மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 4

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

உண்மையில் காலம் ஒரு மெகா சீரியல் மாதிரிதான் இருக்கிறது.

ரே நேரத்தில் எவ்வளவு பெரிய சர்வாதிகாரியாகவும், காமெடி பீஸாகவும் இருக்கிறது காலம்!

காலையில் தேதித் தாள் கிழிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. ஏதோ ஒரு சீரியல், ஆரம்பித்த முதல் வாரத்தில் பார்த்தது. நேற்று என் கையில் ரிமோட் சிக்கியபோது,  'எபிசோட் 322’ எனப் போட் டார்கள். ஒரு கணம் காலத்தின் வேகத்தை எண்ணி அடி வயிற்றில் அச்சப் பந்து உருண்டது.

''ஏன் அண்ணி... இவங்க லவ் பண்ணிட்டுத்தானே இருந்தாங்க. இப்ப ஏன் இப்பிடிச் சண்டை போட்டுச் சவால் விட்டுட்டு இருக்காங்க?'

'' 'என்ன தம்பி நீங்க... அவங்க கல்யாணம் பண்ணி, புள்ளை பெத்து, டைவர்ஸ் பண்ணி, இப்போ எதிர் எதிரா பிசினஸ் பண்ணிட்டு இருக்காங்க... இப்போ கம்பெனி ஏலம் எடுக்கறதுல ஒரு பிரச்னை...'

நான் அவசரமாக 'ஹெட்லைன்ஸ் டுடே’ மாற்றி அண்ணா தாத்தா உண்ணாவிரதத்தைப் பார்க்க ஆரம் பித்தேன்!

உண்மையில் காலம் ஒரு மெகா சீரியல் மாதிரிதான் இருக்கிறது. கண்ணெதிரே எதையெதையோ கலைத்துப் போட்டுவிட்டு, ஒன்றும் அறியாத சிறு பிள்ளை மாதிரி ஓடி ஒளிந்து விளையாடிக்கொண்டே இருக்கிறது அது. எதை வெறுத்தோமோ, அதை விரும்புகிறோம். எதை விரும்பினோமோ, அதை வெறுக்கிறோம். உலையாகிக் கொதிக்கும் அனுதினங்களின் யதார்த்தங்களில் இருந்து நிறைவேறாத ஆசைகளும் லட்சியங்களும் ஆவியாகிக்கொண்டு இருக்கின்றன. மலையடிவாரங்களின் காதல் கனவுப் பாடல்கள் முறிந்து, குடும்பப் பாடல்களும் சோக கீதங்களும் நீள்கின்றன. நரையோடிய காதலிகள், நம்ப முடியாத மரணங்கள், விசித்திரமான அரசியல் மாற்றங்கள், நினைத்துப் பார்க்காத உறவு முடிச்சுகள், வளர்ச்சிகள், வீழ்ச்சிகள்... எல்லாவற்றையும் நிகழ்த்தி விட்டு, நட்சத்திரங்களைப்போல உதிர்ந்துகொண்டு இருக்கின்றன நாட்கள்!

வட்டியும் முதலும் - 4

போன வாரத்தில் ஒருநாள் என் மொபைலில் ஏதோ வெளி மாநில எண். எடுத்தால்...  

''சார், நான் அமரன் பேசுறேன்...'

''என்னங்க அமரனா... யாருங்க?'

''என்ன சார், அதுக்குள்ள மறந்துட்டீங்களா... கடலூர் ஜெயில்லேர்ந்து உங்களை மீட் பண்ண வந்தேனே சார்... என் கவிதையெல்லாம்கூடக்கொண்டு வந்து தந்தேனே...'

''ஐயோ ஸாரி அமரன்... நல்லா இருக்கீங்களா?'

''ஃபைன் சார்...'

அண்ணா சாலை தேநீர்க் கடை ஒன்றில் ஆறு வருடங்களுக்கு முன்பு அமரனைப் பார்த்த காட்சி நினைவில் ஆடுகிறது. கடலூர் சிறையின் ஆயுள் கைதியான அமரன் அப்போது பெயிலில் வந்திருந்தார். தான் எழுதிய கவிதைகளை விகடனில் பிரசுரிக்க முடியுமா எனக் கேட்டு, விகடன் நிருபராக இருந்த என்னைப் பார்க்க வந்திருந்தார். தஞ்சாவூர்ப் பக்கம் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அமரன். பங்காளிக்கும் இவரது குடும்பத் துக்கும் சொத்துத் தகராறு. ஒருநாள் தகராறு முற்றி, இவரது அப்பா, சித்தப்பாஎல்லாம் சேர்ந்து அருவாள் சுத்த, சம்பவம் பங்காளி கொலையில் முடிந்துவிட்டது. குடும்பமே ஓடி ஒளிய, 19 வயதான அமரனையும் கேஸில் குற்றவாளியாக்கி, கோர்ட்டில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது போலீஸ்.

விசாரணைகளுக்குப் பிறகு, அமரனுக்கு ஆயுள் தண்டனை கிடைத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இளமை முறுக்கேறும் 19 வயதில் ஆயுள் கைதியாகி சிறைக்குப் போவது எவ்வளவு பெரிய கொடுமை... வெள்ளை வேட்டியும் சட்டையுமாக தஞ்சாவூர் பக்கம் சைட் அடித்துக்கொண்டு திரிய வேண்டிய வயதில், சிறைக்குள் புழுங்கும் வாழ்க்கை ஒருவனுக்கு ஏன் விதிக்கப்படுகிறது? கல்வி, காதல், லட்சியங்கள் என எல்லாமும் வந்தடையும் வசந்தங்களின் காலத்தில், சிறைக் கொட்டடி யின் கடுங்கோடையில் வாட வேண்டிய தாகிவிட்டது அமரனுக்கு. ஆனால், அமரன் தடம் புரளவில்லை.

சிறைக்குள் இன்னும் குற்றங்கள் கற்கும், மீள முடியாத போதை வஸ்துக்களுக்கு அடிமையாகும், கூலிப் படைகள் தொடர்பில் வழி மாறும் ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அமரன் மாறவில்லை. சிறைக்குள் சிறு தொழில் கற்றார். யோகா பயின்று மற்ற கைதிகளுக்கும் சொல்லித்தந்தார், கவிதைகள் எழுதினார்.

சிறையில் இருந்து வரும்போது அமரனுக்கு 31 வயது. இன்னும் தீர்க்கமான, நல்ல மனிதராக உலகம் பார்த்தார். ரிலீஸான பிறகு, தஞ்சாவூரில் இருந்து எனக்கு தொலைபேசினார்,

''சார்... ரிலீஸாகி ஊருக்கு வந்துட்டேன் சார்.'

''வாழ்த்துக்கள், ரொம்ப சந்தோஷம் அமர். என்ன பண்ணப்போறீங்க?'

''கிராமத்துக்குப் போனதும் எங்க பங்காளி பையன்கிட்ட போய் எல்லாத்தையும் பேசணும் சார். கால்லகூட விழுவேன் சார். 'போன தலைமுறையோட எல்லாம் போவட்டும்... நாம நல்லாருப்பம்டா’னு நிக்கப்போறேன்... கரெக்ட்தானே சார்!'

''ரொம்ப கரெக்ட் அமர்.''

அதன் பிறகு ஆறு வருடங்களுக்குப் பிறகு... அமரன்.

''உங்க பழைய நம்பருக்கு ரெண்டு மூணு தடவை அடிச்சுப் பார்த்தேன் சார். உங்க புது நம்பரும் கிடைக்கலை. அப்புறம் நானும் இங்கேருந்து போயிட்டேன். இப்போ இங்க டெல்லியில உங்க ஃப்ரெண்ட் செந்திலைப் பார்த்தேன். அவர்கிட்டதான் நம்பர் வாங்கினேன்.'

''இப்போ எங்க இருக்கீங்க அமர்? என்ன பண்றீங்க?'

''ஹிமாச்சல் பிரதேஷ்ல இருக்கேன் சார். இங்கே ஒரு யோகா ஸ்கூல் நடத்துறேன். நிறையப் பேர் கத்துக்க வர்றாங்க. ரொம்ப நிம்மதியா இருக்கேன் சார். முன்னே பின்னேனு எதுவும் இல்லாம இங்கே நான் நானா மட்டும் இருக்கேன் சார்.'

''கல்யாணம் ஆச்சா அமர்?'

வட்டியும் முதலும் - 4

''என்ன சார்... உங்ககிட்ட அப்பவே சொன்னேனே... அவங்களைப்பத்தி. கட்டிக்கிட்டா, அதைத்தான் கட்டிக்கணும்னு இருந்தேன். நான் ஜெயில்ல கெடந்தப்ப, அதை அசல்ல கட்டிக் குடுத்துட்டானுவோ... பாவம்! அதுவும் என்ன பண்ணும். நீடா மங்கலத்துல வாக்கப்பட்டு அங்கதான் கெடக்கு. நமக்குக் கல்யாணங் காச்சின்னு ஒண்ணும் தோணலை சார். இந்த

வாழ்க்கையே அற்புதமா இருக்கு. மலை மேல அவ்வளவு அமைதியான இடம் சார்... நீங்க நிச்சயமா இங்கே வரணும். ஒரு வாரம் ஃப்ரீ பண்ணிட்டு வாங்க சார்...'

''நிச்சயமா வர்றேன் அமர்.'

அலைபேசி உரையாடல் முடிந்தும் வெகு நேரம் அமரின் ஞாபகம் அலையடித்துக்கொண்டே இருந்தது. சில வருடங்களில் தஞ்சாவூரில் இருந்து கடலூர் சிறை... அங்கே இருந்து ஹிமாச்சலப்பிரதேசத்தின் ஏதோ பெயர் தெரியாத மலைக் கிராமம் எனக் காலம் ஒருவனை எப்படி எல்லாம் துரத்தி அடிக்கிறது? நினைத்துப் பார்க்காத பாதைகளில் காலம் நடத்தும் மாயப் பயணங்களில் எத்தனை ஆட்டுக் குட்டிகள் வழி தவறிப் போய் இருக்கும்? அடித்து இழுத்துப் போய் எங்கெங்கோ வீசி எறிந்து விட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது காலத் தின் தீரா வெள்ளம்!

ஓர் அதிகாலையில் கோடம்பாக்கம் ஹவுஸிங் போர்டு வீட்டின் கதவு தட்டிய பெரிய சரவணாவை எனக்கு அடையா ளமே தெரியவில்லை. முன் பல் இரண்டு உதிர்ந்து, உடல் வற்றி, முடி கொட்டி... ஆளே மாறியிருந்தார்.

''டேய் முருவா... நா பெரிய சரவணாடா...'

வேட்டி சட்டை, கக்கத்தில் மஹாராஜா நகைக் கடை பேக் என அவரது உருவமே ஆச்சர்யமாக இருந்தது. உள்ளே அழைத்து கைலி தந்து படுக்கச் சொன்னேன். பெரிய சரவணா படுத்ததுமே எழுந்து பார்த்த குரு அண்ணன் என்னைத் தனியே அழைத்து, ''டேய்! பெரிய சரவணாவா இவன்... என்னடா திடீர்னு வந்து நிக்கிறான்? தம்பி... டேக் கேர்ரா. நீ பக்கத்துலயே படு...' என எச்சரித்தான். எனில், அன்னாரது ஃப்ளாஷ்பேக் அந்த மாதிரி.

15 வருடங்களுக்கு முன்பு பெரிய சரவணா, எங்கள் ஊரின் ராபின்ஹுட். லோக்கல் ஆர்கெஸ்ட்ராவில் கங்கை அமரன் குரலில் பாடுவதைப் பகுதி நேரமாகவும், திருடுவதைத் தகுதி நேர வேலையாகவும் கொண்டு இருந்தவர்.

சொந்த பெரியப்பா மகளைப் பெண் பார்க்க வந்த நாளில், அவரது வீட்டில் ஓட்டைப் பிரித்து இறங்கி, ஒரு பித்தளை அண்டாவையும்மாப் பிள்ளை வீட்டாருக்கு வாங்கிவைத்து இருந்த ரெண்டு கிலோ ஜாங்கிரியையும் திருடிப் போனதிருவாளன். பிடிபட்ட பிறகு, அவனை எகிறி எகிறிக் குத்திய பெரியப்பா, ''கம்னாட்டி... அண்டா வைத் திருடிட்டுப் போன சரி. அந்த ஜாங்கிரியை ஏன்டா எடுத்த?' என்பதையே திரும்பத் திரும்பப் புலம்பினார்.

எங்கள் வீட்டில் வெகு காலமாகப் புழங்கிய ஹீரோ சைக்கிளை ஒருநாள் கொண்டுபோய்விட்டார். அம்மாகுளம் சிக்கல் ஐ விட்னஸ் ஆனதில்தான் பட்சி சிக்கியது. பஞ்சாயத்து போர்டு எதிரில் குனியவைத்து, முதுகில் ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்தார்கள். நாள் முழுக்க அப்படியே நின்று, சாயங்காலம் அந்தக் கல்லை அலட்சியமாகத் தள்ளிவிட்டு கள்ளு குடிக்க நடந்தவர்.

ஒரு முறை கூத்தாநல்லூரில் முஸ்லிம் கல்யாணம் ஒன்றுக்கு ஆர்கெஸ்ட்ராவில் பாடப் போயிருக்கிறார். 'பாடுவதற்கு முன்பாக விருந்தில் சரவணா பிரியாணி சாப்பிடக் கூடாது’ என்பது ஆர்கெஸ்ட்ரா ஓனரின் கட்டளை. காரணம், எக்கச்சக்கமாக பிரியாணி தின்றுவிட்டு பாடும்போது மூச்சுத் திணறி சரவணா இழுவையைப் போட்டு கூட்டத்தைக் கலைத்த வரலாறுகள் உண்டு. ஆகவே இந்த அன்புக் கட்டளை.

வட்டியும் முதலும் - 4

ஆர்கெஸ்ட்ரா மேடையில் ''இப்போது அனைவரையும் சொக்கவைக்கும் பாடலான 'மாங்குயிலே பூங்குயிலே’வைப் பாட வருகிறார் அபிவையின் இன்னிசை இளவரசன் சரவணன்...’ என்ற அறிவிப்பு வர, சரவணாவைக் காணவில்லை. சரவணா பிரியாணி சாப்பிட்டானா எனக் கண்காணித்தவர்கள், பிரியாணி சாமான்களைக் கண்காணிக்கத் தவறிவிட்டார்கள். ஒரு மாட்டு வண்டி செட் பண்ணி, பின்கட்டு வழியாக சமையல் சாமான்களை ஏற்றிக்கொண்டு மன்னார்குடி மார்க்கமாக முத்துப்பேட்டையை அடையும்போது சரவணா மாட்டிக்கொண்டது, சோழ மண்ணின் கல்வெட்டுக்களில் ஒன்று. இப்படி, பக்கங்களில் அடங்காத ஏராளமான வீர சாகசங்களுக்குச் சொந்தக்காரர் தான் இந்தப் பெரிய சரவணா!

காலையில் டிபன் சாப்பிட அழைத்துப் போனபோது மெதுவாகக் கேட்டேன்,  ''என்ன மாமா திடீர்னு வந்துருக்கீங்க?'

''உனக்குத் தெரியாதுல்ல மாப்ள... 10 வருசத்துக்கு முன்னாடியே நம்ம ஊரைவிட்டுப் போயிட்டேன்ல. அப்புறம் கல்யாணம் காச்சினு முடிச்சுட்டேன். அப்பிடியே திரிய முடியுமா... அப்பா வாத்தியாரா இருந்துதான செத்துப்போனாரு. அதைவெச்சு அப்பிடி இப்பிடி முண்டி, வலிவலம் கவர்மென்ட் ஸ்கூல்ல பியூனாயிட்டேன். ரெண்டு புள்ளைங்க... இப்போ புரொமோஷன் சம்பந்தமா மனு குடுக்கத்தான் வந்தேன். டி.பி.ஐயாம்ல... அது எங்க இருக்கு? கொஞ்சம் கொண்டுவந்து விட்ரு.'

அன்றைக்கு முழுக்கச் சாப்பிட்ட அத்த னைக்கும் நான் எவ்வளவு சொல்லியும், அவர்தான் காசு கொடுத்தார். சாயங்காலம் சரவணா ஸ்டோர்ஸில் தன் வீட்டுக்குப் பொருட்கள் வாங்கியவர், எனக்கு ஒரு சட்டை எடுத்துக் கொடுத்தார். பழைய நோக்கியாவில் நாலைந்து தடவை வீட்டுக்கு போன் பண்ணியிருப்பார்.

இரவு அவரை கோயம்பேட்டில் பஸ் ஏத்திவிடப் போனேன். சாப்பிட்டு முடித்து வீட்டுக்கு போன் அடித்தவர், ''சுகு எங்க..? ராஜி என்ன பண்றான்?' என விசாரித்தபடி இருந்தார். திடீரெனப் பெருங்குரலெடுத்து, ''நாயே... வந்து கால் கையை முறிச்சுப் போட்றேன்... ராஸ்கல்... மிதிச்சே கொன்ருவேன்' எனத் திட்ட ஆரம்பித்துவிட்டார்.

ஆவேசமாக போனை கட் செய்தவரிடம், ''என்ன மாமா?' என்றேன்.

''எம் மவன் மாப்ள... ரெண்டாவது படிக் கிறான். க்ளாஸ்ல ஏதோ திருடிப்புட்டான்னு அப்பனை அழைச்சுட்டு வரச் சொல்லிட் டானுவோளாம். என்னா கொற வெச்சேன் இதுகளுக்கு?' என்றபடி எங்கோ வெறித்துப் பார்த்தவர், பொலபொலவென அழ ஆரம் பித்துவிட்டார்.

''மாப்ள... நாந்தான் கொணங்கெட்டு சீந்து வார் இல்லாமப் போய்க்கெடக்கேன். காலங்கெட்டுப் புத்தி வந்துருக்கு... இதுகள நல்லா வளக்கணும்னுதான் இப்பிடி அல்லாடு றேன். இந்தப் பயலைப் பாத்தீகளா?' என அழுதவரைத் தேற்றி பஸ் ஏற்றி அனுப்பிவைத்தேன். பஸ் சென்று மறைந்த பின்னும் நினைவின் புழுதி மறைய வில்லை.

காலம் ஒருவரை எப்படிக் கொண்டுவந்து நிறுத்தி தன் மகனுக்காக அழவைக்கிறது. எல்லாவற்றையும் நினைத்துத் தேம்பும்போது காலம் கைகளில் தருவது இன்னொரு தலைமுறையைத்தான். நாம் தொலைத்ததை மகனிடம், மகளிடம் தேடுகிறோம். காலமே... காலமே... பெரிய சரவணாவைப்போல் வளராமல், அவர் இழந்ததை மீட்கும் நிஜமான இளவரசனாக அவர் மகன் உருவாகத் துணை நிற்பாயாக!

'வியாழக் கிழமைகளைத் தொலைத்த வன்’ என்ற விக்கிரமாதித்யன் அண்ணாச்சி யின் கவிதைத் தலைப்பு எப்போதும் எனக்குள் ஈரமாகப் பிசுபிசுக்கிறது. வெற்றி, தோல்வி, நல்லது, கெட்டது... என நிமிர் வதற்குள் பாதரச உருண்டைபோல்நழுவிப் போகும் காலத்தை என்னதான் செய்ய முடியும்? மதுக் கோப்பைகளில், காதல் நினைவுகளில், வறுமையின் பிடியில், முதலாளிகளின் நிழலில்... எத்தனை எத்தனை பேர் கிழமைகளைத் தொலைத்துக்கொண்டு இருக்கிறோம்.

மூலங்குடி மாதா கோயில் ஸ்கூலில் எட்டாவது படிக்கும்போது டூர் போவதற்காக வருடம் முழுவதும் சேர்க்கும் சிறு சேமிப்பில் மணிமேகலைதான் ஃபர்ஸ்ட். அப்போது மெட்ராஸ் பார்க்க வேண்டும் என்பதுதான் அவளது வாழ்க்கைக் கனவு. டூர் போவதற்கு முதல் நாள், மணிமேகலை வயசுக்கு வந்தாள். அவள் இல்லாத பஸ் மெரினா பீச்சைச் சுற்றி வந்தபோது, ''மணி பாவம்ல...'' என்றது ரோஸி சிஸ்டர்.

அந்த மணிமேகலை, குரோம்பேட்டை லெதர் கம்பெனியில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைக்கு வாக்கப்பட்டாள். கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாக இரண்டு பிள்ளைகளோடு 25 ஜி-யில் ஒரு முறை பார்த்தபோது, ''ஐயே! என்ன ஊருடா சாமி இது... எனக்குப் புடிக்கவே இல்ல முருகா. இந்தாளுகிட்ட முடிவா சொல்லிப்புட்டேன்... இந்த வருசத்தோட தோலு வேலையை மூட்ட கட்டிட்டு எலையூருக்கே போயிரணும்னு... எப்பிடித்தான் இருக்கியளோ?' என தொத்தலாகச் சிரித்த மணி மேகலை, காலத்தின் மணிக் கூண்டில் திசை அறியாது சிறகடிக்கும் ஒரு புறாவைப்போல் இருந்தாள்!

காலம் எல்லாவற்றையும் தின்றுவிடுகிறது. ஒருவனை உயரத்தில்வைத்து, இன்னொருவனைப் பள்ளத்தில் தள்ளி, கேட்காததைக் கொடுத்து, கேட்டதை மறைத்து, உறவைச் சிதைத்து, அழகைக் குலைத்து ஏதேதோ செய்துவிடுகிறது.

தீவிர மார்க்சிஸ்ட் தோழர் ஜோசியக் காரர் ஆனதும், பெருவிவசாயி பெரியப்பா கோயம்பேட்டில் லோடுமேன் ஆனதும், மூன்று தங்கைகளுக்குக் கல்யாணம் முடித்து 47 வயதில் பெண் தேடும் நண்பர் 'சாமியார் ஆயிரலாம்பா’ எனப் புலம்புவதும் காலத் தின் கோலமெனக்கொள்க!

வைக்கம் முகம்மது பஷீரின் கதை ஒன்று உண்டு. பஷீர் இரண்டு வருடங்க ளாகச் சிறையில் இருப்பார். வீட்டில் இருக்கும் அம்மாவைப் பார்க்கவே வாய்ப்பு கிடைக்காது. இரண்டு ஆண்டுகள் கழித்து விடுதலையாகி வீட்டுக்குப் போவார். அவர் போகிற அன்றைக்கு வீட்டில் அவருக் குப் பிடித்த மத்தி

மீனும் கீரைப் புட்டும் செய்துவைத்திருப்பாள் அம்மா.

பஷீர் ஆச்சர்யமாகி, 'இன்னிக்கு நான் வருவேன்னு தெரியுமா? இன்னிக்குன்னு எப்படிம்மா எனக்குப் பிடிச்சதுகளைச் செஞ்சி வெச்சுருக்க?' என்பார்.

அதற்கு அம்மா சொல்வாள், 'போடா... ரெண்டு வருஷமாத் தினமும் இதைத்தான் செய்றேன்...'

இதைப் படித்த பிறகு எனக்குத் தோன்றியது, காலத்தால் அழியாதது என்று ஒன்றுமே இல்லை... அன்பைத் தவிர!

(போட்டு வாங்குவோம்)