வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சட்டென்று மாறிய வானிலை.. சென்னை... காலையில் வானொலியை "ஆன்' செய்த போது கேட்ட இந்த உணர்வுபூர்வமான பாடலுக்கு ஒரு பதிவை போடலாம் என தோன்றியதன்விளைவே இந்த பதிவு. பாடலைக் கேட்க கேட்க கண்முன்னே காட்சிகள் நிழலாய் விரிந்தன.
"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று எனை சுட்ட நிலா..". வாழ்நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும்..."அருமையான மெட்டு சுகமான தாளம் கே ஜே ஜேசுதாஸ் அவர்களின் குரல் இதயத்தைத் துளைக்கும் . (இதுபோன்ற பாடல்களைக் கேட்டுவிட்டு இப்போதுள்ள பாடல்களை கேட்கவே மனம் ஏற்க மறுக்கிறது.) அதிக இசைக்கருவிகள் இல்லாமல் அருமையான தாலாட்டு மாதிரியான ஒரு காதல் பாடலை படைத்திருப்பார் இசை ஞானி.

உண்மையான காதலிப்பவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு காதல் கீதம்.
"அவள் பெயரை நாளும் அசைபோடும்
உள்ளம் அவள் போகும்
பாதை நிழல் போல
செல்லும் மௌனம் பாதி
மோகம் பாதி எனை கொள்ளும் எந்நாளும்..."வாலிஸார் அனுபவித்து எழுதி இருப்பார் . உள்ளம் படும் பாட்டை மிக அழகாக நேர்த்தியாக பாடி வாயசைத்திருப்பார் முரளி .
"வினாத்தாள் போல் இங்கே கனா காணும் காலை விடை போல அங்கே நடை போடும் பாவை ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு எந்நாளோ" குழந்தையை தாய் தாலாட்டுவது போல இதயத்தினை தாலாட்டி இருப்பார் இசைஞானி இந்தப் பாடலில்.
ஒரு தலை காதலுக்கும் தனி மகத்துவம் உண்டு என புரிய வைத்த தமிழ் திரைப்படம் "இதயம்". 90களில் காதலுக்காக ஏங்கித் தவித்த, காதலை சொல்ல முடியாமல் ஏங்கித் தவித்த 'இதயம் முரளிகளின்' உள்ளக் குமுறல்தான் அந்த பாடல்.

1991 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளியான 'இதயம் ' திரைப்படத்தை மறக்க முடியுமா? மறக்கத்தான் முடியுமா?
சொல்லாத காதலை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய படம் இது. ஓவிய கல்லூரியில் முதுநிலை படித்து முடித்து 'டைட்டில் டிசைனராக' பணியாற்றிய கதிரின் இயக்கத்தில் வெளியான முதல் படம் இது. படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதையாக இருக்கும்.
கிராமத்திலிருந்து சென்னை வந்து மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முரளி, தன்னுடன் படிக்கும் ஹீராவைக் காதலிக்கிறார். ஆனால் தன் தாழ்வு மனப்பான்மையாலும், கூச்ச இயல்பாலும் காதலை அவரிடம் சொல்ல முடிவதில்லை.
படிப்பு முடித்து செல்லும் வரை, தன் காதலை அவர் சொல்வதில்லை. ஹீரா இவரது காதலைப் புரிந்து கொள்ளும் போது முரளியிடம் தன் காதலை வெளிப்படுத்த முடியவில்லை.(அவன் நோயாளியான சமயத்தில் தான் நாயகிக்கு அவன் மேல் காதல் வருகிறது ஆனால் அவன் குணமாகி வரும் வரை அவள் காத்திருக்க வேண்டும் மிகவும் எளிமையான இந்த கதையை கவித்துவமான திரைக்கதை மூலம் நகர்த்தி சென்றதில் நம் கவனத்தை ஈர்த்து இருப்பார் கதிர் அழகான கவிதை போல் இப்படத்தை எடுத்திருப்பார் கதிர்.
கல்லூரியின் முதல் நாள் வகுப்பறையில் ஹீராவின் கவனத்தை திருப்புவதற்காக இங்க் பாட்டிலை கீழே போடுவது, பேருந்தில் பயணம் செய்யும்போது தன் பாக்கெட்டில் இருந்து ஹீராவின் காலடியில் விழும் சில்லறைகளை எடுக்க யோசிப்பது, ஹீராவின் கூந்தலில் இருந்து விழுந்த பூவை "டைரி"யில் சேகரித்து வைப்பது என காதலில் கசிந்துருகிய 'ராஜா'வாகவே முரளி மாறியிருந்திருப்பார்.

"இந்தப் பாதங்கள் மண் மீது நடக்க வேண்டியவை இல்லை... மலர்கள் மீது" என்று அவர் சொல்லும் போது ... காட்சியில் அப்படியே லைட்டு இருப்போம் தான் படத்தின் இன்னொரு மிகப்பெரிய பலம் இசைஞானியின் இசை. அன்றைக்கு எல்லாம் இளைஞர்களிடம் அலைபேசி இருந்திருந்தால் படத்தின் 'டைட்டில்' இசைதான் பலரின் 'ரிங்டோன்' ஆகி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்தப் படத்தை கொஞ்சம் உற்று கவனித்தால் முரளிக்கும் ஹீராவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களை ஒரு ஏ4 பக்கத்தாளின் ஒரு பக்கத்தில் எழுதி விட முடியும். அவ்வளவு குறைவான வசனங்கள். ஆனால் காட்சி அமைப்பில் அந்த வசனங்களுக்கு கனம் ஏற்றி இருப்பார் கதிர் அது வேற லெவலில் இருக்கும். ஹீராவிடம் தன் காதலை சொல்ல முடியாமல் முரளி தவித்து உருகும் போது நமக்கே கொஞ்சம் இதயம் வலிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

"ஏப்ரல் மே யிலே... பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான், பூங்கொடிதான் பூத்ததம்மா, இதயமே இதயமே ..."என அனைத்து பாடல்களும் ஆண் குரல் வழியே... தான் வெளிவந்தது.. இளைஞர்களின் தேசிய கீதமுமாகவும் ஆனது. முரளியின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது இந்தத்திரைப்படம். காதலை கடைசி வரை சொல்லாமலேயே கண்களில் தேக்கி வைத்து பண்பட்ட நடிப்பை வழங்கியிருப்பார் முரளி.
'மறுக்கப்படலாம்' என்கிற பயத்தில் ஊசலாடும் காதல்கள்தான் எத்தனையெத்தனை?? காதலின் அழகு புரிந்து கொள்ளப்படுவதில் தான் உள்ளது.
அந்த புரிதல்களுக்கு மௌனம் சில நேரங்களில் , உரையாடல் சில நேரங்களில் உதவி செய்யும். காதல்களின் வலியை விட சொல்லாத காதல்கள் தரும் சுமை மிகவும் அதிகம் தங்கள் காதலை சொல்லாமல் விட்ட அனைத்து ஆண்களுக்குள்ளும் ஒரு 'ராஜா' இருக்கவே செய்கிறான் நிலைமை கை மீறிய பின் ஒருவர் மீது (சற்று தாமதமாக) அன்பு பிறக்கிற பெண்களுக்குள் ஒரு 'கீதா'வும் இருக்கவே செய்கிறாள்.

25 வருடங்கள் கழித்து பார்த்தாலும் முரளியை நமக்கு மிகவும் பிடிக்கிறது ...காரணம் நம்மைச் சுற்றி இதயம் முரளிபோல நிறைய பேர். இது எல்லாம் 30 வருடங்களுக்கு முந்தைய கதை. இப்போது அப்படி இல்லை .
இப்போ லவ் ஃபெயிலியர் ன்னா. என்ன பண்றாங்க ஹீரோ? சரக்கு அடிச்சிட்டு," அடியே அடியே ... உன்னை எவன்டி பெத்தா பெத்தா"... அப்படி இப்படின்னு கண்டமேனிக்கு திட்டி, பாட்டு பாடி நடுரோட்டில் வெறித்தனமாக ஆடுகிறார்கள்.
மொத்தத்தில் அன்றைய "இதயம்" காதலை இணைத்து கவிதை பேசியது! சொல்லாத சொற்களின் சுமையானது!
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.