மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

மன்னராட்சிக்குப் போவோமா?

##~##

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

 மக்களாட்சி போரடிச்சிடுச்சு. மீண்டும் மன்னர் ஆட்சிக்கே போய்விடுவோமா மதன் சார்?

போகலாம்தான்! பிறகு, 'மன்னர் ஆட்சி போரடிச்சுடுச்சு... மக்களாட்சிக்கே போய் விடுவோமா?’ என்று கேட்டால் பிரச்னை. வெளியே வந்த 'டூத் பேஸ்ட்’டை மீண்டும் டியூபுக்குள் அடைக்கிற வேலையாகப் போய்விடும்!

உமா லட்சுமணன், மதுரை-20.

மனிதனுக்கு 20 பால் பற்களே நிலைக்கலாமே... அது விழுந்து அப்புறம் எதற்கு 32 பற்கள்?

ஹாய் மதன் கேள்வி - பதில்

 பால் பற்களை வைத்துக்கொண்டு நீங்கள் வாழ்நாள் முழுக்க க்ரீம், வெண்ணெய், ஐஸ்க்ரீம், பால் மட்டும்தான் சாப்பிட முடியும். முதலில், பிறந்த குழந்தைக்கு எதற்கு தக்குனூண்டு பற்கள்? வழுக்காமல்முலைக் காம்புகளைப் பற்றிக்கொள்வதற்காக!

வயசான பிறகு சகல விஷயங்களையும் சாப்பிடுகிறோம். சோளத்தைச் சாப்பிட, முன்னம் பற்கள், மாங்காய் அல்லது மாமிசத்தைக் கடிக்க கூர்மையான (Canine)பற்கள். உணவை அரைப்பதற்குக் கடை வாய்ப் பற்கள் (Molar) எல்லாம் தேவைப் படுகின்றன. ஆகவே, அதிகபட்சமாக 32 பற்கள். நீங்கள் 'ட்ராகூலா’வாக இருந்தால் எக்ஸ்ட்ரா இரண்டு பற்கள்!

ஜெ.ஸ்வர்ணா, சென்னை-13.

புகழும் அளவுக்குச் சாதனை புரிப வரை 'லைம்லைட்’டில்  - இருப்ப  தாகச் சொல்கிறோம். எலுமிச்சைக்கும் புகழுக்கும் என்ன தொடர்பு?

எலுமிச்சை இல்லை. ஒரு காலத்தில் நாடக மேடையில் திடீர் என அதிக வெளிச்சம் தர வேண்டுமானால், சுண்ணாம்பைக் குவியலாக எரிப்பார்கள். இது 'லைட் ஹவுஸ்’களிலும் பின்பற்றப்பட்டது. சுண்ணாம்புக்கு Lime என்று பெயர். அதான்!

க.குணசேகரன், புவனகிரி.

ஹஜாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறுமா?

கோல் போட்டு ஜெயிப்பதற்கு இது என்ன ஃபுட்பால் மேட்ச்சா? ஒவ்வொரு போராட்டத் துக்கும் பயண நேரம் உண்டு. அண்ணாவின் லோக்பால் சட்டமானால்கூட வெற்றியடைந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. அது வெற்றிப் பயணத்தில் முதல் படிக்கட்டுதான். இன்று ஒரு எளிமையான காந்தியவாதியின் பின்னால் இந்தியாவின் இளைய தலைமுறை ஒட்டுமொத்தமாக அணிவகுத்துவிட்டது. ஆகவே, வெற்றி நிச்சயம்!

ஹாய் மதன் கேள்வி - பதில்

'இப்போது காந்திஜி இருந்திருந்தால், அவரைத் தூக்கி உள்ளே போட்டு இருப்பார் கள். அவர் கொள்கைகள் இன்று எடுபடாது!’ என்றெல்லாம் விரக்தியோடு சொல்பவர்கள் சத்தியாகிரகத்தின் சக்தியைப் பார்த்துப் பிரமித்து நிற்கிறார்கள்!

விஜயலஷ்மி முருகேசன், சென்னை-74.

அண்ணா ஹஜாரே போன்ற காந்தியவாதி இன்னும் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட பின்பு உங்கள் மன நிலை எப்படி இருந்தது?

'பாடுபட்டுக் காத்த நாடு
  கெட்டுப் போகுது
கேடுகெட்ட கும்பலாலே...’
என்றும்
'ஏனென்று கேட்கவே
ஆளில்லை என்பதாலே
தானென்ற அகங்காரம்
தலைவிரித்து ஆடுதடா...’

என்றும் பாடிய பட்டுக்கோட்டையார்

'பொறுமை ஒருநாள்
பொங்கி எழுந்தால்
பூமி நடுங்குமடா!’

என்றும் பாடினார்! என்னுடைய நேற்றைய - இன்றைய மனநிலை இதுதான்!

எஸ்.ஜெயராமன், தஞ்சாவூர்.

உலகத்தில் நிறைய மொழிகள் இருப்பினும் பிரெஞ்சு மொழி கற்பது மிகவும் கௌரவமாகவும் பெருமையாகவும் பேசப்படுகிறது. இதற்கு தனியாக ஏதும் காரணம் இருக்கிறதா?

இட்லிக்குப் பிறகு தோசை பிரபலமாக இருப்பதுபோல ஆங்கிலத்துக்கு அடுத்தபடி பிரெஞ்சு மொழி பிரபலமாக இருக்கிறது. கலை, இலக்கியம், காதல்... எல்லாவற்றிலும் புகழ்பெற்ற நாடு ஃபிரான்ஸ். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியத்தில் பிரெஞ்சு மொழிக்கு இணையாக வேறு எந்த

ஹாய் மதன் கேள்வி - பதில்

மொழியும் இல்லை. 44 நாடுகளில் ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. இரண்டாவதாக பிரெஞ்சு - 27 நாடுகளில். மற்ற மொழிகளின் ஊடுருவல் இல்லாத மொழி பிரெஞ்சு. அதற்கான தடைச் சட்டமே 1911-ல் இயற்றப்பட்டது. தங்கள் மொழியைப்பற்றி தனிப்பட்ட பெருமிதம் பிரெஞ்சு மக்களுக்கு உண்டு. ஆகவே, அதைக் கற்றுக்கொள்பவர்களும் கொஞ்சம் 'பிரெஞ்சு’ ஆக மாறிவிடுகிறார்கள்!

அ.உமர், கடையநல்லூர்.

பணக்காரன் கை கட்டி நிற்பதற்கும், ஏழை கை கட்டி நிற்பதற்கும் என்ன வித்தியாசம்?

   முதலாவது, நடிப்பு. இரண்டாவது, பயம்!