மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நானும் விகடனும்! - 29

நானும் விகடனும்
பிரீமியம் ஸ்டோரி
News
நானும் விகடனும் ( விகடன் டீம் )

இந்த வாரம் : மிஷ்கின்நா.கதிர்வேலன்படங்கள் : கே.ராஜசேகரன்

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும்  பக்கம்!

##~##

'அன்னிக்கு ஆபீஸ்ல ஒரு விவாதம். 'சிறந்த படம்னா எது சார்?’னு என் அசிஸ்டென்ட் கேட்டான். சட்டுனு தோணுச்சு. 'ஒரு உணர்ச்சியை ரிக்ஷாக்காரனும் ரசிக்கணும்; பைலட்டும் ரசிக்கணும். அதான் சிறந்த படம்’னு சொன்னேன். யோசிச்சுப் பாத்தா, இதே அளவுகோலோட, எல்லோருக்குமான ரசனைகளோட இருக்கறதுதான் விகடனோட ஸ்பெஷல். பத்திரிகையோ, சினிமாவோ... ஒரு சமூகத்தோட கண்ணாடியா இருக்கணும். அப்படி, ஆனந்த விகடன் நம் தமிழ் சமூகத்தோட நேர்மையான கண்ணாடி!

நானும் விகடனும்! - 29

புத்தகங்கள்தான் ஒரு மேம்பட்ட கலையை, சமூகத்தை உருவாக்குங்கிறது என் உறுதியான நம்பிக்கை. இப்போ வரைக்கும் வாசிப்பு என் வாழ்க்கையோட முக்கியமான அம்சமா இருக்கு. அம்புலிமாமா, பாலமித்ரா, முத்து காமிக்ஸ்னுதான் ஆரம்பிச்சது என்னோட வாசிப்பு உலகம். மாயாஜாலக் கதைகள், துப்பறியும் காமிக்ஸ்னு என்னோட சிறுபிராயத்தை அழகாக்கினது அந்தப் புத்தகங்கள்தான். எங்க வீட்ல, பாட்டி, அம்மா, அப்பா மூணு பேருமே தீவிர மான வாசிப்பாளர்கள். வாராவாரம் விகடன் படிக்கிறதுக்கு மூணு பேருக்கும் போட்டி நடக்கும். விகடனை எனக்கு அறிமுகப்படுத்தினது அவங்கதான்.

ஸ்கூல் போன பிறகுதான் படிக்க ஆரம்பிச்சேன். இதோ, இப்போ வரைக்கும் விகடன் என் கூடவே வருது. விகடன்ல என்னை முதல்ல கவர்ந்தது ஓவியங்கள். இன்னிக்கு கலையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஓர் அப்பா மாதிரி துணையிருக்கும் ஓவியர் மருதுவை எனக்கு அறிமுகப்படுத்தினது விகடன்தான். முதன்முதலா அவரோட ஓவியங்களைப் பார்த்து நெகிழ்ந்ததும் விகடன்லதான். மருது சார்லேருந்து இப்போ இளையராஜா வரைக்கும் ஓவியம்கிற ஆத்மார்த்தமான கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது விகடன்தான்!

விகடனோட சினிமா விமர்சனம், நிச்சயமா தமிழ் சினிமாவுக்கான மிகச் சிறந்த பரிசு. சினிமாவுக்கு வந்த பிறகு ஒவ்வொரு படத்துக்குமான விகடன் விமர்சனத்தை வரிக்கு வரி சின்ஸியராப் படிப்பேன். நான் சினிமாவைக் கற்றுக்கொண்ட பயணத்தில், அதுவும் ஒரு படிக்கட்டு. பெரிய நட்சத்திரங்கள், பிரமாண்ட விளம்பரங்கள் எதுவும் இல்லாம மிகப் பெரிய போராட்டத் துக்குப் பிறகு வெளியான என்னோட முதல் படம் 'சித்திரம் பேசுதடி’க்கு விகடனோட விமர்சனம்தான் பெரிய வெளிச்சம் பாய்ச்சினது. அப்போ அந்த விமர்சனம் எனக்குத் தந்த உற்சாகம் எந்த விலைக்கும் வாங்க முடியாதது. எப்பவும் நல்ல கலைஞர்களோட தலைப் பிரசவத்துக்கு விகடன் தர்ற அங்கீகாரம் அற்புத மானது!

அப்போ, 'கற்றதும் பெற்றதும்’ல 'சித்திரம் பேசுதடி’க்கு சிறந்த திரைக்கதைக்கான விருதை எனக்குத் தந்திருந்தார் சுஜாதா. நான் ரொம்ப வியக்கும் ஓர் எழுத்தாளர் தந்த அங்கீகாரம் ரொம்ப சந்தோஷம் தந்தது. உடனே அவருக்கு போன் பண்ணி நன்றி சொன்னேன். 'நன்றிலாம் வேணாம். நல்ல படத்தைக் குடுங்க போதும்’னு சொல்லிட்டு போனை வெச்சுட்டார். 'ஒரு கலைஞன் இந்த சமூகத்துக்கு செய்ற நன்றிங்கிறது நல்ல படைப்புகளைத் தர்றதுதான்’கிறதை எவ்வளவு சுருக்கமா சொல்லிட்டார் சுஜாதா சார். இப்பவும் அந்த வார்த்தைகள் என்கூட இருக்கு!

நானும் விகடனும்! - 29

அடுத்தடுத்து விகடன் எனக்குத் தந்த விருதுகளுக்கு நன்றியா நான் இன்னும் இன்னும் பெரிய படைப்புகளைத் தரணும். அந்த பொறுப்புகளை என் மீது ஏத்திவிட்டிருக்கு விகடன். 2008-க்கான 'விகடன் விருதுகள்’ல 'அஞ்சாதே’வைச் சிறந்த படமாத் தேர்ந்தெடுத்தாங்க. 2010-ல் 'நந்தலாலா’வுக்காக என்னைச் சிறந்த நடிகராத் தேர்ந்தெடுத்தாங்க. எத்தனையோ நடிகர்கள் வேடிக்கை பார்க்க, அந்த விருது எனக்குக் கிடைச்சது விகடனோட நேர்மையான தேர்வுக்கு சாட்சி. விகடனிடம் இருந்து மூன்று விருதுகளை வாங்கினவன் நான்தான்னு நினைக்கிறேன். இன்னும் இன்னும் கொடுப்பதற்கும் பெறுவதற்கும் ஏராளமான கனவுகளை விகடன் எனக்குள்ளே விதைச்சிருக்கு!

முகம் தெரியாத ஏராளமான படைப் பாளிகளை, அவர்களின் வீரியமான படைப்புகளை அள்ளித் தர்றதுதான் விகடனோட முதல் பலம். எப்பவோ ஒரு நாள் விகடன்ல வந்த ஒரு கவிதை... 'ஆழியான்’னு ஒருத்தர் எழுதியிருந்தார். படிச்சவுடனே மனசைக் கிழிச்சது. உடனடியா அதை 1,000 பிரதிகள் எடுத்து பாக்கிறவங்களுக்கு எல்லாம் கொடுத்தேன். 'சொல்வனம்’ பகுதியைப் படிக்கும்போது, எங்கெங்கேயோ எவ்வளவோ அருமையான படைப்பாளிகள் ஒளிஞ்சிருங்காங்கனு ஆச்சர்யமா இருக்கு. ஜெயகாந்தனோட எழுத்துக்கள் தொடங்கி ஆழியான் வரைக்கும் காலத்தைக் கடந்து எத்தனை படைப்புகளை விகடன் தந்துட்டே இருக்கு. இது தான் நான் வியக்கும் முதல் விஷயம்!

நானும் விகடனும்! - 29

சினிமா, அரசியல், விளையாட்டுனு எதுவா இருந் தாலும், விகடன் நிருபர்கள் அதைக் கொடுக்கிற விதம் அவ்வளவு அழகா இருக்கு. வெறும் ரிப்போர்ட்டா இல்லாம அதையே அத்தனை உணர்வா, சுவாரஸ்யமாத் தர்றாங்க. முக்கியமா... லே-அவுட். கடைசி நிமிஷம் வரைக்கும் செதுக்கிச் செதுக்கி வர்ற ஒரு சினிமா மாதிரி வாராவாரம் அவ்வளவு நேர்த்தியான லே-அவுட் விகடனோட பெரிய பலம். அப்புறம், விகடனோட தொடர்கள். நாஞ்சில் நாடன் எழுதின 'தீதும் நன்றும்’, இப்போ ராஜுமுருகனோட 'வட்டியும் முதலும்’னு வெகுஜன இதழ்கள்ல இவ்வளவு கனமான இலக்கியங்களுக்கு மரியாதைக்குரிய இடம் தர்றது விகடன் மட்டும்தான்!

எப்பவுமே விகடனோட நிருபர்கள் எனக்கு உடனடியா நண்பர் கள் ஆகிடுவாங்க. அப்படி ஓர் அலைவரிசையில கலகலகலனு இருப்பாங்க. நான்  அகிரா குரோசோவா படங்கள்பத்திப் பேசினா, எதிரே உட்கார்ந்திருக்கும் விகடன் நிருபர் சத்யஜித்ரே படங்கள்பத்தி சொல்வார். போர்ஹேவோட கதைகள் பத்தி பேசினா, அருள் எழிலன் உடனே சதக் உசேன் மாண்டோ எழுத்து பற்றி சொல்வார். ஜென் கவிதைகள் பற்றி பேச்சு வரும்போது, சூஃபிக்கள் பத்தி தகவல்கள் கிடைக்கும். இப்படி ஓர் இரவு முழுவதும்கூட பேச்சுக்கள் நீண்டது உண்டு. புலமையான, ரசனையான நிருபர்களை அரவணைச்சுக்கிறதுதான் விகட னோட எப்போதைக்குமான சிறப்பு. அங்கிருந்து வர்ற படைப்பாளிகள் எப்பவுமே சோடை போனது இல்லை. விகடன் மாணவப் புகைப்படக்காரரா இருந்து, பி.சி. சாரிடம் சினிமா கற்ற சத்யநாராயணாவை 'யுத்தம் செய்’ல கேமராமேனா அறிமுகப்படுத்தினேன். மிகத் திறமையான இளைஞன்.

நானும் விகடனும்! - 29

இப்போ என்னிடம் முக்கிய உதவி இயக்குநரா இருக்கிற வடிவேலுவும் விகடன்லேருந்து வந்தவன். எனக்குப் பிடித்தமான உழைப்பாளி.

விகடன் தருகிற எதுவுமே சிறந்ததுதான். ஒவ்வொரு விஷயத்திலும் அது காட்டுகிற சிரத்தை. எப்போதும் தக்கவைத்துக்கொள்கிற இளமை. ஒவ்வொரு காலகட்டத்திலும் புது ரத்தம் பாய்ச்சுகிற படைப்புகள். யார் இருந்தாலும் போனாலும், விகடன் 85 வருடங்களுக்கு மேல் இளமையாகவே இருப்பதற்கு இதுதான் காரணம். இன்னும் இன்னும் ஏராளமானவர்களையும் விகடன் உருவாக்கும். அதுதான் விகடன்!''