என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

நானே மாறும் போது ஊர் மாறக்கூடாதா?புரசைவாக்கத்தில் டிராஃபிக்

##~##

'' 'பொண்ணு வீட்ல இருந்து வரதட்சணை வாங்கக் கூடாது’னு சொல்லி அவங்க தந்த 1,500 ரூபாயை மறுத்து வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிகிட்டேன். அதுக்காக 1964-ல் எங்கப்பா என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தினார். பிறகு இந்தச் சமூகத்துக்காக 2002-ல் நானே வீட்டை விட்டு வெளி யேறினேன். இந்த ரெண்டு சம்பவங்களும் நடந்தது புரசைவாக்கத்தில்தான்!'' - தன் சொந்த ஏரியாவான புரசைவாக்கம் பற்றி கரகர குரலில் பேசுகிறார் டிராஃபிக் ராம சாமி.

என் ஊர்!

''நம்பர் 2, ராமசாமிப் பிள்ளை தெரு. இங்கதான் 1934-ல் நான் பிறந்தேன். கொஞ்ச நாள்லயே 17, வெள்ளாளர் தெருவுக்கு குடி வந்தோம். 1976 வரை அங்கத்தான் ஜாகை. டி.யு.சி.எஸ்.சிக்கு எதிரில்தான் வீடு. ஆனால், இப்ப அந்தத் தெருவில் எல்லா ஓட்டு வீடுகளும் பெரும் பங்களாக்களா மாறிடுச்சு. ஆனால், நாங்க இருந்த வீடு மட்டும் பழமை மாறாம இன்னும் அப்படியே இருக்கு. அந்த வீட்ல எங்களுக்கு முன்ன குடியிருந்த வேணுகோபால் என்பவர், இப்ப ஹை-கோர்ட் ஜட்ஜா இருக்கார். ஜட்ஜ் வீட்டில் குடியிருந்தவனு பெருமையாச் சொல்லிக்கலாம்ல?

அப்போ புரசைவாக்கத்தில் சென்னபுரி அன்னதான சமாஜம்னு ஓர் அமைப்பு இருந்துச்சு. அவங்களுக்குச் சொந்தமான இடத்தில் வாடகைக்கு ஒரு வீடு பிடிச்சோம். எங்க அப்பா காலம் வரைக்கும் மாசம் மூணு ரூபாய்தான் வாடகை. நான் கடைசியா அந்த வீட்டைக் காலி பண்ற வரைக்கும் 60 ரூபாய் கொடுத்துட்டு இருந்தேன். அந்த வீட்லதான் என் 'உப நயனம்’ விழா நடந்துச்சு. அப்ப சென்னை மாகாண முதல்வரா இருந்த ராஜாஜி வந்து என்னை ஆசீர்வாதம் பண்ணினார். தான் எழுதிய மகாபாரதம், ராமாயணப் புத்தகங்களை கொடுத்து, 'பின்னாடி பெரிய ஆளா வருவே’னு வாழ்த்தினார். அதை இப்போ நெனைச்சுப் பார்த்தாலும் சந்தோஷமா இருக்கு!

புரசை  கார்ப்பரேஷன் ஸ்கூலில்தான் அஞ்சாவது வரைக்கும் படிச்சேன். பிறகு பத்தாம் கிளாஸ் வரைக்கும் எம்.சி.டி.எம். முத்தையா செட்டியார் ஸ்கூலில் படிச்சேன். இதில் என்ன சந்தோஷம்னா, அன்னிக்கு ஸ்கூல் யூனிஃபார்ம் காக்கி வெள்ளைதான். இன்னிக்கும் அதே காக்கி வெள்ளையைத்தான் உடுத்துறேன். ஸ்கூல் படிக்கும்போது வாலிபால், ஃபுட்பால்னு எல்லா விளையாட்டுகளும் விளையாடுவோம். இப்ப ஏதோ பேருக்கு இருக்குற நேரு பார்க் அன்னிக்கு பெரிய மைதானமா இருந்துச்சு. ரோடு போடுறோம்னு அரசாங்கம் எல்லா இடங்களையும் ஆக்கிரமிச்சுடுச்சு. இன்னொரு பக்கம் இன்னிக்கு ரோட்டில் ரெண்டு அடி எடுத்து வீடு கட்டுறாங்க. இப்ப இருக்குற போக்குவரத்து நெரிசலுக்கு இதுதான் முக்கியக் காரணம்.

என் ஊர்!

அதே ஏரியாவில் இருந்த பி அண்ட் சி மில்லில்தான் 20 வருஷம் வேலை பார்த்தேன். அப்ப இங்கு இருந்துதான் மிலிட்டரிக்கு காக்கி துணி போகும். ஆபீஸ் பாயா வேலைக்குச் சேர்ந்து, ஆபீஸரா ரிடையர் ஆனேன். 1963-ல் ஹோம் கார்ட் திட்டத்தைக் கொண்டு வந்தப்ப, சென்னையில் முதலில் நான்தான் அதை ஆரம்பிச்சேன். ஃபிளவர்ஸ் ரோடு, டவுட்டன் ரோடுனு நான் டிராஃபிக்கை கிளியர் பண்றதுக்காக ரவுண்ட்ஸ் போன அந்த புரசைவாக்கம் நாட்கள்தான் என் பிற்கால வாழ்க்கைக்கு அடித்தளம்.

என் ஊர்!

கல்யாணம் ஆன புதுசில் என் மனைவி சகுந்தலாவுடன் 'மேகலா தியேட்டர்’ல 'கொஞ் சும் சலங்கை’ படம் பார்த்ததெல்லாம் இப்ப ஞாபகத்துக்கு வருது. சீனிவாசப் பெருமாள் கோயில், பொன்னியம்மன் கோயில்னு அப்பப்ப போவேன். 'ராமாஸ் கஃபே’யும், நேரு பார்க்கும்தான் எங்க ஃப்ரெண்ட்ஸோட மீட்டிங் பாயிண்ட். ஆனால், இன்று எல்லாமே மாறிடுச்சு. ராமசாமியில் சேர்ந்து இருக்கும் 'டிராஃபிக்’ வரை நானே மாறிட்டு இருக்கும்போது என் ஊர் மட்டும் மாறாம இருக்கணும்னா என்ன?''

- ந.வினோத்குமார்,படங்கள்:எம்.உசேன்