
1998-ம் ஆண்டு இவரது விசாரணை கமிஷன் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவித்தது.
‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ சிறுகதையைப் படித்தபோது பலருக்குள்ளும் ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ நாவல் நினைவில் வந்துபோனது. ஒரு மீனவ முதியவரின் வாழ்க்கை, சுயபெருமிதம், போராட்டம், தோல்வியை ஏற்க மனமின்றிப் போராடும் குணம் ஆகியவற்றை ஹெமிங்வே ஒரு நாவல் அளவுக்கு எழுதியிருக்க, ஒரு சிறுகதையில் அத்தனையையும் வலுவாகக் கொண்டுவந்துவிட முடியும் என்பதை அநாயாசமாக எழுதிக் காட்டியிருப்பார் சா. கந்தசாமி.
இள வயதுமுதலே வாசிப்பிலும் சிந்தனையிலும் தன்னை நிறுவிக்கொண்ட அற்புத மனிதர். 60களில் தமிழகத்தில் நிகழ்ந்த திராவிட இயக்க எழுச்சிப் போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டவர். ஒருபுறம் பெரியார், அண்ணா, ஜீவானந்தம் போன்றவர்களோடும் மறுபுறம் இலக்கியம் சார்ந்து ந. பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன், சி.சு.செல்லப்பா, க.நா.சு, கு. அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி, தி.ஜா, அசோகமித்திரன் ஆகியவர்களோடும் தொடர்பில் இருந்தவர்.

சூழலியல் குறித்த பெரும்பேச்சுகள் தொடங்காத 60களில் வெளியான வன அழிப்பு குறித்த இவரின் ‘சாயாவனம்’ நாவல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. 170க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 16 நாவல்கள், 3 கட்டுரைத் தொகுப்புகள், பயண இலக்கியம், ஏ.கே செட்டியாரின் வாழ்க்கை வரலாறு, தொகுப்புநூல்கள் என்று பல்வேறு தளங்களிலும் தன் முத்திரையைப் பதித்தவர். 1998-ம் ஆண்டு இவரது விசாரணை கமிஷன் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவித்தது. எழுத்து என்பதைத் தாண்டி ஆவணப்படங்கள் இயக்கியதிலும் அவர் மற்ற எழுத்தாளர்களுக்கு முன்னோடி. ஜெயகாந்தன், பிரபஞ்சன், அசோகமித்திரன் போன்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த ஆவணப்படங்களை இயக்கினார்.
அனைத்து விஷயங்கள் குறித்தும் சுயகருத்தும் தனித்துவமான சிந்தனையும் கொண்டவர் சா.கந்தசாமி. அதை வெளிப்படுத்த அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. இதுவே அவருக்கு நிறைய நண்பர்களையும், கொஞ்சம் வெறுப்பாளர்களையும் சம்பாதித்துக் கொடுத்தது. ஆனாலும் அவர் கடைசிவரை அதை மாற்றிக்கொள்ளவே இல்லை.
அவரிடம் குறைசொல்ல ஒன்று உண்டு.கடைசி 20 ஆண்டுகளில் இலக்கிய வாசகனுக்கு இன்னும் அதிகமான படைப்புகளை அவரால் தந்திருக்க முடியும். அவற்றைத் தராமல் தன்னோடு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார் என்பதுதான் அது. ஆனால் சாயாவனம் போன்ற சாகாவரம் பெற்ற படைப்புகள் சா.கந்தசாமியை வாழவைக்கும்.