
வாலி, ஓவியம் : மணி
தமிழும் தகவும்!
##~## |
'விசிஷ்டாத்வைதம்’ என விளிக்கப் பெறும், வையம் தழுவிய வைணவ சித்தாந்தத்தை -
எடுத்து முன் சென்ற எம்பெருமானார் எதிராஜர் -
திருவேங்கடமுடையானைத் தரிசிக்கத் திருவுளம் பற்றினார். ஆழ்வார்கள் அய்யிருவரும், ஆதிசேஷன் அம்சம் என்று - ஏறத் தயங்கிய ஏழுமலை மேல் -
தன் தாள் படலாகாது எனத் தவழ்ந்தே ஏறித் தொட்டார் உச்சியை!
அவ் அமயம் -
அவரை எதிர்கொண்டார் -
பெருமாள் பிரசாதமொடு, அவரது தாய் மாமன் பெரிய திருமலை நம்பி!
அகவை அதிகமான அம்மான்; பாதாதிகேசம் மூப்பு மொய்த்திருக்கும் மாதுலன்; இலையுதிர் காலத்து விருட்சம்போல் இருக்கும் தாய் மாமன்!

வயோதிகம் பாராட்டாது அவ் வைணவப் பெரியார், தன்னை வரவேற்க வந்த தண்ணளி கண்டு -
இராமானுஜரின் இதயம் இலேசாகக் கிழிந்தது; கன்னம் வழி கண்ணீர் இழிந்தது!
'என்னை எதிர்கொள்ள, தேவரீர் எழுந்தருள வேணுமா? சிறியார் எவரும் இல்லையா?’ என்று எதிராஜர் வினவ -
'என்னிலும் சிறியாரை இவ் ஏழுமலையில் காணேன்!’ என்று -
பெரிய திருமலை நம்பி, பவ்வியமாய் பதிலிறுத்தார்.
மூவாயிரப்படி குரு பரம்பரையில் நாவாரப் படித்தேன் இவ் வரலாற்றை!
இவ் வரலாறுதான் இன்றளவும் என்னை வழி நடத்திச் செல்கிறது என்பேன்.
'என்னிலும் சிறியார் எவருமிலர்!’ எனும் மணிவாசகத்தை மனனம் செய்து வைத்திருக் கிறது மனம்.
நானென்ன தமிழ் படித்துக் கிழித்தேன்? நான் கற்றது, நாலு காசு பெறாது. ஆயினும், நாலு காசு பெறாத தமிழை வைத்துக்கொண்டு நான் சம்பாதிக்கும் காசுக்கு -
நாற்பத்தைந்தாண்டுக்கும் மேலாக, வருமான வரி கட்டி வருகிறேன்.
கல்லாடமும், காரிகையும் கற்றோர் எல்லாம் மல்லாடிக் கொண்டிருக்கின்றனர் - வாய்க்கும் கைக்கும் எட்டாமல்!
என் மேல் மட்டும் என்னணம் இந்தப் புகழ் வெளிச்சம் பூத்தது?
அதுதான் ஆகூழ்! ஆழாக்குக் கூழ் அற்றவனையும் ஆகூழ் ஆக்கும் - ஆயிரம் வேலிக்கு அதிபதியாக!
எனக்குள் இருக்கும் என்னை - நானே நிறுத்துப் பார்த்து, என் எடை எள்ளற்குரியது என்று கண்டுகொண்டவன் நான்!
நடிகர் திரு.சிவகுமாரின் நாக்கு பூராவும், கம்பனும் கண்ணதாசனும் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்!
கூப்பிட்ட குரலுக்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள் வள்ளுவனும் பாரதியும்!
படத்திற்குரிய வசனங்களைப் பாடம் பண்ணுவதும்; பாடம் பண்ணுவதைவைத்துப் பணம் பண்ணுவதும் மட்டுமே -
பிரதானம் என்று பொழுதைப் போக்கிவிடாமல் -
வாக்கு வங்கியில் வண்ணத் தமிழ் வார்த்தைகளை வைப்பு நிதியாக வைத்துக்கொண்டிருக்கிற ஒரு நடிகனைச் சுமந்த வயிறு - மணி வயிறுதான்!
விரலில் ஓவியம்; குரலில் காவியம்; இதுதான் சிவகுமார் ஜீவியம்!
இதையெலாம் எண்ணுங்கால் - என்னிலும் தமிழ் கற்றோர் ஏராளம் என்பதை நான் ஓர்ந்து நாணுகிறேன்; கற்றோர் சபையில் கூச்சத்தையே, என் கல்லாமைக்குக் கவசமாகப் பூணுகிறேன்!
இப்படி -
இருந்தமிழில்...
நானொரு நிரட்சரகுட்சியாக இருக்கையில் நாலைந்து மாதங்களுக்கு முன் ஒருவர் என் வீடு வந்து -
'தமிழுக்கு நீங்கள் தகவு சேர்த்திருக்கிறீர்கள். உங்களைப் பாராட்டிப் பத்திரமும்; பணம் பதினைந்தாயிரமும் தர விரும்புகிறோம். தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று - ஏவி.எம்.இராஜேஸ்வரி அம்மையார் திருமண மண்டபத்தில் விழா!’

என்று என்னை அன்பொழுக அழைத்தார். அவரது அழைப்பை அடியேன் அவ்வளவு எளிதாக அலட்சியப்படுத்துதல் என்பது ஆகாத காரியம்.
அவர், என் நாற்பதாண்டு கால நண்பர். மற்றும் என் மரியாதைக்குரிய பிரமுகர்.
அவர் - தமிழ்பால் தனக்குள்ள தாளாக் காதலால், ஓர் அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு, எண்ணினாற்போல் நாலைந்து நெருங்கிய நண்பர்களைப் பின் பலமாகக்கொண்டு -
வருடா வருடம் -
எழுத்தாளர்களை இனங்கண்டு, அவர்கள் அயலூரில் இருந்தாலும், தருமமிகு சென்னைக்குத் தருவித்து, மேடையேற்றி அவர்களது மேதைமைக்கு மரியாதை செய்வார்.
தன்வசமுள்ள பொருளை எண்ணாமல் - தமிழ் வசம் உள்ள பொருளை எண்ணும் தருமவான் அவர்.
அரச குடும்பத்தில் அவதரித்தவர்; - ராஜா. சர்.அண்ணாமலைச் செட்டியாரின் பெண் வயிற்றுப் பேரன் அவர்.
அகவை தொண்ணூற்றில் அடியெடுத்துவைத்த பின்னும் - லட்சுமி கடாட்சம் நிறைந்த திருமுகத்தோடு பிறங்கும் லட்சுமி ஆச்சியின் -
இரு புதல்வர்களில் இவர் மூத்தவர். அறிவாற்றலைவைத்துப் பார்க்கையில், இருவரையுமே லட்சுமி பெற்ற சரஸ்வதிகள் எனலாம்.
மூத்தவர் திரு.ப.லட்சுமணன்; இளையவர் திரு. ப.சிதம்பரம்.
பின்னவர், உள்துறை அமைச்சர்; முன்னவர் ஒண்டமிழ்த் துறை மாட்டு ஓவாக் காதல்கொண்டவர்!
மன்னர் மரபினராகிய ப.லட்சுமண னைப் பார்த்தால் - செல்வச் செருக்கும் தெரியாது; செல்வச் செழிப்பும் தெரியாது!
தனத்தில் குபேரர்; மனத்தில் குசேலர்! அவர்தான் நாற்பதாண்டு காலமாக நடத்தி வருகிறார் 'இலக்கியச் சிந்தனை’ எனும் ஏரார்ந்த தமிழ் அமைப்பை; அந்த அமைப்பின் சார்பாகத்தான் என்னைப் பாராட்ட அழைத்தார் திரு.லட்சுமணன் அவர்கள்.
என்னைத் 'தமிழுக்குத் தகவு சேர்த்தவர்’ என்கிறார் அவர்.
தமிழன்றோ -
'இவன் என் மகவு’ - என என் பால் இரக்கம் காட்டி, எனக்குச் சேர்த்தது தகவு!
திரு. லட்சுமணன் அவர்களின் அழைப்பை அவர் வயின் எனக்குள்ள மரியாதை காரணமாக ஏற்றேன்; எனினும் என்னிலும் தமிழ் கற்றோரை நான் எண்ணிப் பார்க்கலானேன்!
1958- டிசம்பர் மாதம். படத்தில் பாட்டெழுதும் வாய்ப்பைத் தேடி -
சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணி யில் 'கெல்லட் ஹைஸ்கூல்’ பக்கத்தில் உள்ள, சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் -
ஐந்து ரூபாய் வாடகை - ஒரு சிற்றறையில் இருந்தேன்.
அமரராகிவிட்ட என் நண்பர் திரு.வி.கோபால கிருஷ்ணன் அவர்கள் ஆதரவில்தான், நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன.
திரு.கோபால கிருஷ்ணன் மிகப் பெரிய மனம் படைத்தவர்; அவர் மனத்திற்கு உவமை சொன்னால் ஆகாயம்கூட அளவிற் சிறியதாக இருக்கும்.
நடிகை பத்மினியோடு 'ஏழைபடும் பாடு’ எனும் படத்தில் நடித்த முதல் கதாநாயகன் அவர்.
'நானே ராஜா’ படத்தில் - திரு.கோபால கிருஷ்ணன் ஹீரோ; திரு.சிவாஜிகணேசன் வில்லன்’.
'கோபி’ என்று சொன்னால் கோடம்பாக்கம் இன்றும் அவரைக் கொண்டாடும்! பரோபகாரி!
'பராசக்தி’ படத்தில் - சிவாஜி ஏற்ற பாத்திரத்தைச் செட்டியார் கோபிக்குத்தான் தர விரும்பினார்.
ஆனால் - கோபியின் தாயார் திருமதி. ஆனந்தம்மாள் -
தன் மகனுக்கு - Post Graduate பரீட்சை இருப்பதால், வந்த வாய்ப்பை மறுதலித் தார்!
கோபிதான், எனக்கு முதல் பாட்டை எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் - அவர் நடித்துக்கொண்டிருந்த 'அழகர் மலைக் கள்ளன்’ எனும் படத்தில்.
கோபிதான் - டைரக்டர் கே.ராம்னாத்திடம் சொல்லி, கண்ணதாசனுக்கும் முதல் பாட்டை எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் - 'கன்னியின் காதலி’ எனும் படத்தில்!
LOOK AT THE IRONY OF THE FATE!
நான் பாட்டு எழுதிய முதல் படத்தின் - கதை; திரைக் கதை; வசனம்; பாடல்கள் என அனைத்துப் பொறுப்பையும் ஏற்றிருந்தவர்.
விரும்பியிருந்தால் என் வரவை ஒப்பாதிருந்திருக்கலாம். ஆனால், அதை அவர் ஒப்பினார். அன்னணம் ஒப்பியதன் மூலம் என் மனத்துள் ஒப்பிலார் ஆனார்.
அவர் பிள்ளையாரை ஏற்காதவர்; ஆனால், எனக்குப் பிள்ளையார் சுழியே அவர்தான்.
அவருடைய தமிழ்ப் புலமை அளப்பரியது. கணக்கற்ற கவிதைகள் காவியங்கள் யாத்தவர்; ஆறாயிரம் குறள் வெண்பாக் களை ஓர் ஆரமாய்க் கோத்தவர்; முத்தமிழில் துறை போன மூத்தவர், எனும் புகழ் பூத்தவர்.
தமிழிசையின் சகல கூறுகளையும் - விரல் நுனியிலும் குரல் நுனியிலும் வைத்திருப்பவர்.
தொன்மைத் தமிழ்க் குடியின் தோற்றத்தை; ஏற்றத்தை; தொய்வை; நைவை - அவர்போல் ஆய்ந்து ஆய்ந்து அறிவிப்பாரை அறியேன் அடியேன். இறையை மறையை மறுப்பவர். வசைச் சொற்களால், வைதீகத்தை வாணலியில் போட்டு வறுப்பவர்.
பிராமணனைப் பிடிக்காத அவருக்குப் பிடித்திருந்தது என்னை. அவர் சபையில் அமர அனுமதித்தார். முதல் பாடல் எழுதினேன். அந்த ஆரம்பம் - பதினையாயிரம் பாடல்களைக் கடந்தும் அவரது வாழ்த்துகளோடு பயணித்துக்கொண்டிருக்கிறது.
அவர் - ரஜினியை வைத்துப் படம் எடுத்து இயக்கியவர்!
இந்தக் கட்டுரையில் அவர் பெயரை நான் - குறிப்பிடுவது அவரது திரையுலக சாதனை யைத் தெரிவிக்க அல்ல!
முத்தமிழில் முற்றும் துறை போன ஒரு மூதறிஞர் என்பதையும் -
அவரல்லவோ, தமிழுக்குத் - தகவு சேர்த்தோரில் தலையாய இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் -
என்பதையும், எந் நாட்டவர்க்கும் பன்னாட்டவர்க்கும் எடுத்தோதத்தான்!
அவர்தான் - டாக்டர். புரட்சிதாசன் M.A., அவர்கள்.
ஒருசமயம் ஏதோ ஒரு சிற்றிதழில் ஒரு கவிஞரின் விருத்தமொன்றைப் படிக்க நேர்ந்தது.
உருவகம்; உவமை; உள்ளீடு - அனைத்திலும் அது என்னை அடித்துப் போட்டது!
அதன் பின், அவரது கவிதைகள் எதில் இடம் பெறினும், அதை வாசிக்கும் ஆர்வம் என் விழிகளில் தொற்றிக்கொள்ளும்.
அவரும் திரு.புரட்சிதாசனைப் போல் ஒரு பெரியார் பிரியர். எழுத்திலும் எண்ணத்திலும் பெரியாரைப் பிரியார்.
எனவே, சமூக சாதி சாடல்களே அவர் விருத்தங்களில் அதிகம் கோலோச்சும்; எளிய சொற்கள்; அதே நேரம் எரி கற்கள்!
வெப்பம்; தட்பம்; செப்பம்; நுட்பம் அனைத்தும் - வண்ணக் கண்ணாடிகள் வழியே பல்வேறு பிம்பங்களைப் பிரதிபலிக்குமே-
KALEIDOSCOPE அந்த மாதிரி, வாசித்து வாசித்து அசை போடுகையில், வெவ்வேறு உணர்வுகளை உமிழும் அவரது விருத்தங்கள்.
எழுதியவர் இன்னாரென்று சொல்லா மல், எவரிடமாவது அவ் விருத்தங்களை வாசிக்கத் தந்தால், வாசித்துவிட்டு -
பாரதிதாசனா? சுரதாவா? முடியர சனா? வாணிதாசனா? என்று வினவக் கூடும்!
அவரது 'கவிதைச் சோலை’யில் புகுந்து நான் வெளியே வருகையில், கம்பநாடன் கூட என் நினைவில் வந்தான்.
இதோ! ஓர் அறு சீர் விருத்தத்தில் அந்தக் கவிஞர் ஆரெனச் சுட்டுகிறேன்.
'ஈழ வேந்தன் என்றே ஆனான்
ஈழத்தை வென்ற அந்த
சோழ வேந்தன்; சோழன் மன்றில்
சோபித்த கம்பன், நூலில்
ஆழ வேந்தன் என்றே ஆனான்;
அன்னோனை நினைவு கூர்ந்தேன்
வேழ வேந்தன் வரைந்து வைத்த
வண்டமிழ் விருத்தங் கண்டே!
வளரும் கவிஞர்களே! நான் வாசிப்பால் வளர்கிறேன்; ஒவ்வொரு நூலும் நூலல்ல; நம்மை மேலேற்றும் நூலேணி!
கவிஞர் நெல்லை ஜெயந்தா சொல்வ தைக் கவனியுங்கள்.
'புத்தகங்களை -
நாம் -
மேலிருந்து
கீழே வாசிப்போம்;
புத்தகங்களோ -
நம்மைக் -
கீழிருந்து
மேலே தூக்கிவிடும்!’
- சுழலும்...