Published:Updated:

``பறையும் கரகமும்தான் என் துயரத்தைப் போக்கியது!” - நாட்டுப்புறக் கலை கற்பிக்கும் கல்லூரி மாணவர்

கலையரசன் ( சு.ரூத் ஜான் )

`படிச்சா அங்கதான் படிப்பேன்... இல்லைன்னா வாழ மாட்டேன்'னு சொல்லி பூச்சி மருந்து குடிச்சுட்டேன். நல்லவேளை என் உயிர் போறதுக்குள்ள காப்பாத்திட்டாங்க.

Published:Updated:

``பறையும் கரகமும்தான் என் துயரத்தைப் போக்கியது!” - நாட்டுப்புறக் கலை கற்பிக்கும் கல்லூரி மாணவர்

`படிச்சா அங்கதான் படிப்பேன்... இல்லைன்னா வாழ மாட்டேன்'னு சொல்லி பூச்சி மருந்து குடிச்சுட்டேன். நல்லவேளை என் உயிர் போறதுக்குள்ள காப்பாத்திட்டாங்க.

கலையரசன் ( சு.ரூத் ஜான் )

“என் துயரங்களிலிருந்து என்னை மீட்டெடுத்தது நாட்டுப்புறக் கலைகள்தான். அம்மாவின் அரவணைப்பில் வளர வேண்டிய வயதில், அம்மாவின் கைகளில் பசியாற வேண்டிய வயதில் நானும் என் மூன்று அக்காக்களும் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டோம். தாயிடமிருந்து பிரிந்த பிள்ளைகள் மட்டுமா தவிக்கும்? பிள்ளைகளைவிட தாய்க்குத்தானே அதிகம் வலிக்கும்! பெற்ற பிள்ளைகளைப் பிரிந்த வலியில் எங்கள் அம்மாவும், அம்மாவைப் பிரிந்த துயரத்தில் நாங்களும் தவித்த பொழுதுகளை இப்போது நினைத்தாலும் என் நெஞ்சு அடைக்கிறது. பறை இசையும் கரகமும் இல்லையெனில் நான் என்ன ஆகியிருப்பேன் என்று என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை” - தன்னுடைய மாணவர்கள் இசைக்கும் பறைச் சத்தத்தினூடாக ஒலிக்கிறது கலையரசனின் சோகக் குரல்.

கலையரசன் மற்றும் குழுவினர்
கலையரசன் மற்றும் குழுவினர்
சு.ரூத் ஜான்

கலையரசன்... கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வேதியியல் மாணவர். ஒருபக்கம் ரசாயனங்களோடு போராடிக்கொண்டு மறுபக்கம் நாட்டுப்புறக் கலைகளோடு உறவாடிக்கொண்டிருக்கிறார். பறை இசை, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம் உள்ளிட்ட 32 நாட்டுப்புறக் கலைகளில் கலையரசன் கிங். தனக்குத் தெரிந்த கலைகள் தன்னோடு நின்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தன்னுடன் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு நாட்டுப்புறக் கலைகளைக் கல்லூரியின் அனுமதியோடு பயிற்றுவித்து வருகிறார்.

அவரை சந்திக்கச் சென்றோம். நாம் சென்றது ரிகர்சல் நேரம். சக மாணவர்கள் பறை இசைக்க... கரகாட்டத்தையும் கோலாட்டத்தையும் ஒரு கை பார்த்துவிட்டு வந்து பேச ஆரம்பித்தார் கலையரசன்.

“எனக்குச் சொந்த ஊர் தேனி மாவட்டம், போடி நாயக்கனூர். என் அப்பா குடிகாரர். தினமும் குடிச்சிட்டு வந்து அம்மாவை சித்ரவதை செய்தார். ஒரு கட்டத்துக்கு மேல் அம்மாவால் அதைத் தாங்க முடியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த என் அம்மா ஒருநாள் என்னையும் என் அக்காக்கள் மூன்று பேரையும் அழைச்சுக்கிட்டு அம்மாச்சி வீட்டுக்குப் போய்ட்டாங்க. அம்மாவுக்கு எந்த வேலையும் இல்லை. அம்மாச்சிக்கும் வயசாகிடுச்சு, வருமானமில்லை.

இந்த வறுமையான சூழலில் பிள்ளைகளை வளர்க்க முடியாது’ன்னு சொல்லி எங்கள் நான்கு பேரையும் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுட்டாங்க. அப்போ எனக்கு 5 வயசு. எதுவும் புரியாத சின்ன வயசுனாலும் அம்மாவைப் பிரிந்த அந்தக் காட்சிகள் என் மனசில் அழுத்தமா பதிஞ்சிருச்சு. என்ன செய்ய முடியும்? ஆதரவற்றோர் இல்லம் மூலமா என்னை பள்ளியில் சேர்த்துவிட்டாங்க.

`நல்லா படிக்கணும். பொம்பளை வளர்த்த புள்ள வீணாகிருச்சுன்னு யாரும் சொல்லிரக் கூடாது’னு அம்மா அடிக்கடி சொல்லும். நானும் நல்லா படிச்சேன். பள்ளிக்கூடத்தில் நடக்கிற எல்லா போட்டிகளிலும் ஆர்வத்தோடு கலந்துப்பேன். பள்ளிக்கூட விழாவில் சினிமா பாட்டுக்கு நான் ஆடிய நடனத்தைப் பார்த்த, பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், `உனக்கு நளினம் நல்லா வருது. நாட்டுப்புற கலையில கவனம் செலுத்து’னு சொன்னார்.

அப்போ, நான் ஆறாவது படிச்சிட்டு இருந்தேன். அவர் வார்த்தைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருச்சு. சுற்று வட்டாரத்தில் எங்கு நாட்டுப்புறக் கலைகள் நடந்தாலும் முதல் ஆளாப் போயிருவேன். என் ஆர்வத்தைப் பார்த்துட்டு ஆசிரமத்திலும் அனுமதிச்சாங்க. ஒவ்வொரு விஷயத்தையும் கூர்மையா கவனிச்சு, ஹாஸ்டல்ல அதை பிராக்டீஸ் பண்ணிப் பார்ப்பேன்.

என்ன மாயமோ, மந்திரமோ தெரியலை. வேலு ஆசான் வார்த்தைகள் பலிச்சிருச்சு! எந்தவித சிரமமும் இல்லாமல் ஒவ்வொரு கலைகளையும் உடனுக்குடன் கத்துக்கிட்டேன். பறை இசையும் கரகமும்தான் முதலில் நான் கற்றுக்கொண்ட கலைகள். அதைப் பள்ளிக்கூட விழாக்களில் சிறப்பாகச் செய்துகாட்ட, ஆசிரியர்கள் என்னை உச்சிமுகர்ந்து பாராட்டினாங்க. எனக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது.

மாவட்ட அளவிலான கூட்டங்களில் பறை இசைக்கவும் கரகம் ஆடவும் வாய்ப்பு கிடைச்சது. அதைப் பார்த்து அரசியல் மேடைகள்ல வாய்ப்பு கொடுத்தாங்க. பறையும் கரகமும் என் உலகமாகிப்போனது. சொல்லப்போனா, அது ரெண்டும்தான் என் கஷ்டத்தை சுவடு தெரியாம துடைச்சது.

பறை இசைக்கும் மாணவிகள்
பறை இசைக்கும் மாணவிகள்
சு.ரூத் ஜான்

அதற்காகப் படிப்பையும் கைவிட்டுவிடவில்லை. பத்தாம் வகுப்பில் 421 மதிப்பெண்கள் வாங்கினேன். 11-ம் வகுப்பின் இறுதி காலகட்டத்தில்தான் என் கலை வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் ஆரம்பிச்சது. அழகப்பா பல்கலைக்கழகத்தில் கவின் கலைத்துறை பேராசிரியராகப் பணியாற்றும் இளவழகன் அண்ணாவுடைய அறிமுகம் அப்போதுதான் கிடைச்சது. அவர் அறிமுகத்துக்குப் பிறகு, ஒவ்வொரு கலை நிகழ்த்துதலுக்கும் உள்ள துல்லிய அளவுகோலை தெரிஞ்சுகிட்டேன். அவர் ஏற்படுத்திக் கொடுத்த தொடர்புகள் என்னை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோச்சு. பன்னிரண்டாம் வகுப்பில் 759 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன்.

இதற்கிடையில் கண்களால் ஊசி எடுக்கவும், பிளேடு எடுக்கவும் பயிற்சி எடுத்தேன். அந்த முயற்சியில் பலமுறை சின்னச் சின்ன காயங்களோடு, என்னுடைய கண்கள் நூலிழையில் தப்பியிருக்கின்றன. எனக்கு எந்தக் குருவும் இல்லை. எல்லாம் பார்த்துப் பார்த்து நானே கற்றுக்கொண்டதுதான். இதுவரையில் கிராமிய புதல்வன், கிராமிய செல்வன், கலைகளின் செல்வன், கலைகளின் அரசன், கிங் ஆப் ஆர்ட்ஸ்னு 32 விருதுகளைத் தமிழ்நாடு கிராமிய நலச் சங்கம் தந்திருக்கு. இவற்றையெல்லாம் பார்த்து அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.

கலையரசன்
கலையரசன்
சு. ரூத் ஜான்

நான் கலைத்துறையில் சாதிச்சதுல அம்மாவுக்கு சந்தோஷம். ஆனா, 'கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில்தான் படிப்பேன்’னு சொன்னதை அம்மா ஏத்துக்கலை. `அவ்வளவு செலவு பண்ண முடியாது’ன்னு சொன்னாங்க.

எங்க ஊரிலிருந்து நிறைய பேர் இங்கே படிச்சதால, இந்தக் கல்லூரியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். `படிச்சா அங்கதான் படிப்பேன், இல்லைன்னா வாழ மாட்டேன்'னு சொல்லி பூச்சி மருந்து குடிச்சுட்டேன். நல்லவேளை உயிர் போறதுக்குள்ள காப்பாத்திட்டாங்க. கூலி வேலைக்குப் போய் சேர்த்து வெச்சிருந்த பணத்தைக் கட்டி என் அம்மா இந்தக் கல்லூரியில் சேர்த்துவிட்டாங்க.

காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் செலிபரேஷனின்போது நான் என்னுடைய கிராமியக் கலைகளை அரங்கேற்றினேன். ஆசிரியர்களெல்லாம் அசந்துபோயிட்டாங்க. சக மாணவர்கள் மத்தியிலும் அப்ளாஸ் அள்ளுச்சு. என்னுடைய பர்ஃபாமன்ஸை பார்த்துட்டு,`நீ ஏன் ஆர்வமுள்ள மற்ற மாணவர்களுக்கு இதைச் சொல்லித் தரக்கூடாது’னு கல்லூரி முதல்வரும் பேராசிரியர்களும் கேட்டாங்க. நானும் குஷியாகிட்டேன்.

சிறுவயதில் கலையரசன்
சிறுவயதில் கலையரசன்

முறைப்படி சர்க்குலர் அனுப்பினோம். காலையில் 5 - 7 மணி வரையும், மாலை 2 - 5 மணி வரைக்கு, 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு நாட்டுப்புறக் கலைகளைச் சொல்லித் தர்றேன். ‘கிராமிய கலைக்கோட்டம்’னு எங்க குழுவுக்கு பெயர் சூட்டியிருக்கிறோம்.

"ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப்னு டிரெண்டிங்கா இன்றைய இளைஞர்கள் போய்க்கிட்டு இருக்கிறப்போ, `பறை இசை கத்துக்கறேன்’னு சொன்னா, வீட்டுல உடனே சம்பதிப்பாங்களா? பல பெண்கள் வீட்டில் சண்டை போட்டு பறை இசை கத்துக்கறாங்க. அவங்க ஆர்வத்தைப் பார்க்கும்போது இந்தக் கலையை உலகெங்கும் பரப்பணும்ங்கிற ஆர்வம் பொங்குது’’ என்று சொல்லியவாறு மாணவி ஸ்மிருதியை அறிமுகப்படுத்தினார்.

பறை இசைத்து முடித்த அதிர்வு அடங்காமல் நம்மிடம் பேசிய ஸ்மிருதி, “நான் பி.காம் சி.ஏ படிக்கிறேன். இவரோட பர்ஃபாமன்ஸை பார்க்குறவரை சி.ஏ-வாகணும்ங்கிறதுதான் என் லட்சியமா இருந்துச்சு. பறை இசை எனக்குள் ஏற்படுத்திய அதிர்வு, நாமும் அதை இசைக்கணும்; கரகம் ஆடணும்’ங்கிற ஆர்வத்தை தூண்டுச்சு. எதைப் பத்தியும் யோசிக்காம, பேர் கொடுத்துட்டேன். வீட்டில் சொன்னப்போ அம்மாவும் அப்பாவும் செம்ம திட்டு. பறைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அதை நீ வாசிக்கலாமான்னு கேட்டாங்க. ஆனாலும், நான் என் முடிவுல உறுதியா இருந்தேன். அதைப் பார்த்துட்டு நீ இவ்வளவு ஆசைப்படுற சரி கத்துக்கோ’னு, அப்பா கிரீன் சிக்னல் கொடுத்துட்டார்.

"என்னுடைய பர்ஃபாமன்ஸ் வீடியோக்களை பார்த்து, அப்பா, அம்மா சந்தோஷப்படுறதைப் பார்க்கும்போது, இந்தக் கலையோட சக்தியை உணர முடிகிறது!"
கலையரசன்

இறுதியாக, உங்கள் அப்பா யார் எனச் சொல்லவில்லையே எனக் கலையரசனிடம் கேட்டபோது, “அப்பா பேர் ரவி வர்மா... பத்து வருடத்திற்கு முன்பு டி.வி வைத்திருந்த அத்தனை பேரின் வீடுகளிலும் என்றாவது ஒரு நாளாவது என் அப்பாவுடைய இசை ஒலித்திருக்கும். ஆம்! சில மெகா சீரியல்களின் இசையமைப்பாளர் என் அப்பாதான். ஏன் இதை முன்பே சொல்லவில்லை என்றால், எல்லோர் வீடுகளிலும் தன் இசையைப் பரப்பியவர் எங்கள் வீட்டில் மட்டும் இம்சையை ஏற்படுத்திவிட்டாரே!” கசியத் தயாராகும் கலையரசனின் கண்ணீர்த்துளிகளைக் களவாடிச் செல்கிறது காற்று.