ஒரு கால இயந்திரம் மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்துள் நுழைகிறேன், அதன் தொடுதிரையில் உள்ள பல தலைப்புகளில் சங்க காலம் என்பதை அழுத்துகிறேன். நொடிப்பொழுதில் அது என்னை இன்றிலிருந்து சுமார் 2600 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.
விழித்துப் பார்க்கிறேன் எங்கோ ஒரு வனாந்திரத்துள் இருக்கிறேன், ஒரு பாதை செல்கிறது அதை பின் தொடர்கிறேன், போகும் வழியில் ஒரு பெரிய ஆலமரத்தடியில் இருக்கும் மூதாட்டியை பார்க்கிறேன். அவரிடம் மதுரைக்கு எப்படி செல்வது என்று கேட்கிறேன். அப்படியே இந்தப் பாதையை பின் தொடர் ஒரு காதை தூரத்தில் நறுமணங்கள் உன்னை அங்கிருந்து வழிநடத்தி மதுரைக்கே கூட்டிச் செல்லும் என்கிறார்.

கோச்சடையில் யானையை மறைக்கும் நெற்கதிர்கள், சிவரக்கோட்டை காடுகளில் பெண்மானோடு துள்ளித்திரியும் ஆண்மான்கள், கோடைக்காற்று கீழக்குயில்குடி குகைகளில் அடித்துக் கடலென எழுப்பும் ஒலி, பாலமேட்டில் காட்டுப் பன்றியை வீழ்த்தி ஆராவாரம் செய்யும் புலி, குட்லாடம்பட்டி மூங்கில் காடுகள் எரிந்து போனதால் வேறு மேய்ச்சல் நிலங்களை நோக்கி வலசை செல்லும் யானைகள் என இந்த இயற்கை சூழ் நிலப்பரப்பில் வைகைக்கரையில் இருக்கும் மதுரையை நெருங்குகிறேன்.
நகரத்தை நெருங்க நெருங்க ஒரு வானுயர கோட்டையின் மதில்சுவர் கண்களில் படுகிறது, அருகில் சென்றால் ஒரு பெரும் அகழி கோட்டைக்கு வெளியே வெட்டப்பட்டுள்ளது. கோட்டைச்சுவற்றில் நான்கு திசைகளிலும் பெரும் நுழைவாயில்கள் நிமிர்ந்து நிற்கின்றன. இந்த ஒவ்வொரு நுழைவாயிலிலும் கோட்டையின் பெருஞ்சுவர் மீதும் காவலர்கள் உள்ளனர். வைகையில் வெள்ளம் போவதுபோல் இந்த வாயில்களின் வழியே மதுரை நகருக்குள் மக்கள் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்.
கீழ மாசி வீதிக்குச் செல்கிறேன். அங்கே பூக்கள், சுண்ணம் (ஒப்பனைக்கான நறுமணத்தூள்), வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, கறி (மிளகு) ஆகியவை நாளங்காடியில் விற்கப்படுகின்றன. கடல் வணிகர் ஒருவர் முத்து, சங்கு அறுத்த வளையல், ஒரு வகையான இனிப்பு புளி, வெள்ளை உப்பு, கொழுத்த மீனின் துண்டுகள் ஆகியவற்றை விற்றுக்கொண்டு இருக்கிறார். ஒரு வணிகர் வெளிநாட்டில் நாவாய்கள் மூலம் கடல்வழியே தொண்டி துறைமுகம் வந்து சேர்ந்துள்ள குதிரைகளை விற்க மதுரை நகருக்குள் நுழைகிறார். விநோதமான புதிய மட் பாண்டங்களை வியாபாரம் செய்யும் ஒருவர் கைகளில் ரோம நாணயங்களை வைத்திருக்கிறார். ஒரு மூதாட்டி காட்டரிசியும் உப்புக்கண்டமும் தலைச்சுமையாக சுமந்து மஞ்சனக்காரத்தெரு நோக்கி நடந்துச் செல்கிறார்.
முனிச்சாலை கடம்பவனத் தோப்பில் பெரும் கிடா வெட்டு நிகழ்கிறது. கறித்துண்டை எண்ணையில் பொரிக்கிறார்கள், தாளிக்கும் புகை மேகம் போல் சூழ்கிறது. அங்கே ஒரு அம்மா அந்த வழியே செல்பவர்களை எல்லாம் அழைத்து பசியாற்றுகிறார். கோட்டைச் சுவரின் கிழக்கு புறத்தில் இரும்படிக்கும் ஓசை கேட்கிறது. பெண்கள் துருத்திகள் ஊத அங்கே ஆசாரிகள் உழவுக்கான கருவிகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வைகை ஆற்றின் கரைகளில் உள்ள படித்துறை ஒவ்வொன்றிலும் பெரும்பாணர்களின் குடியிருப்புகள் உள்ளன. பாணர்களின் யாழ் இசை ஒலியை வைகை ஆற்றின் நீர் கடல் நோக்கி அழைத்துச் செல்கிறது. பிடரி மயிர் பளபளக்கும் குதிரைகள் தேர்களை இழுத்துச் செல்கின்றன, நகரத்தின் படைகள் அங்கும் இங்கும் ரோந்தில் ஈடுபட்டுள்ளன, திரும்பும் திசையெல்லாம் விதவிதமாக கொடிகள் பறக்கின்றன.
அழகிய இளம்பெண்கள் கைவீசி இளைஞர்களோடு சிரித்து பேசி நடந்து செல்கிறார்கள். வயதான பெண்கள் கூடையில் பொருட்களுடன் வீடு வீடாக விற்பனை செய்கிறார்கள், கள் குடித்த மயக்கத்தில் வீரர்கள் தெருக்களைக் கடந்து செல்கிறார்கள். செம்பி கிணற்றுச் சந்தின் வீடுகளின் முற்றங்களில் நிலவு போல் பெண்களின் முகம் வந்து வந்து மறைகிறது.
தெற்கு ஆவணி மூல வீதி நோக்கி செல்கிறேன். அங்கே சங்கு அறுத்து வளையல்களை செய்து கொண்டிருக்கிறார்கள், மணிகளைத் துளையிடுபவர்கள் மும்முரமாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தோலும் கல்லுமாக பொன் உரசிப் பார்ப்பவர்கள் தங்கள் கைக்கு வந்த கட்டிகளை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை தொழில்கள் நடப்பதால் இந்த வெளியெங்கும் விதவிதமான ஓசைகள் நிரம்பியுள்ளது.
அணிகலன்கள் அணிந்து பெண்கள் தங்கள் கணவர்களுடன் வளையல்காரத்தெருவின் அங்காடிகளின் வழியே சித்திரைவீதி நோக்கிச் செல்கிறார்கள். மெல்லமெல்ல நகரம் சுடர் விளக்குகளின் ஒளியில் மின்னுகிறது.
திருவிழா போன்ற ஆரவாரமான ஊர் மெல்ல அடங்குகிறது, மதுரையின் முதல் சாமம் முடிவுக்கு வருகிறது, இரண்டாம் சாமம் தொடங்குகிறது. ஆனால் உரையாடல்களின் ஓசை இப்பொழுது இன்னும் பலமாக கேட்கிறது. ஆங்காங்கே மக்கள் அசலூர் காரர்களின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இசையும், ஆட்டக்காரர்களின் நடனமும் மேல வடம்போக்கி தெருவின் தேர் அருகே தொடங்குகிறது. கர்ப்பமான பெண்கள் மயில் போல் நடந்து தட்டாரச் சந்து நோக்கி செல்கிறார்கள். போரில் வடுக்கள் பெற்ற போர் வீரர்கள் உண்டாட்டில் கள் அருந்தி களித்து சுண்ணாம்புக்காரத் தெருவில் கம்பீரமாய் வலம்வந்தார்கள். மலர்கள் அணிந்த பரத்தையர் மதுரைக்கு தொலைதூரங்களில் இருந்து வந்துள்ள செல்வர்களுடன் உறவாடுகிறார்கள். இனிப்பு மணக்கும் பலாச்சுளைகள், அழகான மாங்கனிகள், கொடிகளில் இருந்து பறித்த இளம் பச்சை வெற்றிலைகள், கடிகை என்ற கண்டு சர்க்கரை, இறைச்சி சோறு எனக் கொண்டாட்டத்துடன் அல்லங்காடிகள் தொடங்கின.
நகரத்தின் ஆரவாரம் அடங்கியதும் பெண்கள் உறங்கச் செல்கிறார்கள். பகலில் அடை, மோதகம் விற்றவர்கள் உறங்கச் செல்கிறார்கள், விழாவில் ஆட்டமாய் ஆடிய ஆட்டக்காரர்கள் ஓய்ந்து சாய்கிறார்கள். ஒரு கடலின் இறைச்சல் அடங்கி குடியிருப்பு தெருக்களில் அமைதி குடிகொள்கிறது. நள்ளிரவிலும் காவலர்கள் நகரத்தை வலம் வருகிறார்கள், பதுங்கியிருந்து திருடர்களைப் பிடிக்க அவர்கள் காத்திருக்கிறார்கள், கன்னம் வைத்து களவாட வந்தவர்கள் காவலர்களைப் பார்த்து பதுங்கி திண்ணை ஒன்றில் உறங்கிவிடுகிறார்கள். காவலர்களால் நகரத்து மக்கள் நிம்மதியாய் உறங்குகிறார்கள்.
மதுரையின் அதிகாலை சேவல் கூவ, மயில் அகவ, களிறு முழங்க, புலி உறும விடிகிறது. கடைகளின் வாசலை மெழுகுகிறார்கள், கள் விற்போர் கடை திறக்கிறார்கள், அணிகலன்கள் அணிந்த பெண்கள் ஒலி எழுப்பியபடி தெருக்களில் செல்கிறார்கள். சமணப் பள்ளிகளில் மாணாக்கர் தங்களின் கடமைகளைத் தொடங்குகிறார்கள், அங்கே ஒரு பெண்மணி விளையாடும் குழந்தைகளுக்கு எல்லாம் தன்னிடம் உள்ள திணைமாவைப் பிரித்து தருகிறார்.
பட்டிணத்தடிகள் விவரிப்பது போல் நானும் அங்காடி நாய்போல் அலைந்து திரிந்தேன், மதுரை எனக்கு துளியும் சலிக்கவில்லை ஆனால் கால இயந்திரம் என்னை மீண்டும் 2021ல் வந்து இறக்கிவிட்ட போது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.
வைகை ஆறு சுருக்கப்பட்டு கான்கீரிட் கரைகளுடன் ஒரு சாக்கடை போல் மாறியிருந்தது, நறுமணம் கமழ்ந்த பல தெருக்களில் பாதாளச் சாக்கடை வீசிக் கிடக்கிறது. கல்லால் கட்டப்பெற்ற மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் தொன்மையான கட்டடம் நவீனத்தின் பெயரில் இயன்ற அளவு சிதைக்கப்பட்டு காணப்பட்டது. நகரெங்கும் இருந்த கடம்பமரங்களையும் ஏனைய நிழல் தரும் மரங்களையும் பெரிய பெரிய பற்களுடனான இயந்திரங்கள் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தன. சிவரக்கோட்டையின் நான்கு வழிச்சாலையில் மான்கள் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தன.
சாமானியர்களை எல்லா வகையிலும் கொண்டாடிய நகரம் எங்கோ அவர்களை கைவிடத் தொடங்கி விட்டது, நாளங்காடிகள் நடத்தும் எளிய சாலையோர வியாபாரிகளுக்கு முறையான ஓர் இடமில்லை. அவர்கள் மாமூல் அல்லது அபராதம் கட்டியே நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். தூங்காநகரின் அல்லங்காடிகள் சட்ட ஒழுங்கு எனும் தூக்க மாத்திரிகைகள் கொடுக்கப்பட்டு வலுக்கட்டாயமாக நித்திரையில் ஆழ்த்தப்பட்டன. ஒரு நகரம் எங்கோ திசை தவறி அதன் வரலாற்றுத் தன்மையை இழந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
உலகம் முழுமையிலும் வரலாற்று நகரங்களை அதன் பழைமை மாறாமல் பாதுகாக்க அரசு பலப்பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால் மதுரை போன்ற நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் பழைய சாலைகளின் மீது புதிய சாலைகள் போட்டு போட்டு வரலாற்று சின்னங்கள், பழைமையான கட்டடங்கள், வீடுகள் அனைத்தையும் பள்ளமாக மாற்றிவிட்டோம். வரலாற்றுத் தன்மை வாய்ந்த கல் பாவிய தெருக்களில் இருந்த பட்டிய கற்களை எல்லாம் எடுத்து வீசிவிட்டு கான்கிரிட் வனமாக மாற்றிவிட்டோம். சங்கம் வளர்த்த மதுரையில் எங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் எழுத-படிக்கத் தெரியாது என்று பெற்றோர் பலர் பெருமைப்பட விவரிக்கிறார்கள்.

துருக்கியின் இஸ்தான்புல், சிரியாவின் டமாஸ்கஸ் ஆகிய நகரங்களில் தங்கி சுற்றியிருக்கிறேன். இந்த வரலாற்று நகரங்களை அதன் பழைய தன்மை மாறாமல் அங்கேயுள்ள அரசுகள் பாதுகாக்கின்றன. அவர்களின் தெருக்கள், வரலாற்றுக் கட்டடங்கள், பழைய பஜார்கள் என எல்லாமே ஒரு கால இயந்திரத்தில் நாம் சென்று பார்ப்பது போலவே கடந்த காலத்தின் வாசனையுடன் இசையுடன் தன்மை மாறாமல் பாதுகாக்கப்படுகின்றன. நம் ஊரில் வரலாற்றுப்பூர்வமான எல்லாவற்றையும் அழித்துவிட்டு அதன் மீது டைல்ஸையும் கிரானைட்டையும் ஒட்டுவதை நாகரீகம் என்று நினைக்கிறோம். வரலாற்றை உணர்வதில், பாதுகாப்பதில் எங்கோ ஒரு பிசகு நிகழ்ந்துள்ளது அல்லது நம் புரிதல்களின் மீது ஏதோ கறை படிந்துள்ளது.
நன்றி: மதுரைக் காஞ்சி - மாங்குடி மருதனார் (விளக்க வடிவு: சாமுவேல் சுதானந்தா)
படங்கள்: பாலா முருகேசன் (ஆஸ்திரேலியா)