மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூன்றாம் உலகப் போர் - 04

மூன்றாம் உலகப்போர்
பிரீமியம் ஸ்டோரி
News
மூன்றாம் உலகப்போர் ( மூன்றாம் உலகப்போர் )

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

##~##

செயில்ல இருந்து விடுதலையாகி வெளிய வாரவன் கண்ணைக்கொண்டு பாக்கணும் இந்த உலகத்தை. ஒவ்வொண்ணும் அழகாத் தெரியும்; எதப் பாத்தாலும் மதிப்பாத் தெரியும்; ஒரு பட்டாம்பூச்சியக்கூட சரியாப் பாக்காமப் புத்தி கெட்டுப்போயிட்டமேன்னு பொறி தட்டும்.

ஆறேழு வருசம் கழிச்சு விடுதலையாகி வெளிய வந்த கருத்தமாயிக்கி இந்த உலகமே நேத்துப் பெறந்த குழந்தையாத் தெரியுது. முப்பது வயசு இளந்தாரிக்குப் பிராயம் மறந்துபோச்சு.

மூன்றாம் உலகப் போர் - 04

ஒரே ஓட்டமா ஓடித் தண்ணியில தவ்வலாமா? விறுவிறுன்னு மரத்துல ஏறி ஆலம் பொந்துல கிளி புடிக்கலாமா? சென்றாயப் பெருமாள் மலையில ஏறி, சோழவந்தான் கம்மாயவிட்டு வேட்டுவங்குளத்துக்கு ராத்தங்கலுக்குக் கூட்டங் கூட்டமாப் போற கொக்குகள வேடிக்கை பாக்கலாமா? நாய்க்கர் கடையில ஒரு டீ சொல்லிப்புட்டு மந்தையில ஒரு துண்டை விரிச்சு ஒக்காந்து சாதிசனத்த நல்லது பொல்லது விசாரிக்கலாமா?

இப்படியெல்லாம் விதவிதமா ஆசைக மனசுல முட்டி முட்டி வந்து எட்டி எட்டிப் பாத்துட்டு உள்ள ஓடி ஒளியுதுக.

'எல்லாம் சரி. ஊரு என்னிய ஒத்துக்கிருமா? இல்ல - 'வாரான் பாரு கொலகாரப் பய’ன்னு ஓடி ஒதுங்கிருமா?

உள் மனசுல மட்டும் ஒரு சோகம் கரை யாமக் கருங்கல்லாக்கெடக்கு.

ஒத்த ஒறவுதான மிச்சமிருக்கு. இருந்தென்ன ஆகப்போகுது?

இந்த ஆறேழு வருசத்துல அண்ணன் சுழியன் என்ன எட்டிக்கூடப் பாக்க லையே? எங்க இருக்கான்? ஏது செய்யறான்? செத்தானா? பொழச்சானா? ஒரு தகவலும் இல்லையே. கரகரன்னு கண்ணு ஊறுது கருத்தமாயிக்கு.

ஊரு இருக்கு; ஒறவு இல்லையே...

நெலம் இருக்கு; பலம் இல்லையே...

வீடு இருக்கு; ஆள் இல்லையே...

கையில மஞ்சப்பை புடிச்சுத் தோள்ல கெடந்த துண்டுல லேசா வாயப் பொத்திக்கிட்டு, மந்தையத் தாண்டி பொடிநடையாப் போகையில கடந்து போன அஞ்சாறு ஆளுகளுக்கு அடையாளம் தெரியல.

''ஏப்பா நீயி கருத்தமாயிதான...'' ஆசை யாக் கை நீட்டிக் கேட்டுச்சு ஒரே ஒரு பெருசு மட்டும்.

மூன்றாம் உலகப் போர் - 04

தலையக் கீழ போட்டு நின்னாரு கருத்தமாயி.

''நீ ஒண்ணும் களவாண்டு கன்னமிட்டுக் கொள்ளையடிச்சுக் கொலைப் பழிக்கு ஆளான ஆளு இல்லப்பா. விதி உன்குடும் பத்துல வெளையாடிருச்சு; போப்பா! நம்ம குலசாமி கூடவே வரும் - போ!''

ங்க வீடுதானா இது?

நான் பெறந்த வீடு

ஆத்தா கஞ்சி காச்சி ஊத்துன வீடு;

அப்பன் பாட்டுப் படிச்ச வீடு;

அண்ணன் சுழியன் அழிச்சாட்டியம் பண்ணுன வீடு;

தங்கச்சி கொலுசுச் சத்தம் நெறஞ்சு நின்ன வீடு;

மாடு கன்டும் மனுசங்களும் ஒண்ணாப் பொழச்ச வீடு;

நல்லது கெட்டது நாலும் பாத்த வீடு.

இப்ப இடிஞ்சு விழுந்து அடிமாண்டு கெடக்கு.

வாயிலவச்ச துண்டை எடுத்துக் கண்ணைத் தொடச்சுக்கிட்டே பொடிநடையாப் போனாரு தோட்டத்துக்கு; நெஞ்சப் புடிச்சு அப்படியே நின்னு போனாரு.

கைபடாத கொழந்தையும் கால்படாத பூமியும் வளருமா? இண்டம்புதரும் எருக்கு இலையுமா மண்டிக்கெடக்கு. மஞ்சனத்தியும் சாரணத்தியுமா மதாலிச்சுக்கெடக்கு. எலந்தமுள்ளும் காராமுள்ளும் சப்பாத்திக்கள்ளியும் பூமி தெரியாமப் படந்து பொத்திக்கெடக்குதுக. வேலிக் கள்ளியில ஏறிக்கெடந்த ஒரு கோவங்கொடி கடிக்க, எக்கி எக்கிப் பாத்துக்கிட்டிருக்கு ஒரு வெள்ளாடு.

கெணத்த எட்டிப் பாத்தாத் தரையும் தெரியல; தண்ணியும் தெரியல. முடி வளத்த சாமியாரு மூஞ்சி தெரியாமப்போற மாதிரி, ஆல் அரசு மொளச்சுப் பூலாம்புதர் மண்டி அடையாளம் மாறி நிக்குது கெணறு.

தோள்ல கெடந்த துண்ட இறுக்கி இடுப்புல கட்டினாரு கருத்தமாயி.

மூணே மாசத்துல வீட்டையும் பிரிச்சு மேஞ்சு, நெலத்தையும் உழுது ஒழுங்கு பண்ணி, ஓரக்கால் வெட்டி, கெணத்தையும் தூர் எடுத்துச் சுத்தம் பண்ணி, 'வந்துட்டான்டா சீனிச்சாமி வாரிசு’ன்னு அட்டணம்பட்டிய அண்ணாந்து பாக்கவச்சுட்டாரு கருத்தமாயி.

ஒரு வெள்ளிக் கிழமை ஈசானிய மூலையில மூணு குழி எடுத்தாரு. தேக்கங் கன்னு ரெண்டு நட்டாரு; புங்கமரம் ஒண்ணு நட்டாரு. முதுகுல கொடம் சுமந்து குழி குளுரத் தண்ணிவிட்டாரு. தேக்கங் கன்னுகள ஒட்டி ஒரு குழி வெட்டி ஒரு அருவாளப் பொதச்சாரு; கவட்டைக்காலன வெட்டுன அருவா.

இடுப்புல துண்டக் கட்டி மூணு கன்னுகளையும் தொட்டுக் கும்புட்டாரு. கொஞ்ச நேரம் அருள் வந்து அவரா ஆடுனாரு; அழுதாரு. அவுந்து விழுந்த துண்ட எடுத்துத் தோள்ல போட்டு நடந்துட்டாரு.

'எட்டு வருசம் கெட்டவன் எள்ளுப் போடு; பத்து வருசம் கெட்டவன் பருத்தி போடு’- ன்னு அப்பன் சொன்ன சொலவடை காதுக்குள்ளயே இருக்கு; மூன்றரை ஏக்கரை யும் அடக்கி எள்ளு வெதச்சாரு.

செலவழிஞ்சது போகக் கொஞ்சம் மிச்சம்இருந்துச்சு செயில் காசு. வயசும் இந்தா இந்தான்னு எட்டி முப்பதத் தொடுது. இப்பக் கல்யாணம் பண்ணலாம்னு நோக்கமாகிப் போச்சு கருத்தமாயிக்கு.

செரச்சுக் குளிச்சுத் தல முழுகி, எண்ணெய் ஒழுகுற மூஞ்சிய இறுக்கி அழுத்தித் தொடச்சு, ''ஏப்பா மூஞ்சியில ஒரு கூழு பூசுவியே பூசி விடு''ன்னு முடி திருத்தறவன்கிட்டக் கேட்டு வாங்கிப் பூசிக்கிட்டு, வெள்ளையும் சொள்ளையுமா வெளியேறிக் கிழக்க போற பஸ்ல ஒக்காந்துட்டாரு கருத்தமாயி.

''செம்பட்டி ஒண்ணு.''

செம்பட்டியில எறங்க வேண்டியஆளுக தைரியமா ஒறங்கிக்கிட்டே போகலாம். வெள்ளரிக்கா... வெள்ளரிக்கா...ன்னு எங்க கூட்டமாக் கூச்சல் கேக்குதோ, அங்க தைரியமா எறங்கிறலாம்; அதான் செம்பட்டி.

நல்ல ஏறுவெயில்ல போயி எறங்குறாரு கருத்தமாயி.

வெள்ளரிக்கா விக்கிற கூட்டம், போற வார ஆளுகளச் சுத்தி மொய்க்குது.

சின்னதும் பெருசும் கிழடு கட்டைகளுமாச் சேந்து வெள்ளரிக்கா விக்குதுக.

அதுல ஒரு வெடிச்ச பொம்பள அத்தன சத்தத்தையும் அடக்கி அடித் தொண்டையில கத்துறா, ''வெள்ளரிக்கா... வெள்ளரிக்கா... ஏந்தம்பி! வெள்ளரிக்கா வாங்கறது; வெயிலுக்கு நல்லது;''

திரும்பிப் பாத்தாரு கருத்தமாயி.

தொண்டை வறண்டுதான் கெடக்கு; வெயில் வேற மண்டைக்குள்ள மல்லுக்கட்டுது. வாங்கித்தான் பாப்பமே...

''ஏம்மா! வெள்ளரிக்கா என்ன வெல?''

''சல்லிசு தம்பி. மூணு முக்கா ரூவா.''

''கொறச்சுக் குடுக்க மாட்டியா?''

''அப்ப ஆறு வாங்கிக்க ஒரு ரூவா.''

''விவரமான பொம்பளதான்.''

கருத்தமாயிக்கு மூணு போதும். ஆறு வாங்கி என்ன பண்ண? ஆடு மாடு திங்கவா? யோசிச்சாரு கருத்தமாயி.

சொட்ட மண்டை சுள்ளுன்னு காஞ்சா லும் அடிக்கிற வெயிலுக்குப் புடிக்காம குடைய அட்டத்துல வச்சுக் கடந்துபோன ஆள் ஒருத்தரக் கையப் புடிச்சாரு.

''யண்ணே! வெள்ளரிக்கா வேணுமான்னே... வெயிலுக்கு நல்லது.''

அந்தாளு மேலயும் கீழயும் பாத்தாரு; கருத்தமாயி விடல.

மூன்றாம் உலகப் போர் - 04

''வாங்குங்கண்ணே! சும்மா வெடலப்புள்ள விரல் மாதிரி வெள்ளரிக்கா.''

'வெடலப்புள்ள’ங்கற சொல்லு அந்தாளு மண்டையில எறங்கிருச்சு மசமசன்னு.

''என்ன வெல?''

''அம்பது காசு கொடுங்கண்ணே.''

அவரு அம்பது காசு குடுத்தாரு. தன் பையத்தடவித் தடவி இவரு ஒரு அம்பது காசு எடுத்தாரு.

''இந்தாம்மா ஒரு ரூவா. ஆறு வெள்ள ரிக்கா கொடு.''

அவ குடுத்தா.

''இந்தாண்ணே ஒனக்கு மூணு; எனக்கு மூணு.''

இந்த ஏவாரத்தக் கண்ணச் சிமிட்டாமப் பாத்துக்கிட்டிருந்த வெள்ளரிக்காக்காரி சொல்றா: ''ஏந்தம்பி! என்னமோ என்னியச் சொன்னியே வெவரமான பொம்பளன்னு. இப்பச் சொல்லு விவரமான ஆளு நானா? நீயா?''

வெள்ளரிக்காய வாங்கி நறுச் நறுச்சுன்னு கடிச்சுத் தின்னுகிட்டே, ''யக்கா! ஒனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்; இந்தா இன்னொரு கால் ரூவா வச்சுக்க''ன்னு கொடுத்துட்டு நடந்துட்டாரு கருத்தமாயி.

''மனசில்லாத கஞ்சப்பயன்னு நெனச்சோம்; மனுசன்னு காமிச்சிட்டுப் போயிட்டானே.''

கருத்தமாயி போன தெசையையே பாத்துக்கிட்டு, ஏவாரத்த மறந்து, நின்ன எடத்துலயே நின்னுபோனா வெள்ளரிக்காக்காரி.

செம்பட்டிக்கு வடக்க ஒரு கல்லோ... ஒன்றரைக் கல்லோ... கோடாங்கிபட்டி.

இவரு தேடிப் போன முத்துமாணிக்கம் திண்ணைய ஒட்டித் தெருவுல ஒக்காந்திருக்காரு கயித்துக் கட்டில்ல.

மேல் சட்டை இல்ல. நரச்சு நாராத் தொங்குது நெஞ்சு முடி. இடுப்புல கட்டுன வேட்டியையும் முழங்காலுக்கு மேல ஒரு முக்காச்சுருட்டுச் சுருட்டி ஒக்காந்திருக்காரு. வேட்டிங்கறதுகூட ஊருக்குக் கட்டுப்பட்டு உடுத்தறதுதான தவிர, அடிக்கற வெக்கையில வேட்டிக்கு அவரோ, அவருக்கு வேட்டியோ தேவைப்பட்ட மாதிரி தெரியல.

சுத்திமுத்தியும் தெருவப் பாத்துட்டு வீட்டுக்குள்ளயும் ஒரு பார்வைய வீசிட்டுப் பெரியவர் கால் பக்கமாப் பாத்து, உடம்பு பாரத்தப் பாதி கட்டில்லயும் பாதி வெளில யுமாப் போட்டு ஒக்காந்துட்டாரு கருத்தமாயி.

''யாருப்பா அது... எந்த ஊரு?''

''அய்யா நான் அட்டணம்பட்டி சீனிச்சாமி மகன் கருத்தமாயி.''

''எது? தேவதானப்பட்டி அட்டணம்பட்டியா?''

''ஆமா.''

''எந்தச் சீனிச்சாமி? அந்தக் குடும்பத்தோட..?''

''ஆமாய்யா! குடும்பத்தோட செத்துப்போனாரே அந்தச் சீனிச்சாமிதான்.''

''அவரு மகன்கூட ஒருத்தன் கந்துவட்டிக் காரன வெட்டிப்புட்டுச் செயிலுக்குப் போயிட்டானே.''

''ஆமா. இப்ப வந்துட்டான்.''

''வந்துட்டானா? கொலகாரப் பாவி... இப்ப என்னா பண்றான்?''

பேச்சு நின்னுபோச்சு கருத்தமாயிக்கு. புங்க மரத்துக் காக்காய்க மட்டும் 'அது இவன்தான்... அது இவன்தான்’ங்கிற மாதிரி கத்திக் கத்தி காத அக்குதுக.

பதில் வராமப் போகவும் பெருசுதான் பேச்சைத் தொடருது.

''வெயில்ல வந்திருக்கியே தம்பி... கலர் கிலர் வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா?''

''வேணாம்; குடிக்கத் தண்ணி கொடுக்கச் சொல்லுங்க.''

தலையத் தூக்கி வீட்டுக்குள்ள குரல வீசி அடிக்குது பெருசு.

''யம்மா தாயி சிட்டம்மா... குடிக்கத் தண்ணி கொண்டாத்தா.''

''வரப்போறா... வந்துருவா.'' கருத்தமாயி உசுரு கண்ணுல ஏறித் துடிக்குது.

ஆளக் கொன்டுபுட்டு செயிலுக்குப் போயிவந்த ஆளுக்கு உச்சிவெயில்ல ஒடம்பு நடுங்குது. வகுத்துக்குள்ள ஒரு வவ்வா வலப்பக்கம் இடப்பக்கம் பறந்து பறந்து விலாவுல முட்டி வெளியேறப் பாக்குது.

''இப்பத்தான் குடிச்ச; எதுக்கு இன்னொரு சொம்பு கேக்கற?'' முனகிக்கிட்டே வெளியே வந்த சிட்டம்மா கருத்தமாயப் பார்த்ததும் களுக்குன்னு ஆகிப்போனா.

''வாங்க... எப்ப வந்தீக?''

''செயில்ல இருந்து வந்து மூணு மாச மாச்சு; ஒங்க வீட்டுக்கு வந்து கா மணி நேரமாச்சு.''

''எப்படியிருக்கு எங்கண்ணன்?''

''அவனுக்கென்ன? நாலு பேரு கஞ்சிய அவன் ஒருத்தனாக் குடிச்சிட்டு நல்லாத்தான் இருக்கான்.''

இவுக பேச்சுவார்த்தையக் கேட்டதும் முழிக்குது பெருசு.

''ஏம்மா... இந்தாளத் தெரியுமா ஒனக்கு? எங்க பாத்திருக்க?''

கட்டிலுக்கு வெளியே கிடந்த ஒடம்ப இழுத்துக் கட்டிலுக்குள்ளயே முழு பாரத்தையும் போட்டு ஒக்காந்து இப்பக் கருத்தமாயி பேசுறாரு:

''சிட்டம்மாவ நான் செயில்ல பாத்தேன். ஒங்க மகன் பொத்தக்காதன்கூட செயில்ல இருந்த சீனிச் சாமி மகன் கருத்தமாயி நாந்தான். அண்ணனப் பாக்கச் சிட்டம்மா செயிலுக்கு வர்றப்பவெல்லாம் எனக்கும் அவளுக்கும் பழக்கம். சிட்டம்மாவப் பொண்ணு கேட்டு வந்திருக்கேன். பொழப்பத்துப் போய் வந்திருக்கேன். போ...ன்னு சொல்லிராதீக. பையில துட்டு இல்ல; கையில தொழில் இருக்கு. வச்சுப் பொழப்பேன். மறுத்துராதீக.''

தண்ணிச் சொம்ப வச்சிட்டு உள்ள ஓடி ஒளிஞ்சு போனா சிட்டம்மா.

முழங்காலுக்கு மேல கிடந்த வேட்டிய இன்னுங் கொஞ்சம் சுருட்டிக்கிட்டு முழிய உருட்டி உருட்டி யோசிக்குது பெருசு.

ஒளிச்சுப் பேசுறது, உள்ளண்ணு வச்சுப் பேசுறது, பொத்துனாப்புல பேசுறது, பொத்திப் பொத்திப் பேசுறது இதெல்லாம் ஒழைக்கற சாதிக்கு ஒத்துவராது. சொல்லு சில்லு சில்லாத் தெறிச்சு ஓடற மாதிரி செதறுதேங்கா போடறது தான் அவங்க வழக்கம்.

''யப்பா சீனிச்சாமி மகனே! எனம் பாத்து, குலம் பாத்து, முறை பாத்துத்தான் வந்திருக்க. சந்தோசம். செத்தவெடம்* இரு; கோழி அடிக்கச் சொல்றேன்; கொழம்பு வைக்கச் சொல்றேன். இருந்து குடிச்சிட்டுப் போ. மத்தபடி வா... போ... ஆனா, கொலகாரப் பயலுக்குப் பொண்ணு கொடுப்பேன்னு மட்டும் நெஞ்சுக் கூட்டுல நெனச்சிராத.''

சொம்புத் தண்ணி சொம்புலயே இருக்கு; தொண்டைய நனைக்கல கருத்தமாயி.

திரும்பவும் சொல் அத்துப் போக, காக்காய்க பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டேயிருக்குக கண்ட மேனிக்கு.

'இனி, இவுக வீட்டுல கோழி அடிச்சுக் கொழம்பு குடிக்கணுமாக்கும். போக வேண்டியதுதான்’.

கட்டில்ல பின்பாரமாக் கெடந்த ஒடம்ப முன்னுக்கிழுத்து எந்திரிக்கப் பாத்தாரு கருத்தமாயி.

''தம்பி யாரு?''

ஒடம்ப வளைக்காமக் கழுத்த மட்டும் திருப்புறாரு கருத்தமாயி.

கூடையத் திண்ணையில எறக்கி வச்சிட்டு முந்தானையில அழுத்தி மூஞ்சி துடைச்சு நிமிந்தா, செம்பட்டியில பாத்த வெள்ளரிக் காக்காரி.

ஒருத்தர ஒருத்தர் உத்து உத்து அதிசயமாப் பாத்துக்கிட்டாங்க.

சன்னல் பக்கமா நின்னு ஆத்தாளுக்குச் சாடை காட்டுனா சிட்டம்மா.

ஆத்தாளும் மகளும் கசகசன்னு என்னமோ பேசிக்கிட்டாக.

கொஞ்ச நேரம் கழிச்சு ஆத்தா மட்டும் வெளியே வர்றா வீட்டுக்குள்ளயிருந்து.

''இந்தா ஆம்பள... பய நல்ல பய. செயில்ல யிருந்து பொத்தக்காதனும் தம்பியப்பத்தி நல்ல சொல்லுச் சொல்லித்தான் அனுப்பிச் சிருக்கான். சிறுக்கி மக சிட்டம்மாவும் ஆசப்பட்டுட்டா. கண்ணு இருக்க முழியத் தோண்டற களவாணிப் பயக ஊருல, தம்பி நல்ல ஆளுன்னு கண்கூடா வேற பாத்துப் புட்டேன். செயிலுக்குப் போயி வந்தவனுக் குப் பொண்ணு குடுக்க மாட்டேங்கிறியே... நாளைக்கு உன் மகனுக்குப் பொண்ணு கேட்டு ஊரு நாட்டுல எங்க போவ? இந்தக் கல்யாணம் நடக்குது. கல்யாணத்துக்கு நீ வாரியா? இல்ல கல்யாணம் முடிஞ்சு உன் கால்ல விழுகப் பொண்ணு மாப்பிளய இங்க கூட்டிட்டு வரவா?''

மக வச்ச சொம்புத் தண்ணிய இப்ப ஆத்தா எடுத்து நீட்டறா. கும்பிட்டு வாங்கி வாய் வளையத்துல உதடு படாம அண்ணாக்க விட்டுக் கடகடன்னு குடிக்கிறாரு கருத்தமாயி.

ரு ஆவணி மாசம்; தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோயிலு; எண்ணி ஏழே பேரு; ரெண்டே சம்பங்கி மால; அதுல அங்கங்க ரெண்டு மூணு ரோசாப் பூவு ஒரு ஆடம்பரத்துக்கு. மஞ்சக் கெழங்கு கட்டுன ஒரு தாலிக் கயிறு. பொண்ணு மாப்பிளயச் சேத்து ஒம்போது பேருக்குக் காப்பிக் கடையில கல்யாணப் பலகாரம். முடிஞ்சது முகூர்த்தம். ஒரு ஆணும் பொண் ணும் கூடி வாழ இம்புட்டே போதும். இதுக்கு மேல அவன் அவன் பவுசு காட்டறதெல்லாம் திமிரு  - தெனாவட்டு - வீம்பு - விறைப்பு. வேறென்னத்தச் சொல்ல?

வீட்டுக்கு வெளக்கேத்தி வச்சதும் புதுச் சேலையும் பூ மணமும் மாறாம சிட்டம்மாவத் தோட்டத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயி, நட்டுவச்ச மூணு மரக் கன்னுகளையும் கும்பிடச் சொன்னாரு கருத்தமாயி. அருள் எறங்கின பூசாரி மாதிரி பேசறாரு:

''சொல்றேன் கேட்டுக்க சிட்டம்மா. இந்தப்  பெறவிக்கு ஒனக்கு நான் துணை; எனக்கு நீ துணை. இந்த மூணு சாமிகளும் நம்ம ரெண்டு பேருக்கும் துணை. இந்த மொதத் தேக்கங் கன்னு இருக்கே இதான் எங்கப்பன் சாமி-உனக்கு மாமன்.

ரெண்டாம் தேக்கங் கன்னு இருக்கே... அதான், எங்காத்தா சாமி - உனக்கு மாமியா.

இந்த மூணாவது புங்கங் கன்னு இருக்கே அதான் எந்தங்கச்சி சாமி - ஒனக்கு நாத்தனா. குலசாமிக மூணும் கூடவே வரும். தொட்டுக் கும்பிட்டுக்க. எனக்கொரு ஆச இருக்கு. எங்கப்பன் பட்ட கடனைத் தீத்து இந்தப் பூர்வீக பூமிய மீட்டிப் பத்திரத்த வாங்கி இந்தச் சாமிக கால்ல வச்சுக் கும்பிடணும். அதுக்கு நீ ஒத்துழைக்கணும் தாயி. என்கூடவே ஓடி வருவியா?

''வாரேன் மாமா வாரேன்.''

மூன்றாம் உலகப் போர் - 04

இது நடந்து முப்பது முப்பத்தோரு வருசம் ஓடிப்போச்சு.

கருத்தமாயி கடனும் தீரல; பத்திரமும் வரல.

காலம் ஓடி ஓடிக் கடல்ல விழுகுது; பொழப்பு மட்டும் நின்ன எடத்துலயே நிக்குது.

கருத்தமாயி கனவு நனவாகிறது அவரு கையில மட்டுமா இருக்கு? ஆகாயத்தோட கையில இருக்கு; பூமாதேவி கையில இருக்கு; அரசியல்வாதிக கையில இருக்கு; அமெரிக்கா, ஐரோப்பா கையில இருக்கு; ஐ.நா. சபை கையில இருக்கு. அமெரிக்கப் பத்திரிகையில அந்த மாசம் எமிலி எழுதிஇருக்காளே! - அந்தக் கட்டுரைக்குள்ள இருக்கு.

- மூளும்