்களில் இருந்து தப்பிக்க வேண்டும். இதைத் தவிர, பல்வேறு கோபுரக் கண்காணிப்புகளும் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் கடந்து எப்படித் தப்பிப்பது? பல மாதங்கள் புயலில் அலைக்கழிந்து போன, சிறு படகைப்போல, ராணுவத்தின் விரட்டுதலில் ஓடி ஓடிக் களைத்து, பின்னர் முள்ளி வாய்க்கால் நெருப்பில் இருந்து, உயிர் பிழைத்தவர்கள் இவர்கள். மனதள வில் தப்பிவிடலாம் என்ற உறுதி இருந்தா லும், பலத்தை உடல் முற்றாக இழந்து இருந்தது.  

ஆரம்பத்தில் இருந்த நிலையில் இருந்து, மெனிக் ஃபார்ம் முகாமிலும் சிறிது மாற்றம் ஏற்படத் தொடங்கி இருந்த காலம் அது. முகாம்வாசிகளைப் பார்க்க வரும் உறவுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. பெருகி வந்த மக்கள் கூட்டத்தை, ஒரு கட்டத்தில் ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆத்திரம், கோபம், விசும்பல், அழுகுரல் என்ற வேதனைத் துயரம், முள் வேலியைச் சுற்றி, நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. 'முள்ளி வாய்க்காலில் இறந்தவர்களைப்போலத்தானே நமது உயிரும், அதுவும் இங்கேயே போனால் போகட்டுமே’ என்ற முடிவுக்கு வந்தவர்களைப்போலத் தெரிகிறார்கள்.

வீழ்வே னென்று நினைத் தாயோ?

வெகு தொலைவில் இருந்து வந்த இவர்கள், நாள் கணக்கில் காத்து இருந்தார் கள். வேறு வழி இல்லாமல் முள்வேலிகளைச் சுற்றி வட்டமிடத் தொடங்கிவிட் டார்கள். இந்தச் சூழலில் முகாம் வாசிகளும், தங்கள் உறவினர்கள் அல்லது, தெரிந்தவர்கள் யாராவது வந்திருக்கிறார்களா என்ற ஏக்கத்தோடு முள்வேலியின் ஓரங்களில் காத்துக்கிடப்பதை வழக்கமாகக் கொண்டுவிட்டனர்.

நாட்கள் செல்லச் செல்ல... முள்ளி வாய்க்கால் பேரழிவு, உலக மனசாட்சிக்குள் புகுந்துவிட்டது. மனித உரிமை அமைப்புகள், ஐக்கிய நாடுகளின் சபையில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி, கண்டனங்களைத் தெரிவித்தன. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் மீதும், கண்டனங்கள் எழுந்தன. இதைப்போலவே இந்தப் பேரழிவு, புலப்பெயர்வில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. ஈழத் தமிழர்கள், பல ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றைய புவிப் பந்தின் எல்லா நாடுகளிலும், குடி உரிமை பெற்றுவிட்டனர். தங்கள் பண்பாட்டு அடையா ளங்கள், எதனையும் சிதைத்துக்கொள்ளா மல், அங்கு உள்ள அரசியல் கட்சிகளில் முக்கியத் தலைவர்களாகவும் வளர்ச்சி பெற்று வருகின்றனர். மருத்துவம், சட்டம், கல்வி, தொழில், வியாபாரம், தொழில்நுட்பம் என்று அனைத்து நிலைகளிலும் தங்கள் அடையாளங்களை நிலைநிறுத்திக்கொண்டு விட்டனர்.

வீழ்வே னென்று நினைத் தாயோ?

பல்லாயிரக்கணக்கான கி.மீட்டர்களுக்கு அப்பால் இருந்து புலம்பெயர்ந்த இந்த ஈழத்தின் உறவுகள், தங்கள் உறவுக்காக வாய்விட்டுக் கதறிய கதறல் சத்தம், அந்த நாடுகளின் மலைகளில் மோதி எதிரொலித்து, சமவெளி எங்கும் வேதனை உணர்வு களைப் பெருக்கெடுக்கச் செய்தன. இது உலக சமுதாயத்தின் கவன ஈர்ப்பாகவே அமைந்தது. இந்தத் தாக்கம் மெனிக் ஃபார்ம் முகாமிலும் மெள்ள எதிரொலித்து, பின்னர் வேகம் எடுக்கத் தொடங்கியது. சர்வ தேச ஊடகங்கள் சிலவற்றை அனுமதிக்க வேண்டிய அவசியம் இதன் மூலம், இலங்கை அரசுக்கு ஏற்பட்டது.

கபடதாரியான ராஜபக்ஷேவுக்கு, மெனிக் ஃபார்ம் முகாமில், ஒரு சிறு பகுதியைக் காட்சி ஊடகங்களுக்கான தனி அரங்கமாக மாற்றிக்கொள்வதில் எந்தவிதமான சிரமமும் இல்லை. அவலமும் வேதனையும் நிறைந்து விம்மி விம்மி அழும் முகங்கள் மூடிமறைக் கப்பட்டு, மகிழ்வும் ஆறுதல் அடைந்து விட்டதாகவும் காட்டிக்கொள்ளும் நடிப்பு முகங்கள், ஊடகங்களுக்காக முகாமில் தயாரிக்கப்பட்டன. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. மனித உரிமைக் குற்றங்களில் இருந்து, இலங்கை அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பது முதல் காரணம். மெனிக் ஃபார்ம் முகாம் அந்நிய நாடுகளின் உதவியைப் பெற்றுத் தரும் அட்சய பாத்திரம். பெற்ற உதவிகளால், முகாமின் அவலங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு, எல்லோரும் நலமுடன் வாழ்வதான ஊடகக் காட்சிகளை, காட்ட வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுவிட்டது என்பது இரண்டாவது காரணம். இதன் மூலம் ராஜபக்ஷேவின் ஆட்சியால், புதிய வருவாயைத் திரட்டிக்கொள்ள முடியும். தமிழ் மக்களின் அவலங்களையும் மரணங்களையும்கூட விற்பனை செய்து, வருவாய் ஆக்கிக்கொள்ளவும் முடியும்.

இந்தப் புதிய சூழலில், முகாம் வாசிகளை அடிப்பது, சுடுவது என்பது ராணுவத்துக்கு இயலாமல் போய்விட்டது. முகாமில் ஊடகங்களுக்குத் தயாரித்துக் கொடுக்கும் பாவனைக் காட்சிகளைப்போலவே, ராணுவமும் அடிப்பதைப்போலவும் சுடுவ தைப்போலவும் பாவனைகளைச் செய்யத் தொடங்கின. ராணுவத்தின் பாவனைகளும் அதற்கான காரணங்களும் மக்களுக்கு எளிதில் புரிந்துவிட்டது. ராணுவம் நடத் தும் பாவனைகளைப்போலவே மக்களும் ஓடுவதுபோலவும், பயப்படுவதுபோலவும் பாவனைகளை செய்யத் தொடங்கினர். அப்போதுதான் நெஞ்சத்தை நடுங்க வைக்கும் அந்தச் செயல்கள் நிகழத் தொடங்கின. தாங்கள் தப்பிக்க முடியாது என்பதை அனுபவத்தில் அறிந்துகொண்ட பெண் மக்கள் சிலர், தங்கள் குழந்தை களுக்காக, அந்தச் செயல்களை செய்யத் துணிந்துவிட்டனர்.

கூடுதலாகி வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, புதிய வாய்ப்புகளை முகாம்வாசிகளுக்கு உருவாக்கித் தந்தது. முகாம்வாசிகளைக் கண்காணிப்புக்கு இடையே நின்று பார்க்கும் விசேஷப் பகுதிகள் என்றில்லாமல், முள்வேலிக்கு அப்பால் எல்லா இடங்களில் இருந்தும் பார்க்கும் வாய்ப்புகள் இதனால் கிடைத்தன. இந்த வாய்ப்புகள் மூலம் உறவுகளை வேலிக்கு அருகில் சென்று பார்க்கலாம். வெளியில் நிற்பவர்கள், தான் கொண்டுவந்த பொருட்களையும் பிரத்யேக ஏற்பாட்டில் கொடுத்து அனுப்பலாம். தேவைப்படுமாயின், இவர் களைத் தப்பிக்கவைத்துச் செல்லவும் உதவலாம். முகாம்வாசிகளுக்கு இது அரசாங்கம் வழங்கிய சலுகை இல்லை. லஞ்சம் அமைத்துக்கொடுத்த தனிப் பாதை. இதற்கெல்லாம் இயந்திரத் துப்பாக்கி களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். ஆட்களைப் பார்க்க, பொருட்களைக் கொடுக்க, முகாம்வாசிகளை எந்தப் பிரச்னையும் இல்லாமல் உடன் அழைத் துச் செல்ல... என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இந்தச் சூழலில்தான், அந்த நிகழ்வும் நடந்தது. ஆரம்பத்தில், இந்தச் செயலை அந்தப் பெண் ஏன் செய்தாள் என்பது யாருக்கும் புரியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் முள்வேலிக்கு வெளியே, பெண் ஒருத்தி தன் குழந்தைகளைத் தூக்கி வீசி எறிந்துவிட்டாள். எதிர்பாராத இந்த திடீர் செயலைப் பார்த்தவர்கள் துடித்துப்போனார்கள். குழந்தை முள்வேலியில் விழுந்துவிடுமோ என்று பதற, வெளியே நின்றுகொண்டு இருந்த அவளின் உறவினர் கள் அந்தக் குழந்தையை, அப்படியே  எச்சரிக்கையுடன் கைகளில் பிடித்துக் கொண்டார்கள். குழந்தையின் அழுகை கூட யாருக்கும் கேட்கவில்லை. குழந்தை, உயிர் பிழைத்துக்கொண்டது.

இந்தச் செய்தி மறைந்தும் ஒளிந்தும் முகாம் முழுவதும் பரவத் தொடங்கியது. மற்ற அன்னையரும் இதைப்போன்றே முயற்சிக்கத் தொடங்கினார்கள். இதில் இரண்டு அபாயங்கள் இருந்தன. கண்காணிப்பில் ஈடுபட்ட ராணுவத்தினர் பார்வையில் விழுந்துவிட்டால், அதைவிட ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. உயிருடன் குழந்தையைக் கொல்வதற்கு ஒப்படைத்ததைப்போல் ஆகிவிடும் இது. தூக்கி எறியப்படும் குழந்தைகள் தவறிப்போய், முள்வேலிக்குள் விழுந்துவிட்டால்? மனப் போராட்டங்களுக்கு இடையேதான், தாய்மார்களால் இதற்கான முடிவை எடுக்க முடிகிறது.

உறவினர்கள் வெளியே இருந்தால், குழந்தைகளை அவர்கள் கையில் போய்ச் சேருமாறு தூக்கி எறியலாம். உறவினர்கள் யாரும் இல்லை என்றால், அந்தத் தாயின் நிலைமை என்ன? கடைசியில் இதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தார்கள். குழந்தையின் இடுப்பில் அதைச் சேர்ப்பிக்க வேண்டிய முகவரியைக் கட்டி, குழந்தையை யாரிடமாவது எறிந்துவிட்டால், இரக்கப்பட்டு அவர்கள் தங்கள் உறவினர்களிடம் சேர்த்துவிட மாட்டார்களா?

- விதைப்போம்...