
அல்லியக்காவின் கண்கள் தளும்பிச் சிவந்தன. கண்ணீர் பெருகி பனங்கிழங்கில் கலந்தது. அக்கணத்தில் இனிக்கும் தனது கண்ணீரைக் கிழங்கோடு சுவைத்தாள்.
அம்மா நிறைய பனங்கிழங்கோடும், சின்ன உரப்பை நிறைய கச்சானோடும் வந்திருந்தாள். அக்கா பனங்கிழங்கை அவியவைத்திருந்தாள். கால்களை நீட்டி, அமர்ந்திருந்த அம்மாவுக்கு அருகில் ஓடிப்போனேன். அவளது மடியில் தலைகுத்தி விழுந்து செல்லம் கொஞ்சினேன். அம்மாவின் வாசனை என்னைப் பாதுகாக்கும், அதுவே எனக்குக் காவல். அம்மா தலையைத் தடவியபடி “எங்கையடா உலாத்திப்போட்டு வாறாய்” என்று கேட்டாள். அக்கா அடுப்படியைவிட்டு வெளியேறி வந்து “அல்லியக்காவோட விஷயமாய்ப் போய்ட்டு வாறான். இப்ப அவன் சும்மாவெல்லாம் சுத்துறதில்லை.’’ என்னை இப்படியெல்லாம் வியந்தும் பாராட்டியும் அக்கா ஒருநாளும் கதைப்பதில்லையே... இன்று ஏன் இந்த அற்புதங்கள் நிகழ்கின்றனவோ என்று எண்ணினேன். அம்மாவுக்கு நான் இனியவன் சலூன், சின்ன முருகன் கோயில் சந்திப்பு, மறுபடியும் இப்போது இனியவன் சலூன் என எல்லாவற்றையும் ஒரு பிசகுமில்லாமல் சொல்லி முடித்தேன். ‘கந்தர் குடில்’ அம்மாவுக்குத் தெரிந்திருந்தது. ``அல்லியை அழைத்துக்கொண்டு நான் போய்ட்டு வருகிறேன்’’ என்றாள். நானும் அக்காவும் வேண்டாமென்று மறுத்துவிட்டோம். ஆனால் “நீங்கள் பயப்பிடுகிற மாதிரி ஒண்டுமில்லை சும்மா இருங்கோ” அம்மா கொஞ்சம் ஆணையாகச் சொல்லி முடித்தாள்.
அன்றைக்குப் பின்னேரம் அல்லியக்கா எங்களுடைய வீட்டுக்கு வந்தாள். பனங்கிழங்கின் தும்பு சீவி சாப்பிட்டுக்கொண்டிருந்த அம்மாவிடம் “காந்திய வன்னியில எங்கையாவது கண்டனியளே அக்கா” எனக் கேட்டாள்.
“இல்லையே அல்லி. யாழ்ப்பாணத்தில இருக்கிற காந்திய வன்னியில எப்பிடிச் சந்திக்கிறது?”
“அக்கா புண்ணியமாய்ப் போகும், மனுஷன ஒருக்கால் சந்திக்க வையுங்கோ. எனக்கு விசராக்குது.”
“அல்லியக்கா இனியவன் சொல்லிவிட்டது. காந்தியண்ணா எங்களுக்குப் பக்கத்திலதான் இருக்கிறாராம். விரைவில ஒருநாள் சந்திக்கலாமாம்” என்றேன்.
“தம்பி இவங்கள் விரைவில எண்டு சொல்லுறதுக்கு ஒரு திகதி இருக்காது, நாளிருக்காது. ஏன் அப்பிடியொரு விரைவே இருக்காது” பனங்கிழங்கைச் சின்னத் துண்டங்களாக முறித்துச் சாப்பிட்டபடி அல்லியக்கா சொன்னாள்.

“அல்லி, நீ ஒண்டுக்கும் கவலைப்படாத, அவனை இயக்கம் நல்ல பாதுகாப்பாய் வெச்சிருப்பாங்கள்.” இப்படிச் சொன்ன அம்மாவைப் பார்த்து,
“அக்கா, நான் அதைப் பற்றி ஒண்டும் கவலைப்படேல்ல. ஒருக்கால் அவரைப் பார்க்கவேணும்.”
“சரி. நாளைக்கு நிலம்வெளிக்க முதல் இஞ்ச வா. நாங்கள் வெள்ளனவா வெளிக்கிட்டு ஒரு கோயிலுக்குப் போய்ட்டு, காந்தியிருக்கிற இடத்துக்குப் போகலாம்” என்றாள் அம்மா.
அல்லியக்காவின் கண்கள் தளும்பிச் சிவந்தன. கண்ணீர் பெருகி பனங்கிழங்கில் கலந்தது. அக்கணத்தில் இனிக்கும் தனது கண்ணீரைக் கிழங்கோடு சுவைத்தாள். பின்னர் முகத்தில் சந்தேகமும் அவநம்பிக்கையும் தொனிக்க அம்மாவிடம் கேட்டாள். “அக்கா நாளைக்கு அவர உறுதியா பார்க்கப் போறம்தானே.”
“அல்லி... இதில என்னடி விளையாட்டு. உறுதியாய்ப் போறம்” அம்மா சொன்னாள்.
‘தொப்பி’ குயிலன் வீட்டுக்கு வந்தாராம். அம்மாவிடம் என்னைச் சுகம் விசாரித்ததாகச் சொல்லியிருக்கிறார். இனிமேலும் பன்னிச்சையடிக்குப் போனால் அவரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டுமென விரும்பினேன்.
“நீ நினைச்சதும் சந்திக்க குயிலன் என்ன வடலிச் சாத்திரியா?” அம்மா சிரித்தபடி கேட்டாள். மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை வீட்டுக்கு வந்துவிட்டு அவசர அவரசமாகப் போய்விடுவார். ‘தொப்பி’ குயிலன் பற்றி அம்மா சொன்ன கதையொன்று ஞாபகத்தை நெய்கிறது. கண்களை மூடுகிறேன். அம்மாவின் அண்மையில் துயில் வருகையில் நான் குழந்தையாகிவிடுகிறேன்.
அதிகாலை ஐந்து மணியிருக்கும், அல்லியக்கா வெளிக்கிட்டு வந்திருந்தாள். அவள் உடுத்தியிருந்த நாவல் நிறச்சேலை இருட்டாகயிருந்தது. சர்க்கரையைக் கடித்து, தேத்தண்ணி குடித்து முடித்ததும் அல்லியக்காவை அழைத்துக்கொண்டு அம்மா வீட்டிலிருந்து சென்றாள். அதிகாலையிலேயே ‘கந்தர் குடில்’ நோக்கிச் செல்லும் அம்மாவையும் அல்லியக்காவையும் நிலம் மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. ‘கந்தர் குடில்’ என்பது இடமா அல்லது அதுவுமொரு ரகசியச் சொல்லா? ரகசியச் சொல் என்றால் அம்மாவுக்கு எப்படி அதன் உண்மையான உள்ளீடு தெரிகிறதென மூளையைச் சுழற்றினேன். அல்லியக்காவை அழைத்துச் செல்வது எனது அம்மாவல்ல, போராளிகளின் அடைக்கல மாதா என்று நினைத்துக்கொண்டேன். அக்கா காலையிலேயே அரிசி புடைக்கத் தொடங்கியிருந்தாள். அவளது நாள்கள் அடுப்படியில் காய்ந்துபோகின்றன. எப்போதாவது மருதன் அண்ணா கொடுத்துச் சென்ற வோக்மெனில் பாட்டு கேட்கிறாள். ஒலிநாடாவின் இரண்டு பக்கங்களிலும் ஜேசுதாஸே நிரம்பியிருந்தார். இன்னொரு ஒலிநாடா முழுவதும் பக்திப் பாடல்கள் இருந்தன. நான் மீண்டும் நித்திரைகொள்ளலாம் என்று விரும்பினேன். பள்ளிக்கூடம் போவதற்கு எனக்கு மட்டுமல்ல, இப்போது அக்காவுக்கும் விருப்பமில்லாமல் போயிற்று. வோக்மெனை எடுத்து அழுத்தினேன். இடையிலிருந்து ஒரு பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
`ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா...’
உப்புக்காட்டின் மீது வேட்டைநாய்கள் பறக்கின்றன. நெடுவல் ராசன் கையில் கிடந்த கருக்கு மட்டையால் தன்னுடைய மிதப்பான நெஞ்சைக் கீறி ரத்தம் பார்க்கிறார். அவருடைய தலையில் ஈச்சம்பழங்கள் கனிந்திருக்கின்றன. வழியும் ரத்தத்தைக் கைகளில் அப்பி பன்னிச்சை மரத்தில் பூசிக்கொள்கிறார். அவருடைய கால்கள் உயரத் தொடங்குகின்றன. நாய்கள் பறந்துபோகும் வெளியைக் கடந்து அவர் உயர்ந்துபோகிறார். அவருடைய கூந்தல் அவிழ்ந்து காடெங்கும் ஒரு கொடியைப்போல படர்கின்றது. காடே நெகிழ்ந்து அசைகிறது. துளிர்த்த இலையில் அசையும் ஒளியைப்போல காடு நகர்கிறது. உயர்ந்த நெடுவல் ராசன் ஒரு பனைமரமாக மாறி அசையாமல் அப்படியே நின்றுவிட்டார். காடு தன்னிலைக்குத் திரும்புகிறது. ``ராசண்ணே... ராசண்ணே...’’ என்று அலறியடித்தபடி கண்களைத் திறந்தேன். அப்போதும் அரிசி புடைத்துக்கொண்டிருந்த அக்கா என்னைப் பார்த்துக் கேட்டாள்.

“உனக்கு கனவு கண்டு அழுகிறது வாடிக்கையாய் போச்சு.”
“நான் அழேல்ல. கத்தியிருக்கிறன். கனவில நெடுவல் ராசண்ணா கருக்கு மட்டையால நெஞ்சைக் கீறி பன்னிச்சை மரத்துக்கு பூசுறார்.”
“ஆதீரா... உன்ர கனவில உப்புக்காடும் ராசண்ணாவும் தான் இருக்கினம்.”
“ஓம். எனக்குக் கனவு மட்டுமில்ல. நினைவும் அங்கதான்.”
வெளியே மழை மப்பு இருட்டியிருந்தது. நெடுவல் ராசன் அண்ணா சொன்ன ஏழு நடுகற்களையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவற்றை வழிபட வேண்டுமென்று மனம் துடிக்கத் தொடங்கியது. அவரிடம் ஒருநாள் கேட்டேன்.
“அண்ணா, உப்புக்காட்டுக்குள்ள நடுகற்கள் இருக்கெண்டால், இதுவும் மாவீரர் துயிலுமில்லமோ?’’
“சரியாய் சொன்னாய். இங்க இருக்கிற ஏழு நடுகற்களும் இண்டைக்கு போராடிக்கொண்டிருக்கிற பிள்ளையளோட மூதாதையரோடது. வழிபாட்டுக்குரியவர்கள். உன்னை ஒருநாளைக்குக் கூட்டிக்கொண்டு போறன்.”
“எப்ப?”
“சொல்லுறன்.”
இப்படித்தான் எங்களிருவருக்கும் இடையில் நிகழ்ந்த மிகச் சொற்பமான உரையாடல்களை நினைவிலிருத்தி இருக்கிறேன். நெடுவல் ராசன் அண்ணா என்னுடைய கனவில் வராத நாள்களே மிக மிக அரிதாகியிருந்தன. துயில் கொண்டால் கண்களுக்குள் நெடுவல் ராசன் வேட்டை ஆடுகிறார். உப்புக்காடு புலர்கிறது. படுக்கையிலிருந்து எழும்பி பாயைச் சுருட்டி மூலையில் வைத்தேன். அக்காவிடம் சொல்லிவிட்டு வாசகசாலைக்குச் செல்ல ஆயத்தமானேன். அக்கா அரிசியைக் கழுவிக் காயப்போடச் சொன்னாள். இரண்டு வாளிகளில் அரிசியை நிரப்பி கிணற்றடிக்குத் தூக்கிச் சென்றேன். அரிசியைக் கழுவி முடித்து முற்றத்தில் விரிக்கப்பட்டிருந்த படங்கில் பரப்பிக் காயவைத்தேன். அக்கா நான் வேலை செய்வதைப் பார்த்துச் சொன்னாள்.
“இண்டைக்கும் மழை நல்லாய்ப் பெய்யும்போல கிடக்கு. நீ என்ன நினைக்கிறாய்?”
வானத்தை அண்ணாந்து பார்த்துச் சொன்னேன். ``ஓம், பெய்ய வாய்ப்பிருக்கு.”
வேலை செய்வதற்குக் கொஞ்சம் கள்ளப்படுவேன். எல்லோரும் என்னை வேலைக்கள்ளன் என்பார்கள். அதற்காக மனம் நோவதே கிடையாது. எனக்குத் தேவையானவற்றைச் சுணக்கம் இல்லாமல் செய்து முடிப்பேன்.
“இப்பிடி மப்புக் கட்டியிருக்கு, அரிசியைக் கழுவிக் காயவெச்சால் எப்பிடி காயும்” என்றேன்.
“அது காயும். நீ எங்கையும் போகாமல் நில்லு. மழை பெஞ்சால் அள்ளி வைக்கவேணும்” அக்கா சொன்னாள்.
நான் மீண்டும் வீட்டுக்குள் போயிருந்தேன். அல்லியக்காவும் காந்தியண்ணாவும் சந்தித்திருப்பார்களா... அம்மா அல்லியக்காவை கூட்டிச் சென்றது அதற்குத்தானா? அவர்களைக் கண்டு நடந்தவற்றை அறிய ஆவலாக இருந்தேன். அக்கா சோறும் ஒரு குழம்பும் மட்டுமே வைத்திருந்தாள். அம்மா வந்தால் கதை கேட்டுக்கொண்டே சாப்பிடலாம் என்று தோன்றியது. நேரம் கடந்தது. அவர் வருவதாயில்லை. நான் சாப்பிடத் தொடங்கியிருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது. அரிசியைப் படங்கோடு வீட்டுக்கு இழுத்து வந்தேன். அக்கா அப்போது குளித்துக் கொண்டிருந்தாள். மீண்டும் கையைக் கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தேன். மழையின் இரைச்சலுக்குள்ளால் என்னுடைய பெயரைச் சொல்லி அழைக்கும் சத்தம் கேட்கிறது. நான் வாசலில் வந்து நின்று பார்க்கிறேன். யாருமில்லை. ஆனால் மீண்டும் அந்தக் குரல் எனது பெயரைச் சொல்லி அழைப்பது கேட்கிறது. மழையின் உக்கிரமான வீச்சின் ஒலி பெருத்தது. மழையில் நனைந்தபடி வீடு நோக்கிப் பெண்ணொருத்தி நனைந்து வருவது தெரிந்தது.
அம்மாவா!
இல்லை. இது அம்மாவில்லை.
“ஆர்?”
“நான்தான்.”
“நானெண்டால்?”
``தொம்மை குஞ்சாச்சி, என்னை உனக்குத் தெரியேல்லையா!’’
வீடு நோக்கி நடந்துவந்த அந்த உருவம் மழையில் மாய்ந்தது. நான் வீட்டின் பின்பக்கம் ஓடிப்போய் குளித்துக்கொண்டிருந்த அக்காவின் முன்னால் மூச்சு வாங்கினேன்.
“என்னடா, என்ன நடந்தது. ஆர் வந்தது?”
“குஞ்சாச்சி.”
“எந்தக் குஞ்சாச்சி?”
“தொம்மை குஞ்சாச்சி வந்தவா. அப்படியே மழையில கரைஞ்சுபோய்ட்டா.”
“என்னடா சொல்லுறாய்?”
“நான் என்ன பொய்யா சொல்லுறன். அம்மா மேல சத்தியமாய்...”
இருவரும் கதைத்துக்கொண்டிருக்க, அக்காவின் பெயரைச் சொல்லி ஒரு குரல் அழைப்பது கேட்டது.
(நீளும்...)