தேவகிரி கோட்டையின் பிரமாண்டம் மனதில் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தின் அலைகள் ஓய்ந்திருக்கவில்லை. எல்லோராவிற்காக துவங்கப்பட்ட பயணம்தான் என்றாலும் அங்கு சென்றடையும் முன்னமே பயணம் நிறைவு பெற்றதைப் போன்ற மனநிலை வாய்த்திருந்தது எனக்கு. எல்லோராவை குறித்த எதிர்பார்ப்புகளும் பரவசமும் வெகுவாக குறைந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. பயணங்களும் ஒரு வகையில் மனித உறவுகள் போலவே நமக்கான நிம்மதியும் நிறைவும் எந்த புள்ளியில் யாரிடமிருந்து கிடைக்கப்மெறும் என்று அறுதியிட்டு கூற இயலாது. அந்நிறைவை அடைந்த பின்பும் தொடரும் பயணங்களும் உறவுகளும் பூமாலையில் அலங்காரத்திற்காக சேர்க்கப் படும் செயற்கை பூக்களைப்போல,அவற்றின் இருப்பும் பயனும் இலவச இணைப்புகளேயன்றி வேறில்லை.
எல்லோரா நோக்கி பயணப்பட்டு கொண்டிருந்தோம். வழி நெடுகிலும் இருபுறமும் வயல்களின் முதிர்ந்த பச்சையம் அறுவடை காலத்தை உணர்த்தியது.

சாலையின் ஒரு பக்கத்தில் வெள்ளை நிற நேரு தொப்பி அணிந்த மனிதர்கள் சிறு சிறு குழுக்களாக கூடி பேசிக்கொண்டிருந்தனர். "அவர்கள் பாட்டில் இனத்தவர்கள்" என்றார் நண்பர். விவசாய சங்கத் தலைவர்கள் கூடி துவரை பருப்பு கொள்முதல் ஏலம் நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறினார். எனது நண்பரும் பாட்டில் இனத்தவர் என்பது அவரது பெயரிலிருந்து தெரிந்தது. 'பாட்டில்கள்' கிராம நிர்வாகிகள் அந்தஸ்து பெற்றிருந்தனர். 'தேஷ்முக்' இனத்தை சேர்ந்தவர்கள் தலைவர்களாகவும் 'பாட்டில்' இனம் அவர்களுக்கு கீழே நிர்வாகிகளாகவும் செயல்பட்டனர். அந்த வருடம் பருவ மழை பொய்த்து விட்டதால் துவரை விளைச்சலும் பருப்பின் தரமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்ததாக ராஜ்யஶ்ரீ வருத்தம் தெரிவித்தார்.
மேலும் துவரை பருப்பின் தோற்றத்தில் பளபளப்பு கூட்டுவதற்காக 'போரிக் அமில' பொடியை கலந்து சிலர் பாலீஷ் செய்வதால் அதை உண்ணும் மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு இரத்த சோகை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக அவர் கூறினார். அவரிடமிருந்து மகராஷ்டிரா கிராமங்களின் விவசாயிகள் சந்திக்கும் இன்னல்களை பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள முடிந்தது. கோடை காலத்தின் கடுமையான நீர்த்தட்டுப்பாடு குறித்து பேசினார். விதர்பா பகுதி விவசாயிகளின் தொடர் மரணங்கள் பற்றி பேசினோம். 'Gabrischa Paus (The Bastard Rain)' என்கிற மராத்தி திரைப்படத்தின் காட்சிகள் மனதில் நிழலாடின.

என் சிந்தனையின் ஓட்டம் பயணத்தின் வளைவுகள் போல திசை மாறியது.
அவனுக்கு அவை எவ்விதத்தில் மனநிறைவு தரும் என்று சிந்திக்கலானேன். கலை என்பது மனம் அமைதியாக இருக்கும்பொழுது உண்டாகும் வெளிப்பாடென்றுதான் அப்பொழுதுவரை என் புரிதல் இருந்தது. அந்த புரிதலை மாற்றியது அல்லது மேம்படுத்தியது எல்லோரா குகை சிற்பங்களின் கலை வடிவங்கள்.
கட்புலனாகாத ஏதோ ஒரு விசை அழுத்தமாக மனதை நெருக்கும் பொழுது கலையுணர்வு மட்டுமே மனிதனை சமநிலை குலையாமல் இருக்க உதவுகின்றன. மொழி பழகுமுன்னமே மனிதன் பாறைகளில் ஓவியம் தீட்டி கருத்து பரிமாற்றம் செய்தான். நடனமும், இசையும் கூத்தும் அவ்வாறே மனித மனத்தை ஆற்றுப்படுத்தும் வடிகால்களாகின.
எல்லோரா குடைவரை சிற்பங்களின் அழகு தூரத்தில் மிளிர்ந்தது. நாங்கள் நுழைவுச் சீட்டு வாங்குவதற்காக நின்றிருந்த நீண்ட வரிசையில் சேர்ந்து கொண்டோம். எனக்கு முன்னே அரக்கு நிற மேலங்கி தரித்த பெளத்தத் துறவிகள் குழு ஒன்று வரிசையில் நின்றிருந்தது. அவர்களது மழிக்கப்பட்ட தலைகள் மீது சூரிய ஒளியின் வெளிச்சம் பட்டு அவர்களது தலைகளைச் சுற்றி ஒளிவட்டம் வீசுவது போலிருந்தது. துறவிகளையும் சித்தர்களையும் சந்திக்கும் பொழுதெல்லாம் அவர்களுடன் கலந்து பேச வேண்டுமென்கிற ஆவல் தோன்றும். அதிலும் இளம் வயது துறவிகளென்றால் அவ்வார்வம் பன்மடங்கு கூடிவிடும். அவர்களது புலன் கட்டுப்பாடு முறைகளை கற்றறிந்து தெளிய வேண்டும் என்பது எனது நெடுநாள் விருப்பம். "புலனிச்சையிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி, அதற்கு ஆட்படுவதுதான்" என்கிற ஆஸ்கார் ஒயில்ட்- இன் வரிகள் எனக்கும் பொருந்தும். சுயக்கட்டுப்பாடு நான் விரும்பிப் பழகிக் கொள்ளாத ஒரு விஷயம்.
வரிசையில் காத்திருந்த நேரத்தில் எனக்கு முன் நின்றிருந்த இளம் துறவியிடம் பேச்சுக் கொடுக்க முடிவு செய்து அவரை வணங்கினேன். அவரும் பதிலுக்கு வணங்கிவிட்டு சட்டென்று திரும்பி கொண்டார். அவரை அசெளகரியம் தொற்றிக் கொண்டது போல் அவர் உணர்ந்தார். சிறிது நேரம் விட்டுப்பிடிக்கலாம் என்றெண்ணி நானும் எனது கவனத்தை அவரிடமிருந்து விலக்கினேன். நீண்ட வரிசையும் பாதுகாப்பு சோதனைகளும் எங்களது காத்திருப்பு நேரத்தை அதிகரித்தது. அவரிடம் பேசவேண்டுமென்கிற எண்ணம் மீண்டும் என்னுள் எழுந்தது. அவரை பார்த்தேன். நான் அவரை பார்ப்பதை அவர் கவனித்து விட்டார். உடனே அவரது மூக்குத் துவாரத்தில் விரல்களை விட்டு வேகமாக சுத்தம் செய்யத் துவங்கிவிட்டார்.
மிகவும் தீவிரமாக ஏதோ ஒரு உந்துதல் அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது போல் அவர் அச்செயலை நெடுநேரம் செய்து கொண்டிருந்தார். நான் திகைத்துப்போனேன். அவரின் அந்த செயலை காண சகிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். அவரை அணுகி பேசுவதென்பது மறந்து அவர் நிற்கும் திசையில் கூட நான் திரும்பிப் பார்க்கவில்லை. அந்தத் துறவியை நான் அப்பொழுது வெறுத்தேன். கடுமையான சுய கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றும் சந்நியாசிகளும் கன்னியாஸதிரீகளும் தங்கள் உளத்தெழும் புலன் வேட்கைகளை ஏதாவதொரு பழக்கத்தின் மூலம் தணித்துக் கொள்ள முயல்வர் என்று படித்திருக்கிறேன். அவரது செயல் அப்படித்தான் இருந்தது.
நுழைவுச்சீட்டுப் பெற்றுக் கொண்டு குகை சிற்பங்களை காணச் சென்றோம். எங்கெங்கு காணினும் எழில் கொஞ்சும் சிற்பங்களும் ஸ்தூபிகளும் எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு நிறைந்திருந்தன. ஆறாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை பல்வேறு அரச வம்சங்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒற்றைக்கல் சிற்பங்கள், கைலாசநாதர் கோவில் மற்றும் பல்வேறு குகைச் சிற்பங்கள் என ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு சிற்பமும் கலைநயத்தின் உச்சம் எனலாம். ஒரு சில சிற்பங்களின் முன் மெய்மறந்து நின்றிருந்தது இன்றும் நினைவிருக்கிறது.
பகுத்தறிவாளர்களும் முற்போக்கு கொள்கைகள் பின்பற்றுகிறவர்களும் கலை வடிவங்கள் குறித்து பேசும்பொழுதெல்லாம், அவற்றை மனிதனின் மிகையுணர்வின் வெளிப்பாடுகளாகவும், அவற்றை உருவாக்கிய விரல்கள் பெரும்பாலும் தொழிலாளர் வர்க்கத்தினருடையதென்பதால் அவர்களது கடின உழைப்பு முதலாளி வர்க்கத்தினரால் சுரண்ட பட்டனவென்கிற பார்வையை முன்வைப்பதுண்டு. அவர்களது கருத்தில் தவறில்லை என்றாலும் அது முற்றிலும் ஏற்புடையதாகிவிடாது. இத்தகைய கலை அற்புதங்கள் ஒருநாளும் கொடுமையின் மூலம் உண்டாயிருக்க முடியாது.
கட்டாயப்படுத்தி நிலத்தை உழச் செய்யலாம்; துணி நெய்யச் செய்யலாம்! வரி கொடுக்கும்படியும் செய்யலாம்; ஆனால் அத்தகைய கட்டாய முறைகளினால் கலை வளர்ந்து விடாது. குழந்தையை அடித்து அழச் செய்யலாம்; ஆனால் பாடச் செய்ய முடியாது. குழந்தையை அடிமேல் அடியடித்து ஓடச் செய்யலாம்; ஆனால், ஆடச் செய்ய முடியாது.
எல்லோராவில் பெளத்தம், ஜைனம் மற்றும் சைவ வைணவ சமய சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் விரவி காணப்படுகின்றன. எங்களுடன் பெளத்தர்களும் சமணர்ளும் சம எண்ணிக்கைகளில் அங்கு உலவிக் கொண்டிருந்தனர். நுழைவாயிலில் நான் கண்ட அத்துறவியும் அவ்வபொழுது தென்பட்டார். அவர் என்னை தவிர்க்க விரும்பியும் விதி எங்களிருவரையும் சந்திக்க வைத்தது போலவும் அவர் என்னை காணும் போதெல்லாம் பரபரப்பாக முகத்தைத் திருப்பிக் கொள்வார். அவரின் செய்கைகள் வேடிக்கையாக இருந்தன. எவ்வுணர்வை கட்டுப்படுத்த இயலாமல் அவர் என்னிடமிருந்துத் தப்பிச்செல்வதற்கு முயற்சித்தார் என்பது புரியாமலில்லை. ஆனாலும் அவரின் செய்கைகள் துறவிற்கான பொருளை அவர் உணரவில்லை என்பதை உணர்த்திற்று.
நேரம் பிற்பகலைக் கடந்திருந்தது. எல்லோராவின் மூலை முடுக்கெங்கும் சுற்றித்திரிந்து சிற்பங்களையும் ஓவியங்களையும் கண்டு களித்த பின் அவ்விடம் விட்டு புறப்படுவதற்கு தயாரானோம். ஒரு குகையின் மண்டபத்தில் நான் இளைப்பாறிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கண்ணயர்ந்தேன். தூக்கமும் விழிப்புமான இருமை நிலையில் மயங்கியிருந்த பொழுது அங்கிருந்து சற்று தொலைவில் காளையொன்று அமர்ந்திருப்பது போல் தெரிந்தது.

அதன் திமிலின் மீது மேற்குச் சூரியனின் ஒளிக்கிரணங்கள் பட்டு ஜொலித்தது. உறக்கம் கலைந்து அதனருகில் சென்று பார்த்தேன். அது ஒரு நந்தியின் சிலை. மிகவும் துல்லியமாக செதுக்கப்பட்ட அச்சிலையின் சின்னஞ்சிறு வளைவையும், மடிப்பையும் , அலங்கார வார்ப்புகளையும் எனது விரல்களால் தொட்டுணர்ந்த பொழுது உடல் சிலிர்த்தது. அது ஒரு சிலை என்பது மறந்து போகுமளவிற்கு நந்தியின் உடற்கட்டு செதுக்கப்பட்டிருந்தது. கற்பனையில் அந்த நந்தி என்னுடன் பேசுவது போலிருந்தது.
" மனிதர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இவ்விடத்தில் எங்கோ ஒரு மூலையில் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் என்னைத் தேடி வந்த காரணமென்ன பெண்ணே"
``எனது தேடல் குறித்த எந்தத் தெளிவும் எனக்கில்லை. நான் சென்றடையும் இடங்களும், காணும் விஷயங்களுமே எனது தேடலின் பொருள் என்னவென்று எனக்கு உணர்த்துகின்றன. உன்னைக் கண்டடைந்தது கூட என் செயலன்று. அது நிகழ்ந்திருக்கிறது. அதன் காரணம் இனிதான் எனக்கு விளங்க வேண்டும்" என்றேன்.
"தன்னை உணர்வதன் முதல் படி உனது தேடலை உள்நோக்கித் திருப்புவது. அந்நிலை சாத்தியப்படும் வரை உனது பயணங்கள் தொடரட்டும்" என்று கூறிவிட்டு சற்று அசைந்து அமர்ந்து கொண்டது அந்த நந்தி.
எல்லோராவிலிருந்து கிளம்பும் பொழுது முன்பு சந்தித்த பெளத்தத் துறவிகள் குழுவை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் அவர்களைக் கடந்து முன் சென்றோம். "அவர்களிடம் ஏதும் கேட்க விரும்புகிறீர்களா, காலையிலிருந்து நீங்கள் முயற்சிப்பது போல் தெரிகிறதே" என்றார் நண்பர். நான் வேண்டாமென்று மறுத்து விட்டேன்." எனக்கான விடையை எல்லோராவின் நந்தி ஒன்று அளித்து விட்டது" என்றேன்.
"அந்த சிலையா, சிலை எப்படி பேசும் ஷாலு" என்றார் அவர்.
"நாம் வணங்கும் கடவுளர்களும் கற்சிலைகளில்தானே ஒளிந்திருக்கிறார்கள். அவர்களிருப்பது உண்மையென்றால் நந்தி என்னிடம் பேசியதும் உண்மை" என்றேன்.
இறுதியாக ஒருமுறை எல்லோராவை திரும்பிப் பார்த்தேன்." நந்தியுடன் உரையாட மீண்டும் இவ்விடம் வருவேன்." என்று நான் மனதோடு கூறியது நிச்சயம் அந்த நந்திக்கு கேட்டிருக்கும்.
தேடலின் திசைகள் மாற்றும் பயணங்கள் தொடரும்..!