அனுபவங்கள் பேசுகின்றன!
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200
வீட்டுப் பராமரிப்பு... சூப்பர் ஐடியா!
தோழியின் வீட்டுக்கு ஒருநாள் சென்றிருந்தேன். கட்டி பலவருடங்கள் ஆன அந்த வீடு, 'பளிச்’ என்று புதிது போல் இருந்தது. பெயின்ட்டிங், சுண்ணாம்பு என சுமார் ஒரு லட்சம் செலவாகியிருந்தது என்றாள். 'திடீரென்று எப்படி ஒரு லட்சம் புரட்டினாள்?’ என்று குழம்பினேன். ''இது எங்கள் சொந்த வீடுதான். என்றாலும், வாடகை வீடு மாதிரி எண்ணிக்கொண்டு மாதம் இரண்டாயிரம் ரூபாயை வங்கியில் ஆர்.டி-யில் போட்டுவிடுவோம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வீட்டுப் பராமரிப்பு செலவுக்கு எடுத்துக்கொள்வோம்'' என்று அவள் கூறினாள்.
இது நல்ல யோசனையாக தோன்றவே, உடனடியாக ஆர்.டி. ஓபன் பண்ண முடிவு செய்துவிட்டேன். அப்ப நீங்க..?
- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி

சாட்டை எடுத்தால்தான் சங்கதி நடக்குது!
தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கிக்கு சென்றேன். அங்கு நான் பணம் கட்டியவுடன் என்ட்ரி போடாமல் பாஸ் புத்தகத்தை என்னிடம் நீட்டினார் வங்கி ஊழியர். ''பல மாசங்களா என்ட்ரி போடாம தர்றீங்க! என்னோட வங்கிக் கணக்குல என்ன வரவு - செலவு நடந்திருக்குனு எப்படி தெரிஞ்சுக்கிறது?'' என்றேன். ''என்ட்ரி போட நேரம் இல்லை... பேலன்ஸ் தெரிஞ்சிக்கணும்னா, அங்க ஒரு நம்பர் எழுதியிருக்குல்ல... அதுக்கு மிஸ்டுகால் கொடுங்க! எவ்வளவு பேலன்ஸ் இருக்குனு எஸ்.எம்.எஸ் வரும்'' என்றார். அவரை முறைத்த நான், 'அங்க புகார் தெரிவிக்கிறதுக்கும் நம்பர் எழுதியிருக்கு' என்றபடியே அந்த நம்பரை அழுத்த ஆரம்பித்தேன். சட்டென்று எழுந்த அந்த ஊழியர், ''ஏன் மேடம் புகார் செக்ஷனுக்கு கால் பண்றீங்க. முதல்ல 'கட்’ பண்ணுங்க. நான் உங்களுக்கு என்ட்ரி போட்டு தர்றேன்' என்று கூறி போட்டும் கொடுத்தார்.
'சாட்டையைக் கையில் எடுத்தால்தான் சில இடங்களில் சங்கதி நடக்குது’ என்பதை இந்தச் சம்பவம் எனக்கு உணர்த்தியது.
- பி.கவிதா, சிதம்பரம்
பயிரை மேயும் வேலிகள்!
சமீபத்தில் தனியார் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய என் மகள், ''நாளைக்கே என்னை எங்க மிஸ்கிட்ட டியூஷன் சேர்த்து விடு'' என அழுது அடம்பிடித்தாள். ''நீதான் நல்லா படிக்கிறியே... பின்ன எதுக்கு டியூஷன்?’ என நான் கேட்க... ''டியூஷன் படிக்கிறவங்களுக்கு மாதத் தேர்வு கேள்விகளை முன்கூட்டியே கொடுத்துடறாங்க'' என்று என் மகள் தெரிவித்தவுடன் அதிர்ந்து போனேன்.
இப்படிப்பட்ட ஆசிரியர்கள் சிலரால்தான் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கே இழுக்கு! மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே, இப்படி தவறான பாதையில் செல்லத் தூண்டலாமா?! இதுபோன்ற ஆசிரியர்கள் இனியாவது திருந்த வேண்டும்.
- ஊர், பெயர் வேண்டாமே... ப்ளீஸ்!
காலிங்பெல் சுவிட்ச்... கவனம் தேவை!
நாங்கள் இப்போது புத்தம் புதிய வீட்டுக்குக் குடிவந்திருக்கிறோம். இதனால் பிளம்பிங், எலெக்ட்ரிக்கல் என சில வேலைகள் நடக்க, இதற்காக வந்தவர்களில் யாரோ ஒருவர், ஸ்விட்ச் போர்டில் ஒன்றாக இருந்த காலிங் பெல் ஆஃப் செய்யும் ஸ்விட்சை, ஆஃப் செய்து சென்றுவிட்டார். இதைச் சரியாக நான் கவனிக்கவில்லை. வேலைக்காரப் பெண்மணி வந்து பெல்லை அழுத்தி, அழுத்திப் பார்த்துவிட்டு திரும்பிப் போயிருக்கிறார். கணவரும் ஆபீஸிலிருந்து வந்து நீண்ட நேரம் பெல்லை அழுத்திப் பார்த்துவிட்டு, டெலிபோன் செய்ய... விவரம் அறிந்து கதவைத் திறந்து விட்டேன்.
தோழிகளே... காலிங்பெல் சுவிட்ச் ஒரே ஸ்விட்ச் போர்டில் இருப்பதைத் தவிருங்கள். தனியாக, சற்று உயரமான இடத்தில் வைத்துவிட்டால், 'டென்ஷன் ஃப்ரீ’யாக இருக்கலாம்.
- இந்திராணி தங்கவேலு, மும்பை