சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

அன்பைச் சொல்ல அழகான வழி!

நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்

அன்பைச் சொல்ல அழகான வழி!

'நீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆவாய்!’ என்கிறது இந்துமதம்! உண்ணும் உணவு எப்படி நம் உடம்பை வளர்க்கவும் வதைக்கவும் செய்கிறதோ... அதேபோல நாம் எண்ணும் எண்ணங்களும், உச்சரிக்கும் வார்த்தைகளும்கூட நம் மனதை ஆழமாகவே பாதிக்கின்றன.

எண்ணங்கள் சுத்தமாக இருக்க வேண்டுமானால், சொந்தபந்தங்களுடனான உறவும் நட்பு வட்டங்களும் நல்லதாக இருக்கவேண்டும்!'' - ஆழ்ந்த அனுபவத்தோடு ஆன்மிகம் கலந்து பேசுகிறார் 'ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ முரளி.

##~##
''கலகலப்பான கூட்டுக் குடும்ப கலாசாரம்தான் நமது பாரம்பரியம். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி குடும்பத்தோடு நாம் பரிமாறிக்கொள்ளும் அன்பால் ஆகாதது எதுவும் இல்லை!

சக்தி மிகுந்த மனிதனாக மாற வேண்டுமானால், முதலில் நம் மனத்தில் நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். அந்த நல்ல சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் வார்ப்பாக இருக்கிறது குடும்ப அமைப்பு. கடவுளின் கருணை எல்லோருக்கும் கிடைக்கிற வாய்ப்பாகத்தான் தாயைப் படைத்தான் என்பார்கள். நம்மையும் அறியாமல், நம் ஆழ்மனதிற்குள்ளாக படிந்துகொள்ளும் சிந்தனைகள்தான் அன்பான வார்த்தைகளாகவும் வெளிப்படுகின்றன. இயல்பான இந்த உறவுமுறைதான் ஆரோக்கியத்தின் அடிப்படையே! இதைத்தான் 'அன்பே சிவம்’ என்கிறது ஆன்மிகம்!

'அதைக் கொடு, இதைக் கொடு’ என்று பட்டியல் அடுக்கிவைத்து  ஆண்டவனைப் பிரார்த்திப்பது பிசினஸ்! எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாத சுத்தமான அன்போடு கடவுளே கதியென்று சரணடைவதுதான் உண்மையான பக்தி!

சில சமயங்களில், குழந்தை ஏன் அழுகிறது, எதற்கு அழுகிறது என்ற காரணமே தெரியாது. யார் யாரோ தட்டிக் கொடுத்தும் தாலாட்டுப் பாடியும்கூட நிற்காமல், அழுது கொண்டே இருக்கும். தாயானவள் குழந்தையை அள்ளியெடுத்து அரவணைத்ததும் சொல்லி வைத்ததுபோல் சட்டென்று அழுகையை நிறுத்திவிடும் குழந்தை. இங்கே தாய் என்பவள் ஆண்டவன்; குழந்தைதான் மனித மனம்! ஆண்டவனைச் சரணாகதி அடையாத மனம்தான் உலக இன்பதுன்பங்களுக்கு ஆட்பட்டு அலைபாய்ந்து கொண்டேயிருக்கும்.

'நான் யார்?’ என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொண்டு எனக்குள்ளே என்னைத் தேடித்தேடிக் கரைந்து போகும்போதுதான் அந்தப் பேரின்பப் பரவசம் பிரகாசிப்பது தெரியவரும். எல்லாமே அவன் செயல்! சர்க்கரையாலே செய்யப்பட்ட பிள்ளையாரின் ஒரு பாகத்தை உடைத்து அவருக்கே படையல் வைப்போமே... அப்படியரு நிலை! அவனின்றி இங்கு எதுவும் இல்லை என்ற உண்மை நிலையை உணர்ந்து ஆண்டவனைச் சரணாகதி அடையும் உச்சகட்ட அன்புதான் உன்னதமான பக்தி!

தூசு, துரும்பு, தூண், செடி, கொடி, மரம், மட்டை என்று எல்லாமே அவன்! இன்னும் சுருக்கமாகச் சொன்னால், அண்டமும் அவனே பிண்டமும் அவனே!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று அண்டத்தில் இருக்கும் ஐம்பூதங்களும் பிண்டமாகிய நம் உடம்பிற்குள்ளேயும் இருக்கிறது. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று சரிவிகித சமானமாக இருக்கும் வரையில் எந்தவித பிரச்னையும் இல்லை. ஆனால், இவற்றில் ஏதாவது ஒன்று கூடி, குறையும்போது உடம்பின் இயல்பு நிலை தவறி, பிணியாகிறது. அதனால்தான் அண்டமும் பிண்டமும் ஒன்று என்றார்கள். வாயுவின் தாக்கம் அதிகம் இருக்கும் நேரங்களில், வாத சம்பந்தமான நோய்களும், நீரின் தன்மை மிகுந்து இருந்தால் கப தொந்தரவுகளும் இருக்கும். இவற்றையெல்லாம் நாடி பிடித்துப் பார்த்தே சரிசெய்துவிடக்கூடிய அளவிற்குத் திறமையான வைத்தியர்கள் அன்றைக்கு இருந்தார்கள். உடல் நரம்புகளில் விரல்களால் அழுத்தம் கொடுத்தே குணப்படுத்தும் இந்த வைத்திய முறையின் இன்னொரு  பரிணாமமாகத்தான் இன்றைய 'டச் ஹீலிங்’ சிகிச்சையை நான் பார்க்கிறேன்.

அன்பைச் சொல்ல அழகான வழி!

'உள்ளம் பெருங்கோவில், ஊண் உடம்பே ஆலயம்’ என்றார் திருமூலர். ஆலயமான உடம்பை தூய்மையாக வைத்திருந்தாலே நோயற்று வாழ முடியும்! அந்தக் காலகட்டத்தில், ஆன்மிகமும் மருத்துவமும் பிரித்துப் பார்க்கப்படவில்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

அதனால்தான், சுறுசுறுப்பில்லாமல் சுகவீனத் தோற்றத்தில் இருப்பவர்களைக் கண்டால், 'தம்பி... பெருமாள் கோயிலுக்குப் போய் வா. கூடிய விரைவில், எல்லாம் சரியாகிவிடும்’ என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. ஏனெனில், கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம், வில்வ இலை தீர்த்தம், சத்து மிக்க பிரசாத வகைகள் உடல் ஆரோக்கியத்துக்கு தெம்பூட்டுபவை. ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு சம்பிரதாயங்களுக்குப் பின்னும் மனித வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை விஷயங்கள் இலை மறை காயாகப் பொதிந்து கிடக்கின்றன.

அன்பைச் சொல்ல அழகான வழி!

கோயிலுக்குச் செல்லும்போது வெறும் வயிற்றோடு செல்லவேண்டும், துக்க வீடுகளுக்குச் செல்லும்போது நன்றாகச் சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என்பார்கள். அதற்குள்ளும் அர்த்தம் இருக்கிறது. வெறும் வயிற்றோடு கோயிலுக்குள் நுழைந்து இறை நாமத்தை உணர்ச்சியோடு உச்சரித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். அப்போது எழும் வார்த்தை சப்தங்களில் இருந்து வெளிப்படும் அற்புத சக்தியானது உடம்புக்குள்ளேயும் ஊடுருவிப் பரவச நிலையை ஏற்படுத்துகிறது. ஆண்டவனை மனதில் இருத்தி உயிரின் மூலமான பிராணனைக் கட்டுப்படுத்தத் தெரிந்துவிட்டால், அழிவு என்பதே இல்லையே!

உலக இயக்கம், பிரபஞ்சம், இறை ஆற்றல், உயிர் தத்துவம் என்று அனைத்தையும் ஆராய்ந்து அறிந்த சித்தர்களே 'இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கை முறை’யைத்தான் நமக்கான செய்தியாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். 'எல்லாம் அவன் செயல்; அவனின்றி அணுவும் அசையாது’ என்ற எண்ணத்தோடு வாழ்க்கைச் சூழ்நிலைகளை யதார்த்தமாக எதிர்கொள்ளப் பழகிக் கொள்ளவேண்டும். அப்பாவின் விரல் பிடித்துச் சாலையைக் கடக்கும் குழந்தையின் மனதில், எந்தவித பயமோ கலக்கமோ இருப்பதில்லை. அப்படியரு குழந்தை மனநிலை வேண்டுமானால், பரம்பொருளே கதியென்று 'நம்பிக் கை’ப்பிடித்துச் சரணடைய வேண்டும்!  

மனித உடல் ஆரோக்கியத்துக்கு தனித்தனி மருத்துவ முறைகள் ஆயிரம் உள்ளன. ஆனாலும்கூட ஆன்மிகத்தின் அடிப்படையில், மனித உடல் - மனதுக்கு ஒருசேரக் கிடைக்கும் ஆனந்த ஆரோக்கியத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை!

என்னதான் விலையுயர்ந்த விதவிதமான உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தாலும், அம்மா கையால் ஒரு கவளம் பழைய சோறு சாப்பிடும்போது கிடைக்கும் ருசியும் திருப்தி யும் வேறெதிலும் கிடைக்காது. எதிர்பார்ப்பு கள் இல்லாத அந்த தாய்ப்பாசம்தான் அன்பு! எதிர்பார்ப்புகளோடு கூடிய எதுவுமே அன்பு அல்ல... ஆசை! நல்ல குடும்ப உறவுகளோடு அன்பு செய்யுங்கள். ஆண்டவனை அடைய அதுவே அழகான வழி!'' - தத்துவார்த்தமாக முடிக்கிறார் முரளி.

- த.கதிரவன்